இசை கேட்டால் புவி அசைந்தாடும் -அது
இறைவன் அருளாகும் (கண்ணதாசன்)
இசை நம் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. இசை இன்றி வாழும் வாழ்வை நம்மால் கற்பனை செய்ய இயலவில்லை. நம்மில் ஒவ்வொருவரும் தத்தம் மனதில் ஒரு பிளே லிஸ்ட் வைத்திருப்பர். பக்திப்பாடல், கீர்த்தனை, திரைப்பாடல்கள், ராப், பாப், கானா என தன் விருப்பத்துக்குரிய பாடல்களை அந்த பிளே லிஸ்ட் உள்ளடக்கி இருக்கும். மனம் சோர்ந்த போது புத்துணர்ச்சி தந்து, உடல் சோர்ந்த போது மருந்தாகும் அப்பாடல்களால், ‘ஊன் மெழுகாய் உருகும், கரையும் அதில் உலகம் மறந்துபோகும்’ (புலமைப்பித்தன்).
ஊரடங்கு துவங்கிய காலகட்டம் மிகவும் கடினமான காலகட்டம். அது தன்னுடன் அழைத்து வந்த அழுத்தங்களை, வெறுமையை புறந்தள்ள அனைவருமே போராட வேண்டி இருந்தது. அப்போது புறப்பட்டது படைப்பாளிகள் படை. அவர்கள் நம் தனிமையைப் போக்கி, மனதுக்கு புத்துணர்ச்சி தர பல்வேறு விதங்களில் செயல் பட்டனர். கவியரங்கம், நூல்மதிப்புரை, ஆளுமைகளின் பேட்டி, நூல் வெளியீடு, குழந்தைகளுக்கான கதைகள், வகுப்புகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகள், ஜூம் வழி சூடு பிடித்தன. அத்தருணத்தில் தொலைக்காட்சி ஆளுமை சுபஸ்ரீ தணிகாசலம், இவற்றில் இருந்து வேறுபட்டு திரையிசையை தன் கையில் எடுத்தார். அதுவும் ‘ரியாலிட்டி ஷோ’,போன்ற மேடை நிகழ்சசிகளில் அதிகம் பாடப்படாத பாடல்களை மக்களிடம் சேர்க்க முனைந்தார். Quarantine from reality (QFR) என்னும் தொடர் இசை நிகழ்ச்சி 200 நாட்களுக்கும் மேலாக இணைய மேடையில் அரங்கேறியது...தொடர்ந்து அரங்கேறியும் வருகிறது.தமிழ் ரசிகர்களிடையே அம்முயற்சி மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.
திருமதி சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களை ‘விகடகவி’ டிஜிட்டல் இதழ் சார்பாக தொடர்பு கொண்டு அவரது இசைத்தொடர் பற்றி உரையாடினோம்... பேட்டியின் சாராம்சம் பரம சுகானுபவம்!
சுபஸ்ரீ தணிகாச்சலம் தொலைக்காட்சி நேயர்களுக்கு பரிச்சயமான முகம். 1993 இல் ‘சன் டி.வி-யில் சேர்ந்து, இசை சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னை ஆர்வமுடன் இணைத்துக் கொண்டவர். 1997 ஆம் ஆண்டு அப்போது மிகுந்த வரவேற்பைப் பெற்ற சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் இணைந்தார். பின்னர் ஒரு தயாரிப்பாளராக பல இசை நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். 2000 ஆம் ஆண்டில் இவர் துவக்கிய Maximum Media என்னும் நிறுவனத்தின் வழியாக விஜய் தொலைக்காட்சியில் நவராத்திரி இசை விழா, மார்கழி மகோத்சவம், ஜெயா டிவியில் கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை, ஹரியுடன் நான் போன்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகளை பிரபல சங்கீத வித்வான்களைக் கொண்டு சிறப்பாக நடத்தி பெரும் புகழ் பெற்றார். சாஸ்திரிய சங்கீதத்தை மக்களிடம் கொண்டு செல்லும் உயர்ந்த இலக்கை கொண்டவரின் இசைப்பயணத்தின் நீட்சியாக பிறந்தது QFR.
முதல் லாக்டௌன் தொடங்கிய போதே, சுபஸ்ரீ QFR நிகழ்ச்சியைத் தொடங்கி விட்டார். மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய முதல் எபிசோடினைத் தொடர்ந்து 200 நிகழ்ச்சிகளைத் தாண்டி முகநூலிலும், யூடியூபிலும் வெற்றி நடை போட்டுகொண்டு வருகிறது QFR! முன்பே குறிப்பிட்டது போல மக்கள் மறந்த, அபூர்வமான, அழகான பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதை இளம் பாடகர்களைக் கொண்டு பாட வைக்கிறார். இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகள் மீட்ட, தொழிற்நுட்ப கலைஞர்கள் ஒளித்தொகுப்பு உள்ளிட்ட வேலைகளை செய்ய, அதி அற்புதமான ஒரு நிகழ்ச்சியாக தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பாட்டு துவங்கும் முன் ஒரு சின்ன முகவுரையில் பாடல் பற்றிய ஒரு சிறிய குறிப்பை சுபஸ்ரீ வழங்குகிறார். பாடல் இடம் பெற்ற படம், பாட்டின் ராகம், பாடல் அமைந்த விதம் என்ற விவரத்தை அவர் சொல்லும் போதே... அப்பாட்டைப் பற்றிய எதிர்பார்ப்பு நமக்குள் கூடி விடுகிறது. பின்னர் தேர்ந்த இசையும், மயக்கும் இளங்குரலில் தென்றலென தழுவிச் செல்லும் பாடலும், காட்சி அமைப்பும் நம்மை மெய் மறக்க வைக்கிறது. இப்பாடல்களை நாம் FM ரேடியோவிலோ, டி.வி-யிலோ கேட்கும் அல்லது ரசிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தை விட, இந்த நேரலை நிகழ்ச்சி சுகானுபவத்தைத் தருகிறது. அந்த அனுபவத்தில் இருந்து வெளி வரும் முன்னம் முடிவுரை வருகிறது. பத்து நிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் ஒரு பூரண இசை ராஜ்ஜியம் அரங்கேறி முடிகிறது. சில பாடல்களுக்கு நடனமும் பாடலுடன் இணைகையில் ஒரு அழகிய புதிய பரிணாமம் பெறுகிறது QFR. பார்வையாளர்களான நாம் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல ஒரு அதி அற்புத மயக்கத்திற்கு சென்று திரும்புகிறோம்!
QFR நிகழ்ச்சிக்காக சுபஸ்ரீயால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் 1950 ஆம் ஆண்டில் இருந்து 1995 ஆண்டு வரையில் நாம் கேட்டு ரசித்தவை. இசைக்காக, குரல் வளத்துக்காக, மொழி வளத்துக்காக ரசிக்கப்பட்டு இந்த அவசர கால ஓட்டத்திலும் நம் நினைவினில் இருந்து மறையாமல் இருக்கும் அருமையான பாடல்கள் இவை.
இப்போது இப்பாடல்களைக் கேட்கையில், நம் இளமைக் கால நினைவுகள் ஒரு சுகமான இசை போலவே மீட்டப்படுகின்றன... முதல் பாடல், கோயில் புறா படத்தின் “சங்கீதமே என் தேகமே” என்றால் 200 வது பாடல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின், ‘அவள் ஒரு நவரச நாடகம்’, இந்த 200வது எபிசோட் மறைந்த பாடகர் SPB அவர்களுக்கு அஞ்சலியாக அமைக்கப்பட்டது.
தீர்த்த கரைதனிலே (தைப்பொங்கல்), வா பொன்மயிலே (பூந்தளிர்), இலக்கணம் மாறுதோ (நிழல் நிஜமாகிறது), கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி) அம்மம்மா கேளடி தோழி (கறுப்புப் பணம்) என்ற இடைக்கால பாடல்களுடன், பொன்னென்பேன், சிறு பூவென்பேன் (போலீஸ்காரன் மகள்), கண்ணும் கண்ணும் கலந்து (வஞ்சிக்கோட்டை வாலிபன்), யாரடி நீ மோகினி (உத்தமபுத்திரன்) போன்ற அறுபதுகளின் பாடல்களையும் இனிமை மாறாமல் சமர்ப்பிக்கிறார்கள். QFR என்னும்அழகிய பூங்கொத்தில் நாம் கண்ணுற்ற சில பூக்கள் இவை!
50க்கும் மேற்பட்ட பாடகர்கள், 136 இசைக்கலைஞர்கள், தொழிற்நுட்ப விற்பன்னர்களுடன் சேர்ந்து இந்த தொடர் நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்து அளிக்கின்றனர். பாடகர்களில் பிரபலர்களும் உண்டு, அறிமுக பாடகர்களும் உண்டு. இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அயல்நாட்டில் உள்ள தமிழ் பாடகர்களும் இந்த இசை வேள்வியில் கை கோர்க்கிறார்கள். ‘கானடா’ ராகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நிகழ்ச்சி (Kaanada Across Continents). இநிகழ்ச்சியில் தேம்ஸ் நதியும், அடையாறும் அநாயசமாக இணைகிறது. இதில் பாடுபவர்கள்... லண்டன், சென்னை, டொராண்டோ, பாரிஸ், கலிபோர்னியா, விஸ்கான்சின் போன்ற உலகின் பல பாகங்களில் இருந்தும் பாடல்களைப் பாடுகிறார்கள். இசை என்னும் ஒரு குடையின் கீழ் உலகமே இளைப்பாறும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. மெய் சிலிர்க்கிறது!
இந்த இசைப்பயணத்தில் இசை அமைப்பாளர்கள் வெங்கட், ஷியாம் பெஞ்சமின், செல்வா, விக்னேஸ்வர், ஒளித்தொகுப்பாளர் சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் ரவி .ஜி ஆகியோரின்பங்களிப்பு சிறப்பானது.
இந்த இசைத்தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. யூடியூபில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ் அள்ளியது. நூறு நிகழ்ச்சிகள் வரை எவ்வித வருவாயும் இல்லாமல் இருந்தாலும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தந்த பின்னூட்டங்கள் உற்சாகம் தர, இதைத் தொடர்ந்து நடத்த தீர்மானித்தார் சுபஸ்ரீ. பின்னரே மக்களின் நிதி உதவி பெறும் Crowd funding முறையை ஆரம்பித்தார். இதனால் இந்நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை சரிக்கட்ட முயல்கிறார். “மக்களின் பேராதரவு தொடர்கையில், 200 நிகழ்ச்சிகள் என்ன 2000 நிகழ்ச்சிகள் கூட என்னால் நடத்த முடியும்” என்கிறார் சுபஸ்ரீ மகிழ்வோடு.
இந்த அற்புதமான நிகழ்ச்சி தொடர் வெற்றி பெற்று, புதிய சாதனைகளைப் படைக்க சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களை வாழ்த்தி விடை பெற்றோம்.
இறுதி வரியை எழுதுகையில், ஆயிரம் ராகங்கள், ஆயிரம் கானங்கள் என் நெஞ்சில் அலையடிக்கின்றன....
ஏனெனில் இசையை வணங்குவோருக்கு அது தவம், அதுவே வரம்!
Leave a comment
Upload