துர்க்கை என்றால் வடமொழியில் “வெல்லமுடியாதவள்” என்றும், தமிழில் வெற்றிக்கு உரியவர் என்றும் பொருள்.
நவராத்திரியே துர்க்கையின் முக்கியமான வழிபாடாகும்.
அன்னை பராசக்தியின் அனுக்கிரகத்தினை பெற்றிட, சக்தியின் ஒன்பது வடிவமான நவதுர்க்கை வழிபாடு மிகவும் விசேஷமானது. நவதுர்க்கை என்பது துர்க்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். ‘நவ’ என்றால் ஒன்பது என்பதாகும்..
பல்வேறு வேதங்களிலும், வராஹ புராணத்திலும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுப்பட்டுள்ளது. நவதுர்க்கைகளின் பெயர்களும், அவரது அம்சங்களும் ஸ்லோகமாக களபிரம்மதேவரால் வராஹ புராணத்தில் காணப்படுகிறது.
நவராத்திரி விழா புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை கொண்டாடப்பட்டு அடுத்த நாள் விஜயதசமியுடன் முடிகிறது.
அன்னை பராசக்தியை முதல் மூன்று நாட்களில் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களும் மஹாலக்ஷ்மியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறோம். அதே சமயம் நவதுர்கா என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை குறிக்கும் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி எனும் இந்த ஒன்பது வடிவங்களையும் தினம் ஒரு வடிவத்தில் பூஜிப்பது நமக்கு மிகப்பெரிய பலன் தரும்.
“ப்ரதமம் சைல புத்ரீ ச த்விதீயம் ப்ரஹ்மசாரிணீ!
த்ருதீயம் சந்த்ரகண்டேதி கூஷ்மாண்டேதி சதுர்த்தகம் !!
பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயனீதி ச!
ஸப்தமம் காலராத்ரீதி மஹாகௌரீதி சாஷ்டமம் !!
நவமம் ஸித்தி தாத்ரீ ச நவ துர்கா ப்ரீகீர்த்திதா!
உக்தான்யேதானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா.!!”
இதுவே நவதுர்க்கை தியான சுலோகம் ஆகும்
அதாவது பிரதமைசைலபுத்ரி, த்விதியைபிரம்மச்சாரிணி, திரிதியை சந்திரகாண்டா, சதுர்த்திகூஷ்மாண்டா, பஞ்சமிஸ்கந்தமாதா, சஷ்டிகாத்யாயனி, சப்தமிகாலராத்ரி, அஷ்டமிமஹாகௌரி, நவமிசித்தாத்ரி இவ்வாறு நாளுக்கு ஒரு வடிவத்தில் ஒன்பது நாட்களும் வணங்குவதால் சகல நன்மைகளும் நம்மை வந்தடையும்.
சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில் குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன.
வட இந்தியாவில் நவராத்திரி தினங்களில் நவதுர்க்கைகளில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.
நவதுர்க்கைகளை நவராத்திரி தினத்தில் வழிபட்டு அன்னையின் அருளை பெற்றிடுவோம்.
1. சைலபுத்ரி:
நவராத்திரியில் நவதுர்கையை வழிபடும் போது முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். இவரை மலைமகள், பார்வதி, ஹேமாவதி, பவானி தேவி, தாட்சாயிணி என்றும் இவரை அழைப்பர். நம் உடலில் உள்ள ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவரை வணங்கியே துவங்குவர். இவர் நந்தியை வாகனமாக வைத்து கொண்டு ஒரு கையில் சூலமும், ஒரு கையில் தாமரையும் கொண்டு அருள் புரிகிறார்.
தியான மந்திரம்
“வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||”
“விருஷபம் (நந்தியின்) மேல் பவனி வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் ஒப்புயர்வற்ற ஷைல புத்ரி தேவியை வணங்குகின்றேன்”
இவரை வழிபட திருமணத்தடை நீங்கும் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு நோய்கள் தீரும்.
உத்தர பிரதேசத்தில் உள்ள மர்ஹின காட் என்னும் இடத்தில் சைலபுத்ரீக்கு தனிக்கோவில் இருக்கின்றது.
2.பிரம்ஹசாரிணி:
நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபட வேண்டியவர் பிரம்மசாரிணி. ‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். நமது உடல் சக்கரங்களில் ‘ஸ்வாதிஷ்தானத்தில்’ இருப்பவர். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் கொண்டு அருள்பாலிக்கிறார். இவருக்கு தனிப்பட்ட வாகனம் இல்லை
தியான மந்திரம்:
ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||
“கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள்புரிய வேண்டும்.”
இவரை வழிபட மன அமைதி, மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவைகளை கொடுக்கிறார் மற்றும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தருகின்றார்.
இவருக்கு காசியில் “துர்க்காகாட்” படித்துறையில் கோவில் உள்ளது. இதைதவிர கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள்பாலிக்கிறார்.
3.சந்திரகாண்டா:
நவராத்திரியின் மூன்றாம் நாளில் வழிபட வேண்டியவர் சந்திர காண்டா. ‘சந்திர’ என்றால் நிலவு. ‘காண்டா’ என்றால் மணி என பொருள். சந்திர பிறை இவள் முன் நெற்றியில் மணி போல் இருப்பதால் இவரை ‘சந்திர காண்டா என அழைக்கப்படுகின்றார். இவர் உடல் சக்கரங்களில் ‘மணிபூர’ சக்கரத்தில் இருப்பவர். முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு, பத்து கரங்கரங்களிலும் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் புலி மீது அமர்ந்து கொண்டு அருள்பாலிக்கின்றார்.
தியான மந்திரம்:
பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |
ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||
“புலி வாகனத்தில் வந்து சண்டனை போரில் வென்றவளான சந்த்ரகாண்டா என் மீது கருணை பொழிய வேண்டும்”
சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அதேபோல சந்த்ரகாண்டா நமது வினைகளை தன்னுள் வாங்கிக் கொண்டு கருணை நீரைப் பொழிகின்றார்.
இவரை வணங்கினால் செய்த பாவங்கள் அழிந்து சுபிட்சத்தையும் தந்தருள்வார். மற்றும் வாழ்வில் துன்பம், தடைகள் நீங்கி வளம் பெறுவார்கள்.
இவருக்கு காசியில் காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது. மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள சித்திரகந்த குல்லி என்னும் இடத்தில் சந்த்ரகாண்டாவுக்கு தனிக்கோவில் இருக்கிறது.
4.கூஷ்மாண்டா:
நவராத்திரியின் நான்காம் நாளில் வழிபட வேண்டியவர் கூஷ்மாண்டா. இந்த பெயர் மூன்று பகுதிகளை கொண்டது. கு, உஷ்மா, ஆண்டா என்ற இம்மூன்றும் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது. இதை சேர்த்தால் சிறிய வெப்பமான உருண்டையான உலகை பொருளாக கொள்ளலாம். இதனால் கூஷ்மாண்டா என்றால் உலகை படைத்தவள் என்ற பொருள் வரும். உடல் சக்கரங்களில் இவர் ‘அனாஹத’ சக்ரத்தில் இருப்பவர்.
இவர் எட்டு கரத்துடன் சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவர், எட்டாவது கரத்தில் கலசத்துடன் காட்சி தருகிறார். இக்கலசம் அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்கு தருபவர்.
தியான மந்திரம்:
ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||
“தன் தாமரை போன்ற திருகரங்களில் இரு கலசம் ஏந்தி, தனது சிரிப்பால் உலகை சிருஷ்டித்து, அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி கூஷ்மாண்டா எனக்கு எல்லா வளங்களையும் வழங்குவாயாக.”
கூஷ்மாண்டாதேவியை வணங்கினால் பாவம் நீங்கி இன்பம் பெறலாம். இவரை வணங்குவோர் உடல், மன வலிமை பெறுவர்.
இவருக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரத்தில் தனிக்கோவில் உள்ளது.
5.ஸ்கந்தமாதா:
நவராத்திரியின் ஐந்தாம் நாளில் வழிபட வேண்டியவர் ஸ்கந்தமாதா. ஸ்கந்த என்றால் கந்தன், மாதா என்றால் தாய் ஸ்கந்தன் தாயாக காட்சி தருவதால் ஸ்கந்த மாதா என்று இவரை அழைப்பார்கள். ஸ்கந்தமாதாவை விசுக்தி சக்கரத்தில் சித்தத்தை வைத்துத் தியானித்துப் பூஜிக்க வேண்டும். விசுத்தி என்றால் தூய்மையானது என்று பொருள்.
நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, மற்றொரு கரம் மடியில் குழந்தை ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு அரவணைத்து காட்சி தருகின்றார். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவராக அருள்பாலிக்கின்றார். எனவே இவரை ‘பத்மாசினி’ என்றும் கூறுவர்.
தியான மந்திரம்:
ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||
“சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் தாயான ஸ்கந்தமாதா தேவியை நான் வணங்குகின்றேன்.”
இவரை வணங்குவோர் மனம் அமைதி பெறும். அவர்கள் துக்கங்கள் மறைந்து வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர்.
இவருக்கு காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் கோவில் உள்ளது.
6.காத்யாயினி:
நவராத்திரியின் ஆறாம் நாளில் வழிபட வேண்டியவர் காத்யாயினி. காத்யாயன முனிவரின் மகளாக பிறந்ததால் காத்யாயனி என அழைக்கப்படுகின்றார். இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.
யோகிகள் காத்யாயினியின் அருளோடு ஆறாம் சக்ரமான ஆக்ஞா சக்ரத்தை அடைவார்கள். இந்த சக்ரத்தை முக்கண் சக்கரம் என்று கூறுவர்.
இவர் நான்கு கரம் கொண்டவர். ஒரு கரத்தில் தாமரை மலர் ஏந்தியும், மறு கரத்தில் ஒளி வீசும் வாள் ஏந்தியும் இருப்பார், மற்ற இரண்டு கைகள் தன் பக்தர்களுக்கு அபயம் தருமாறு காட்சி அளிக்கின்றார்.
தியான மந்திரம்:
சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |
காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||
“ஒளி வீசும் சந்திரஹாச வாளை கொண்டவளும், சிம்மவாகனத்தில் வலம் வந்து தீய சக்திகளை அழிக்கும் காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும்.”
இவரை வழிபட்டால், கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார், மற்றும் பாவங்கள் விலகி மோக்ஷமடைய செய்கிறார்.
காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப் படுகிறார். டெல்லியில் சட்டர்பூரிலும், தமிழகத்தில், தஞ்சையில் காத்யாயனி அம்மன் கோவில் உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இவரை காத்தாயி என்று அழைக்கிறார்கள்.
7.காளராத்திரி:
நவராத்திரியின் ஏழாம் நாளில் வழிபட வேண்டியவர் காளராத்திரி. காள என்றால் நேரம், மரணம், என்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். ராத்திரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்ற அர்த்தமும் உண்டு. கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயே இவளுக்குக் காலராத்திரி எனப் பெயர் ஏற்பட்டது. யோகிகள் இவரின் அருள் கொண்டு ஏழாம் சக்கரமான ‘சகஸ்ராகாரத்தை’ அடைவர்.
இவரின் நான்கு கைகளின், ஒன்றில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக அமைந்துள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது.
தியான மந்திரம்:
வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |
வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||
“நீளமான நாக்கு கொண்டு, கழுதை மீது பவனி வருபவளும், ஆக்ரோஷமாக இருப்பவளும், பல வண்ணங்களில் ஆபரணங்கள் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் காளராத்திரி என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள்பாலிக்கவேண்டும்.”
இவரின் பார்வை பட்டாலே துன்பமும், பாவமும் தொலைந்திடும். பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இவரின் உருவம் பக்தர்களுக்கு பயம் தராமல் நன்மை செய்வதால் இவரை ‘சுபங்கரி’ என்றும் கூறுவர்.
காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோவில் உள்ளது..
8.மகா கௌரி:
நவராத்திரியின் எட்டாம் நாளில் வழிபட வேண்டியவர் மகா கௌரி. மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவர் பால் போல் வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறார். கௌரி என்றால் பொன்னிறமானவள் என்ற அர்த்தமும் உண்டு. இவர் உடல் சக்கரங்களில் ‘ஸ்வாதிஷ்டானமாய்’ இருப்பவர். யோகிகள் இவரின் அருளோடு இந்த சக்கரத்தை அடைவர்.
இவர் நான்கு கரம் கொண்டவர். ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தாங்கி நிற்கிறார். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருமாறு அருள்பாலிக்கின்றார். இவரின் வாகனம் வெண்மையான காளை ஆகும்.
தியான மந்திரம்:
ஸ்வேத வ்ரூக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுசி |
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||
“வெண்மையான காளையின் மீது பவனி வருபவளும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும், தூய்மையானவளும், மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கௌரி எனக்கு அனைத்து நலன்களையும், வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன்.”
இவரை வழிபட்டால் நம் வாழ்வு வசந்தமாகும். இவர் பக்தர்களின் குறைகள் விரைவில் தீர்த்து என்றென்றும் சந்தோஷத்தை அள்ளித் தருவார்.
இவருக்கு காசி அன்னபூரணி ஆலயத்தில் சந்நிதி உள்ளது.மேலும், கண்க்ஹல், ஹரித்வார் போன்ற ஸ்தலங்களிலும் தனி சன்னதி உண்டு.
9.சித்திதாத்திரி:
நவராத்திரியின் இறுதி நாளான ஒன்பதாம் நாளில் வழிபட வேண்டியவர் சித்திதாத்திரி. சித்தி என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தில் எட்டு விதமான சித்திகள் - அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் என எட்டு விதமான சித்திகளையும் பக்தர்களுக்கு தருபவர் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தேவியின் அருளால் இறுதியில் பேரின்ப பேற்றை அடைவர். இவர் நான்கு கரம் கொண்டவர். இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவர். தாமரை மலரில் அமர்ந்து இருப்பவர். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம். சிவ பெருமானே இவரை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தேவி புராணம் கூறுகிறது.
தியான மந்திரம்:
ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |
ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||
“சித்தர், கந்தர்வர், தேவர், முனிவர், மனிதர், யட்சர் என அனைவராலும் வணங்கப்படும் தேவி சித்திதாத்ரி, என்னுடைய அனைத்து செயல்களிலும் வெற்றியை பெற்று தர வேண்டும்.”
இவரை வழிபட்டால் மனதில் உள்ள ஐயம் நீங்கி பேரானந்தத்தை அடைவர். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறார்.
காசியில் “சித்திதாத்ரி சங்கடா” என்னும் கோவிலில் இவர் அருள்புரிகின்றார்.
நவராத்திரி விரதகாலங்களில் படிக்கவேண்டிய ஸ்லோகங்கள்:
தேவி மகாத்மியம்
அபிராமி அந்தாதி
துர்க்கா அஷ்டகம்
இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
சகலகலாவல்ல மாலை
சரஸ்வதி அந்தாதி
மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம்
நவராத்திரி காலத்தில் நவதுர்க்கையை வழிபட்டு, பராசக்தியின் பரிபூரண அருளை அனைவரும் பெறுவோம்.
Leave a comment
Upload