தொடர்கள்
பொது
மதம், மொழி, இனம் - ஜாக்கிரதை... - ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி

2020916222253574.jpg

மொழி, சாதி, மதம், இனம் ஆகியவற்றை வைத்து தான் பெரும்பாலான அரசியல் நடக்கிறது. அரசியல் செய்வோருக்கும் இவைகளே கருவிகளாகின்றன. மொழியும், சாதியும், மதமும், இனமும் மக்களோடு அதுவும் தமிழ் மக்களோடு ஒன்றிப்போன ஒரு விஷயம். மக்களை சீண்டவும், தீண்டவும் இவை நான்கும் போதும். இந்த வாரம் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டது இரண்டு விஷயங்கள். அவற்றை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

முதலில், விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’ எனும் திரைப்படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு. ‘800’ - இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கின்றனர். அதன் முதற்கட்ட புகைப்படங்கள் வெளியாகி அறிவுப்புகள் வந்ததுமே கிளர்ச்சி கிளம்பி விட்டது. அதாவது “இலங்கைத் தமிழரும் கிரிக்கெட் வீரருமான முத்தைய்யா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. இலங்கை யுத்தத்தின் போது தலைவர் பிரபாகரன் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட கால கட்டத்தில்.. ‘போர் முடிவுக்கு வந்ததால் எங்கள் நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்கிறோம்’ என பத்திரிகைகளுக்கு பேட்டி தந்த ஆசாமி அவர். அந்த தமிழின துரோகியின் படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடிக்கலாம்?” என இங்குள்ள தமிழ் தேசியவாதிகள் பொங்கி விட்டனர். ஏதோ முத்தைய்யாவே யுத்த களத்தில் இறங்கி நம் தமிழ் இனத்து மக்களை கொன்று குவித்தது போல வெளிப்பட்டது இந்த இனமான கூட்டத்தின் ஆவேசக்கூச்சல்! இதுதான் சாக்கென்று பலரும் சகட்டுமேனிக்கு விஜய் சேதுபதியை வறுத்து எடுத்தார்கள். விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் பல பேர் பதிவிட்டார்கள்.

இந்தப் படம் பூஜை போட்டபோதே பொங்கியிருக்க வேண்டியவர்கள் இப்போது போஸ்டர் பார்த்தவுடன் சற்று லேட்டாக பொங்கி தயரிப்பாளர்கள், விஜய்சேதுபதி என அனைவரையும் தூக்கம் வராமல் செய்து விட்டனர். அந்தப் படத்தில் தமிழரான விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்றும், அதிலும் சிங்களக் கொடியை அணிந்து நடிக்கவே கூடாது என்றும் போராட்டம் வலுக்கிறது.

“விஜய்சேதுபதியை தடை செய்யக் கோரும் உங்களுக்கெல்லாம் வேறு வேலை கிடையாதா? இதே முத்தைய்யாவை கோச்ச்சாக கொண்டு செயல்படும் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் அணியை நடத்தி வரும் அரசியல் பின்புலம் கொண்ட தமிழரிடமும் இதே தடையை கோருவீர்களா?? ”என்று நடிகை ராதிகா சரத்குமார் இது குறித்து துணிவோடு கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழகத்தில் எத்தனையோ சிங்கள நிறுவனங்கள் வியாபாரத்தில் கோலோச்சியிருக்கிறது. உதாரணத்துக்கு தம்ரோ, லைக்கா போன்ற நிறுவனங்கள். அங்கெல்லாம் கேட்கப்படாத கேள்விகள் விஜய் சேதுபதியிடம் மட்டும் ஏன்?” என்கின்றனர் திரைத் துறையினர். இது ஒரு புறமிருக்க.. “முத்தைய்யா முரளிதரன் என்பவர் இலங்கைத் தமிழர்களின் மொத்த எதிரியா அல்லது எல்டிடிஈ எனும் இயக்கத்தை மட்டும் வெறுத்தவரா? அப்படிப் பார்த்தால் இலங்கைத் தமிழர்கள் மொத்த பேரும் ஒன்றும் பிரபாகரனின் ஆதராவாளர்கள் இல்லையே!” என ஒரு கூட்டம் தனியே நின்று புலம்புகிறது.

அது சரி! ஒரு படம் வெளி வருவதற்கு முன்போ அல்லது தயாரிக்கும் முன்போ இத்தனை பெருங்கூச்சல் போடும் தமிழ் இனமான அரசியல்வாதிகள் ‘முரட்டு அறையில் இரண்டாம் குத்து 2 ’ போன்ற போஸ்ட்டர்கள் வந்த போது எங்கே இருந்தார்கள்?! அப்போது கண்டுக்காமல் தூங்கி வழிந்த இவர்களின் இமைகள் இப்போது மட்டும் திறப்பது எதற்காக? அரசியல் புரிகிறதா மக்களே?!

2020916222332587.png

2020917024629128.jpg

இந்த வாரத்தின் மற்றொரு பிரச்சனை மதம் சார்ந்தது. டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகை கடைக்கு அவர்கள் செய்த விளம்பரம், இந்து மக்களின் மன உணர்வுகளை மிகவும் பாதித்து விட்டதாக மக்கள் மத்தியில் பெருங்கூச்சல் எழுந்தது. ஒரு முஸ்லீம் வீட்டில் வாக்கப்பட்ட ஒரு இந்து மருமகளை இந்து சம்பிரதாயப்படி அந்த குடும்பம் கொண்டாடுவது போன்ற விளம்பரம் அது!

“எந்தச் சூழ்நிலையிலும் இதனை எந்த ஒரு இந்துவும் ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே love jihad என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை வலை வீசி மணம் முடிக்கிறார்கள். இது ஒரு வகையான கட்டாய மத மாற்றத்திற்கான வழி. இது குறித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், இந்த விளம்பரத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்பதே இந்து மக்களின் பொங்கலுக்கு காரணம்.

இந்த மக்கள் எதிர்ப்பால் பங்கு சந்தையிலும் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது டாடா நிறுவனத்தின் தனிஷ்க். இந்து மக்களின் மனோ நிலையை புரிந்து கொண்டு, உடனே அந்த விளம்பரத்தை தாமே முன் வந்து விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்தது தனிஷ்க்!

-ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி