தொடர்கள்
பொது
சென்னையை மிரட்ட வரும் வடகிழக்கு பருவமழை?! - ஆர்.ராஜேஷ் கன்னா

2020915084228680.jpg

2020ம் வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 24-28 தேதிகளில் ஆரம்பமாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொழியும் வடகிழக்கு பருவமழையில் சென்னை ஆண்டு தோறும் 867.4 மிமீ அதாவது 63 சதவீதம் மழைப்பொழிவினை பெறுகிறது.

கேரளா, கடலோர ஆந்திர மாவட்டங்கள், ராயல்சீமா மற்றும் தெற்கு உள் கர்நாடகா பொழியும் மழையை விட தமிழகம் 30 சதவீதம் கூடுதல் மழையை வடகிழக்கு பருவ மழையின் போது பெறுகிறது.

2015ம் ஆண்டில் பருவநிலை மாறுதல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 24 மணிநேரத்தில் 30 செ.மீ பேய்மழை பொழிந்து வெள்ளகாடாக மாறியது.

சென்னையில் கொட்டித் தீர்த்த பேய்மழையை சேமிக்க முடியாமல் கடலில் சென்று வீணாக கலந்தது பலருக்கும் நினைவிருக்கும்.

சென்னைக்கு எப்போதும் வடகிழக்கு பருவமழை கிட்டதட்ட எந்தவித குறையையும் வைக்காமல் மழையை பொழிகிறது.

அரசும் மக்களும் தான் உரிய வழியில் மழைநீரை சேகரித்து வைக்கும் எந்த வித திட்டத்தினையும் முறையாக நடைமுறை படுத்துவதில்லை.

சென்னைவாசிகள் மழைக்காலம் முடிந்ததும், வழக்கம் போல் தண்ணீர் கொண்டு வரும் லாரிகளுக்காக இரண்டு குடங்களுடன் இரவில் கண்முழித்து காத்திருந்து குடிநீர் பிடித்துச் செல்லும் அவலம் இன்று வரை தொடர்கிறது.

உலகின் பருவநிலை மாற்றத்தினால் மழை பொழியும் விதம் மாறியுள்ளதை அறிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

2020915084300792.jpg

‘சென்னை நகரம் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், நிலத்தில் இருக்கும் காற்று கடலில் இருந்து நேரடியாக அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி வெப்ப சலன மழையை பொழிகிறது’ என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

புவி வெப்பம் அடைவதால் வங்காள விரிகுடா கடல் நீரும் தற்போது வழக்கத்திற்கு மாறாக 32°C முதல் 34°C கொதி நிலையை அடைகிறது. சென்ற 2019ம் ஆண்டில் வங்காள விரிகுடா கடலில் எட்டு புயல்கள் உருவாகியது.

வங்களா விரிகுடா கடலில் புயல் மெதுவாக உருவாகி நகரும் என்பது கண்கூடான நிகழ்வாக இருந்தது. சென்ற ஆண்டு வங்காள விரிகுடாவில் உருவான ஆம்பன் கடும் தீவிர புயல் (கேட்டகரி 5) 18 மணி நேரத்தில் உருவானது, புவி வெப்பமயமாகி வருவதற்கு எடுத்துக்காட்டு இது. கடலில் இப்படி புயல் அடிக்கடி உருவாவது நல்லதல்ல என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

2017ம் ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனது. ஆனால் ஆந்திரா, கர்நாடகாவில் பருவமழை நன்றாக பொழிந்தது. கிட்டதட்ட 70 சதவீதம் தமிழக மாவட்டங்களின் மழைப் பொழிவை தாங்கள் துல்லியமாக கணித்துள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் புவியரசன் தெரிவிக்கிறார்.

‘இந்தியாவிலேயே இந்தாண்டு மிக குறைவான மழை பொழிந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், வெறும் 90 மிமீ மழை தான் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜஸ்தான் பாலைவனத்தினை விட குறைவாக மழை பொழிந்துள்ளது’ என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, புவி வெப்பமடைவதால் இந்தாண்டு முதல் வரும் 2049 ஆண்டு வரை சென்னையில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் வழக்கத்தினை விட 5 சதவீத மழைப்பொழிவு அதிகம் இருக்கும். 2070 முதல் 2099ம் ஆண்டு வரை 21 சதவீத அதிக மழைப்பொழிவு இருக்கும்.

“ புவியை வெப்பமயமாக்கும் கிரின் வாயுக்களை உலக நாடுகள் வெளியிடுவதை வரும் 2050ஆம் ஆண்டிற்குள் குறைக்கவில்லை என்றால், சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தினை விட 11 சதவீதம் கூடுதலாகி, இந்த நூற்றாண்டு முடியும் தருவாயில் சென்னையில் 38 சதவீத கூடுதல் மழைப்பொழிவு பொழிந்து, எங்கும் வெள்ளகாடாக மாறும் ஆபத்து உண்டு” என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

சென்னையும் அதன் புறநகர் பகுதிகளும் வழக்கமாக ஒரு நாள் இரவு பெய்யும் மழைக்கே, ஊரெங்கும் ஏரிகள் போல் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. சென்னையில் வழக்கத்தினை விட அதிக மழைப்பொழிவு ஏற்படும் போது பெரியமேடு, பட்டாளம், கொசப்பேட்டை, மணலி, திருவொற்றியூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் 3 முதல் 6 அடி உயரத்திற்கு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழும் அபாயம் இருப்பதாக தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சென்னையில் இருக்கும் அண்ணா நகர், அமிஞ்சிகரை, ஷெனாய் நகர் , பள்ளிக்கரணை , துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில், வரும் பருவ மழை பொழியும் நாட்களில் அதிகளவு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

202091508433416.jpg

சென்னைவாசிகள் 20 வருடங்களுக்கு முன்பு அனைவர் வீட்டிலும் இருக்கும் கிணற்றில் குடிநீரை தினமும் தங்கள் தேவைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது மழை நீரை முறையாக சேமிக்கத் தவறியதால், வீட்டில் இருக்கும் கிண்றுகள் எல்லாம் வற்றி காய்ந்து போய்விட்டது. அதே சமயத்தில் தற்போதிலிருந்து மீண்டும் சென்னைவாசிகள் கட்டிடங்களில் இருந்து வரும் மழை நீரை முறையாக சேமித்தால், சென்னைக்கு கோடை காலங்களில் கூட தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 3000 ஏரிகளுக்கு மேல் இருந்தது. அதனை எல்லாம் தூர்வாரி, மழை நீர் சேகரித்து, பரந்து விரியும் சென்னை நகரில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

“சென்னை முழுவதும் 2,078 கி.மீ தூரம் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சென்ற வருடத்தில் சென்னையில் 250 கி.மீ புதிய மழை நீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கும் வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, பூந்தமல்லி ஹைரோடு, தேனாம்பேட்டை, வளசரவாக்கம், வேளச்சேரி, அடையாறு, மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பிற்காக 2500 புதிய கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் 250 குளங்களில் 110 குளங்களில் முழுவதும் தூர்வாரப்பட்டுள்ளது” என சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

“தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழையால் 4,399 பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்று கண்டறியப்பட்டு, வெள்ள நீர் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 38.52 கோடி ருபாய் மாநில துயர்துடைப்பு பிரிவினருக்கும், சென்னை மாநகராட்சிக்கு இயற்கை துயர் துடைப்பு எந்திரங்கள் வாங்க 7.25 கோடி ருபாயும் ஒதுக்கப்பட்டு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை செய்யும் கருவிகள் வாங்க 1 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 6606 காவலர்கள், தமிழ்நாடு முழவதும் துயர் துடைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1000 பேர் மாநில தேசிய துயர் துடைப்பு சிறப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று அண்மையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்தாண்டு சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கம் போல் பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.இந்தாண்டு முதல் வடகிழக்கு பருவமழை மழைப்பொழிவு அதிகமாகி சென்னையை மிரட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!