தொடர்கள்
கதை
ஆ(ழ்)ள்  துளைக்கிணறு... – பா.அய்யாசாமி

2020916203727616.jpeg

குறிப்பு:
படிக்கும்போது கவுண்டமணி - செந்திலை நினைக்காதீர்கள்.
சுத்தமாக அரசியல் இல்லை - இதிலும்

மலோகம் ......

நீண்டநேர உறக்கத்திற்குப் பின் எமதர்மன் துயில் எழ, மணி ஏழரையைத் தாண்டி இருந்தது.

எழவு செய்திகளை முதலில் கேட்டுவிட்டு, பின்பு போய் நீராடலாம் என கருதிய எமன், தனது எருமையாசனத்தில் வீற்றபடி.. ஈசனே போற்றி! விஷ்ணுவே போற்றி! பிரம்மனே போற்றி! என முழக்கமிட்டு வேண்டிக்கொண்டு தனது பணியை ஆரம்பிக்கின்றார்.

“சித்ரகுப்தா! குப்தா!! யோவ் குப்தா எழுந்திருயா!!” என்று சத்தமாக கூப்பிட்ட எமன், ‘கடையே இன்னும் திறக்கலை, அதற்குள் உனக்கு உறக்கமா? விளங்கிடும் எமலோகம்’ என்று சித்ரகுப்தனை திட்டியபடி எழுப்பினார்.

“என்ன செய்வேன் பிரபு? நேற்று நைட் டியூட்டி பார்த்தேன். அதனால் கொஞ்சம் அசந்திட்டேன் பிரபு”

“டப்பீ மண்டையா! மக்கள் அசந்ததினாலேதான் உனக்கு நைட் டியூட்டியே” என்றார் எமன் டைமிங்காக.

“இப்பவெல்லாம் ரொம்ப டைமிங்கா பேசறீங்க பிரபு.. ஹீ..ஹீ..” என்றார் சித்ர குப்தன்.

“இந்த பம்ப் அடிக்கிற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். டென்சன் ஆனேன்னு வை அவ்வளவுதான்! மூடிகிட்டு ஒழுங்கா வேலையைப் பாரும்!” என்று உறுமினார் எமதர்மன்.

உயிர் நீத்து அங்கே வந்திருந்தவர்களை வரிசையாக அழைத்து, எமனின் முன் நிறுத்தினார் சித்ரகுப்தன்.

“இவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. செய்யாத தில்லுமுல்லுகள் இல்லை”.

“பெயர் என்னவோ?”

‘இவரது பெயர் நிதி’ என்றவர், “விதியை தன் மதியால் தள்ளி வைத்தவர். மேலும் நிறைய நிதிகளுக்கு சொந்தக்காரர்” என்றார் சினா குனா.

“இப்படியே விதி, நிதி, மதி என்று பேசினால் எட்டி ஒரே மிதிதான்”

“அட! நான் என்ன செய்வது பிரபு? இவருடன் கொஞ்சநேரம் பழகியதில் எனக்கும் வார்த்தை ஜாலம் ஒட்டிக்கொண்டுவிட்டது”

“வருமடா, வரும் எனக்கும் நல்லா வாயிலே வரும். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்” என்று பணித்தார் எமன்.

“விதி முடிந்ததா?”

“பின்னே? முடியாததை தூக்கிட்டாத்தான் நீங்க மீண்டும் பூலோகத்திற்கே அனுப்பிடுவீங்களே. அதனால் நாங்க உஷாராக பார்த்து தூக்கி வந்துவிட்டோம்”

“கிழிச்சே! விதி முடியாமல், இட்டிலி சாப்பிடும்போதே நீங்க லதாவை இரண்டு வருடம் முன்னே தூக்கிக்கிட்டு வந்ததன் விளைவு, அந்த நாடே இப்போ என்ன பாடுபடுது தெரியுமா? அதுக்கு என்னடா சொல்கிறாய் ஆப்பிள் மண்டையா!...”

“ஐயாம் வெரி சாரி பிரபு! அவர்களை எங்கே மீண்டும் பிறக்கவைத்து அனுப்பினீர்கள் பிரபோ?” என்றார் சினாகுனா.

“நான் எப்படி அனுப்புவேன்? அது வேற டிபார்ட்மெண்ட். எதற்கும்
இன்னும் பத்து வருடம் ஆயுள் இருப்பு என அவருக்கு நான் சான்று அளித்து விட்டேன் பிரம்மனிடம். அவரும் ஆயுள் தண்டனை பெற்ற ஒரு பெண் கைதியின் மகளாய் லதாவை மீண்டும் கருவுறச் செய்திருக்கிறார். தனக்கு பூமியில் கிடைத்த சிறைத்தண்டனையிலிருந்து அவர் தப்பியதால், தான் செய்யாத குற்றத்திற்கு பத்து வருட தண்டனை தனியே அனுபவித்து பிறகு இங்கு வந்து சேர்வாள்”

“அடடா.. என்னே உங்கள் தீர்ப்பு! குமாரசாமி தீர்ப்பு மாதிரி இல்லையே” என்றார் சினா. குனா.

“போதும் மூடு. என்னை அவர்களிடம் கோர்த்துவிட சதி தீட்டுகிறாயா? நாசாமாக்கிடுவேன் உன்னை. நிதியை போய் நன்றாக ஓய்வு எடுக்கச் சொல். அவர் தமிழ்மொழிக்காக சுய நலமில்லாமல் உழைத்ததினால் அவரின் தவறுகள் யாவும் நற் பலன்களாக மாறிவிட்டன. ம்...அடுத்தது?”

“இவர் ஒரு வாகன விபத்தால் வந்தவர்”

“வந்தவரா? போனவரா? சரியாகச் சொல் சினா. குனா”

“உயிர் போனதால் இங்கு வந்தவர் பிரபு”

“வாகனம் ஓட்டும் போது தலைக் வகவசம் அணிந்திருந்தாரா?”

“அணியவில்லை பிரபு”

“அப்படியானால் தண்டனை வழங்கும் நேரமிது, நிலக்கடலையையும், கொண்டைக்கடலையையும் கலந்து கொடுத்து, அதை கவனமாக காலம் முழுவதும் தனித்தனியாக பிரிக்கச் சொல்லவும். ஒன்று தவறினால் கூட, கசையடி கொடுக்கவும் என்று உத்திரவிடுகிறேன்” அச்சமயம் விபத்தில் வந்தவர் பணத்தை எடுத்து நீட்டி, சினாகுனாவிடம் ஏதோ கிசுகிசுக்க...

“தலைக்கவசம் அணிந்திருந்தார் பிரபு” என்றார் சினா. குனா அவசரமாக...

“எம் லோகத்திலும் லஞ்சம். ம்......” என உறுமிய எமன், “அதற்குள் பேரம் பேசி படிந்துவிட்டாயா சினா. குனா? அப்படியானால் கடுகையும் எள்ளையும் நன்கு கலந்து காலம் முழுவதும் பிரிக்கச் சொல். ஒன்று தவறினாலும், உங்கள் இருவருக்கும் கசையடி கிடைக்கும் என உத்திரவிடுகிறேன்” என்றார் கண்களை உருட்டியபடி.

“பிரபு!!!!” என அலறினார் சினா. குனா.

‘வாடி! லஞ்சமா வாங்குறே?’ என்று மனத்திற்குள் நினைத்தார் எமன்.

“அடுத்து யார்?”

“இவர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி. பெயர் சலாம். கரூர் அருகில் ஓர் சிற்றூர். ஆனால் இவர் நமக்கு எதிராக வேலை செய்தவர்”

“என்ன சொல்கிறாய்? நமக்கு எதிராகவா? எப்படி?” என்றார் கோபமாக.

“தனது தனித்திறமையின் மூலம், மரமேறும் உழைப்பாளர்க்கு பாதுகாப்பாகவும், தேங்காய் பறிப்பதற்கு எளிதாகவும், பிரத்யேகக் கருவிகள், மனிதனுக்கு மாற்றாக சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தானியங்கிக் கருவிகள், குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்தால், மேலே நின்றபடி காப்பாற்ற பிரத்யேகக் கருவிகள் போன்றவற்றை கண்டுபிடித்து, உயிர் இழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் நமக்கு எதிராகவும், நமது எமலோகப் பணிக்கு இடையூராகவும் இருந்தார் பிரபு”

“இவரின் விதி முடிந்துவிட்டதா?” என கேட்டார் எமன்.

“இவ்வளவு நல்ல காரியங்கள் செய்பவரை விதி எப்படி எளிதில் நெருங்கும் பிரபு...?”

“என்னிடமே எதிர் கேள்வி கேட்கிறாயா சினா. குனா?”

“இவரின் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வித அங்கீகாரமும் அரசிடமிருந்து கிடைக்கவில்லையாம். தன் கை காசையெல்லாம் போட்டுவிட்டதால், பட்டினியால் தன் குடும்பத்தை இழந்து, தான் தனி ஒருவனாக இருந்து என்ன செய்வது என்று தெரியாமல், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இங்கு வந்து சேர்ந்தவர்” என்றார் சினா. குனா.

“சிவ, சிவா” என்ற எமன் வருத்தப்பட்டார்.

“இன்னும் இரண்டு வருடங்கள் நீ அங்கே இருந்திருந்தால், உன் புகழ் கொடிகட்டி பறந்திருக்கும். அதற்குள் வந்துவிட்டாய். பரவாயில்லை, உன் நல்ல செயலுக்காக உன்னை மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்ப பிரம்மனிடம் பரிந்துரைக்கின்றேன்” என்ற எமன், அவரை அனுப்பி வைத்துவிட்டு சபையைக் கலைத்தவர்...

“கோமூட்டி தலையா.... அந்த உயிர் ஓலையை இப்படி கொடு, உன்னையெல்லாம் நம்பமுடியாது. நான் போன பின்பு ஏதும் கோக்குமாக்கு செய்து பொறி உருண்டை, பொட்டுக் கடலை வாங்கி தின்றுவிடுவாய்” என சொல்லிக் கிளம்பினார்.

எமனின் பரிந்துரைப்படி சலாம் கோவையில், வசதிகளுக்கு சற்றும் குறைவில்லாத இளம் தொழிலதிபர் சின்னசாமி தம்பதியருக்கு மகனாகப் பிறக்கும் மறு பிறப்பை அளித்தார்.

இப்படியாக எமலோகத்திற்கு இரண்டு தினங்கள் கழிந்ததில்
பூமிப் பந்தில் இரண்டு வருடங்கள் கழிந்தன.

கரூர் அருகே பணியாரப்பட்டி கிராமம், வயக்காட்டில் சோளத்தட்டை பயிர் செய்து வந்த ஒரு தம்பதியின் இரண்டு வயதுக்குழந்தை அவர்கள் அமைத்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து ஊரே பரபரப்புடன் இருக்க... மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், தனியார் அமைப்புகள் தன் பங்கிற்கு முயன்று கொண்டிருந்தது.

‘இதற்கு நம்ம சலாம் தம்பி கண்டுப்பிடித்த கருவிதான் சரியாக இருக்கும், அதை போய் உடனே எடுத்துக்கிட்டு வாங்க’ என அதிகாரிகளிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டு இருந்தார் ஒருவர்.

அதிகாரிகளிடையே இவரின் பேச்சு எடுபடாமல் போகவே... குழந்தையின் பெற்றோர்களும் ‘அதுதான் சரியாக இருக்கும், நாங்கள் ஏற்கனவே அதை வைத்து குழந்தைகளை மீட்டதை நாங்கள் பார்த்து இருக்கின்றோம்’ என பரிந்துரைக்க, அரசு வேண்டா வெறுப்பாக லேசாக அசைந்து கொடுத்தது.

அந்தக் கருவியைக் கொண்டு விரைவாக குழந்தையை உயிரோடு மீட்டெடுத்ததில், அந்த கருவியும், அதைக் கண்டுபிடித்த மறைந்த சலாமின் புகழ் தமிழகமெங்கும் பரவலாக பேசப்பட்டதில் ஈர்க்கப்பட்டு,
கோவையைச் சார்ந்த தொழிலதிபர் சின்னசாமி அவர்கள், தானே முன்வந்து அரசுக்கு இலவசமாக அந்தக் கருவியை தயாரித்துக் கொடுப்பதாக கூறியவர், அதற்கு அதனை கண்டுபிடித்த சலாம் பெயரையே வைப்பதாகவும் தெரிவித்ததை தமிழகமே கொண்டாடி மகிழ்ந்தது.