தொடர்கள்
பொது
விபசாரக் கூடமாக மாறிய சென்னை மசாஜ் சென்டர்கள்.!- நமது நிருபர்

2020917044909600.jpg

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒருசில பகுதிகளில் அல்லது எங்காவது ஒரு இடத்தில், தகுதியான மற்றும் அனுபவமுள்ள நபர்களை வைத்து ஆயுர்வேதம் அல்லது சித்த வைத்திய சிகிச்சை ரீதியான மசாஜ் சென்டர்கள் மட்டுமே இயங்கி வந்தன. இங்கு மசாஜ் செய்வதற்கு முன்கூட்டியே அனுமதி பெறவேண்டிய சூழலும் இருந்தது. ஆனால் சமீப காலமாக மசாஜ் சென்ட்டர்கள் எனும் பெயரில் புதுவகை பாலியல் அதகளம் ஆரம்பித்து விட்டது. தற்போது பெரும்பாலான மசாஜ் சென்டர்கள் கிட்டத்தட்ட விபசார விடுதிகளாகவே மாறிவிட்டன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மசாஜ் சென்டர்களின் அதிகரிப்பும், அவற்றில் நடைபெறும் முறைகேடுகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

இதில் பெரும்பாலான மசாஜ் சென்டர்கள், பிரைவேட் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட இடத்தில் தவறு நடந்தாலும், அதை போலீசார் உடனடியாக தட்டிக் கேட்க முடியாத அவலநிலை உள்ளது. இதற்காக அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, அவர்கள் மூலமாகவே நோட்டீஸ் அனுப்பி, ‘உங்களுக்கு முறையான அங்கீகாரம் உள்ளதா?’ என கேட்கின்றனர்.

இதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு வேறிடத்துக்கு சென்றுவிடுகின்றனர்.

தற்போது ஆன்லைன் மூலமாகவும் வாட்ஸ் ஆப் வழியாகவும் கூட இந்த சென்ட்டர்கள் ஆட்பிடிப்பு வேலைகளில் இறங்குகின்றன.

முன்னதாக, சென்னை நகரில் 500-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இயங்கின. கொரோனா வைரஸ் பரவலினால் 200-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டுள்ளன என தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற விபசார தடுப்புப் பிரிவு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு காலத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசாரை பார்த்தாலே, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அஞ்சுவர். ஆனால், தற்போது இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று ஓட்டலில் சென்று ரெய்டு நடத்தினாலும் கூட, ‘நானும் இவரும் நண்பர்கள். எங்களது சந்தோஷத்துக்காக இங்கு வந்தோம். எங்களுக்குள் எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறவில்லை’ என வெளிப்படையாகவே கூறுகின்றனர். அவர்களுக்கு அந்தளவு சட்டம் துணை நிற்கிறது. இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்கிறார்.

சம்பந்தப்பட்ட பகுதி போலீசாருக்கு வருவாய் குறைந்துவிடும் என்பதால், இது போன்ற மசாஜ் சென்டரின் உரிமையாளர்கள் அல்லது விபச்சார தொழில் நடக்க உதவும் ஓட்டல் முதலாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்படுவதில்லை என்பதே உண்மை!

இதற்கிடையே ‘ஏவிஎஸ்’ எனும் விபசார தடுப்பு பிரிவில் சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இப்பிரிவில் பணிக்கு சேர சுமார் ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை பணம் கொடுப்பதற்கு, வேறு பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதற்குக் காரணம், அவர்கள் போட்ட தொகையை ஒரே வருடத்துக்குள் பலமடங்காக எடுத்துவிடலாம் எனும் பொட்டில் அறையும் நிஜம்தான்! இப்படி இதில் போட்டி அதிகம் நிலவுவதால், அரசியல்வாதிகள் இடையே புகுந்து, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களிடம் அதிகளவு பணத்தை கறந்து அவர்களுக்கு விபசார தடுப்புப் பிரிவில் போஸ்ட்டிங் வாங்கித் தரும் வெட்கக்கேடான செய்லகளும் தாராளமாகவே நடக்கிறது! இதில் எந்தக் கட்சியின் ஆட்சியும் அதிகாரமும் விதிவிலக்கல்ல என்பதே வேதனை!

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் துணை ஆணையர் ஜவஹர் உத்தரவின்பேரில் 5 தனிப்படையினர் மாறுவேடத்தில் இது போன்ற மசாஜ் சென்டர்களை தீவிரமாக கண்காணித்தனர். இதையடுத்து கடந்த 15-ம் தேதி இரவு அண்ணாநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் அதிரடி சோதனைகள் நடைபெற்றது. இச்சோதனையில் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பெண்கள் மீட்கப்பட்டனர். அங்கு வேலை செய்த 2 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது ஒரு பானை சோற்றுக்கான ஒரு பருக்கை சாம்ப்பிள் மட்டுமே! நகரம் முழுதும் இதே மாதிரியான தீவிர ரெய்டு நடந்தால் இன்னம் 100 சென்ட்டர்களாவது மாட்டுவது உறுதி!