வெற்றிக்கு சில புத்தகங்கள்...
வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்...
29 நாட்கள் 29 பரிசுகள்
இந்தக் கதை கேமி வாக்கரின் திருமணத்திலிருந்து துவங்குகிறது........
அவருக்கும் அவருடைய கணவருக்கும் தங்கள் எதிர்காலத்தை பற்றிய கனவு நிறைய இருந்தது. ஆனால், காலம் அவர்களை நிஜத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. திருமணமான சில நாட்களில் கேமிக்கு உடல்நலமில்லாமல் போனது. மருத்துவர்களை பார்த்தபோது, அவர்கள் விதம் விதமாய் சொல்லி இருவரையும் பயமுறுத்தினார்கள். இவர்கள் பார்க்காத வைத்தியமில்லை. ஆனால், வாரத்துக்கு வாரம் அவருடைய உடல் பலவீனம் ஆகிக் கொண்டே இருந்தது. எல்லாவிதமான மருத்துவ முறைகளையும் நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். பன்னாட்டு வைத்தியர்கள் கேமியை பரிசோதித்தார்கள். ஆனால், எதுவும் அவரை நோயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. சில நாட்களில் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். தூங்குவதே இல்லை, உச்சக்கட்ட விரக்தியில் ராத்திரி பகலாக ஏதேதோ காகிதங்களை, தான் எழுதி வைத்த டைரிகளை புரட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் நள்ளிரவு அவர் தன்னுடைய பழைய டைரியை படித்துக் கொண்டிருந்தார். அதில் இருந்த ஒரு குறிப்பு, அவரை மேலும் படிக்க செய்தது. இன்று இம்பாலி கிரியஜ்ஜோவை சந்தித்தேன். கேமி பார்த்த பல நாட்டு மருத்துவர்களில் அவரும் ஒருவர். மற்ற மருத்துவர்கள் எல்லாம் மருந்து மாத்திரைகளை இவருக்கு கொடுக்கும்போது, இம்பாலி கிரியஜ்ஜோ வேறு ஒரு வித்தியாசமான வைத்தியத்தை அவருக்கு சிபாரிசு செய்தார். அடுத்த 29 நாட்களுக்கு, தினமும் யாராவது ஒருத்தருக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுக்கணும். தெரிஞ்சவங்க, தெரியாதவங்க என வித்தியாசம் எதுவும் பார்க்கக்கூடாது. பணம் முக்கியமல்ல... மனசு நிறைய அன்போடு கொடுத்து பழகணும், அது உன்னோட உடம்பையும், மனசையும் சுத்தப்படுத்தி, உன்னை முழுமையாக மாற்றும். இந்த நோயிலிருந்து நீ வெளி வந்து விடுவாய் என்று சொல்லியிருந்தார். அவரிடம் சென்ற அந்த நாளை நினைவு கூர்ந்தார்... கிரியஜ்ஜோ இதைச் சொன்னவுடன், கேமி சிரித்துவிட்டார். இப்படி ஒரு வைத்தியமா என்று குலுங்கி குலுங்கி சிரித்தார். கிரியஜ்ஜோ சொன்னார்... இல்லமா நிஜமா தான் சொல்றேன், நீ இதை முயற்சி செஞ்சு பாரு. 29 நாளில் உன்னோட வாழ்க்கையே மாறிவிடும், அதுக்கு நான் கேரண்டி என்றார். கேமிக்கு நம்பிக்கை வரவில்லை. நைசாக அவரிடம் சொல்லிக் சொல்லிக்கொள்ளாமல் திரும்பி வந்துவிட்டார்.
அதன் பிறகு நிறைய மருத்துவர்களை பார்த்தாலும் வியாதி இன்னும் பெரிதானதே தவிர, குறையவில்லை. இப்போது இதை படித்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு யோசனை. இதை செய்து பார்த்தால் என்ன..? ஒருவேளை அவர் சொன்னது நிஜமாக இருக்குமோ... முயற்சி செஞ்சு பார்த்திடலாம் என்று நினைத்தபடியே அதிகாலை 3:௦௦ மணிக்கு உறங்கச் சென்றார்.
மறுநாள் அவருடைய 29 நாட்கள் 29 பரிசுகள் பரிசோதனை தொடங்கியது. பரிசு என்றால் அதிக பணம் செலவழித்து, பளபளவென்ற காகிதத்தில் சுற்றி தருவதல்ல. பிரச்சனையில் இருக்கும் நபருக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை, தெருவில் அலைந்துகொண்டிருக்கும் நாய்க்கு அன்போடு ரொட்டித் துண்டுகள், என இது எல்லாமே பரிசுகளில் சேர்ந்ததுதான். முதலில் யாருக்கு என்ன பரிசு தர வேண்டும் என்று ஒரு பட்டியல் போட நினைத்தார். ஆனால், அது ஹோட்டல் மெனு போல ஆகிவிடும் என்பதை புரிந்து கொண்ட பிறகு, அன்றன்று தோன்றுவதை பரிசாக கொடுத்து விட நினைத்தார். கிரியஜ்ஜோ சொன்னபடி ஒவ்வொரு பரிசை தரும் போதும் கேமின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. அடுத்தவர் மீது செலுத்துகிற அந்த உண்மையான அக்கறை உணர்வு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு பலமடங்காக திரும்பி நம்மிடமே வரும் என்பதும், அது எப்பேர்பட்ட காயங்களையும் ஆற்றக்கூடிய அருமருந்து என்பதும் அவருக்குப் புரிந்தது. பத்து நாட்கள் கழிந்தன. இப்போது அவர் உள்ளத்தில் மட்டுமல்ல... உடலிலும் மாற்றம் தெரிந்தது. இதுவரை அவர் வெறித்துக் கொண்டிருந்த அந்த வாழ்க்கையின் மீது, ஒரு மகத்தான பிடிப்பு ஏற்பட்டது. உடனே அவர் ஒரு இணையதளத்தைத் தொடங்கி, அதில் தன்னுடைய பரிசு, உடல்நிலை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற குழப்பத்தில் இருக்கும் வேறு யாருக்காவது இந்த விஷயங்கள் உதவக்கூடும், ஆறுதல் தரக்கூடும் என்ற நல்ல எண்ணத்தில் இதை துவங்கினார் (இதுகூட ஒரு பரிசு தானோ). கிரியஜ்ஜோ கூறியபடி, அந்த 29 நாள் சோதனையின் முடிவில் அவர் ஒரு புது மனுஷியாகி புதியதாய் பிறந்துவிட்டார். அவருடைய நோய் குணமானது கூட அவருக்கு இரண்டாம்பட்சமாக தான் தோன்றியது. அடுத்தவருக்கு கொடுத்து வாழும் மகிழ்ச்சி இப்போது அவருக்கு பிடிபட்டது, பழகிவிட்டது. அதனால் கிடைக்கக்கூடிய சந்தோஷமும் மனநிறைவும் விலைமதிக்க முடியாததாய் இருந்தது.
இணையத்தில் அவருடைய 29gifts.org மிகப் பிரபலம். பல நாடுகளைச் சேர்ந்த மக்கள், கேமியின் அனுபவங்களை படித்துவிட்டு தாங்களும் 29 நாள் பரிசோதனையில் இறங்கியிருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட மாறுதல்களையும், அதன்மூலம் நன்றியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறு திரட்டிய அனுபவங்களை 29Gifts என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எத்தனையோ சுய உதவி புத்தகங்கள், நம்பிக்கை புத்தகங்கள் உலகில் இருந்தாலும்... கேமியின் இந்தப் புத்தகம் ஒரு வித்தியாசமான சுயசரிதையாக பலருக்கும் நம்பிக்கை அளித்து வருகிறது. இந்த 29 நாள் பரிசோதனையை உடல் நலம் குன்றியவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை யார் வேண்டுமானாலும் இதனை செய்யலாம்.
இதன் மூலம் கிடைக்கும் நான்கு முக்கிய பலன்களை அந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். அவை:
# நீங்கள் நிறைய சிரிக்க துவங்குவீர்கள்... முன்னர் இருந்ததை விட நிம்மதியாகவும், அதிக சந்தோஷமாகவும் உணரத் துவங்குவீர்கள்.
# உங்கள் உடல் வலிமை பெற்றிட துவங்கும். உதாரணமாக 29 நாள் பரிசோதனையை துவங்கியபோது நான் படுத்த படுக்கையாக இருந்தேன். பத்தே நாட்களில் கையில் கைத்தடி கொண்டு நடக்கத் துவங்கி விட்டேன், அந்த அளவுக்கு என் மனமும் உடலும் தேறி விட்டது.
# உங்களுடைய கற்பனை சக்தி மேம்பட்டு, படைப்புத்திறன் அதிகரிக்கும். உங்களின் இந்த கிரியேடிவ் உழைப்பு மேலும் பல வெற்றி வாய்ப்புகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். தொழில் ரீதியாகவும் நீங்கள் வெற்றியடைய தொடங்குவீர்கள்.
# உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் உண்மையான பரஸ்பரம் நம்பிக்கையான ஒரு உறவை வளர்த்து எடுப்பீர்கள்.
இந்த 29 நாள் 29 பரிசுகள் பரிசோதனையில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறதோ, இல்லையோ... நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது நடக்கும் என்று நினைத்துக்கொண்டு ஒரு மாதத்தை இதற்காக ஒதுக்கி, இதை முயன்று பாருங்கள் என்கிறார் கேமி. பக்க விளைவுகள் ஏதும் இல்லாத இந்த மருத்துவ முறையை நிச்சயம் செயல்படுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று.
என்ன ஒரு மாதம் ஒத்திகை பார்க்க நீங்க ரெடியா?......
Leave a comment
Upload