ஒளியால் சென்று உண்டான்!
கண்ணபிரான் வெண்ணெயில் ஆசை கொண்டு ஒருவரும் அறியாத வண்ணம் எல்லாவற்றையும் திருடி உண்பதைத் தடுக்க எண்ணி, எவ்வளவோ ஜாக்ரதையாகக் கட்டுக் காவலுடன் வைத்தாலும் அவன் எப்படியோ ஒருவருக்கும் தெரியாமல் திருடி விடுகிறான். பயிர்த் தொழில் செய்யும் விவசாயிகள் பயிரை ஆடுமாடுகள் மேய்ந்து விடாமலிருப்பதற்காக வேலியடைத்து வைத்திருக்க எப்படியோ அவர்கள் அறியாதபடி வேலிக்குள் நுழைந்து பயிரை நாசம் செய்யும் பட்டிக்கன்று போலக் கண்ணபிரானும் செய்து விடுகிறான்.
அகம்புக்கு அறியாமே சட்டித் தயிரும்
தடாவினில் வெண்ணெயுமுண் பட்டிக் கன்று
(பெரியாழ்வார் திருமொழி 1-6-5)
என்கிறாள் யசோதை. இது மட்டுமேயோ?
தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறிமேலைத்தடா நிறைந்த
வெள்ளிமலையிருந்தாலொத்த வெண்ணெயை வாரிவிழுங்கியிட்டு
கள்ளவனுறங்குகின்றான் வந்து காண்மின் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளைபரமன்று இவ்வேழுலகுங் கொள்ளும் பேதையேனென்செய்கேனோ.
(பெரிய திருமொழி 10-7-3)
ஊரிலுள்ள பெண்களையெல்லாம் அழைத்து யசோதை சொல்லுகிறாள். “நங்கைமீர்! இவன் பார்ப்பதற்கோ மிகவும் சிறியவனாக இருக்கிறான். ஆனால் செய்த செயலைப் பாருங்கள். உறிமேல் தடாக்களில் சேமித்து வைக்கப்பட்டு வெள்ளிமலை போலே இருந்த வெண்ணெய் எல்லாவற்றையும் வாரி விழுங்கிவிட்டு, ‘இந்தப் பூனையா பாலைக் குடித்தது?’ என்னும்படியாக ஒன்றுமறியாதவன் போல் பாசாங்குடன் குறட்டைவிட்டுப் பொய்யுறக்கம் உறங்குகிற கள்ளனைப் பாருங்கள். திருடக் கற்றானே தவிர, திருட்டை மறைக்கத் தெரியவில்லையே இவனுக்கு! கையெல்லாம் நெய்மயமாயிருக்க அதைத் துடைத்துக் கொள்ளாமலே கிடக்கிறான். இவ்வளவு வாரியுண்டும் இவனுடைய வயிறு நிரம்பினபாடில்லை. இவ்வேழுலகையும் உண்டாலும் நிரம்பாத வயிறன்றோ இவனது! இவ்வளவு வெண்ணெயும் போயிற்றே என்று நான் வருந்தவில்லை. இத்தனை உண்டால் இவனுக்கு ஜீரணமாகாதே என்றன்றோ நான் வருந்துகிறேன்” என்கிறாள் யசோதை.
இப்படிக் கண்ணனுடைய திருட்டுக்கும் யசோதையின் புலம்பலுக்கும் பயப்பட்டுக் கொண்டு ஆய்ச்சிகள் எல்லோரும் தத்தம் மனைகளில் வெண்ணெயை மிகவும் பாதுகாப்பாக வைப்பர்கள். தங்கள் குடில்களின் கதவை நன்றாகச் சாத்தி வைத்து விட்டுப் போவார்கள். ஆனால் கண்ணனுக்குத் தெரியும் எப்படி அக்குடில்களில் புகுவது என்று!
படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு
(பெரிய திருமொழி 4-4-3)
“இவனுக்கு நுழைந்து புகுகையாகையிறே குடிலினுடைய பெருமை”
என்பது வ்யாக்யான ஸ்ரீஸூக்தி.
துன்னுபடல் திறந்து புக்கு (பெரியதிருமடல்)
மேலே படலிருக்கக் கீழே நுழைந்ததும் களவு கை வந்ததுமத்தனையன்றி அவள் கோலிட்டுத் திருகி வைக்கும் யந்திரமறியான். பலகால் புக்க வழக்கத்தாலே அறியுமென்கை. என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. இப்படியெல்லாம் ஒருவருமறியாவண்ணம் பிறர் மனையின் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே புகுவான் கண்ணன். உள்ளேயோ ஒரே இருட்டு. ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன செய்வது என்று ஒரு வினாடி யோசித்தான் கண்ணன். பிறகு கையால் தடவிக் கொண்டே சென்றான். வெண்ணெய்த் தாழிகையிலே பட்டவாறே மகிழ்ச்சியினால் பல்லைத் திறந்து சிரித்தான். பூர்ண சந்திரனுடைய கிரணங்களைப் போல பற்களின் ஒளி புறப்பட அதையே கைவிளக்காகக் கொண்டு கண்ணன் வெண்ணெயைத் திருடி உண்டான் என்கிறார் நம்மாழ்வார்:
நாளிளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம்பால்
வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர் தாயவனே.....
(திருவாய்மொழி 3-8-3)
இப்படித் தானே உண்டாக்கின ஒளியில் வெண்ணெயை உண்டு கொண்டிருக்கும்போது ஆரேனும் அங்கே வந்துவிட்டால் என்ன செய்வது? என்றால், யாரேனும் அங்கு வந்தால் சட்டென்று வாயை மூடிக் கொண்டு விடுவனாம் கண்ணன். உடனே மீண்டும் இருட்டாகி விடும். இவ்வளவு சாமர்த்யம் கண்ணனுக்கு உண்டோ என்றால், அதில் திறமை ஒன்றுமில்லை.வெண்ணெய்த்தாழி தட்டுப்பட்ட சந்தோஷத்தில் தானாக வாயைத் திறப்பான்; அதனால் ஒளிபரவும். யாரேனும் வரும் ஓசை கேட்டால் பயத்தால் தானே வாய்மூடிக் கொள்ளும். உடனே இருட்டாகி விடும் என்கிறார் இவ்விடத்து வியாக்கியானத்தில் நம்பிள்ளை.
உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று
(பெரிய திருமொழி 2-10-6)
என்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்கிறார். ஸ்ரீபாகவதத்திலும் (10-8),
த்வாந்தாகாரே த்ருதமணிகணம் ஸ்வாங்கமர்த்தப்ரதீபம்ஞு காலே கோப்யோ யர்ஹி க்ருஹக்ருத் யேஷு ஸுவ்யக்ரசித்தா:ஞுஞு
(இருட்டில் தன் மணிமயமான திருமேனியை விளக்காகக் கொண்டு சென்று கோபிகைகள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது வெண்ணெய் திருடி உண்கிறான்) என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி ஒளியைப் பரப்பி வெண்ணெய் திருடி உண்டு விட்டு, யாரேனும் வரக் கண்டவாறே வாயை மூடிக் கொண்டு இருட்டாக்கி விட்டுத் தப்பிக்க முயல்வான் கண்ணன். ஆனால் தப்பித்தானா என்றால் அது வேறு கதை!
ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு
(பெரியாழ்வார் திருமொழி 2-10-5)
இப்பாசுரத்திற்குத் திருவாய்மொழிப் பிள்ளை வ்யாக்யானம் மிகவும் ரஸமாக அமைந்துள்ளது. (இந்தத் திருவாய்மொழிப் பிள்ளை மணவாளமாமுனிகளின் ஆசார்யராக இருக்க முடியாது என்றும் அவருடய பரம்பரரையில் வந்து, அவருடைய பெயரையே கொண்ட வேறொருவராக இருக்கலாம் என்றும் ஸ்ரீ உ.வே. மஹாவித்வான் ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமி நிர்ணயித்துள்ளார்.)
கண்ணபிரான் ஆய்ச்சியருடைய தெருக்கள் தோறும் திரிந்து படலடைத்த வாசல்கள் தோறும் நுழைந்து வெண்ணெய் அமுது செய்வான். அகங்களில் ஒருவரும் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்து புறப்படுவதால் ‘நம்மை அவர்கள் கண்டு பிடிக்க முடியாது’ என்று மீண்டும் மீண்டும் நுழைந்து புறப்பட்டுக் கொண்டிருப்பான். இப்படி இவன் பலமுறை வந்துபோய்க் கொண்டிருந்தபடியாலும், இவனுடைய காலடியோசையாலும், உடைமணியின் ஒலியாலும் இவனை அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்; இவன் ஓடப்பார்த்தாலும் இவனுடைய உடைமணியின் ஓசையால் இவனிருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு விடுவார்கள். இதை உணர்ந்த கண்ணன் உடைமணியின் ஓசை அவர்கள் காதில் விழாதிருக்க என்ன செய்வது என்று யோசித்தான். மணியோசை அவர்கள் காதில் விழாதிருக்க வேண்டுமானால் அவர்கள் காதை இவன் மூட வேண்டும். அப்படிச் செய்தால் இவன் அகப்பட்டுக் கொள்வான். உடைமணியின் நாக்கைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினால் மணி ஒலிக்காது என்ற யுக்தி அவனுக்குத் தோன்றவில்லை. ஆதற்காக என்ன செய்வது? முடிவில் ஒருவழி கண்டு பிடித்து விட்டான். தன் காதை இறுக மூடிக் கொண்டு ஓடவாரம்பித்தான். அப்போது உடைமணியின் ஓசை தன் காதில் விழாதது போலவே அவர்கள் காதிலும் விழாது என்று நினைத்துவிட்டான் கண்ணன். இப்படியும் ஒரு அறிவு கேடு உண்டோ! அவர்கள் அவனைப் பிடித்துக் கட்டி விட்டார்கள். அப்போதும் அவன் வருந்தவில்லையாம். இன்னும் வெண்ணெய் திருடுவதற்கு என்ன உபாயம் செய்யலாம் என்று யோசிப்பதற்கு இது மிகவும் ஏகாந்தமான இடம் என்று அங்கேயே இருந்தானாம். கண்ணபிரான் வெண்ணெய் திருடிவிட்டு ஆய்ச்சிகளிடம் அகப்படாமல் இருக்கும் பொருட்டு ஓடிய விதத்தை வேதாந்த தேசிகன் மிக அழகாக அனுபவிக்கிறார்.
த்ரஸ்யந் முகுந்தோநவநீதசௌர்யாத் நிர்புக்நகாத்ரோ நிப்ருதம் ™யாந:ஞு
நிஜாநி நி•™ப்தத™ாம் யயாசே பத்வாஞ்ஜலிம் பால விபூஷணாநி:ஞுஞு (யாதவாப்யுதயம் 4-29)
மோக்ஷத்தையும் அளிக்கவல்லவனான முகுந்தன் ஆய்ப்பாடியில் வெண்ணெயைத் திருடிவிட்டான். பிறகு ஆய்ச்சிகள் கண்டுபிடித்து விடுவார்களே என்று ஓடி ஓதுக்குப்புறமான ஓரிடத்தில் ஒளிந்து கொண்டு விட்டான். இடைச்சிகள் தன்னை அடித்துவிடப் போகிறார்களே என்ற பயத்தினால் நடுங்குகின்ற உடலை ஒடுக்கிக் கொண்டு அசையாமல் கைகளைக் குவித்துக் கொண்டு ஓரிடத்தில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தான். தான் அணிந்திருக்கும் சதங்கை போன்ற ஆபரணங்களை “நீங்கள் ஓசை செய்து நானிருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்” என்று கைகுவித்து வேண்டிக் கொள்வது போலிருந்ததாம் அந்த நிலை. இவன் உடலை ஒடுக்கிக் கொண்டு படுத்திருந்தாலும் தன்னுடைய உடல் நடுக்கத்தினால் ஆபரணங்கள் ஒலித்துத் தானிருக்கு மிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று அஞ்சினான் போலும் என்கிறார் வேதாந்த தேசிகர்.
இப்படியும் கூட ஒரு அறிவுகேடு உண்டோ! ஸர்வஜ்ஞன் என்றும் ஸர்வசக்தன் என்றும் சொல்லப்படுகின்ற எம்பெருமான் இப்படி ஒன்றும் தெரியாதவனாக நடந்து கொள்வதற்குக் காரணமென்ன? அடியார்கள் கைபட்ட பொருளைத்தான் உண்ண வேண்டும்; அதுவும் அவர்கள் கொடுத்தாலும் வேண்டாமென்று சொல்லி, திருடி உண்ண வேண்டும். அவர்கள் கண்டுபிடித்து இவனைத் தண்டிக்கப் புக்கால் ஒன்றுமே அறியாத முட்டாள் போல் நடந்து கொண்டு அவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு கட்டுண்டு அடியுண்டு கிடக்க வேண்டும்; அந்த எளிமையை நினைத்து நினைத்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஈடுபட வேண்டும் என்பதல்லவோ அவன் திருவுள்ளம்!
Leave a comment
Upload