
கருத்து சுதந்திரம் பற்றிய பாடம் எடுத்த பொழுது, முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, 47 வயதாகும் சாமுவேல் பேட்டி என்னும் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான ஆசிரியர், கடந்த வெள்ளியன்று பிரான்சில் தலை வெட்டிக் கொல்லப்பட்டது, உலகம் முழுக்க அதிர்ச்சி தரும் செய்தியாக பரவியது. இதை அடுத்து இறந்த ஆசிரியருக்காக #நான் சாமுவேல் என்கிற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் ட்ரெண்டானது.
ஷார்லீ ஷெப்டோ வழக்கு தொடர்பான கேலிச்சித்திரங்களை வகுப்பறையில் அந்த ஆசிரியர் காண்பித்ததால், சில மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் அவர் மேல் புகார் கூறிய நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கிறார். ரஷ்யாவுடனான செச்சினியப் போரின் போது, வெளியேறிய செச்சின் அகதிகளில் ஒருவனான அப்துல்லா (19 வயது) என்ற கொலையாளியை தீவிர தேடுதலுக்கு பிறகு ஃப்ரான்ஸ் காவல்துறை கண்டுபிடித்து சரணடையச் சொல்லியும் கேட்காததால் இறுதியில் அவரை சுட்டுக் கொன்றிருக்கிறது.
இதனை ‘இஸ்லாமிய தீவிரவாத செயல்’ என்று ஃபிரான்ஸ் அரசு அறிவித்து, கொலையாளியின் குடும்பத்தினர் மற்றும் அந்த ஆசிரியர் வேலை பார்த்து வந்த பள்ளியில் ஒரு மாணவரின் தந்தை மற்றும் 4 மாணவர்கள் என அனைவரையும் கைது செய்திருக்கிறது. 2015 இல் இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இந்த கார்ட்டூனை வரைந்த பத்திரிகை அலுவலகத்தினுள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதில் அன்று 12 பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரான்ஸில் கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 73 மசூதிகள், மதராஸாக்கள் இஸ்லாமிய பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கொலைக்குப் பின்னர், மேலும் ஒரு மசூதியை 6 மாதங்களுக்கு செயல்படக் கூடாது என அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆசிரியரைப் பற்றி முகநூலில் பள்ளியின் முகவரியுடன் பகிர்ந்து ‘ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்த மசூதியை சேர்ந்தவர்களே கோரியிருந்தனர்.
தங்கள் மதத்தை பற்றி யார் அவதூறாக பேசினாலும், எழுதினாலும் அவர்களின் தலைக்கு விலை பேசி ஃப்த்வா அறிவிப்பதை சில இஸ்லாமிய நாடுகள் வழக்கமாகவே வைத்திருக்கின்றன.
ஃப்ரான்ஸ் என்னும் நாடே கருத்து சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை மறந்து அங்கு அகதிகளாக போன சிலர், இது போன்ற கொடூர வேலைகளை செய்திருக்கிறார்கள்.
சில இஸ்லாமியர்கள் “ஃப்ரான்ஸில் மட்டும் Antichrist, Baise-Moi, The Texas Chainsaw Massacre போன்ற திரைப்படங்கள் தடை செய்யப்படவில்லையா? பின் எப்படி முழு கருத்து சுதந்திரம் அங்கு இருக்கிறது என சொல்கிறீர்கள்?” என கேட்கிறார்கள்.
ஆம். சில படங்கள் அந்த நாட்டில் தடை செய்யப்பட்டன. ஆனால், அதற்குக் காரணம் அதிக அளவு செக்ஸ் மற்றும் வன்முறை காட்சிகள் இருந்ததால் அவை தடை செய்யப்பட்டன அன்றி மதங்களை விமர்சித்ததால் அவைகள் தடை செய்யப்படவில்லை.
இங்கேயும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்தக் கொலையை கண்டிப்பதாக சொன்னாலும், இம்மாதிரி இஸ்லாமியர்களை சீண்டும் வேலைகளை செய்ததால் தான் இந்தக் கொலை நடந்தது எனவும் முடிக்கிறார்கள்.
சிலர் “ஹூசைன் நிர்வாண சரஸ்வதி படம் வரைந்த சமயம் இந்துக்கள் கொதிக்கவில்லையா? கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை கேவலப்படுத்தியபோது இந்துக்கள் பொங்கவில்லையா?” என கேட்கிறார்கள். ஹூசைன் மரணம் அடைந்தபோது அவரது தலை உடலோடு தான் இருந்தது என்பதை அவர்கள் ஏனோ மறந்து விட்டார்கள். கருப்பர் கூட்டமும் அப்படியே... கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதற்கும் தலையை தனியே வெட்டி எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
வட இந்தியாவில் மாடு கடத்துகிறார்கள் என ஒரு கும்பல் படுகொலை நடந்ததே அது மட்டும் நியாயமா? என்று கேட்கிறார்கள். ஆம். அது அநியாயம் தான். அந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து பெரும்பான்மையான இந்துக்கள் குரல் கொடுத்தார்கள். ஆனால், ஃப்ரான்ஸ் சம்பவத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்?
திருபுவனம் ராமலிங்கம், இஸ்லாமியர் ஒருவருக்கு திருநீறு வைத்தார் என்ற காரணத்தால் இரு கைகளும் வெட்டப்பட்டு பின் கொல்லப்பட்டார். பெங்களூரில் சமீபத்தில் இதே போன்ற கார்ட்டூன் விஷயத்தில் பெருங்கலவரம் நடந்ததே... இதற்காக எத்தனை இஸ்லாமியர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்? இதுதான் இங்கே இஸ்லாமியர்களின் மத சகிப்புத்தன்மையின் அளவுகோலாக இருக்கிறது.
அதே நேரத்தில்...
ஒரு தவறை இன்னொரு தவற்றின் மூலம் நியாயப்படுத்த முடியாது..
எந்த நாட்டின் அகதிகளும், தம் நாட்டுக்குள் நுழைவதை 99% மறுக்கும் ஜப்பானில் இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ள இஸ்லாமிய நாட்டு அகதிகள், அங்கே மசூதிகள் கட்டினால் அந்த பகுதிகளின் நில மதிப்பு சரிகிறது. அங்கே குடியேற நாங்கள் விரும்புவதில்லை என்று அந்நாட்டு மக்கள் கூறுகிறார்கள். சீன நாடோ, இஸ்லாமை பின்பற்றுவதே ஒரு மனநிலை பிறழ்வு என்று அறிவித்து, 30 லட்சம் உய்குர் முஸ்லீம்களை முகாமில் அடைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய நாடான சூடானில் இஸ்லாமை விட்டு வேறுமதத்திற்கு மாறினால், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டி சட்டம் 30 வருடங்களாக இருந்து வந்த நிலையில்... தற்போது அந்த சட்டத்தை நீக்கியதுடன், இஸ்லாம் சூடான் அரசின் அதிகாரபூர்வ மதம் இல்லை என்று அறிவித்து இருக்கிறது. உலகளவில் இஸ்லாமின் நிலைமை இவ்வாறு இருக்கிறது.
2005 ஆம் ஆண்டு நிலையின்படி மிக அதிகமான அகதிகள், பாலஸ்தீனப் பகுதிகள், ஆப்கானிஸ்தான், ஈராக், மியன்மார், சூடான் ஆகிய இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.. சொந்த நாட்டில் அமைதியாக வாழ வழியில்லாமல், மற்ற வளர்ந்த நாடுகளுக்கு அகதிகளாக போன பின், சில அகதிகள் அங்கேயும் பிரச்சினைகளை உண்டு பண்ண ஆரம்பிக்கின்றனர்.
16 ஆம் நூற்றாண்டின் பழமைவாத சட்டத்திட்டங்கள், தண்டனைகள் என இன்னும் பழங்காலத்திலேயே வாழும் இஸ்லாமியர்கள், தங்கள் மதத்தை சீரமைத்து, சகிப்புத்தன்மை கொண்டு புதிதாக கட்டமைக்காத வரை சிரமம் தான்.
அக்காலத்தின் நிலைமைக்கேற்ப எழுதப்பட்ட குரானின் வசனங்களை மிகத் தீவிரமாக அர்த்தம் எடுத்து கொண்டு, அவற்றை பாடங்களாக பல இஸ்லாமிய பள்ளிகள் இளம் மாணாக்கர்களுக்கு தொடர்ந்து போதித்து, மனதில் வெறியேற்றி மூளைச்சலவை செய்வதால் இந்த விபரீதங்கள் நடக்கின்றன. போதாதற்கு மதத்தின் பெயரால் நடக்கும் இத்தகைய வன்முறைகளையும், அநீதிகளையும் செய்வது சரியே என சாதாரண மக்களைக் கூட மத போதகர்களால் நம்ப வைக்க முடிகிறது. அவர்கள் உணராதது என்னவென்றால், அவர்கள் உண்மையில் எதை பாதுகாக்க முயற்சிக்கிறார்களோ அதை அவர்களே அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை தான்.
உலகெங்கிலும் இஸ்லாமிய ஃபோபியோவுக்கு எரிபொருளாக இருப்பது இது போன்ற பைத்தியக்கார நடத்தைகள் தாம். உண்மையில், முஸ்லீம் தீவிரவாதமும் இஸ்லாமிய ஃபோபியாவும் ஒன்றுக்கொன்று தீனி வைத்துக் கொண்டு வெறித்தனத்தை பரஸ்பரம் உண்டு, செழுமையாக வளர்ந்து வருகின்றன.
முஸ்லீம் தீவிரவாதம் இன்று செழித்து வருவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது முஸ்லீம் சமூகங்களுக்கு கிடைக்கும் கட்டுப்பாடற்ற பெட்ரோ டாலர்கள். இதன் விளைவாக பெருகும் மத போதகர்கள் மற்றும் தீவிர மதவெறியைத் தூண்டும் தனி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் பரப்புபவர்கள். இதன் மூலம் உலமாக்கள், முஸ்லிம்களை அதிக அளவில் தங்களின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வந்து, மதமேலாதிக்கத்தை பிரயோகித்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள். பின் அவர்கள் சொல்வதே வேதவாக்காகிறது.
ஃப்ரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தவன் வெறும் 19 வயது உள்ள இளைஞனே . இவன் மனநிலை சரியில்லாதவன் என்று இஸ்லாமிய சமூகம் கூறுவதை விட்டுவிட்டு, எங்கே தவறு நடந்தது என சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
நபிகளின் வாழ்க்கையிலேயே அவரை தவறாக பேசுபவர்களை கூட மன்னித்து “கருணை நிரம்பியவரே அல்லாவின் அருளுக்கு பாத்திரமானவர்” எனக் கூறி அக்கொள்கையின்படியே வாழ்ந்து காட்டி உள்ளார்.
உலகில் சமாதானத்துடன் மனித குலம் வாழ, இஸ்லாம் என்கிற மார்க்கத்தை அருளிய மாமனிதர் இப்படி ஒரு கேலி சித்திரத்துக்காக ஒரு உயிரை கொல்பவர்களை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்.
“அவர்கள் சொல்வதில் பொறுமை காத்து, உன்னத கண்ணியத்துடன் அவர்களை விட்டு விடுங்கள்” (73:10)
“மன்னித்து அதை பொருட்படுத்தாமல் விடுங்கள்; கடவுள் இரக்கமுள்ளவர்களை நேசிக்கிறார்” (5:13)
என்கிற குரானின் வசனங்களே தவறு செய்பவர்களையும் மன்னிக்க சொல்கிறது. உலகின் பல பகுதிகளில் வாழும் பல இஸ்லாமிய அறிஞர்களும் தீவிரவாதத்தை எதிர்த்து, உண்மையான முஸ்லிம் நிச்சயமாக தீவிரவாத செயலில் ஈடுப்பட மாட்டான் என்றே கூறுகின்றனர்.
தன்பாலின ஈர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் கூட இதர மதங்கள் தம்மை திருத்திக் கொண்டு, காலத்துக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும்போது... இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டும் அடுத்தவரின் கழுத்தை சுலபமாக அறுப்பதற்கு ஏதுவாக 12 இன்ச் ரம்பம் போன்ற கத்தியை தூக்கிக் கொண்டு, பிற மனிதர்களுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதம் எல்லா மதங்களிலும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவைகள் தத்தம் சொந்த நாட்டில் தான் நடத்தப்படும்.
சொந்த நாட்டை விட்டு உயிர் பிழைக்க மற்ற நாடுகளில் தஞ்சம் கேட்டு சரணடையும் அகதிகள், தமக்கு உதவிய நாட்டிலேயே தீவிரவாத செயல்களை புரிவதென்பது மன்னிக்க முடியாத மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்.
இனி இஸ்லாமிய அகதிகள் வேண்டாம் என பிற நாடுகள் முடிவெடுத்தால்.... சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்நாட்டு போர்களால் சிறு குழந்தைகள் உட்பட உயிர் பிழைக்க ஓடி வருபவர்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் கையில் சிக்கி செக்ஸ் அடிமைகளாக இருப்பதிலிருந்து தப்பி வரும் சிறுமிகள், பெண்கள் இனி என்ன ஆவார்கள்..?
இவர்களின் பாதுகாப்பை விட, உயிர் பிழைத்தலை விட... யாரோ ஒரு ஆசிரியர், தன் சொந்த நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு செய்யும் ஒரு விஷயத்துக்காக அவரைக் கொன்று, மதத்தின் பெருமையை(!) நிலைநாட்டுவதாக கருதி எக்காளம் முழங்குவது எந்த வகையிலும் இஸ்லாமிய அகதிகள் கூட்டத்துக்கு நன்மை செய்யாது.
மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் 1000 ஆண்டுகள் ஆட்சி புரிந்த Holy Roman Empire ஐ neither Holy, nor Roman nor an Empire என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கிண்டலாக கூறுவார்கள். அது போல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அரக்க செய்கைகளால் “அமைதி மார்க்கம்” என்பதையும் neither அமைதி nor மார்க்கம் என்று சொல்லும் வகையில் மாறி விடுமோ என்ற அச்சம் வந்திருப்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமான நிலையே...

Leave a comment
Upload