நன்றி வணக்கம்......

நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க இருந்தார். முத்தையா முரளிதரன் இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர், ராஜபக்ஷே ஆதரவாளர் என்று சொல்லி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக்கூடாது என்று இயக்குனர் பாரதிராஜா உட்பட சில அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். முதலில் அந்த படத்தில் நடிப்பேன் என்று உறுதியாகச் சொன்னார் விஜய் சேதுபதி. பிறகு என்னால் உங்களுக்கு சங்கடம் வேண்டாம், உங்கள் எதிர்காலம் பாதிக்க நான் ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கை மூலம் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, நன்றி வணக்கம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு, படத்தில் இருந்து ஒதுங்கி விட்டார் விஜய் சேதுபதி.
ஒரு படத்தில் நடிப்பதை கூட சம்பந்தப்பட்ட நடிகர், தீர்மானிக்க முடியாத அளவுக்கு தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பது வேடிக்கையாக இருக்கிறது. பிரபல நடிகர்கள் யாரும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது, மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது வேடிக்கைப் பொருளாக மாறிவிட்டது.
இன்றைக்கு முத்தையா முரளிதரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் என்று சொல்கிறார்கள். பிரபாகரன் கொல்லப்பட்ட போது, இந்த இலங்கைத் தமிழர்கள் ஆதரவாளர்கள் எங்கே போயிருந்தார்கள்?!
தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்பது கிட்டதட்ட அறவே இல்லை என்று ஆகிவிட்டது. 7 பேர் விடுதலைக்கு இப்போது குரல் கொடுக்கும் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது 7 பேர் விடுதலை விஷயத்தில் மௌனம் தான் காத்தது என்பதை மறக்கலாகாது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் எட்டப்பன் வேடத்தில் ஒருத்தர் நடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட உத்தரவிட்ட ஜாக்சன் துரை வேடத்தில் இன்னொருத்தர் நடித்தார். தமிழனுக்கு துரோகம் செய்த வேடத்தில் எப்படி நடிக்கலாம் என்று அன்று எந்த தமிழ் ஆர்வலர்களும் அவர்களை வார்த்தைகளால் கூட தூக்கில் போடவில்லை. அவர்கள் சினிமாவை சினிமாவாக மட்டும்தான் பார்த்தார்கள், அதை அரசியலாக்கி இல்லை.
விஜய் சேதுபதியின் ‘நன்றி வணக்கம்’ என்பது முற்றுப்புள்ளி அல்ல... எதிர்த்து கேள்வி கேட்டவரை, அந்த ‘நன்றி வணக்கம்’ எனும் பதில் மேன்மேலும் நிறைய கேள்விகளை மௌனமாக கேட்கிறது என்பது தான் உண்மை. எனவே விஜய் சேதுபதிக்கு ‘நன்றி வணக்கம்’ சொல்லி விகடகவி உண்மையாகவே கௌரவிக்கிறது.

Leave a comment
Upload