தொடர்கள்
Daily Articles
ராக தேவதைகள்... - 10 - மாயவரத்தான் சந்திரசேகரன்

ரீதி கௌளை (தொடர்ச்சி)

2020925184811997.jpeg

ஸ்வேதா பண்டிட்

வித்யாசகரைப் பொறுத்தவரை அடிக்கடி ஹிட் பாடல்களை தந்தும், அவருக்கு உண்டான வெற்றி கிடைக்கவில்லை என்பது நெருடலான விஷயம். இத்தனைக்கும் எல்லாவிதமான இசையையும் ஒரு கை பார்க்கும் அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவர். ‘மந்திரப் புன்னகை’யில் ‘மேகம் வந்து போகும்’, ‘தம்பி’ படத்தில் ‘சுடும் நிலவு’ ஆகியவை அவர் ரீதி கெளளையில் அமைத்த மூக்கில் விரலை வைக்கும் பாடல்கள். ‘மேகம்’ பாடலில் மதுபாலகிருஷ்ணனும் அன்வேஷாவும் காலை வெய்யிலில் பனி உருகி ஓடுவது போல அவ்வளவு மென்மையாக பாடியிருப்பார்கள். அன்வேஷாவிற்கு பழைய ஜென்ஸியை நினைவுபடுத்தும் இளமை கொஞ்சும் குரல்.

2020925184856184.jpeg

வித்யாசாகர்

‘சுடும் நிலவில்’ உன்னிக்கிருஷ்ணனும் ஹரிணியும் மயக்குவார்கள். உன்னிக்கு அந்த ‘வெல்வெட்’ குரலே பெரிய ப்ளஸ் பாயிண்ட். ‘தீண்ட தீண்ட’ என வரும் ‘துள்ளுவதோ இளமை’ பாடலில் உன்னிகிருஷ்ணனும், பாம்பே ஜெயஸ்ரீயும் பாடுகிற போது அவர்கள் குரலிலேயே காதல் ஒளிந்திருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் பிரமாதம் இது. சினிமா இசை, கர்நாடக சங்கீதம் ஆகிய இரட்டை குதிரைகளில் சவாரி செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சற்று அசந்தாலும் ஒன்றில் மற்றதன் பாதிப்பு வந்துவிடும். சபா கச்சேரி மேடையில் ஏறும்போது அழுத்தம் குறைந்து போய் சற்று ‘லைட்’டாக சங்கதிகள் வந்து விழும் சிக்கல் ஏற்படும்.

பாம்பே ஜெயஶ்ரீ

உன்னி, ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ போன்றவர்கள் அதில் கவனமாக இருப்பது அவர்களது பக்குவத்தை காட்டுகிறது. உன்னி கிருஷ்ணனைப் பற்றி பலருக்கு தெரியாதது, அவர் சிறந்த பாடகர் மட்டுமல்ல.. பரோபகாரியும் கூட. ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அவர் வீட்டு வாசலில் பார்வையற்றோர் சிலர் வரிசைகட்டி நிற்பதும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அனுப்புவதும் ஓசையின்றி ரொம்ப காலமாக நடக்கிறது. சமீபத்தில் எண்ணிக்கை சற்று அதிகமாக, இதுபற்றி தனது நண்பரும், பின்னணி பாடகருமான ஸ்ரீனிவாஸிடம் சொல்லி அவரிடம் சிலரை அனுப்பியிருக்கிறார். அதேபோல் பக்க வாத்தியகாரர்களுக்கு பல வித்வான்கள் மூவாயிரமும், நாலாயிரமும் தந்துவிட்டு மொத்தத்தையும் முடிந்து கொள்ளும்போது உன்னி, ஜூனியர் பாலமுரளிகிருஷ்ணா, அபிஷேக் ரகுராம், டி.எம். கிருஷ்ணா உள்பட வெகு சில பிரபலங்கள் ஆரம்ப காலத்திலிருந்து நல்ல தொகை கொடுக்கிறார்கள் என்பது நமக்கு கிடைத்த தகவல்! மனிதாபிமானம் இல்லாத போது உசத்தியான மனோதர்ம சங்கீதத்தைக் கூட என்னால் ஜீரணிப்பது சிரமமாக உள்ளது.

2020925190617272.jpeg

2020925191246125.jpeg

மதுபாலகிருஷ்ணன் அன்வேஷா

அஜித்தின் ‘பில்லா 2’வில் ‘இதயம், இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ’ என்று வருவது யுவனின் மற்றொரு கற்கண்டு பாடல். ‘யுவன் பாடலா’ என்று சற்று வியப்பாக கூட இருக்கும்! பாடியது புதுமுகம் ஸ்வேதா பண்டிட். இந்துஸ்தானி மேதை பண்டிட் ஜஸ்ராஜின் குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலே இந்தப் பெண்ணின் ஞானம் புரியும். நான்கு வயதிலேயே மணிரத்தினத்தின் ‘அஞ்சலி’யில் இளையராஜாவின் இசையில் மழலையாக பாடியிருக்கிறார்!

ஜி வி பிரகாஷ்

‘காதல் நெருப்பின் நடனம்’ என்றொரு டூயட்டை மேற்கத்திய பி.ஜி.எம்.முடன் அமர்க்களமாக ஆரம்பித்திருப்பார் ஜி.வி. பிரகாஷ்! அதிலிருந்து கார்த்திக்கும் சின்மயியும் ரீதி கௌளை ராகத்தை ஜோராக தவழ விட்டிருப்பது சற்று மிரட்டும் கற்பனை! ‘வெய்யில்’ படத்தில் வரும் குளிர்ச்சியான பாடல். சில அற்புதமான பாடல்கள் நம் காதுகளுக்கு எட்டாமலேயே போயிருக்கும் - இத்தனைக்கும் அஜித் போன்ற பெரிய ‘தலை’கள் நடித்தும்! அப்படிப்பட்ட ஒரு அபூர்வ பாடல் தான் ‘அசல்’ படத்தில் பிரசன்னாவும், மஞ்சரியும் பாடியிருக்கும் ‘கனவா, நினைவா’! மியூசிக் டைரக்டர் பரத்வாஜ் பாடல் நெடுக வாழ்ந்திருப்பார். ஏறத்தாழ தாலாட்டு பாடல் போலவே இருக்கும். தொந்தரவு செய்யாத பின்னணி இசை. இப்பாடலை நானே சற்று கால தாமதமாக கேட்டுவிட்டு ‘எப்படி மிஸ் பண்ணோம்’ என்று வருத்தப்பட்டேன். சில நல்ல மனிதர்களை தாமதமாக சந்தித்துவிட்டு முன்பே இவர்களுடன் அறிமுகமாகியிருக்க வேண்டும் என சங்கடப் படுவோமே.. அப்படி ஒரு உணர்வை விட்டுப்போன நல்ல பாடல்களை கேட்கும் போதும் நான் பெறுவேன். ‘தெகிடி’ படத்தில் இளம் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் ‘யார் எழுதியதோ’ என்ற சத்திய பிரகாஷின் பாடல் கூட கேட்க பரவாயில்லை ரகம். ஆனால் ட்யூனில் முழுமை இல்லை. எத்தனை சமையல் சாமான்களை வாங்கிப் போட்டாலும் சமையல்காரருக்கு சாதுர்யமும், புரிதலும் இருக்க வேண்டுமே!

2020925185533528.jpeg

எம் டி ராமநாதன்

ரீதி கௌளை கர்நாடக சங்கீத கச்சேரி மேடைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது! கர கரப்பிரியாவின் ஜென்யமாக கருதப்படும் இந்த ராகத்தை சொன்னாலே எம்.டி. ராமநாதன் தான் சங்கீதம் அறிந்த அனைவருக்கும் நினைவுக்கு வருவார். எப்படி ‘தோடி’க்கு ராஜரத்தினம் பிள்ளையயோ, மோகனத்திற்கு மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரோ அப்படி ரீதி கௌளைக்கு எம்.டி.ஆர். தான் அத்தாரிட்டி. ராஜரத்தினம் பிள்ளை தர்பார், சாவேரி உள்பட பல ராகங்களை கூட அதி அற்புதமாக வாசிப்பார் என்றாலும் தோடி அவர் பெயரோடு நிலைத்துவிட்டது. அவர் இறந்தபோது ‘தோடி அனாதையாகி விட்டது’ என சில பத்திரிகைகள் எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாலக்காடு ஜாம்பவான் எம்.டி.ஆர். ரீதி கெளளைக்கு வரலாம். இந்த ராகத்தை நிதானமாக பாடினால்தான் அழகு என்பதால் அது அவருக்கு கைவந்த கலையாகி விட்டது. காரணம், எம்.டி.ஆருக்கும் இந்த கால விறு விறு சங்கீதத்திற்கும் ரொம்ப தூரம். சற்றுப் பொறுமையாக அனுபவித்து பாடுவது அவரது பாணி. அதற்கு இந்த ராகம் மிகப் பொருத்தமாகிவிட்டது. இது தவிர, ஆனந்த பைரவி, பூர்வி கல்யாணி, சஹானா போன்ற சில ராகங்களை அவர் பாடுகிற போதும் அது தனி அனுபவமாக இருக்கும். அசாத்திய முரட்டு குரலை தன் வசம் கொண்டு வந்து, சங்கதிகளை அவர் அள்ளி விடும்போது, அதைக் கேட்கவே ஒரு பெரிய கூட்டம் காத்திருக்கும். ‘என்ன பாட்டு இது..? அஷ்ட கோணல்’ என்று அவரை விமரிசித்தவர்களும் அந்த காலத்தில் உண்டு. தியாகராஜரின் ‘நன்னு விடச்சி’ கீர்த்தனையை அவர் பாடுகிறபோது அவ்வளவு பாவபூர்வமாகவும், பக்தி பூர்வமாகவும் இருக்கும். அதேபோல் தியாகராஜரின் ‘பரிபாலய பரிபாலய ரகுநாதா’ சுப்பராய சாஸ்திரியின் ‘ஜனனி நின்னு வினா’ போன்றவை அவரது பாப்புலர் ரீதி கெளளை உருப்படிகள். கேரளத்தில் இன்னும் எம்.டி.ஆர். என்றாலே பரவசப்படும் இசை அறிந்த மலையாளிகள் பலர் உண்டு. 61 வயதே வாழ்ந்த மாறுபட்ட கலைஞர்.

இந்த ராகத்தில் நம்மூர் பாபநாசம் சிவனின் ‘தத்துவமறிய தரமா’ இசையுலகில் அதிகம் பாடப்படும் பிரசித்தி பெற்ற பாடல்! அண்மையில் சிவனின் 130-வது பிறந்த தினத்தை அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். பத்து நாட்கள் சிவனின் கீர்த்தனைகளை புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள் பாடி சமூக வலைதளம் மூலம் அந்த இசை மகானுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர்!

பி எஸ் நாராயணசாமி

பின்குறிப்பு:

கடந்த வாரம் சங்கீத உலகத்தின் பெரிய சோகம் சீனியர் வித்வான் பி.எஸ். நாராயண சுவாமியின் மறைவு. செம்மங்குடி சீனிவாச அய்யரின் பிரதான சிஷ்யர் என்றாலே அவரது அருமை புரியும். செம்மங்குடி பாணியின் மிகச் சிறந்த அடையாளம் அவர். ரஞ்சனி, காயத்ரி உள்பட ஏராளமான சிஷ்யர்களை உருவாக்கியவர்!

இசை பெருகும்...