தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி - இந்த வாரம்.

2020929102739633.png

ஆப்பிரிக்கா

காமரூன்

202092910290717.jpg

சனிக்கிழமை துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டு இசபல் டியோன் பள்ளிக்குள் ஓடினார்.

அங்கே அவரது 12 வயது மகள் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்து கிடந்தாள்.

அம்மா காப்பாத்து காப்பாத்து வலிக்குது என்ற மகளிடம் அந்த தாயால் நீ நம்பும் அந்த தெய்வம் தான் உன்னை காப்பாற்ற வேண்டும் என்று கதறிக்கொண்டே செய்வதறியாமல் அழுத படி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

இன்னமும் அந்த சிறுமிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

2020929102929612.png

அந்தப் பள்ளியில் எட்டு குழந்தைகள் இறந்து போயினர்.

12 குழந்தைகள் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இதையெல்லாம் செய்தது ஒரு தீவிரவாத இயக்கம்.

காமரூனிலுள்ள ஒரு பிரிவினை வாத இயக்கம் தான் இந்த படு பாதக செயலை செய்திருக்கிறது.

காமரூனில் மேற்கு பகுதியில் பெரும்பாலான ஆங்கிலம் பேசும் பகுதியில் இந்த வெறிச் செயல் நடந்து முடிந்திருக்கிறது.

இது முதல் முறையல்ல. இது வரை நூற்றுக்கணக்கான குழந்தைகளை கொன்றிருக்கின்றனர் இந்த பிரிவினைவாதிகள்.

இது அங்குள்ள குழந்தைகளை பள்ளிக்கு செல்ல முடியாத படியும் செய்திருக்கிறது.

என்ன கொடுமை ? இந்த பிரிவினைவாதிகளுக்கு நெஞ்சில் ஈரமில்லை ! தெரியும். மூளையுமா இல்லை. இந்த பிஞ்சுக் குழந்தைகள் என்ன செய்யும்.

காமரூன் நமக்கு பரிச்சயமில்லாத நாடாக இருக்கலாம். இடம் முக்கியமல்ல. ஆனால், குழந்தைகளை தொல்லை செய்யும் எந்த இயக்கமும் உலகில் எந்த மூலையாக இருந்தாலும் நாசமாகத்தான் போகும். போகவேண்டும்.

அல்ஜசீராவின் செய்தி இங்கே...

ஐரோப்பா

பிரான்சு

2020929103105497.jpeg

துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன்

ஃப்ரெஞ்சுப் பத்திரிகை சார்லீ ஹெப்தோ நினைவிருக்கிறதா ??

முகமது நபியை தவறாக சித்தரித்து வெளியிட்ட கார்ட்டூனுக்காக மதவாதிகள் உள்ளே புகுந்து நான்கைந்து பேரை சுட்டுக் கொன்றார்களே அதே பத்திரிகை தான்.

இவர்கள் அடங்க மாட்டார்கள் போலும்.

தினகரன் அலுவலகத்தில் புகுந்து மூன்று பேரை உயிரோடு எரித்ததை தமிழக மக்கள் மறந்து போய், அது மட்டுமல்ல அதற்கு யார் யார் காரணமோ அவர்களெல்லாம் ஒன்றாக கூடி குலாவத் துவங்கினாலும் இறந்து போன அந்த மூன்று பேருக்கு ஏன் என்று கேட்க கூட நாதியில்லாமல் போன கதை நமக்கு பழக்கம் தான்.

பிரான்சிலுமா ???

அந்த பத்திரிகை தொடர்ந்து கேலி சித்திரம் வரைந்து எல்லோரையும் வெறுப்பேற்றுவதை நிறுத்தவில்லை.

அதன் முதலாளிகளா பாதிக்கப்படப் போகிறார்கள்?? பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் தானே என்ற நினைப்பு போலும்.

பிரான்சில் ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு மத வெறியனால் தலை துண்டிக்கப்பட்டு இறந்து போனது நாமறிந்த செய்தி தான். அவர் செய்த தவறு அந்த முகமது நபி பற்றிய கேலிச் சித்திரத்தை பள்ளியில் மாணவர்களிடையே காட்டி விவாதித்தது.

இதன் பின்னூட்டமாக பிரான்சு அதிபரைப் பற்றி தரக்குறைவாக துருக்கி அதிபர். எர்டோகன் பேச, அதைத் தொடர்ந்து இந்த வாரம் சார்லீ ஹெப்தோ. போட்ட கேலிச் சித்திரம். எர்டோகன் வெறும் அண்டிராயர் அணிந்து கொண்டு, முக்காடு அணிந்து கொண்டிருக்கும் பெண்ணின் பாவாடையை தூக்கிப் பார்ப்பது போல ஒரு படம் வெளியிட்டிருக்கிறார்கள்.

(மன்னிக்கவும் விகடகவி இதை வெளியிடாது).

இது தேவையா இந்த பத்திரிகைக்கு ?? கேலி என்ற பெயரில் அடுத்தவர் மனதை புண்படுத்தும் எந்த விஷயத்தையும் அது எந்த மதமாக இருந்தாலும் அதை அனுமதிக்கக் கூடாது என்பது தான் நமது எண்ணம்.

லயோலா கல்லூரியில் இந்து மத உணர்வை கொச்சைப்படுத்துவது முதல், சார்லீ ஹெப்தோவின் கேலிச் சித்திரங்கள் வரை தேவையில்லாத ஒன்று.

அடுத்தவர் மனதை நோகடிப்பதும் ஒரு வகையான தீவிரவாதம் தான் என்பது எமது திட்டவட்டமான எண்ணம்.

கைவீசி நடக்கும் சுதந்திரம் அடுத்தவர் மூக்கை தொடாத வரை தான் என்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது ?????

வட அமெரிக்கா

தேர்தல்.

2020929103244985.jpeg

அடுத்த வார விகடகவி சனிக்கிழமை வெளியாகும் போது அமெரிக்காவின் தலையெழுத்து முடிவாகியிருக்கும்

முரண்டு பிடிக்கும் டிரம்பா அல்லது வாக்குறுதிகளை வாரி வழங்கும் ஜோ பிடனா என்பது தெரிய வந்து விடுமா எனில்

அப்படியும் சொல்வதற்கில்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

அமெரிக்க தேர்தல் என்பது நம்மூர் தேர்தல் போல சுலபமானது அல்ல.

எலக்டோரல் ஓட்டு, மக்கள் ஓட்டு என்று டக்வொர்த் லூயிஸ் பொட்டை கணக்கு போல ஏதோ ஒரு கணக்கு. தனிக்கட்டுரையே எழுதினாலும் புரிய வைப்பது கடினம் தான் போல.

இங்கு கேள்வி என்னவெனில் முடங்கிப் போயிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் டிரம்பினால் தான் தான் நாசமானது என்று கருதுவோர். ஜோ பிடன் வந்து விட்டால் அமெரிக்காவின் வியாபாரம் தலையெடுக்கும் என்று நம்புகிறார்கள்.

அது மட்டுமல்ல சுமார் ஒரு கோடி பேருக்கு அமெரிக்காவில் குடியுரிமை வழங்குவேன் என்று சொல்லும் ஜோ பிடன் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பார், சீனாவுக்கு சாதகமாக இருப்பார் அவர் வந்தால் சாலையெங்கும் டாலராக ஓடும் என்று ஒரு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

டிரம்ப் ஒரு வியாபாரி. அவர் தலைமையில் எப்படி பொருளாதாரம் வீழ்ந்தது என்று யோசித்தால் அவரது நிறுவனம் இரண்டு மூன்று முறை மஞ்ச கடிதாசி கொடுத்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மற்றபடி அமெரிக்க கள நிலவரத்தை திங்கட்கிழமை ஒரு கை பார்த்து விடலாம்.

இந்தியாவிற்கு எது சாதகம் என்று கேட்டால், இன்றைய தேதிக்கு சொல்வது கடினம். தராசு முள் கொஞ்சம் டிரம்ப் பக்கம் சாய்வது போலத் தான் தெரிகிறது.

ஆசியா

இந்தோனேசியாவில் ஒரு ஜூராசிக் பார்க்

2020929103418151.png

கோமோடோ டிராகன் என்ற ஒரு பல்லியினம்

பார்ப்பதற்கு ஜூராசிக் பார்க்கில் வரும் டிராகன் போலவே ராட்சத சைசில் இருக்கிறது.

இந்தோனேசியாவில். இருக்கும் கோமோடா தீவில் அதிகமாக பார்க்கக் கூடிய இந்த உயிரினம் விரைவில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் இதை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று முடிவு கட்டியிருக்கிறது இந்தோனேசிய அரசு.

அந்த தீவில் வசிக்கும் 2000 பேரையும் தீவை விட்டு வெளியேற்றி விட்டு தீவை நிரந்தரமாக மூடி விடலாம் என்ற யோசனைக்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில் அந்த யோசனையை கை விட்டு விட்டு அருகாமையில் உள்ள ரிங்க்கா தீவில் ஜூராசிக் பார்க் போல ஒரு அமைப்பை இந்த கோமோடா டிராகனை வைத்து செய்யலாம் அதற்கு ஜூராசிக் பார்க் என்று பெயரும் வைக்கலாம் என்பது அரசின் யோசனை.

2020929103448179.jpg

(இந்த படம் வைரலானதும் தான் சுற்றுப்புற ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது)

எந்தெந்த தீவில் எத்தனை டிராகன் இருக்கிறது என்ற கணக்கு இங்கே..

2020929103532700.png

பொருட்காட்சி திருவிழா போல கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் வருவதும் நல்லதல்ல என்று தீவை சுற்றி பார்க்க சிறப்பு கட்டணமாக ஆயிரம் டாலர் வரை வசூலிக்கலாம் என்பதும் பரிசீலனையில் இருக்கும் திட்டம்.

கோமோடா டிராகன் கடிக்குமா என்றால் அது சுவாரஸ்யமாக சாப்பிடும் போது தொந்தரவு செய்தால் படக்கென கடிக்குமாம்.

இந்தோனேசியா போனால் கோமோடா டிராகன் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

இந்த செய்தியைப் படித்ததும் பல்லிக்கே பயப்படும் என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு கோமோடா டிராகனை பார்க்கவில்லையென்றால் என்ன ? அவைகள் பாவம் சந்தோசமாக இருக்கட்டும்.

தென் அமெரிக்கா

பாராகுவே

2020929103632144.jpeg

செர்பியாவிலிருந்து உரம் ஏற்றி வந்த கண்டெய்னரில் ஐந்து அழுகிய உடல்கள் இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உர கண்டெய்னரில் எப்படி இவர்களின் உடல் இருக்கிறது என்று ஆராய்ந்த் பார்த்தால் செர்பியாவிலிருக்கும் நிலமைக்கு எங்காவது சென்று உயிர் வாழலாம் என்று அந்த கண்டெய்னரில் ஏறியிருக்க வேண்டும் இவர்கள்.

செல்லும் தூரமும், நேரமும் தெரியாமல் உள்ளே மாட்டிக் கொண்டு இறந்திருக்க வேண்டும் பாவம்.

உருத்தெரியாமல் அழுகிப் போய் தான் இந்த ஐவர் உடலும் கிடைத்திருக்கிறது.

உள்ளே உடைகளும், உணவின் மிச்சமும் இருந்ததைக் கொண்டு தான் யூகித்திருக்கிறார்கள்.

மிச்சமானது அவர்களின் உணவு மட்டுமல்ல கனவும் தான்.

இது போல. ஸ்டோவே. என்று சொல்லப்படும் திருட்டுத் தனமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது புதிததல்ல.

2020929103704275.jpg

கப்பல் மட்டுமல்லாமல் விமானத்திலும் இது அவ்வப்போது நடப்பது தான். 2014ல் சான் ஹோசே விமான நிலையத்தில் சுவரேறி குதித்து இந்த விமானத்தில் சக்கரங்கள் உள்வாங்கும் அறையில் ஒளிந்து கொண்டு ஒரு 16 வயது பையன் மாவி என்ற இடத்திற்கு பறந்து சென்றான்.

அதிர்ஷ்டவசமாக உயிரோடு தரையிறங்கியது அப்போது பெரிய செய்தி.

இது போன்று விமானத்தில் திருட்டுத் தனமாக ஏறிக் கொண்டு பறப்பவர்களில் 20 சதவிகிதம் பேரே பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள் மீதமுள்ளவர்கள் கீழே விழ்ந்தோ அதீத குளிரிலோ இறந்து போவார்களாம்.

ஆஸ்திரேலியா

ஹாமாத் சர்வதேச விமான நிலையம். கத்தார்

2020929103744574.jpg

இந்த செய்தி ஏன் ஆஸ்திரேலியாவுக்கு கீழ் வருகிறதென்றால் ஆஸ்திரேலிய அரசின் கடும் ஆட்சேபணை தான் காரணம்.

விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை.

சிட்னிக்கு செல்லவிருந்த கத்தார் விமானம் ஒன்றை நிறுத்தி அதிலுள்ள 13 பெண்களை உடைகள் களைந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.

ஏன் ?? கத்தார் விமான நிலயத்தில் ஒரு பெண் குழந்தை பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு. கழிவறையில் இறந்து கிடந்தது தான் காரணம்.

பச்சைக் குழந்தை பிறந்தவுடன் இப்படி குப்பைத் தொட்டியில் போட்டிருப்பதால் பிரசவமாகி உடனடியாக யாரேனும் தப்பி செல்லக் கூடும் என்பதால் இந்த சோதனையாம்.

அதில் பத்து ஆஸ்திரேலிய பெண்களையும் இப்படி சோதித்ததில் ஆஸ்திரேலியா ஏகக் கடுப்பில் இருக்கிறது.

அதெப்படி இப்படி அத்து மீறி சோதனை செய்யலாம். இது பெண்ணினத்திற்கே அவமானம். அசிங்கம் என்று ஏகத்திற்கும் கொதித்துப் போயிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.

கத்தாரைப் பொறுத்தவரை இஸ்லாமிய சட்டங்கள் இருக்கும் நாடு. திருமணத்தை தாண்டி ஒரு வேளை குழந்தை பெற்றுக் கொண்டாலோ முறை தவறி நடந்தாலோ கடுமையான சட்ட திட்டங்கள் பாயும். அனேகமாக கத்தாரியப் பெண் ஒருவர் தான் இதை செய்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது கத்தார் விமானம் மட்டுமல்லாமல் பல விமான நிறுவனங்களின் பயணிகளும் சோதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று தெரியவருகிறது.

சோதனை செய்த சிப்பந்திகள் வேலையை இழக்கக் கூடும்.

பெண்ணுரிமைக்கு எல்லோரும் கோபப்படுவது இருக்கட்டும். பிறந்த உடனேயே கொல்லப்பட்ட அந்த பச்சிளம் பெண்குழந்தைக்கு யாரும் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதாக தெரியவில்லை.

ராம்