தொடர்கள்
பொது
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்
20210021202848548.jpeg

ஹேய்.. “The Great Indian Kitchen” செம படம்ல.. உண்மையிலேயே ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க என்றவாறு சோம்பல் முறித்தாள் ஸ்ருதி..
ரம்யா வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் ஊருக்கு போனதால், தோழிகள் இந்த மலையாளப் படம் பார்ப்பதற்கு இங்கு ஆஜராகி இருந்தனர். படம் முடிந்ததும், ரம்யா செய்த மிருதுவான சப்பாத்தி, பன்னீர் வெண்ணெய் மசாலாவை ஹாட்பேக்கிலிருந்து சுட சுட எடுத்து சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.

2021002209593859.jpeg

ஸ்ருதி: பெண்களின் நிலைமையை அப்படியே கண் முன்னே நிறுத்தி இருக்காரு இயக்குனர் ஜியோபேபி. திருமணம் ஆனா ஒரு ஆண் 95% எந்தவித மாற்றமுமில்லாமல் வாழறாங்க. ஆனா பெண்களை, வேரோடு பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டு, அவளின் வாழ்க்கை முற்றிலும் மாறி, தன் சுயத்தை உதறி, மற்றவர்களுக்காக வாழுகின்ற வாழ்க்கையாக மாறிவிடுகிறது. இந்தப் படத்துல, கதாநாயகி நிமிஷா சஜய்யனுடைய கதாப்பாத்திரம் ‌பெரும்பாலான இந்திய பெண்களின் பிரதிபலிப்பே. அவளுக்கு நடனம் தெரியும். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு, தன் விருப்பு வெறுப்புகளை துறந்து, இன்னொரு குடும்பத்தின் ஏவலாளாக மாறுவது தான் அவள் பிறந்ததின் தாத்பரியமே என்று அவள் வாழ்க்கையை இந்த சமூகம் வரையறுத்து வைத்திருப்பதை அப்பட்டமாக சொல்கிறது இந்த திரைப்படம். அந்த அலங்கோல டைனிங் டேபிள் சீன், சாக்கடை அடைப்பு சீன், மனைவியை விட்டு செருப்பு எடுத்துட்டு வர சீன்களையெல்லாம் பார்க்க மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. க்ளைமாக்ஸை ஏத்துக்க முடியுமான்னு தான் தெரியல.

ரம்யா: அது நிச்சயமாக விவாதத்திற்கு உரியது.. ஆனால் அடக்குமுறை கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியம், வழி வழியாக மிக அழகாக பெண் இனம் அறியாமலேயே, எந்தவித சந்தேகமும் அவர்களுக்கு எழாத வகையில் அவர்கள் மேல் சுமத்தப்பட்டு வந்திருப்பதைதான் இந்தப் படம் சொல்கிறது. இதன் விளைவு, பெண் என்பவள் ஆணுக்கு கீழ்படிந்து நடக்கக் கடமை பட்டவள் என்றே காலகாலமாக அவள் மண்டையில் புகுத்தப்பட்டுள்ளது. இதன் நீட்சியாக இன்றும் ஒரு ஆண் சமையலறையில் தோசை சுட்டு கொண்டு வந்து வைக்க, அந்த வீட்டு பெண் ஹாலில் இயல்பாக பேப்பரை படித்து கொண்டு சாப்பிட முடியுமா?

ஹாசினி: குற்ற உணர்வு தான்ப்பா வரும்.. இந்த குற்ற உணர்ச்சியை தான் பலகாலமாக ஆணினம் பெண்களின் உழைப்பை சுரண்டுகின்ற வழியாக இருக்கிறது.

ரம்யா: ஆமாம் அந்த குற்ற உணர்ச்சி தான், பெண்ணினத்தை ஆணின் உத்தரவுக்கு காத்திருந்து அடிமை வேலை செய்வதற்கும் காரணியாக இருக்கிறது. தான் அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே, அடுத்த தலைமுறை பெண்குழந்தைகளையும் சிறுவயதிலிருந்தே இந்த அடிமைத்தனத்திற்கு பயிற்றுவிக்கப்பட்டு, இந்த ஒடுக்குமுறை கலாச்சாரத்தை தலைமுறை தலைமுறையாக கடத்தி கொண்டிருக்கிறது இந்தியப் பெண் இனம்.

எஸ்தர்: ம்க்கும்..

ஸ்ருதி: ஏய் எஸ்தர் ஏன் கோவமா இருக்க..? படம் தான் முடிஞ்சிடுச்சே..!

எஸ்தர்: பின்ன என்னடி.. ஒரு குடும்பத்துல பொம்பளைங்கன்னா சமைக்கனும், துணி தோய்க்கனும், வீடு சுத்தம் பண்ணனும், குழந்தைகளை பாத்துக்கணும், இப்படி இருந்தாதான் பொம்பளை... அப்ப ஒரு ஆண் இத எதையும் கத்துக்க மாட்டான், செய்ய மாட்டான்.. இது மகா அநியாயம் இல்லையா?

ஹாசினி: ஏன்ப்பா.. இப்பலாம் ஆண்கள் நிறைய மாறிக்கிட்டு வராங்களே...

எஸ்தர்: கிழிச்சாங்க ..எங்க அண்ணன் வீட்ல ஒரு வேலையும் பாக்க மாட்டான். வெளியே போவான்.. வருவான்.. சாப்பிடுவான்.. எப்பவாவது கடைக்கு போவான். அவனே ஏதாவது வேலை பாக்க வந்தா கூட, நீ போப்பா நான் பாத்துக்கிறேன்ன்னு அம்மா சொல்லிடுவாங்க. ஆனா என்னை மட்டும் “ஏன் இவ்வளவு நேரம் தூங்குற? இட்லி ஊத்த தெரியுதா? ஒரு சட்னி அரைக்க தெரியுதா? நண்டு குழம்பு வைக்க கத்துக்கிட்டியா? ஒன்னும் தெரியாது.. கல்யாணம் பண்ற இடத்துலே என்ன பொண்ண வளத்துருக்காங்கன்னு என் மண்டையை போட்டு உருட்டுவாங்க”ன்னு புலம்புவாங்க...

ஹாசினி: அதென்னடி நண்டு குழம்பு ஸ்பெஷலா சொல்றாங்க..?

எஸ்தர்: அத தாண்டி என்னை திட்டுனதை கூட கண்டுக்காம நானும் கேட்டேன்.. உன் அண்ணனுக்கு புடிக்கிற மாதிரி, வரப்போற மாப்பிள்ளைக்கும் நண்டு குழம்பு பிடிச்சதா இருந்தா என்ன செய்வ..? அவருக்கு பிடிச்சத செஞ்சு கொடுத்தா தானே, அவர் மனசுல எடம் புடிக்க முடியும்ன்னு சொன்னாங்க..! எனக்கு வந்த கடுப்புல “வேணும்னா நண்டு என்ன..? நட்டுவாக்கிளி குழம்பே வச்சு கொடுக்குறேன்”னு சொல்லிட்டு அடிவாங்குறதுக்குள்ள எஸ்கேப் ஆகிட்டேன். (சிரிக்கிறார்கள்)

அட இந்த விளம்பரங்களில் கூட அப்பாஸ் டாய்லெட் சுத்தமா இல்லைன்னு ஒரு ஆணிடம் சொல்ல கூடாதா..? இல்ல பாத்திரம் பள பளன்னு இல்லைன்னு ஒரு ஆணிடம் மாதவன் சொல்ல கூடாதா? இப்படி பிள்ளை வளர்ப்பு, சமையல், துணி தோய்ப்பது என்று எல்லாமே எப்படி பெண்கள் தலையில் கட்டப்பட்டது‌?

ரம்யா: ஆதி காலத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் பனியுகத்தின் போதே தாக்குப்பிடித்து உயிர் வாழ்ந்த இனம். அப்படிப்பட்ட இனம், பரிணாம வளர்ச்சியில் நவீன மனிதர்களாக உருவாகும் முன்னரே கூண்டோடு அழிந்து போயினர். நவீன மனித இனம் பிழைத்து, இப்போது நாம் இருக்கிறோம். நியாண்டர்தால் இனம் எப்படி அழிந்ததுன்னு தெரியுமா?

எஸ்தர்: சொல்லு சொல்லு..

ஸ்ருதி: இருடி... அதாவது நியாண்டர்தால் இனம் மிகப்பெரிய மிருகங்களை வேட்டையாட செல்லும் போது... பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, வேட்டையாட காட்டில் மிருகங்களை துரத்தி கொண்டு ஓடி இருக்கிறார்கள்

ஆனால் நவீன மனித இனம் (பின்னை பழங்கற்காலம் (Upper Paleolithic)) தங்கள் இன பெண்களை வேட்டைக்கு அழைத்து செல்லவில்லை. மாறாக தங்கள் இருப்பிடத்திலேயே உணவுக்கான தாவர வகைகள் பராமரிப்பு, சிறு மிருகங்களை வேட்டையாடுவது போன்ற வேலைகளை பெண்களிடம் கொடுத்து விட்டனர். அதாவது பெண்ணினம் தங்கள் வம்சவிருத்திக்கு முக்கிய காரணி என்பதை உணர்ந்து, அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத வேலைகளை கொடுத்து, பெண்களை பாதுகாத்து கொண்டனர். இந்தப் பழக்கமே, அவர்களை ஆப்ரிக்காவிற்கு வெளியே புது கண்டங்களுக்கு பிரயாணம் செய்து, தங்கள் இனத்தை பெருக்குவதற்கு அடிப்படை காரணமாக இருந்திருக்கிறது. நியாண்டர்தால் இந்த விஷயத்தில் கோட்டை விட்டதால், அவர்களின் அழிவுக்கு இதுவும் காரணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எஸ்தர்: அதனால கற்காலத்துல இருந்த மாதிரி இப்பவும் குகைக்குள்ள உக்காந்து சட்டி பானை கழுவனும்ன்னு சொல்றியா..?

(சிரிப்பு எழுகிறது)

ஸ்ருதி: கோச்சிக்காத எஸ்தர்.. பெண்கள் வீட்டு வேலை கட்டாயமா செய்யனும்னு ஆண்கள் மட்டுமில்ல பெண்களும் சேர்ந்து நம்புவது இந்த கற்காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையின் மரபணு நினைவு லட்சம் ஆண்டுகளாக கடத்தி வரப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் ஒரு பெண் என்னதான் வெளியே பெரிய கலெக்டராக இருந்தாலும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் அனைவருக்கான சாப்பாட்டை பற்றிய கவலையோடு தான் உள்ளே நுழைவாள்.

எஸ்தர்: ஆமா.. 10 நிமிஷ சாப்பாட்டுக்காக 2 மணி நேரம் நெருப்புவெக்கையில நின்னு வேர்த்து விறுவிறுக்க சமைக்கனும். அதுவும் ஒரு நாளைக்கு 2 வேளை... சில சமயங்களில் 3 வேளைகளுமே. இதுக்கு நடுவுல காஃபி, டீ, சாயங்கால டிஃபன். மழைப்பெய்யுதே ஏதாவது பக்கோடா போட்டு, இஞ்சி டீ கொடேன்ன்னு எக்ஸ்ட்ரா வேலை .

ஸ்ருதி: இதுல மட்டமான ஒரு ஜோக் வேற அன்னைக்கு பார்த்தேன். வெளிநாடுகளில் ஃப்ரிட்ஜை திறந்தா.. பழம், காய், பால், ஜூஸ் தான் இருக்குமாம். நம்ம ஊரு ஃப்ரிட்ஜை திறந்தா.. இட்லி மாவு, தேங்காய் மூடி, வேகவச்ச பருப்பு, சட்னி வகைகள், காஃபி டிகாக்ஷன்ன்னு பாத்திரம் பண்டமா நிறைஞ்சு இருக்குமாம்.

எஸ்தர்: ஏன் இவங்களும் வெளிநாட்டு ஆண்கள் மாதிரி பால், கார்ன்ஃப்ளேக்ஸ், ப்ரெட் டோஸ்ட், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டு ஆஃபிஸுக்கு போக சொல்லேன். காலைல இட்லி, தோசை சட்னி வேணும். காஃபி வேணும். மதியத்துக்கு சாதம், பருப்பு சாம்பார், மாங்கா தொக்குன்னு வகைவகையா வேணும்.. அதுக்கு வேண்டிய இட்லி மாவு இத்யாதிகளை ஃப்ரிட்ஜில் வைக்காம பின்ன வேற என்னத்த வைக்கிறதாம்?

ஸ்ருதி: ஹாஹா.. ஆனாலும் பெண்கள் “நாங்கள் மட்டுமே சமைக்கனும்” என்கிற விதி அநியாயம்ன்னு கொடி பிடிச்சு ரோட்டுல போராட்டம் எல்லாம் பண்ணல. இப்பவும் சந்தோஷமாகத்தான் இத செய்றாங்க.

ரம்யா: ஆனா சமையல் வேலை என்பது பெண்களின் கடமை என்று பட்டயம் எழுதி வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டதை தான் எதிர்க்கிறார்கள். ஆண் சமைத்து, வீட்டு வேலை பார்ப்பதை கேவலமான செயல்ன்னு சமூகத்துல பொதுவான தப்பான கருத்து நிலவுது.

எஸ்தர்: இதுல சமைக்க தெரியாத பொண்ண “உங்கம்மா என்ன இப்படி வளத்துருக்காங்க?”ன்னு குறை சொல்ல வேண்டியது, என்று கூறி டிவியை பார்த்து...

“அடேய் மாப்பிள்ளை பையா!! உன்னை உங்கம்மா வளர்த்த மாதிரிதான் எங்களையும் எங்கம்மா செல்லமா வளர்த்தாங்க. உங்கம்மா உன் படிப்பு, வாழ்க்கை பத்தி கவலைப்பட்ட மாதிரிதான் எங்கம்மாவும் என் படிப்புக்காக என் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு கவலைப்பட்டாங்க. உன்னை போல நானும் கஷ்டப்பட்டு படிச்சேன். உன்ன போல நானும் பைக், கார் ஓட்டி வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கிறேன். சமையல் வேலையில் பழக்கம் இல்லாட்டியும் கூட எனக்கு தெரிந்ததை வைத்து கற்றுக்கொண்டே உனக்கு சமைத்து போடுகிறேன். ஆனா, சப்பாத்தி மிருதுவா இல்ல... தோசை வட்டமா வரல.. எங்கம்மாவை போல உனக்கு மோர்க்குழம்பு ருசியா வைக்க தெரியலன்னு சொல்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு... நீ படிக்கும் போது உனக்கு சமையல் கத்துக்க நேரம் இருந்துதா? இல்ல நான் இப்ப செய்யும் அளவிற்காகவாவது உன்னால் செய்ய முடியுமா?” அப்படீன்னு கேட்பேன்.

(சிரிக்கிறார்கள்)

ஸ்ருதி: வேலைக்கு போகாத இல்லத்தரசிகளாக இருந்தாலும் சமையலுடன் வீடு சுத்தம் செய்வது, கடைக்கு போவது, குழந்தை வளர்ப்பு, படிப்பு என்று எவ்வளவு வேலைகளை அவள் தலையில் சுமத்துவாங்க. ஒரு நாள் ஓய்ந்து அவள் உட்கார்ந்து விட்டால், வீட்டின் கதி என்ன ஆகும் என்று கணவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த வேலைகளில் ஆண்கள் ஏன் பங்கெடுத்து கொள்ளக் கூடாது..? சமைப்பது, வீட்டை பராமரிப்பது என்பதும் கூட ஒரு அடிப்படை திறமை தானே... ‌

ரம்யா: ரைட்டு..

ஆனா திடீர்னு உடல்நிலை அல்லது மனநிலை சரியில்லை என்று ஒரு குடும்பத் தலைவி “என்னால் இன்று சமைக்க முடியாது” என்று உட்கார்ந்து விட்டால்... ஆண்கள் ஹோட்டலுக்கு செல்லாமல், வெகு இயல்பாக சமையலறையில் புகுந்து சாதம், குழம்பு வைத்து.. வீட்டில் உள்ள அனைவருக்கும் சோறு போட வேண்டும். ஒரு முறையல்ல... எப்பொதெல்லாம் அவசியம் ஏற்படுகிறதோ, அப்போது வெகு இயல்பாக இது நிகழ வேண்டும். “ஐயோ அவர் சமைக்கிறாரே” என்று வீட்டு பெண்மணிகள் பதைபதைத்து, குற்ற உணர்வு கொள்ளாமல் கணவன் சமைத்து பரிமாறுவதை உட்கார்ந்து மகிழ்வாக சாப்பிட வேண்டும். இது முடியுமா..? அது என்றைக்கு சாத்தியப்படுகிறதோ அன்றே பெண்களுக்கு இந்த சமையல், வீட்டு வேலை என்கிற காலை கட்டிய இரும்பு சங்கிலி விலகும்.

எஸ்தர்: தலையில் துண்டு போட்டுக்கொண்டு எழுந்து நின்று... “அன்பான மக்களே..! இந்தப் படம் பார்த்ததிலிருந்து என் மனசு சரியில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே கட்டாயம் சொல்ல வேண்டியிருக்கிறது. கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்கிற ஐடியாவை தற்போது நான் ஒத்தி போடுகிறேன். எப்போது இந்த இரும்பு சங்கிலி அறுகிறதோ... அப்போது நான் கல்யாணம் பண்ணி கொள்கிறேன்... இது இந்த ஹாசினி மேல சத்தியம்..!” என்று ஹாசினியின் தலையில் அடித்து விட்டு ஓட...

“ஏய் எருமை..!” என்று ஹாசினி அவளை துரத்த... கலகலவென்று அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.