தொடர்கள்
கதை
“கழுத்துக் கடன்...” - வெ. சுப்பிரமணியன்

20210021202515633.jpeg

அடிக்கடி தலைச் சுற்றல் வருவதாலும், இடது ஷோல்டரும், வயிற்றுப் பகுதியும் அவ்வப்போது வலிப்பதாலும், தான் வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தின், அருகிலேயே இருந்த மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு, செக்கப் செய்துகொள்ளப் போனாள் மலர்விழி. துணைக்கு தன் ஆஃபீஸ் அசிஸ்டென்ட் கோபாலையும் அழைத்துப் போயிருந்தாள்.

தொடர்ந்து, இரண்டு நாட்களாக, எல்லா டெஸ்டும் எடுத்து முடிந்த பிறகு, டாக்டர் சொன்னதைக் கேட்டதும் இடிந்து போனாள்...

“மேடம், உங்களுக்கு ‘Splenomegaly’ என்ற மண்ணீரல் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மனதளவிலும், உடலளவிலும், அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கே, பொதுவாக இவ்வியாதி வரும் வாய்ப்புகள் அதிகம். ஆபரேஷன் ஒன்றும் தேவையில்லை, மருந்து மாத்திரையாலேயே குணப்படுத்தலாம்” என்றார் டாக்டர்.

“நாளைக்கே அவசியம் ஒரு, ‘ஐ.வி இஞ்செக்ஷன்’ போட்டுக்கணும். கொஞ்சம் செடேஷன் இருக்கும். மூன்று மணிநேர அப்ஸர்வேஷனு க்குப் பிறகு, நீங்க வீட்டுக்கு போயிடலாம். நாளைக்கு காலையில் ஒன்பது மணிக்கு அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிடறேன்” என்ற டாக்டரிடம்.... ‘சரி’ என்று சொல்லிவிட்டு, கவலையுடன் வீட்டுக்குப் போனாள் மலர்விழி.

“நம்ப ஐய்யா நல்லா குடிச்சுட்டு, என்னோட ஆட்டோ ஸ்டாண்டு பக்கத்திலே, விழுந்து கிடந்தாரு. அடையாளம் கண்டுகிட்டு நான்தான், என்னோட ஆட்டோவிலேயே, தூக்கிப் போட்டுகிட்டு வந்திட்டேன். நாளைக்கு காலையிலே எட்டு மணிக்கெல்லாம் நீங்க சொன்னபடி வந்திடறேம்மா” என்று சொல்லிவிட்டு ஆட்டோக்காரர் போய்விட்டார்.

சுய நினைவில்லாத தன் கணவன் ‘மோகனை’, கைத்தாங்கலாக, தன் இரு மகன்களின் உதவியுடன், உள்ளே படுக்கையில் கிடத்தினாள் ‘மலர்விழி’.

அடுத்தநாள் காலையில், “ஏன் இப்பிடி ‘குடிச்சு’ உடம்பைக் கெடுத்துக்கிறீங்க” என்று மோகனிடம் கேட்டாள் மலர்விழி.

“படிச்சிருக்கோம், அதோட வேலைக்கும் போறோங்கிற திமிரு. அதான் புருஷனை கண்டபடி எதிர்த்து கேள்வி கேட்கத் தோணுது. நான் எங்க வேணுன்னாலும் போவேன், என்ன வேணுன்னாலும் செய்வேன். அதை கேட்க நீயாருடி?. அப்படி என்னோட வாழ இஷ்டமில்லேன்னா, தாராளமா, இப்போகூட உன் அப்பன் வீட்டுக்கே போகலாம்,” என்று கத்திவிட்டு, மாடிக்குப் போய்விட்டான் மோகன்.

கண்களின் விளிம்பிலிருந்த கண்ணீரை, தன் விரல்களால் சுண்டிவிட்ட படியே, மோகனுடனான, தன் இருபத்தைந்து வருட ம(ர)ண வாழ்க்கையை, அசை போடலானாள் மலர்விழி.

“கவலைப் படாதேம்மா, கல்யாணம் ஆகி, இரண்டு மாசம் ஆனபிறகு, இப்போதானே, உன் வீட்டுக்காரரோட சுய-சொரூபம் எங்களுக்கே தெரியுது. போகப் போக சரியாயிடும்” என்று ஆறுதல் சொன்னாள் மலர்விழியின் அம்மா.

மலர்விழியோ, தன் நிர்மலமான முகத்தில், ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கைகளை வழித்து கீழே போட்டுவிட்டு, முகத்தை கழுவிக் கொண்டிருந்தாள்.

“சாப்பாட்டில ஏதாவது குறையிருந்தா, நேரடியா சொல்லாம இப்படி பாதியில, சாப்பிட்ட எச்ச இலையை தூக்கி, என் மகளோட மூஞ்சியிலேயே அடிக்கணுமா மாப்பிள்ளே?” என்று மகளின் வாழ்க்கைக்காக, மானத்தை விட்டு, அமைதியாக நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார் மலர்விழியின் தந்தை.

“யோவ், குறை சாப்பாட்டிலே இல்லை, உன் பொண்ணோட நடத்தையிலேதான். கல்யாணம் ஆனதுக்கப்புறமும், தைரியமா, அதுவும் புருஷன், என் முன்னாடியே, அவளோட ஆண்-சினேகிதர்கள் அப்படீன்னு சொல்லிகிட்டு, கண்ட-நாயும், அவளை தொட்டுப் பேசரானுங்க. உன் பொண்ணும் ஈன்னு இளிச்சுகிட்டு… சீச்சீ… எனக்கு, அவ நடத்தையே பிடிக்கலை. நான் சொன்னது உண்டா, இல்லையான்னு உன் பொண்ணையே கேளுய்யா” என்று நெருப்புத் துண்டுகளாக வார்த்தைகளை கொட்டினான், சந்தேகப்பேயான மோகன்.

வேறு ஊரில், ஒரு மாதகால தனிக்குடித்தனத்திற்கு பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம், “முடிவெட்டிக் கொண்டு வருகிறேன்” என்று போன மோகன், கடையில் கும்பலாக இருந்ததால், போன வேகத்திலேயே வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான்.

எதிர் வீட்டு வாலிபன், ”சிஸ்டர், இந்த மாம்பழங்கள், எங்க வீட்டு மரத்தில் காய்த்தவை. என் அம்மா இதை உங்களுக்கு குடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றான்.

வாசலில் நின்ற படியே, “நீங்க ஃப்ரீயா இருக்கும்போது வீட்டுக்கு வாங்க”, என்று அவன் சொல்லவும், மோகன் வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. தனது கன்னத்தில் விழுந்த அறையில், தன் கணவனின் சந்தேக புத்தியை, ஊர்ஜிதம் செய்துகொண்டாள் மலர்விழி.

இரண்டு வருடங்களுக்குப் பின் தலைப்பிரசவத்துக்காக, ஊருக்குப் போயிருந்த மலர்விழி, குழந்தையுடன் திரும்பியதும், “பிள்ளையை பார்த்தா, என் ஜாடையில் இல்லையே” என்று வார்த்தை முட்களால் குத்தி எடுத்தான் மோகன்.

குழந்தையின் முதலாவது பிறந்தநாளன்று, பரிசு வாங்கி வந்திருந்தான், மலர்விழியின் அத்தை மகன். “டேய், குட்டிப் பயலே, அன்னிக்கு இங்கே வந்து, உன் அம்மாவை பார்த்துட்டு போன முகூர்த்தம்தான், எனக்கு வெளிநாட்டிலே வேலை கிடைச்சிதுடா” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

“உன் அத்தை பையன், இங்கே வந்து போனதை, ஏன் என்னிடம் சொல்லாம மறைச்சே?” என்று, அடுத்த ஒரு வாரத்துக்கு மோகன் குத்திக் கிளறியதை மலர்விழி, மறக்க முயன்றாள், முடியவில்லை.

தனக்கு, இரண்டாவது மகன் பிறந்து, ஆறு மாதங்களுக்கு பின், மீண்டும் அலுவலகத்திற்கு போகத் துவங்கினாள், மலர்விழி. அன்றொரு நாள் மாலையில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் ஊர்வலம் இருந்ததால், திடீரென்று, போக்குவரத்து மாற்றியமைக்கப் பட்டிருந்தது. நேரமாகிவிட்டதாலும், வயதான தன் மாமியாரோடு, ஒரு-வயதேயான, தனது இரண்டாவது குழந்தை வீட்டிலிருப்பதாலும், வீட்டுக்கு எப்படிப் போவதென்று, தவித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. அவளது அலுவலக மேனேஜர் வற்புறுத்தியதால், அவரோடு ஸ்கூட்டரில் ஏறி வந்து, தெரு முனையில் இறங்கிக் கொண்டாள்.

வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவளுக்கு, திடீரென ‘சண்டைபோடும் சத்தம்’ கேட்டது. திரும்பிப் பார்த்தவள், தன் கணவன், தன் அலுவலக மேலாளரோடு, மல்லுக்கு நிற்பதை கண்டு, நடுங்கியபடியே, வீட்டுக்குள் நுழைந்தாள்.

பின்னாடியே, கோபமாக வீட்டினுள்ளே வந்தவன், “ஏண்டி, பெரியவனைத்தான் உன் அத்தை பையனுக்கு பெத்தே, இந்த இரண்டாவதுக்கு இவன்தான் அப்பனா?” என்று மோகன் கேட்டதை நினைத்து, இப்போதும் கூசி, குறுகிப் போனாள்.

தன் கசப்பான வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்த மலர்விழி, நேற்றிரவு, தன் குடிகார கணவனை, வீட்டில் இறக்கி விட்ட ஆட்டோக்காரர், இன்று காலையில், சொன்ன நேரத்துக்கு ஆட்டோவுடன் வந்ததும், ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினாள்.

அவசரத்தில் வீட்டிலேயே வைத்துவிட்டப் போன அவளின் மொபைல் ஃபோன் ஒலித்தது. மாடியிலிருந்து இறங்கி வந்து, வெளியே கிளம்பிக் கொண்டிருந்த மோகனே, மலர்விழியின் ஃபோனை எடுத்தான். எதிர் முனையிலிருந்து ஒரு ஆணின் குரல் கேட்டது.

“மேடம், நம்ப இரண்டு பேரோட லீவு லெட்டரையும் ஆபீஸ்ல குடுத்திட்டேன். ஒருவேளை, உங்க வீட்டுக்காரர் நம்ப ஆபீஸுக்கு வந்தார்னா, நீங்க முக்கியமான வேலையா, வெளியே போயிருக்கிறதா, உங்க செக்ஷன்ல, சொல்லச் சொல்லிட்டேன். நீங்க தைரியமா இருங்க. அதான் டாக்டர், மருந்து மாத்திரையிலேயே சரிபண்ணிடலாம்னு சொன்னாரே. நான் ஆஃபீஸ் வாசலிலேயே வெயிட் பண்ணறேன். சீக்கிரமா வாங்க..” என்று, மடமடவென சொல்லிவிட்டு, அட்டெண்டர் கோபால், ஃபோனை துண்டித்துவிட்டான்.

சந்தேக தீ மனதில் கொழுந்துவிட்டெரிய, ஆத்திரத்தோடு, டூ-வீலரை எடுத்துக் கொண்டு, மலர்விழி வேலை பார்க்கும் ஆஃபீசுக்கு வேகமாக போனவன், வழியிலேயே, சாலையில், வண்டியோடு விழுந்து, அடிபட்டான்.

தன்னை சற்றுமுன், இறக்கி விட்டுவிட்டுப் போன ஆட்டோக்காரர், அவசரமாய் வந்து, விஷயத்தைச் சொன்னதும், நிலைகுலைந்து போன மலர்விழி, தன் குடும்பத்தாருடன், மோகனை சேர்த்திருந்த ஆஸ்பத்திரியில், காத்திருந்தாள்.

“யாரும்மா ‘ஆக்ஸிடன்ட்-கேஸ்’ மோகனோட சம்சாரம்? டாக்டர் உங்க கூட, யாரையாவது ஒருத்தர கூட்டிகிட்டு அவரோட ரூமுக்கு வரச் சொன்னார்” சொல்லிவிட்டு போனாள் நர்ஸ். துணையாக தன் அண்ணனை அழைத்துக் கொண்டு, உள்ளே டாக்டர் சொல்வதைக் கேட்கப் போனாள் மலர்விழி.

“உங்க கணவருக்கு, ஆக்ஸிடென்ட்ல, கால் ஃபிராக்சர் ஆகி, ஹெவி பிளட் லாஸ் ஏற்பட்டிருக்கு. அடி தலையிலேயும் பட்டதாலே, மயக்கத்திலே இருக்கார். அவர் பாடியிலே ஆல்கஹாலிக் கன்டென்ட், பெர்மிசிபிள் லிமிட்டை விடவும் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும், பிளட், ஏத்திகிட்டுதான் இருக்கோம். எல்லா ஐ.சி.யூ வசதிகளோட இருக்கிற, தனி ரூம்ல, இப்போ வைச்சிருக்கோம். நாளைக்கு காலையிலேதான் ஆப்பரேஷன் பண்ணப் போறோம். அதுவரையில் அவருக்கு வென்டிலேட்டர் அவசியம்” என்றார் டாக்டர்.

மாலையில், தனி அறையில் கிடந்த மோகனை பார்க்க, உறவினர்களை அனுமதித்தார்கள். மலர்விழியை, கைத்தாங்கலாக பிடித்து, அப்பா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான், அவளின் இளைய மகன்.

“இரவில், யாராவது ஒருவர், பேஷன்டோடு இருக்கலாம்” என்று, செவிலியர்கள் சொன்னார்கள். மலர்விழி, தானே மோகனோடு இருப்பேனென்று, அடம்பிடித்தாள்.

இரவு மணி பத்து ஆயிற்று. கடந்த இருபத்தைந்து வருடங்களாக, மோகனுடன் தான் வாழ்ந்த நரக வாழ்வும், தூக்கமில்லாத இரவுகளும், சந்தேகத்தால் சுட்டெரித்த அவனது வார்த்தைகளும், மலர்விழியின் நினைவில் மோதி எதிரொலித்தன.

தனியே சுயநினைவின்றி கிடந்த, கணவனின் அருகே அமர்ந்தவள், அவன் முகத்திலிருந்த வென்டிலேட்டரை அகற்றினாள். மோகனின் சுவாசம் மெல்ல அடங்கியது.

அன்றிரவோடு, தன் ‘கழுத்துக்-கடன்’ தீர்ந்த நிம்மதியில், உறங்கினாள், மலர்விழி என்ற பத்தினி.
--------------------------------------------------------------------