தொடர்கள்
அரசியல்
"ஊட்டி தொகுதி படுகர் சமூகத்திற்கு சொந்தமா?" - ஸ்வேதா அப்புதாஸ்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உதகமண்டலம் தொகுதி முக்கியமான ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே சிறப்பான ஒரு சுற்றுலா தலம். கோடை காலத்தில் மெட்ராஸ் தலைமை செயலகமே ஊட்டியில் தான் நடைபெற்றது என்பது வரலாற்று சிறப்பு.

20210020161710102.jpg
மாநில தலைநகரில் தான் ஆளுநர் மளிகை இருக்கின்றது. அதே சமயம், தமிழகத்தில் சென்னையிலும் ஊட்டியிலும்... ஆளுநர் மளிகை இருப்பது சிறப்பான ஒன்று.

20210020162459568.jpg
உலக சிறப்பு மிக்க சுற்றுலா தலம் என்பதால் இந்த தொகுதியின் தேர்தல் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

20210020164053284.jpg
1957 ஆம் வருடம் முதல், தமிழக சட்டமன்ற தேர்தலில் இருந்து ஊட்டி தொகுதி தேர்தல் களத்தில் உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தொகுதியின் முதல் எம்.எல்.ஏ. பி.கே. லிங்கா கௌடர். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர். 1962 ஆம் வருடம் டி. கார்ச்சன் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர். 1967 ஆம் வருட தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளர் கே. போஜன் வெற்றி பெற்றார். 1971 ஆம் வருட தேர்தலில் திமுக-வை சேர்ந்த தேவராஜன் எம்.எல்.ஏ. 1977 ஆம் வருட தேர்தலில் பி.கோபாலன் அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ. 2006 ஆம் வருடமும் இதே கோபாலன் இந்திய தேசிய காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1980 ஆம் வருடம் மற்றும் 1989 ஆம் வருடம் நடந்த தேர்தலில் கே. கல்லன் இந்திய தேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்து கொண்டுள்ளார்.

1989, 1991 மற்றும் 2001 ஆம் வருட தேர்தல்களில் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எச்.எம்.ராஜு மூன்று முறை அபார வெற்றி பெற்று, இந்த தொகுதியின் அன்பான எம்.எல்.ஏ-வாக வலம் வந்தார்.

1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க-வை சேர்ந்த டி. குண்டன் எம்.எல்.ஏ-வாகி கலைஞரின் செல்ல பிள்ளையாக திகழ்ந்தார்.
2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வை சேர்ந்த புத்தி சந்திரன் எம்.எல்.ஏ-வானார். அதன் பின் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஆர். கணேஷ் இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.
நடந்த தேர்தல்களில், இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்பது முறை ஊட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தனித்தும் பின்னர் அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. இரண்டு முறையும்.. அ.இ.அ.தி.மு.க. இரண்டு முறையும் நேரடியாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை இந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் படுக சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே இருந்து வருகின்றனர் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என்று கூறுகிறார்கள்.

நடக்கவிருக்கும் 2021 தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து தி.மு.க-வின் மாவட்ட துணை செயலர் ரவிகுமாரை சந்தித்து பேசினோம்...

20210020164206636.jpg

“உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி ஒரு முக்கிய தொகுதி என்பது எல்லா கட்சி தலைமைக்கும் தெரிந்த ஒன்று... இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தான் இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது என்பது உண்மை. அதே சமயம் எங்க கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி காங்கிரஸ் கூட்டணியுடன் களத்தில் இறங்கி வெற்றி பெற்று வந்தது... 1971, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் தனித்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதன் பின் காங்கிரஸ் கூட்டணியுடன் வெற்றி பெற்றுள்ளோம் என்றால் அது எங்க கட்சி பிரமுகர்களின் அயராத உழைப்பு தான். இந்த ப்ரீஸ்டிஜ் தொகுதியில் படுக சமுதாய ஓட்டுகள் அதிகம் உள்ளன என்பதால், அந்த சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது வரலாற்று உண்மை தான். அதே சமயம் ஏன் இந்த முறை படுக சமுதாயத்தை சேராத எங்களைப் போல ஒருவருக்கு வேட்பாளராக வாய்ப்பை கொடுத்தால் வெற்றி நிச்சியம்... காங்கிரஸ் கூட்டணியுடன் கை கோர்ப்பதை பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. பல வருடமாக கட்சியில் நகமும் சதையுமாக பணிபுரிந்து வரும் என்னை போன்ற ஒருவருக்கு போட்டியிட இடம் கொடுத்தால்... அதை விட வெற்றி சந்தோஷம் வேறு என்ன இருக்க போகிறது... இந்த தேர்தலில் தி.மு.க-விற்கு ஊட்டி தொகுதியில் தனிப்பட்ட வகையில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை நாங்கள் சென்று வந்த 265 கிராம சபை வெற்றி கூட்டங்கள் தீர்மானிக்கிறது.

20210020164336669.jpg

அனைத்து கூட்டங்களிலும் அ.இ.அ.தி.மு.க-வை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக பார்த்து விட்டு வந்திருக்கிறோம். இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் இராமச்சந்திரன் ரெடியாக இருக்கிறார்... இந்தத் தொகுதியை சுற்றி படுக சமுதாய கிராமங்கள் இருந்தாலும், ஊட்டி நகரில் உள்ள வாக்காளர்கள் தான் வெற்றி வேட்பாளரை முடிவு செய்கிறார்கள். இந்த முறை எங்க தலைவர் தி.மு.க. வேட்பாளரை தான் இந்த தொகுதியில் போட்டியிட செய்வார் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று முடித்தார்.

படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சை மோகன் கூறும் போது,

20210020164456302.jpg
“இந்த தேர்தலில் எங்க படுக தேச கட்சி வெற்றி பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஊட்டி தொகுதி ஒரு முக்கிய தொகுதி. இந்தத் தொகுதி வேட்பாளரின் வெற்றியை முடிவு செய்வது எங்க படுக சமுதாய வாக்குகள் தான். தேர்தல் துவங்கிய 1957 முதல்...... கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் வரை, படுக சமுதாய வேட்பாளர் தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதில் இருந்தே தெரிகிறது எங்க சமுதாய வாக்குகள் தான் முக்கியம். கடந்த எம்.பி. தேர்தலில் எங்க கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளது... சீமான் எங்களுக்கு ஆதரவை நல்கினார். காரணம்... நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால். வரக்கூடிய இந்த சட்டமன்ற தேர்தலில், ரஜினி மன்றம் எங்களோடு கைகோர்க்க ரெடி. அவர்கள் 600 பூத்துகளில் ஏஜெண்டுகளை தயராக வைத்துள்ளனர். கமல் கட்சி கூட எங்களுக்கு ஆதரவை கொடுக்க இருக்கிறார்கள். கட்டாயம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று முடிவு செய்து விட்டோம்.

20210020164937407.jpg
காங்கிரஸ் கட்சி நாட்டின் பழம்பெரும் கட்சி, அதை கை கழுவ முடியாது! எங்களின் கோரிக்கை மூன்று தான்... எங்க சமுதாயத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்கவேண்டும்... மலை காய்கறிகளுக்கு ஒரே விலை கொடுக்க வேண்டும்.... பசுந்தேயிலைக்கு நல்ல விலை வழங்க வேண்டும்... எங்க விவசாயம் காக்கப்படவேண்டும்... அவ்வளவு தான்... எங்க சமுதாய மக்கள் எங்க கட்சிக்கு தங்களது ஆதரவை கொடுக்க இருக்கிறார்கள், அதனால் தேர்தல் களத்தில் தனியாக இறங்கி விட்டோம். இந்த தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று முடித்தார்.

மூத்த காங்கிரஸ் பிரமுகர் லஜபதியை தொடர்பு கொண்டு பேசினோம்...

20210020165153802.jpg
“நீலகிரி நாடளுமன்ற தொகுதி மற்றும் ஊட்டி சட்டமன்ற தொகுதி இரண்டுமே காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய இடம் என்பதை யாராலும் மாற்ற முடியாது.

ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி தான் இந்த மலை மாவட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பது வரலாறு, அதை யாரும் மறக்கக்கூடாது. நாடளுமன்ற தேர்தலில் கூட எங்க காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. நீலகிரி தொகுதி ஒரு ரிசெர்வ் தொகுதி என்று மாற்றிய பின் தான் தி.மு.க-விற்கு நாங்கள் விட்டுக்கொடுத்துளோம். ஊட்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் அது படுக சமுதாயத்திற்கு சொந்தமானது என்று சொல்ல முடியாது. மெஜாரிட்டி வாக்காளர்கள் எல்லா சமூகத்தையும் சேர்ந்தவர்கள்... ஊட்டி நகர் தான் தேர்தல் முடிவை நிர்ணயிக்கிறது... அப்படி இருக்க படுக சமூகத்தினர் தான் இந்தத் தொகுதியின் வெற்றியை முடிவு செய்கிறார்கள் என்பது உண்மையல்ல... அதே சமயம் படுக சமூகத்தினரை நாம் ஒதுக்க முடியாது, அவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளை கொடுத்தே ஆக வேண்டும். அதனால் தான் வேட்பாளர்கள் அந்த சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.

ராஜகோபாலச்சரியார் சுதந்திர பார்ட்டியில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். அதிலும் ஊட்டியில் 32 வார்டுகளை கைப்பற்றினார்கள். நகராட்சி சேர்மனாக டாக்டர். பசுவையா, கெம்பையா என்ற கன்னட சமூகத்தினரை காங்கிரஸ் போட்டியிட செய்து, தேர்ந்தெடுத்தது வரலாறு. 1934-ல் காந்திஜியை ஊட்டிக்கு என் அப்பா அழைத்து வந்தார்... காமராஜர், பக்தவச்சலம் எல்லாம் எங்க வீட்டிற்கே வந்துள்ளனர். நேரு... இந்திரா வந்தது எல்லாம் காங்கிரஸ் கட்சியின் முயற்ச்சி தானே... மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாக உள்ளனர். நான் தலை அசைத்தால் உடனடியாக தேர்தல் களத்தில் குதித்து விடுவார்கள்.... அப்படிப்பட்ட பாரம்பரிய கட்சியை கை விடுவது சரியானதா?.. சொல்லுங்கள்... அதே சமயம் யோசித்து முடிவை எடுக்கும் தி.மு.க. தலைமை, சரியான முடிவை எடுக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

தி.மு.க. நகர செயலர் ஜார்ஜ் பேசும் போது...

20210020165329881.jpg
“ஊட்டி சட்டமன்ற தொகுதியில் இந்த முறை தி.மு.க. தனித்து போட்டியிடுவதை தான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம். படுக சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வேட்பளர் சீட் கொடுக்கக்கூடாது... காரணம் மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பை தர வேண்டும் என்பது தான் கட்சியினரின் வேண்டுகோள். படுக சமுதாயத்தினரின் வாக்குகள் ஒரு காலத்தில் அதிகமாக இருந்திருக்கலாம், ஆனால் தற்போது இல்லை. பெரும்பாலான படுக கிராம மக்கள்... குழந்தைகளின் படிப்பு, வேலை என்று மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், துடியலூர் என்று செட்டிலாகிவிட்டனர். அங்கு தனி படுக சமுதாய கிராமங்கள் உருவாக்கிவிட்டனர்... அவர்களின் ஓட்டு கூட அந்த தொகுதிக்கு தான்... அப்படி இருக்க.. அவர்கள் ஊட்டி தொகுதியை எப்படி தீர்மானிக்க முடியும்?!... மேலும் இந்த தொகுதியின் எல்லா இடங்களிலும் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிறார்கள். படுக சமூகத்தினரின் தோட்டங்கள் எல்லாம் கௌண்ட சமூகத்தினரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகரில் உள்ள 36 வார்டுகளில் வசிக்கும் மக்கள் தான் இந்த தொகுதியின் முடிவை தீர்மானிப்பவர்கள். இப்போது உள்ள எம்.எல்.ஏ. இந்த ஊட்டி நகருக்கு என்ன செய்துள்ளார்... நாங்கள் வலுக்கட்டாயமாக, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சில முக்கிய பணிகளை செய்ய நிதியை பெறுகிறோம். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்... அதனால் தான் இந்த தேர்தலில் என்னைப் போன்ற கட்சி பிரமுகருக்கு வாய்ப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம். அதே சமயம் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி தான்... பார்க்கலாம் தலைமை எடுக்கும் முடிவை” என்று முடித்தார்.

20210020165931114.jpg
அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலர் கப்பச்சி வினோத் கடந்த தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கணேஷிடம் தோல்வியை சந்தித்தார். இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று முழு மூச்சாக களத்தில் இறங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலர் புத்திசந்திரன் தனக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தலைமை வழங்க வேண்டும் என்று முயற்ச்சிக்கிறார். ஊட்டி என்.சி.எம்.எஸ். கூட்டுறவு நிறுவன வளாகத்தில் கடைகள் அமைத்துக் கொடுக்க பணத்தை வாங்கிய புத்தி சந்திரன், அவர்களுக்கு கடை கொடுக்காமல்... அந்த பணத்தை தீபாவளி பரிசாக கட்சி பிரமுகர்களுக்கு கொடுத்து விட்டாராம். அந்த பணத்தை வாங்கிக் கொடுத்த ஊட்டி மார்க்கெட் காய்கறி ஏல விற்பனையாளர் சிக்கலில் உள்ளார். அவர் புத்தியை தோற்கடிக்கும் திட்டத்தில் வினோத்தின் உதவியை நாடியுள்ளார்... வினோத் தனக்கு வேட்பாளர் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று முதல்வரை சந்திக்க சென்றுள்ளார். தன் செல்வாக்கை பயன்படுத்தி, வினோத்தை வீழ்த்த புத்திசந்திரன் எல்லா முயற்சியையும் எடுத்து வருகிறார்... இருவரும் படுக சமூகத்தை சேர்ந்தவர்கள்.....

ஊட்டி தொகுதி வாக்காளர்கள் மிகவும் உன்னிப்பாக யார் சிறந்த வேட்பாளர்.. பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க உலக சுற்றுலா தலத்திற்கு சிறந்த எம்.எல்.ஏ-வை தேர்தெடுக்கும் யோசனையில் இறங்கியுள்ளனர்....