தொடர்கள்
பொது
வாய் எனும் கொடிய ஆயுதம்! - பா.அய்யாசாமி

20210021202744871.jpeg

மிகப் பெரிய மற்றும் ஆபத்தான ஆயுதம் தாங்கிய கிடங்கு,
நம்முடைய வாய் என்றால் அது மிகையான வார்த்தையில்லை தானே?

சொல் ஒன்று நம் வாயிலிருந்து புறப்பட்டுவிட்டால், அது சரியாகப் புரிந்துக்கொள்ளும் கோணங்கள் எத்தனை? அதனால் காயப்படும் மனங்கள் எத்தனை என்று நாம் புரிந்து பேசுகிறோமா? யோசித்துதான் பார்க்க நம் சூழல் இடம் தருகிறதா என்றால் பெரிய கேள்வி குறிதான் மிஞ்சுகிறது.

அந்தளவிற்கு மனித மனங்கள், ரணங்கள் கொண்டு குழம்பிய ஒரு சூழ்நிலையில்தான் நம் வார்த்தைகளும் தடுமாறி உருமாறி வெளிவருகிறது.

அச்சொல் கேட்பவரை எப்படி சென்றடைகிறது, எப்படி புரிந்துக்கொள்ளப்படுகிறது என்பது நாம் அலசி ஆராய வேண்டிய சூழல்தான் இது.

பொறுப்பான ஒரு பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் தனது பேச்சில் சாக்கடை என்று ஒருவரை நேரடியாக குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், அந்த பொருள்படும்படி அவரை விமர்சித்திருப்பது அவர் சார்ந்த கட்சி, உறவுகள், ஆதரவாளர்களிடம் எப்படி அந்தச் செய்தி சேர்ந்திருக்கும் என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பேசுபவர் வேண்டுமானால், ஒரு பெரிய நிறுவனத்தின் அடையாளத்தில் நின்றுக்கொண்டும், தனது வானாளவிய அதிகாரத்தாலும் பேசிவிடலாம்... ஆனால் பேசிப்பட்டவரின் பின்னனி இங்கு ஆராயப்பட்டு, ஒட்டு மொத்த அவர் சார்ந்த சமூகத்தையே பழிப்பது என்பது தவிர்க்க முடியாமல் போகிறது.

அவரின் அந்த பேச்சை, அவரை சுற்றி இருக்கும் நபர்களே ரசிக்கமாட்டார்கள், வெறுப்பார்கள் என்பது மறுக்கப்படாத உண்மை.

ஆனால் விமர்சனத்திற்கு உள்ளானவர்களின் ஆதரவாளர்களின் மனத்தளவில் ஒரு வெறுப்புணர்ச்சியையும் பகையுண்ர்ச்சியையும்தானே இது போன்று பேச்சுகள் ஏற்படுத்தும். ஏனென்றால், பேசப்படும் பொருளைவிட, பேசுபவர் யார்..? இதற்கு பின்னனி என்ன என்று ஒட்டுமொத்தமாக பார்ப்பார்கள்.

இத்தகைய அறுவறுக்கத்தக்க பேச்சினால், ஆவப்போவது என்ன? எதையும் நயம்படச் சொல்வதற்கு, அழகுத் தமிழில் எத்தனையோ வார்த்தைகளும், சொல்லாடல்களும் இருக்கும்போது, விவகாரமான வார்த்தைகள் வெளிவருகிறது என்றால்... பேசியது அவரின் தனிப்பட்ட எண்ணமாக, இயலாமையின், வெறுப்பின் வெளிப்பாடாக அது கருதப்படவேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக அவரை சார்ந்த சமூதாயத்தின் எண்ணம் என கருதிவிடக்கூடிய அபாயத்தை பேசுபவர்கள் விதைத்து விடுகிறார்கள், இவரைப் போன்ற பல மேதாவிகள்.

அதற்கான விளைவுகளை அந்த சமூகத்திலுள்ள அரசியல்கட்சி, சாதி சங்கம் இப்படி எந்த அமைப்பிலும் சாராமல், கிராமத்தில் சமூக சிந்தனையோடு, ஒற்றுமையாக வாழும் பல சமூகத்தினரை இது பெரிதாக பாதிக்கிறது,

இத்தகைய அறுவறுக்கத்தக்க பேச்சால், கூட்டத்தில் கைத்தட்டு ஆராவாரம் வேண்டுமானால் எழலாம். ஆனால், ஒரு போதும் இளைய சமூகத்தினரிடையே மாற்றத்தையோ, அன்பான அனுசரனையான போக்கையோ ஏற்படுத்தப் போவதில்லை... மாறாக வெறுப்பு அரசியல்தான் புரையோடும்.

எனவே உயர் பதவியில் இருப்பவர்கள், பொறுப்பான நிர்வாகத்தில் உள்ளவர்கள், தங்களின் வார்த்தைகள் சமூகத்திற்கு பயன்படும் படியாகவும், இளைஞர்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை விதைக்காமலும் இருக்கவேண்டும். நீங்கள் எத்தனை அறிவுஜீவியாக இருந்தாலும், வார்த்தைப் பிரயோகமே காட்டிவிடும் உங்கள் உண்மையான முகத்தையும், தரத்தையும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.