தொடர்கள்
பேசிக்கறாங்க
பேசிக்கறாங்க......

20210022085045104.jpg

நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி...ஹி... ஒட்டு)கேட்டு ரசித்தவை...

சுலோச்சனா முதலியார் பாலத்தில், நடை பயிற்சியின் போது இருவர் ....

“என்னங்க.. எடப்பாடி மோடியை பாத்துட்டு வந்தவுடனே, பால் தினகரன் இடத்துலேல்லாம் ரைடாமே..”

“அட நீங்க வேற... எடப்பாடி பாவம்ங்க... நாம முகக்கவசம் போட்டுட்டு தினகரன்னு சொன்னதை மோடிஜி பால் தினகரன்னு தப்ப புரிஞ்சிகிட்டாரோன்னு...”

“அட.. நம்ம டெல்லி பயணம் இப்படி ஆயிடுச்சேங்கிற வருத்தத்துல்ல இருப்பாரோ முதல்வர்.....”

இருவரும் சிரித்துக்கொண்டே செல்கிறார்கள்...

நளினி, திருநெல்வேலி.


தி.நகர் நடேசன் பூங்காவில் இருவர்...

“என்னங்க.. திருமாவளவன் நேத்திக்கு அந்தர் பல்டி அடிச்சு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கார்...”

“தேர்தலுக்கு 15 நாளுக்கு முன்னாடி ஒரு சின்னத்த வாங்கி, அத பிரபலப்படுத்துறது கஷ்டம். அதனால, உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது குறித்து பரிசீலனை, இதனால் விசிக, அதன் தனித்தன்மையை இழந்து விடாதுன்னு சொல்லி இருக்காரு...”

“இதத்தான் எங்க ஊர் பக்கத்துல சொல்வாங்க.. பொண்ணு வீட்டோட தான் இருப்பேன்... அனாலும் நான் வீட்டோட மாப்பிள்ளை இல்லன்னு... அப்பிடித்தான்.”

இருவரும் சிரித்துக்கொண்டே நடக்கிறார்கள்...

கோபி. தி. நகர்.


கோனார் மெஸ்ஸில் சாப்பிடும் இருவர்...

“என்னப்பா , சசிகலாவுக்கு கொரோனாவாமே?”

“அவங்க விடுதலையாகிறது உறுதியானவுடனே, எடப்பாடி டில்லிக்கு காவடி எடுத்தாருல்ல... இப்ப புரியுதா அதோட ரிசல்ட்டு..”

“அடப்பாவி, எப்படிடா இப்படி யோசிக்கறீங்க....”

“நாங்கல்லாம் ட்ரம்பயே வெளிய தூக்குனவுங்க போவியா...”

அடுத்தவர் சிரித்துக்கொண்டே ஆர்டர் குடுக்க நகருகிறார்...

கார்த்தி, மதுரை.


ரங்கநாதன் தெருவில் கணவனும், மனைவியும்....

“இப்ப எதுக்கு ஈயச்சொம்பு வேணும்னு சொல்றீங்க, நம்ம வீட்டுல தான் இருக்கே , தினமும் ரசம் அதுலதானே வெக்கறேன்.”

“இல்ல, ராஜி வந்திருந்தாள் நேத்திக்கு, அவ தான் சொன்னா... அத்திம்பேர் உங்க வீட்டு ஈயச்சொம்பு ரசம் பிரமாதமா இருக்கு, எனக்கும் அதுல சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசை அப்படீன்னா..”

“உடனே அவ ஆசைய நிறைவேத்த கர்ம சிரத்தையா கடைக்கு என்கூட கிளம்பி வந்துடீங்க.....”

“அது வந்து... உனக்கு கூட ஹெல்ப் பண்ண வரலாம்னு தான் வந்தேன், நீ என்ன... என்ன சந்தேகப்படறியா?”

“இல்ல சந்தோஷப்படறேன், மச்சினிக்கு மனசுல ஒரு விஷயம் தோணுன உடனே அத நிறைவேத்தி வெக்கற ஒருத்தர எங்கப்பா மருமகனான அடைஞ்சிருக்காரே அத நினைச்சு, சந்தோஷப்படறேன்... (பற்களை நறநறக்கிறார்)”

“(அதை தெரிந்து கொள்ளாமல்) இப்போ தான் நீ என்ன சரியாய் புரிஞ்சிண்டிருக்கே.....”

(அன்று அவர்கள் வீட்டில் என்ன நடந்திருக்குமோ... அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்..)

ரேவதி, தி.நகர்.


திருவாரூர் பஸ் நிலையத்தில்.... கணவனும் மனைவியும்...

“என்னங்க நேத்திக்கு பக்கத்து வீட்டு அக்கவோட ஜோசியர்கிட்ட போய் உங்க ஜாதகத்தை காட்டினேன், சனிப்பெயர்ச்சி முடிஞ்சிடுச்சாம், இனிமே ஒண்ணும் பிரச்சனை இல்லேன்னு சொல்லிட்டாருங்க...”

“அப்படியா ரொம்ப நல்ல விஷயம் தான்..... (பின்னர் மெதுவாக முனகுகிறார்), பெயர்ந்த சனி நேர நம்ம வீட்டுக்கே இல்ல வந்திருக்கு, என் மாமனார் ரூபத்துல, போன வாரம் வந்தவர் என்னிக்கு போவேன்னு சொல்லமாட்டேங்குறாரே...”

“என்னங்க முனகலா.... என்னமோ சொல்றீங்க...”

“இனிமே என்ன புது பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு யோசிக்கறேன்...”

“கரெக்ட்டுங்க.. எங்க அப்பாவையும் ஒத்தாசைக்கு கூட்டுக்கோங்க..”

“(மீண்டும்.. முனகல்).... இவை நெஜமாவே சொல்றாலா.. இல்ல போட்டு பாக்கறாளா?”

குழப்பத்தோடு தொடர்கிறார்....

சண்முக வடிவேல், திருவாரூர்.


சிதம்பரம் பள்ளி ஒன்றின் கேட்டில்.... ஆசிரியர் வரும் மாணவர்களை நிறுத்தி கேள்வி கேட்கிறார்...

“டேய் நில்லு, பேரன்ட்ஸ் கிட்டயிருந்து லெட்டர் வாங்கிட்டு வந்தியா?”

“இல்ல சார்...”

“ஏன் வாங்கல?”

“அவங்க ரெண்டு பெரும் கொரோனா வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்காங்க சார், நான் தான் வீட்டுல போரடிக்குதுன்னு பிரெண்டஸ பாக்கலான்னு வந்தேன்...”

“அடப்பாவி.... உனக்கு கை வேற கொடுத்தேன்.... நீ கிளம்பு சாமி...” கையெடுத்து கும்பிட்டுவிட்டு... சானிடைசர் போட்டு கைகளை தேய்த்து கழுவிக்கொண்டே இருக்கிறார்...

ராமன், சிதம்பரம்.


வாசகர்கள் பங்களிப்பு இன்னும் அதிகமாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.