தொடர்கள்
தொடர்கள்
குறுந்தொகை துளிகள் - 4 - மரியா சிவானந்தம்

20210021161057516.jpg

பொருள் ஈட்டுதல் ஆண் மகனின் முதல் கடமையாக இருந்த காலம் சங்ககாலம். அறத்தின் பால் நின்று பொருள் செய்தல், அவ்வாறு ஈட்டிய பொருளை எளியவருக்கு ஈந்து வாழ்தல் இல்லறத்தின் தலையாய கடமையாக இருந்த காலம். ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்று ஒளவை சொல்கையில், ‘செய்க பொருளை, எதிரிகளின் ஆணவத்தை அழிக்கும் கூரிய ஆயுதம் அதைவிட வேறு ஒன்றில்லை’ என்பார் வள்ளுவர் .

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில் .(குறள் 759)

பொருள் தேடி தலைமகன் சென்றால், இங்கு தலைவி பிரிவின் துயரத்தை தாள முடியாது அரற்றுவாள். “எங்கு சென்றானோ, எப்படி இருக்கிறானோ அவன் செல்லும் வழியில் என்ன துன்பங்களை அனுபவிக்கிறானோ?” என்று தலைவி பரிதவிக்கிறாள்.

தலைய வாரி பூ முடிச்சேன் வாடி வதங்குது
சதா தெருவில் வந்து நின்னு நின்னு காலும் கடுக்குது..
வழிய வழிய பாத்து பாத்து கண்ணும் நோகுது
அவர் வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது
(கவிஞர் கா.மு.ஷெரிப்)

என்று கலங்குபவளை தோழி தேற்றுகிறாள்.

“நீ கவலைப்பட வேண்டாம் தலைவி, அவன் உன் மேல் காதல் கொண்டவன், உன்னுடன் உறங்கும் பேறு அவனுக்கு இல்லாமல் போனது. மானும் அதன் குட்டியும் உறையும் பாலை நிலத்தில் அவன் எந்த ஆபத்தும் இன்றியே செல்வான். அவன் பாதுகாப்பாகவே இருப்பான்” என்று கூறி அரவணைத்து கொள்கிறாள்...

பாலைத்திணைக்குரிய இந்த குறுந்தொகை பாடல் அழகிய காட்சியொன்றை ஓவியமாக தீட்டி நம் கண் முன் வைக்கிறது.

தோழி, தலைவியிடம் “கேளாய் தலைவி! உன் மேல் அன்பும், விருப்பமும் கொண்டவர் அல்லவா நம் தலைவர்? அவர், உன்னோடு துயில் கொள்ளும் பேற்றை விடுத்து பிரிந்து சென்றவர். உன் தலைவன் போகும் பாலை வழியில் கிளைத்த கொம்புகளை உடைய முதிய ஆண்மான் பருத்த பெரிய மரத்தை தன் காலால் உதைத்து மரப்பட்டைகளை வளைக்கும். அப்போது விழும் கனிகளை, தனது குட்டி உண்டபின், எஞ்சியதை தான் உண்ணும். உணவை உண்ட மான் குட்டி துள்ளி குதிக்கும், ஆண்மானோ, குட்டியின் மேல் வெயில் படாதவாறு நின்று, தன் நிழல் அதன் மேல் படுமாறு சூரியனின் கதிர்களை மறைத்து நிற்கும்” என்கிறாள்.

முல்லை நிலத்துக்கும், குறிஞ்சி நிலத்துக்கும் இடைப்பட்ட பகுதியை, இந்த இரு நிலங்களின் இயல்பும் திரிந்த பகுதியை ‘பாலை’ நிலம் என்று இலக்கியம் குறிக்கிறது. “அந்த வறட்சி மிக்க வழியில் ஆண்மான் தன் குட்டியைக் காப்பது போல், உன் தலைவனும் உன் நெஞ்சில் சுமந்து செல்வான். பொருள் சேர்த்த பின் உன்னைத் தேடி வருவான்” என்று நம்பிக்கை ஊட்டுகிறாள் தோழி.

பாலை நிலத்தின் உரிப்பொருள் “பிரிதலும், பிரிதல் நிமித்தமும்” குறுந்தொகையின் இப்பாடலை எழுதியவர், கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன். காஞ்சிபுரத்தின் அருகே உள்ள கச்சிப்பேடு என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆண்மான் ‘மறிக்கு நிழலாகி நின்று வெயில் கழிக்கும்’ அழகிய காட்சியை நமக்கு விருந்தாக்குகிறார்.

இதோ அப்பாடல்...

நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி

நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.
(
குறுந்தொகை 213 - கச்சிப்பேட்டு காஞ்சி கொற்றன்)

தொடரும்