தொடர்கள்
பொது
தலை நகர் திருடன்..! - ராம்

20210023002829729.jpeg

சுஜாதாவின் நாவல் ஒன்றில் வரும் திருடன் சிங்காரம்.

சிங்காரத்தின் ஆர்வமெல்லாம் பூட்டைத் திறப்பதில் தான். அதன் பின் நடத்தும் திருட்டெல்லாம் அவனை சுவாரஸ்யப்படுத்தாது.

அந்த நாவலில் சுஜாதாவின் சிங்காரம் பூட்டைத் திறப்பதில் மிக மிக கில்லாடி. ஒரு குறிப்பிட்ட நாளில் தெருவிளக்கை உடைத்து விட்டு, போலீஸ் நிலையத்தில் வலிய வந்து மாட்டிக் கொள்வான் சிங்காரம். அன்றிரவு நடக்கும் ஒரு திருட்டு முறை அப்படியே சிங்காரத்தின் பிரத்யேக முறை. போலீஸ் மண்டை காய்ந்து போகும். சிங்காரம் போலீஸ் காவலில் இருக்கும் போது, சிங்காரம் பாணியில் திருட்டு எப்படி என்று புரியவே புரியாது.

சூட்சுமத்தை சிங்காரம் தோழிக்கு கற்றுக் கொடுத்திருப்பான்.

இந்த புது தில்லி செய்தியைப் பார்க்கும் போது, எனக்கு சிங்காரத்தின் நினைவு வந்தது.

தில்லியில் கல்காஜி என்ற இடத்தில் இருக்கும் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்தவன் ஷேக் நூர் ரஹ்மான். எலக்ட்ரீஷியன்.

கடையில் வேலைக்கு சேர்ந்து, அந்த மூன்று மாடிக் கடையின் சந்து பொந்தெல்லாம் இஞ்சு பை இஞ்சாக தெரிந்து வைத்திருந்தான் ஷேக்.

ஒரு வருடமாக அங்கு வேலை பார்த்த ஷேக்குக்கு, கடந்த மூன்று மாதமாக அந்தக் கடையில் கொள்ளையடிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

அதற்காக திடீரென ஒரு பத்து நாள் ஊருக்கு போவதாக சொல்லி லீவு கேட்டிருக்கிறான். கடை முதலாளியும் நம்பிக்கையான ஆள் தானே என்று லீவு கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

ஊருக்கும் போயிருக்கிறான் ஷேக். பின்னர் அங்கிருந்து நைசாக யாருக்கும் தெரியாமல் தில்லிக்கு புறப்பட்டு வந்து, தன் வீட்டில் தங்காமல், வேறொரிடத்தில் தங்கியிருக்கிறான்.

சம்பவம் நடந்த அன்று காலையிலேயே அந்த கட்டிடத்திற்கு சென்றவன், இரவு பதினொறு மணியளவில் மேற்கூரை வழியே, சகல விதமான கருவிகளோடு கயிறு இறக்கி உள்ளே இறங்கியிருக்கிறான்.

அதற்கு முன்னர் கரோனா பாதுகாப்பு கவச உடையோடு தான் அங்கே வந்து இறங்கியிக்கிறான் ஷேக்.

ஹைட்ராலிக் கட்டிங்க் மெஷின், ஸ்க்ரூ டிரைவர் என்று பக்காவாக பிளான் பண்ணித்தான் செயலில் இறங்கியிருக்கிறான் ஷேக்.

அது மட்டுமல்ல... எல்லா சி.சி.டிவி காமிராவையும் துண்டித்து விட்டால் சந்தேகம் வரும் என்று முடிவு செயது, ஒரேயொரு சிசிடிவி காமிராவை மட்டும் செயலிழக்க வைத்து விட்டு... நேராக கீழ் தளத்திற்கு சென்று, அங்கு தான் எடை குறைவான... ஆனால், விலை அதிகமாக இருக்கும் நகைகள், கற்கள் இருக்கும் என்று அறிந்து, அங்கு போய் சுமார் 25 கிலோவிற்கு பொருட்களை மெதுவாக சூட்கேசில் போட்டுக் கொண்டு கம்பியை நீட்டியிருக்கிறான் ஷேக்.

நேராக கரோல் பாக்கில் நண்பனின் வீட்டுக்கு ஆட்டோ பிடித்து சென்று சேர்ந்து விட்டான் ஷேக்.

அடுத்த நாள் காலையில் 11 மணிக்குத் தான் கடையில் திருட்டுப் போயிருக்கும் விஷயமே தெரிய வந்திருக்கிறது. போலீஸ் வந்து பார்க்கையில் திருடியது அத்தனை சுத்தம்.

மிகச் சரியான ஸ்க்ரூ டிரைவர் வைத்து திருடப்பட்டிருக்கிறது. ஒரேயொரு சிசிடிவியை தான் உடைத்திருக்கிறார்கள். வந்து போனது உள்ளே வேலை செய்யும் ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீஸ் முடிவுகட்டியிருக்கிறது.

முத்தாய்ப்பாக போலீஸ் கண்டுபிடித்தது தான் ஹைலைட். திருடன் தண்ணீர் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து விட்டுப் போயிருக்கிறான். இருட்டில் அந்த இடத்தை கண்டுபிடித்தது எப்படி..?

உடனடியாக செயலில் இறங்கியது போலீஸ். லீவு எடுத்து ஊருக்கு போன ஷேக் உடனடியாக தில்லிக்கு வந்ததை, அவன் செல் போன் சிக்னலை வைத்து உறுதிப்படுத்திக் கொண்டது.

வியாழக்கிழமை, பணத்தோடு மனைவி குழந்தைகளோடு வேறு ஊருக்கு செல்ல தயாராக இருந்த ஷேக்கை, அவன் நண்பனின் வீட்டிலேயே வைத்து கோழியை அமுக்குவது போல அமுக்கியது போலீஸ்.

இத்தனை தொழில் சுத்தம் ஆகாது போல...

சுஜாதா நாவலில் வரும் சிங்காரமும் இப்படித்தான். திருடியதை ஒழுங்காக வைத்து வாழ்வதில் எல்லாம் அவனுக்கு இஷ்டமில்லை. பூட்டை உடைப்பதோடு அவன் சுவாரஸ்யம் போய் விடும்.

எவ்வளவு துல்லியமாக திருடினாலும், கொள்ளையடித்தாலும் எந்த வகையிலாவது மாட்டிக் கொள்வோம் என ஏன் திருடர்களுக்கு புரிவதேயில்லை??? (அரசியலைத் தவிர)