வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம், உங்க வருமான வரி சோதனை அனுபவங்களை சொல்லுங்களேன் என்று மிஸ்டர் ரீல் கேட்க... உடனே அந்தப் பெண் அதிகாரி.. “ஏன் உங்களுக்கு இந்த வாரம் பெரியதலை எதுவும் கிடைக்கவில்லையா” என்று கேட்க...
“பேப்பர்ல வருமான வரி சோதனை என்று போடுகிறார்களே.. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரிஞ்சுக்கிற ஒரு ஆர்வம் தான்” என்று மிஸ்டர் ரீல் சொல்ல... உடனே அந்தப் பெண் அதிகாரி.. “சாமி சத்தியமா இத யாருகிட்டயும் சொல்லக்கூடாது” என கையில் அடித்து சத்தியம் செய்யச் சொன்னார். நம்ம கிட்ட தான் சத்தியத்திற்கு பஞ்சமே இல்லையே என்று அப்படியே கையில் அடித்து மிஸ்டர் ரீல் சத்தியம் பண்ணியதும்... அந்தப் பெண் அதிகாரி விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார்.
“நான் ஒரு அரசியல் தலைவர் வீட்டுக்கு போனபோது, எங்க வீட்டுக்கு வருமானவரித்துறை ரெய்டு வந்திருக்காங்க என்று அவரே போன் பண்ணி, டிவி சேனல், பத்திரிக்கை எல்லாவற்றுக்கும் தகவல் சொல்லிவிட்டு தலையெல்லாம் வாரிக்கொண்டு வேட்டி சட்டை எல்லாம் போட்டு மேக்கப்புடன் தயாராக இருந்தார். நான் நீங்களே போன் பண்ணி ரெய்டுன்னு தகவல் சொல்றீங்களே என்று கேட்டபோது... ‘எங்க கட்சியே என்னை மறந்து போச்சு, இப்ப நான் பிரபலம் இல்லை.. முன்னாள் அமைச்சர்னு சொல்றாங்க... இப்போ ரெய்டு நியூஸ் ஃபிளாஷ் நியூஸா பரபரப்பா முன்னாள் அமைச்சர் வீட்டில் கோடிகோடியாக பணம் கைப்பற்றப்பட்டது, சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது, 50 கிலோ தங்கம் என்று ஆளாளுக்கு அடிச்சு விடுவாங்க... அப்போ நான் தானே ட்ரெண்டிங் ஆவேன், மறுபடியும் பாப்புலர் ஆகிவிடுவேன்’ என்று சொன்னார் அவர்”
“வருமான வரித்துறை சோதனையை பார்த்து எல்லாம் பயப்படலையா” என்று மிஸ்டர் ரீல் கேட்டதும்... “அப்படி எல்லாம் இல்லை... இது பீரோ சாவி, இது பாத்ரூம் சாவி என்று மொத்த சாவிக்கொத்தையும் எங்களிடம் தந்து, நல்லா ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவர் டிவி சேனலுக்கு பேட்டி தந்து கொண்டிருந்தார்” என்று அந்த அதிகாரி சொன்னதும்...
“நிருபர்களிடம் உங்கள் மீது புகார் சொன்னாராக்கும்”என்று மிஸ்டர் ரீல் கேட்க... அம்மையார் “அப்படியும் இல்லை... ‘சட்டம் தன் கடமையை செய்கிறது... சட்டத்துக்கு முன் இந்த சாமானியன் சமம் என்று பேசிவிட்டு, வாங்க ரெய்டு நடக்கிறது.. படம் எடுத்துக்கோங்க’ என்று படப்பிடிப்பு குழுவையும் உள்ளே அனுப்பினார்” என்று அந்த பெண் அதிகாரி சொன்னதும்... “ரொம்ப வித்தியாசமான அரசியல் தலைவர் போல் தெரிகிறது” என்று மிஸ்டர் ரீல் சொல்ல...
“ஆமாம். படப்பிடிப்புக் குழுவினருக்கும் செய்தி சேகரிப்பதற்கு வந்த நிருபர்களுக்கும் சமோசா, முந்திரி பருப்பு கேக், பாதாம் மில்க் என்று அவர்களை கவனித்தார். எங்களை கண்டுகொள்ளவே இல்லை” என்று அந்த அதிகாரி அலுத்துக் கொண்டதும்... மிஸ்டர் ரீல்.. “சரி... அரசியல் தலைவர் வீட்டு சோதனையில் என்ன கிடைத்தது?” என்று ஆர்வமாய் கேட்க... அந்தப் பெண் அதிகாரி டல்லாகி... “ஒன்னும் பேரலை. அதன் பிறகு மீண்டும் டிவி சேனல், பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு... “என் வீட்டில் சோதனை போட்டார்களே, எத்தனை கோடி கைப்பற்றினார்கள் என்று கேளுங்கள்” என்று உசுப்பேற்றி விட... நாங்கள் வேறு வழியின்றி... ‘எங்களுக்கு வந்த தகவல் தவறு’ என்று சொல்லிவிட்டு, மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பினோம். உடனே ஆளுங்கட்சி அத்துமீறல் என்று இன்னொரு பேட்டி அவர் தர... எங்க மேலிடம், வேற வேலையே கிடையாதா என்று எங்களுக்கு டோஸ் கொடுக்க... அவரை ஒதுக்கிய கட்சி, அவரால் நமக்கு ஓட்டு கிடைக்கும் என்று அவருக்கு கட்சியில் பழையபடி முக்கிய பொறுப்பு தந்தது. அவர் மறுபடியும் ஜெயிச்சு, இப்ப மந்திரியாகி நல்லா சம்பாதிக்கிறார் என்ற தகவல் வருது. ஆனா நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” என்று அந்த அம்மையார் சொன்னதும்... நீங்கள் ரொம்ப உஷார் என்று அவரைப் பாராட்ட... உடனே அவர் அடுத்த ரெய்டு அனுபவத்துக்கு போனார்.
“சமீபத்தில் ஒரு பிரபல நடிகை வீட்டுக்கு ரெய்டு போன போது, முதலில் அங்கும் பெரிதாக எதுவும் பிடிபடவில்லை... ஆனால், இரண்டு மூன்று அறைகளில் புடவைகளை தொங்க விட்டிருந்தார்கள்... ஒரு அறையில் இருந்த வாடாமல்லி கலர் புடவை என்னை சுண்டி விட்டது.. நான் ஆசையுடன் அந்த புடவையை தொட்டுப் பார்த்ததும், அந்தப் புடவை என் கையில் விழ... என்னவோ உறுத்துகிறது என்று புடவையை உதற... அதிலிருந்து ஒரு நெக்லஸ் கீழே விழுந்தது. இன்னொரு புடவையை எடுத்து உதற.. ரூபாய் நோட்டு கட்டுகள் பொத்தென்று விழுந்தது. அப்புறம் எல்லா புடவைகளையும் உதறி பார்த்தபோது, எங்களுக்கு செம வேட்டை. ஆனால், அந்த நடிகை என்னைப் பார்த்து... ‘நீ உருப்பட மாட்ட... உன் பையன் ஸ்கூல மட்டும் நாலு வருஷத்துக்கு திறக்க மாட்டார்கள்... நீ ஆன்லைன் கிளாஸ்ல அவதிப்படணும். உனக்கு மட்டும் கொரோனோ தடுப்பூசி கிடைக்காது’ என்றெல்லாம் சாபமிட்டார். இது போதாது என்று ஏசி, மின்விசிறிகளையெல்லாம் நிறுத்தி எங்களை படுத்தி எடுத்தார் அந்த நடிகை.
இதே போல் ஒரு அரசு ஊழியர், லஞ்சப் பணம் அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார் என்று உறுதியான தகவல் கிடைத்தது. ஆனால் எந்த பீரோவை குடைந்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. கைத்தடியை கூட கிளறி பார்த்தோம், ஒன்றும் சிக்கவில்லை. சமையலறையில், கடுகு உளுத்தம் பருப்பு புளி மிளகாய் பொடி மிளகு என்று எல்லா மளிகை பொருட்களும் 10 கிலோ 20 கிலோ டப்பாக்களில் முழுமையாக இருந்தது. திட்டமிட்ட குடும்பம், எதற்கு இவ்வளவு வாங்கிக் குவித்திருக்கிறது என்ற சந்தேகம் வந்தது. இதுபற்றிக் கேட்டபோது, ஜிஎஸ்டி வருவதற்கு முன் மலிவாய் வாங்கியது என்றார் அந்த அதிகாரி. அங்குதான் அவர் நாக்கில் சனி பகவான் சஞ்சாரம் ஆகி இருப்பது தெரிந்தது. ஜிஎஸ்டி வந்து இரண்டு 3ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், எல்லா டப்பாக்களும் முழு கொள்ளளவுடன் இருந்தது. கடுகு டப்பாவை கீழே கவிழ்த்தபோது, சிறிய சிறிய டப்பாக்கள் கூடவே விழுந்தது. திறந்து பார்த்தால்... எல்லாம் வைரம். லஞ்சப் பணத்தில் வைரமாக வாங்கி வைத்திருந்தார். வைரம் மட்டும் தான் விலை ஏறும்.. இறங்காது என்று நிபுணத்தனமாக வேறு பேசினார்” என்று அந்தப் பெண் அதிகாரி சொன்னதும்...”
“சரி... இந்த மாதிரி ரெய்டு எல்லாம் ஒரு நாள், இரு நாள் தலைப்புச் செய்தியா மட்டுமே இருக்கு... அப்புறம் என்னன்னு தெரியலையே” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு அந்தப் பெண் அதிகாரி... “அந்த வைர அதிகாரி எங்க மேலதிகாரியின் திருமதியை பார்த்து, வைர கதையை சொல்ல... திருமதி வைர அட்டிகை, வைரக் கம்மல், வைர நெக்லஸ், வைர மூக்குத்தி என்று பட்டியல் போட...எல்லா மளிகை டப்பாகளும் அவருக்கே திருமபப் போய்விட்டது. அந்த திருமதி இப்போது வைரமாக ஜொலிக்கிறார்” என்று சொல்ல... ‘வருமான வரித்துறை பெயர் அந்த இலாகாவிற்கு காரணப்பெயர் தானோ என்னவோ?!’ என அலுத்தபடியே எழுந்தார் மிஸ்டர் ரீல்.
Leave a comment
Upload