தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 23 - மதன்

மீண்டும் அரியணை!

20210022214327778.jpeg

வெற்றிக்கொடி நாட்டிய ஷெர்ஷா, ‘காபூலிலிருந்து வந்த நீங்கள் அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டும்!’ என்று ஹுமாயூனுக்கு திட்டவட்டமாகக் கட்டளை பிறப்பித்துவிட்டாரே தவிர, துரதிர்ஷ்ட ஹுமாயூனுக்கு அதுவும் கைகூடி வரவில்லை! சகோதரர்கள் ரூபத்தில் சோதனைகள் மேலும் அவரைத் தொடர்ந்தன.

‘இந்தியா கைநழுவிப் போன பிறகாவது சகோதரர்களின் பகை விலகும்’ என்று எதிர்பார்த்த ஹுமாயூன், நம்பிக்கையுடன் சிந்து நதியைக் கடந்து, காண்டஹார் நகரம் நோக்கி முன்னேறினார். பிறகு சொந்த மண்ணான, தந்தை பாபர் முன்பு கோலோச்சிய காபூலுக்குச் செல்லலாம் என்பது திட்டம்! ஆனால்… வந்த செய்தி, அவர் ஆர்வத்தையெல்லாம் குலைத்தது. ‘காபூலை நிர்வகித்து வந்த காம்ரான், ஹுமாயூனைச் சிறைப்பிடிக்க அஸ்காரி தலைமையில் ஒரு படையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்’ என்பதுதான் அந்தச் செய்தி!

சகோதரர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகூட நடத்த முடியாத ஹுமாயூன் வேறு வழியில்லாமல், மனைவி ஹமீதாவையும் மிகவும் விசுவாசமான நாற்பது வீரர்களையும் மட்டும் அழைத்துக்கொண்டு, பாரசீகம் நோக்கிக் கிளம்பினார். அக்பர் பிறந்து பதினாறு மாதங்கள் ஆன சமயம் அது. ‘விறைக்கும் டிசம்பர் மாதக் குளிரில், பனிமலைகளைக் குழந்தையால் கடக்க முடியாது’ என்று முடிவு கட்டிய ஹுமாயூன், பாரசீகம் கிளம்புவதற்கு முன் அக்பரை செவிலித் தாயார்களிடம் ஒப்படைத்தார்.

ஹுமாயூன் தப்பிச் சென்ற சில மணி நேரத்தில் அஸ்காரியின் படை, அவர் தங்கியிருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது. உள்ளே நுழைந்த அஸ்காரி, அக்பரைக் கொல்லாமல் விட்டதோடு, குழந்தையை எடுத்து கொஞ்சிவிட்டு, தன் மனைவியிடம் ஒப்படைத்து பத்திமாகப் பார்த்துக் கொள்ள சொன்னது, சற்று வியப்பைத் தரும் விஷயம்தான்! இதைத் தொடர்ந்து கரடுமுரடான பனிமலைகளின் ஊடே நிகழ்ந்த ஹுமாயூனின் பாரசீகப் பயணம் பரிதாபமானது. உணவுக்காக சில குதிரைகளை கொன்று, சமையல் பாத்திரம்கூட இல்லாத நிலையில், இறைச்சியை சமைக்க ஹெல்மெட்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளலாம்!

ஜனவரி 1544-ல் பாரசீக எல்லைக்குள் நுழைந்த ஹுமாயூன் கண்முன் விரிந்த காட்சி, அவருக்கு உற்சாகத்தையும் நிம்மதிப் பெருமூச்சையும் ஏற்படுத்தியது. ஹுமாயூனை வரவேற்க பாரசீக மன்னர் ஷா தாமஸ்ப் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்திருந்தார். உள்ளூர் கவர்னர் ஒரு பரிவாரத்துடன் குளிர்பானங்கள், பழங்கள், உணவு வகைகளுடன் ஹுமாயூனை அன்புடன் வரவேற்றார். பதவியிழந்த டெல்லி பாதுஷா தங்கி ஓய்வெடுக்க, ஒரு மாளிகை தயாராக இருந்தது. போகும் வழியில் தெருக்கள்கூட சுத்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. பாரசீகத்தில் தங்கியிருந்தபோதுதான், அங்கே பெரிதும் மதிக்கப்பட்ட முதிய ஓவியர் பிஹாத் என்பவரின் பிரதான சீடர்களான அப்துஸ் சமாத், மிர் சாயிது அலி என்ற இளம் ஓவியர்களை சந்தித்தார் ஹுமாயூன். பிற்பாடு மன்னரின் அழைப்பை ஏற்று டெல்லி சென்று தங்கிய இந்த ஓவியர்கள்தான், ஒரு புதிய ஓவியக்கலையை இந்தியாவுக்கு அறிமுகம் செய்வித்தார்கள். இளவரசர் அக்பரும் இவர்களிடம் ஓவியம் கற்றுக்கொண்டது வேறு வகை!

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, நிம்மதியாக ஓய்வெடுத்து கொண்டு ஐந்தாறு மாதங்கள் கழித்து, பாரசீக மன்னர் ஷாவை சந்தித்தார் ஹுமாயூன். பிரமாதமான விருந்தும் அதைத் தொடர்ந்து பல பரிசுகளும் தந்து, ஹுமாயூனை கௌரவமாக நடத்தினார் ஷா. டெல்லி அரியணையில் அமர்ந்து கோலாகலமாக ஆட்சிபுரிந்த ஹுமாயூனுக்கு, தன்னால் இந்த அளவுக்குப் பதில் மரியாதை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எழ, உடனே கையோடு சுருக்குப்பையில் கொண்டு வந்திருந்த கோஹினூர் வைரத்தை எடுத்து, பாரசீக மன்னருக்கு பரிசாக அளித்து, தன் ராஜவம்சத்தின் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆனால், கோஹினூரையும் மீறிக் கிளம்பி நின்றது ஒரு பெரும் பிரச்னை! ஷையா பிரிவை சேர்ந்த பாரசீக மன்னர், பிரதியுபகாரமாக ஹுமாயூனிடம் எதிர்பார்த்தது வேறு! சன்னி பிரிவை சேர்ந்த ஹுமாயூன் ஷையா பிரிவுக்கு மாறவேண்டும் என்பதுதான் அவர் வேண்டுகோள். முன்பு பாரசீகத்தில் பாபருக்கு ஏற்பட்ட அதே பிரச்னை, இப்போது மகன் முன்பு! முதுகுப்புறம் சோதனைகள் சூழ, இக்கட்டான நிலைமையில் இருந்த ஹுமாயூன், மிகுந்த தர்மசங்கடத்துடன் ஷாவின் (மிரட்டல் கலந்த) வேண்டுகோளுக்கு இணங்க வேண்டியதாயிற்று!
ஷாவும் ஹுமாயூனும் கைகோர்த்துக் கொண்ட செய்தி கேட்டு திகைத்துப்போன காம்ரான், ‘ஹுமாயூனை ஒப்படைத்தால் காண்டஹார் நகரம் உங்களுக்கு’ என்று பாரசீக மன்னருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். கொஞ்ச காலமாகவே காண்டஹாரைப் பாரசீகத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்த ஷா மனதில் சற்று சலனம் ஏற்பட்டாலும், ஹுமாயூனின் மென்மையான குணத்தால் கவரப்பட்ட ஷாவின் தங்கை, காம்ரான் வலையில் அண்ணன் விழாமல் தடுத்தார் என்று தகவல்!

‘‘தேர்ந்த பன்னிரண்டாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட பெரும் படையைத் தங்களுடன் அனுப்புகிறேன். பதிலுக்கு, காண்டஹாரைக் கைப்பற்றி என்னிடம் தரவேண்டும்!’’ - இது ஷாவின் வேண்டுகோள். காண்டஹாரை ஹுமாயூன் வெற்றி கொண்டவுடன், அங்கே அரியணையில் பாரசீக மன்னரின் பிரதிநிதியாக அமர, தன் குழந்தையையும் (பெயர் - முராத்) அனுப்பி வைத்தார் ஷா!
பாரசீகப் படையுடன் ஹுமாயூன் வருவதைக் கேள்விப்பட்ட அஸ்காரி தப்பி (செப்டம்பர் 3, கி.பி.1545-ல்) ஓட்டமெடுத்தார். அவருடைய படை ஹுமாயூன் பக்கம் சேர்ந்துகொள்ள… காண்டஹார் சுலபமாகவே வீழ்ந்தது. தான் வாக்களித்தபடி, ஷாவின் குழந்தையை அரியணையில் அமர்த்தி முடிசூட்டினார் ஹுமாயூன்.

திடீரென்று ஒரு திருப்பம் நிகழ்ந்தது..! சிம்மாசனத்தில் அமர்ந்த சில நாட்களில் குழந்தை முராத் கடுமையான காய்ச்சலில் வீழ்ந்து இறக்க, கணநேரம் திகைத்தாலும் சுதாரித்துக் கொண்ட ஹுமாயூன், வியப்பேற்படுத்தும் வகையில் வேகமாகச் சிந்தித்தார். ஷையா உடைகளைக் களைந்து, பழைய உடைகளை அணிந்துகொண்டு, மொகலாய வீரர்களின் உதவியுடன், காண்டஹார் நகரில் சுதந்திர மன்னராக அமர்ந்தார். ஷாவின் விசுவாசமான தளபதிகள் கொல்லப்பட்டனர்.

‘இது ஷாவுக்கு, ஹுமாயூன் இழைத்த துரோகம்தான்’ என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் சிலர். ஆனால், ‘இளவரசர் முராத் இறந்த பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தைத்தான் ஹுமாயூன் நிரப்பினார். எந்த மன்னரும் செய்யக்கூடியதுதான் இது. தவிர, ஷையா பிரிவுக்கு மாறச் சொல்லி ஹுமாயூனை பாரசீக மன்னர் கட்டாயப்படுத்தியதும் தவறல்லவா!’ என்கின்றனர் சிலர்.

நல்ல காலமாக ஓபியம், அது இது என்று உல்லாசத்தில் இறங்காமல், உடனே அங்கிருந்து பெரும் படையுடன் காபூலுக்குக் கிளம்பினார் ஹுமாயூன். அங்கே காம்ரானின் எதேச்சதிகாரத்தில் வெறுப்புற்றிருந்த படைவீரர்கள் ஆயிரக்கணக்கில் கட்சி மாறி, இந்த பக்கம் வர… ஹுமாயூனுக்கு யுத்தம் நிகழ்த்தவேண்டிய அவசியமே ஏற்படாமல் போனது. சில வீரர்களுடன் ஊரைவிட்டு தப்பியோடினார் காம்ரான்.
நவம்பர் 1545-ல் குழந்தை அக்பருடன் பெற்றோர் இணைந்ததைக் கூடியிருந்தோர் ஒரு விழாவாகவே கொண்டாடினார்கள். இதற்குப் பிறகும் விடாமல் காம்ரான், காபூல்மீது இருமுறை கொரில்லா தாக்குதல் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது! காபூல் சிறையிலிருந்து விடுதலையான ஹிண்டால், ஹுமாயூன் சார்பில் ஒரு படையுடன் காம்ரானோடு மோத, நடந்த யுத்தத்தில் ஹிண்டால் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்தது.
அண்ணனை ஒழித்துக் கட்ட முடியாமல் வெறுப்பிலும் விரக்தியிலும் ஆழ்ந்த காம்ரான் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் ஷெர்ஷாவின் மகன் இஸ்லாம் ஷா ஆண்ட சமயம் அது (ஷெர்ஷா மரணம் பற்றி பிற்பாடு!).
தன்னிடம் உதவி கேட்ட காம்ரானிடம் பிடிகொடுக்காமல் கவிதைகள் பற்றியே பொதுவாகப் பேசிக்கொண்டிருந்த டெல்லி மன்னர் இஸ்லாம் ஷா, காம்ரான் பாடிக் காட்டிய ஒரு கவிதைக்கு பரிசாக, மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்களைத் தந்தார். இப்படித் தன்னை ஏதோ ஒரு சாமானியக் கவிஞரைப் போல டெல்லி மன்னர் நடத்தியது கண்டு எரிச்சலடைந்த காம்ரான், பெண் வேடம் பூண்டு பஞ்சாப் பிரதேசத்துக்குத் தப்பிக்க, பஞ்சாப் குறுநில மன்னர் அதாம் காக்கார் என்பவர், அவரை வளைத்துப் பிடித்து ஹுமாயூனிடம் கைதியாகத் திருப்பியனுப்பினார்.

தன் முன்னால் விலங்குகளால் பிணைக்கப்பட்டு வந்து நின்ற காம்ரானை ஒன்றும் பேசாமல், ஹுமாயூன் ஏறிட்டுப் பார்த்தார். தம்பியிடமிருந்து பெரியதொரு விம்மல் வெளிப்பட்டது. ஓடிவந்து அண்ணன் காலடியில் விழுந்த காம்ரான், தன்னை மன்னிக்கச் சொல்லி வெளிப்படையாகவே அழ ஆரம்பிக்க… கையமர்த்திய ஹுமாயூன், தம்பியை விலங்குகளிலிருந்து விடுவித்து, தன்னுடன் அமர்த்திக் கொண்டார். அன்றிரவு இருவரும் ஒன்றாக அமர்ந்து, விருந்து உண்டனர். என்றாலும், ஹுமாயூன் வெகுவாக உரையாடாததால், காம்ரான் முகத்தில் பயரேகைகள் அவ்வப்போது தலைதூக்கின. ஹுமாயூனின் அமைச்சர்களுக்கோ வேறு பயம்! இரக்கம் காட்டுவதில் ஒரு உலக சாதனையே (அப்போது கின்னஸ் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!) படைத்துக் கொண்டிருந்த ஹுமாயூன், இம்முறையும் உணர்ச்சிவசப்பட்டு இளகிவிடுவாரோ என்று அவர்கள் அச்சம் கொண்டனர்.

இரவில் ஹுமாயூனிடம் வந்த சில விசுவாசிகள், ‘‘தங்கள் தம்பியிடம் பாதுஷா இன்னமும் கருணை காட்டிக்கொண்டு இருப்பது நியாயமா? போதும், அவரால் நமக்கு ஏற்பட்ட சோதனைகள். தங்கள் வாழ்க்கையில் விஷ முள்ளாக வந்து வாய்த்த அந்தத் துரோகியைத் தீர்த்துக் கட்ட ஆணையிடுங்கள் அரசே! இவரால் ஏற்பட்ட பிரச்னைகளக் தங்களை மட்டுமா பாதித்தது? எங்கள் எல்லோருக்குமே அல்லவா பெரும் தலைவலியாகப் போய்விட்டது! தங்கள் தனிப்பட்ட பாசம், இரக்கம் எல்லாம் ஒரு நாட்டையே எத்தனை காலம் இப்படிப் பாதித்துக் கொண்டிருப்பது?’’ என்று துணிச்சலோடு எடுத்துச் சொல்ல, ஹுமாயூனின் புருவங்கள் கோபத்தால் சற்று உயர்ந்தாலும் சிந்தனைவயப்பட்டார் மன்னர்.

பிறகு ஒரு பெருமூச்சுடன், ‘‘சரி… ஆனால், காம்ரானைக் கொல்ல வேண்டாம். என் தந்தைக்கு வாக்குறுதி தந்துவிட்டேன் நான். மாறாக, அவன் பார்வையைக் கூடியமட்டும் அவனைத் துன்புறுத்தாமல் பறித்துவிடுங்கள்!’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிய ஹுமாயூனின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

ஆகஸ்ட் 17, 1553 - விடியற்காலை ஹுமாயூனுக்கு விசுவாசமான சில படைத் தளபதிகள் கிளம்பி சென்று, உறங்கிக் கொண்டிருந்த காம்ரானை எழுப்பினர். திமிறிய காம்ரான், விலங்குகளால் பிணைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். அலறல் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக, சிறைச்சாலையின் உட்பகுதியில் ஒரு அறைக்கு அவரை வீரர்கள் கொண்டு சென்றனர். அங்கு காம்ரானை படுக்கவைத்து வீரர்கள் அழுத்திப் பிடித்துக்கொள்ள, பழுக்க காய்ச்சிய கூர்வாளுடன் அவரை நெருங்கினார் ஒரு தளபதி. பலமுறை இரு கண்களிலும் கத்தி பாய, அலறிக் கொண்டிருந்த காம்ரானின் விழிகள் வெளியே வந்துவிட்டன. மயங்கி விழுந்த அவர் கண்களில் ஒரு பிடி உப்பைக் கொட்டி, அதன்மீது எலுமிச்சை சாறு ஊற்றப்பட்டது.
மறுநாள் தர்பார் கூடியதும் முதல் வேலையாக, காம்ரான் பற்றி ஹுமாயூன் விசாரிக்க… ‘‘ரொம்ப வலியில்லாமல் கச்சிதமாக கைதியின் பார்வையைப் பறித்தாகிவிட்டது மன்னா!’’ என்று தளபதிகள் சொல்ல, ‘‘அப்படியா?’’ என்று ஹுமாயூன் லேசான சந்தேகத்துடன் கேட்க… காரியத்தை முடித்தவர்கள், தங்கள் முகங்களைச் சலனமில்லாமல் வைத்துக் கொண்டார்கள்.

(ஓராண்டு கழித்து பார்வையிழந்த தன் தம்பிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து தந்து, அவரை ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வைத்தார் மன்னர். நான்கு முறை மெக்கா பயணித்த காம்ரான் - அக்டோபர் 5, 1557-ல் அரேபியாவில் மரணமடைந்தார் (அதற்கு முன்பே ஹுமாயூன் இறந்தது இன்னொரு பாராவில்!). சிறைப்படுத்தப்பட்டிருந்த அஸ்காரியையும் மெக்காவுக்கு புனித யாத்திரை அனுப்பினார் ஹுமாயூன். காம்ரான் இறந்த அடுத்த ஆண்டு அஸ்காரி, டமாஸ்கஸ் நகரம் அருகே நோய்வாய்ப்பட்டு இறந்தார்.)

‘பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள், ஹுமாயூன் கோணத்திலேயே காம்ரானைப் பார்த்து, அவரை ஒரு பெரும் வில்லனாகச் சித்தரித்துவிட்டார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். ‘காம்ரான் பக்கம்’ என்றும் ஒன்று உண்டு என்பது பற்றி யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை! பாபரைப் போல் காம்ரானும் சுயசரிதை எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தால், அவரது மன ஓட்டங்கள் பற்றி நாம் சற்றேனும் புரிந்து கொண்டிருக்க முடியும். அவர் தன்னைப் பற்றி எந்த குறிப்பையும் எழுதி வைக்காமல் போனது, சரித்திர ரீதியில் துரதிர்ஷ்டவசமானதே. ஆனால், ஒன்று! ஹுமாயூன் திறமையைப் பற்றி காம்ரானுக்கு நல்ல மதிப்பீடு இருந்ததில்லை என்பது தெளிவு. தானே இந்தியாவை ஆளத் தகுதியானவர் என்று அவர் மனதார நினைத்திருக்கக்கூடும். அதில் என்ன தவறு நாம் காணமுடியும்?
காம்ரான் விரும்பியிருந்தால், குழந்தை அக்பரைக் கொன்றிருக்கலாம்! ஆனால், அப்படி அவர் செய்யாதது குறிப்பிடத்தக்கது! தவிர, அவர் எடை போட்டதற்கு ஏற்ப, ஹுமாயூனும் தன் வாழ்க்கை பூராவும் இடம் மாறிப் பின்வாங்கித் தட்டுத்தடுமாறித் தவித்தார் என்பதை மறுக்க முடியுமா?’ என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர், காம்ரான் சார்பாக வாதாடுகிறார்கள்!

கி.பி.1554-ல் டெல்லியில் இஸ்லாம் ஷா இறக்க, மூன்று பேர் ‘‘நான்தான் வாரிசு!’’ என்று மோதலில் இறங்க, ஹுமாயூன் பக்கம் திரும்பிக் காலம் புன்னகைத்தது!

பைராம்கான் என்ற திறமைவாய்ந்த பிரதம தளபதியின் (பிற்பாடு அக்பரின் கார்டியனாக இருந்தவர்!) தலைமையில் இந்தியா நோக்கிப் புறப்பட்ட ஹுமாயூன் படை, பஞ்சாப் பிரதேசத்தைக் கடந்து, ஜீலம் நதிக்கரையில் ரோடாஸ் என்ற இடத்தில் ஷெர்ஷா கட்டியிருந்த கோட்டையை முற்றுகையிட்டது. இஸ்லாம் ஷாவின் வாரிசு என்று பிரகடனப்படுத்திக் கொண்டு இருந்தவர்களில் ஒருவரான சிக்கந்தர் ஷா, மொகலாயப் படையுடன் மோதித் தோற்றார். தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், வெற்றிக்கொடியுடன் பயணித்த ஹுமாயூன் படை மீண்டும் டெல்லி அடைந்தது.

வீதிகளிலெல்லாம் விளக்குகள் ஏற்றிவைத்து, வாணவேடிக்கைகளுடன் டெல்லி மக்கள் ஹுமாயூனுக்குப் பெரும் வரவேற்பு அளிக்க, ஜூலை 23, 1555-ல் ஒருவழியாக டெல்லி அரியணையில் ஏறி அமர்ந்தார் ஹுமாயூன்!
சுமார் ஆறு மாதங்கள் மட்டுமே ஹுமாயூனின் ஆட்சி நீடித்தது…
டெல்லியில் ஹுமாயூன் முன்பு அரைகுறையாகக் கட்டியிருந்த ‘புரானா கிலா’ கோட்டைக்குள் ‘ஷெர் மண்டல்’ என்ற வசந்த மண்டபம் ஒன்றைக் கட்டியிருந்தார் ஷெர்ஷா. அதை ஒரு வாசகசாலையாக மாற்றியிருந்த ஹுமாயூன், தினமும் அங்கே உச்சி மண்டபத்தில் அமர்ந்து, நெருங்கிய நண்பர்களோடு உரையாடுவதுண்டு.

ஜோதிடத்திலும் வானியலிலும் ஈடுபாடு இருந்ததால், அங்கிருந்து வானத்து நட்சத்திரங்களைக் கவனித்துக் குறிப்புகள் எழுதுவதிலும் மன்னருக்கு வழக்கமாக இருந்தது.

ஜனவரி 24, 1556 - வெள்ளிக்கிழமை.

மெக்காவிலிருந்து திரும்பிய முதிய அமைச்சர் ஒருவரிடம், அங்கு சென்றிருந்த தன் தம்பிகள் பற்றி விசாரித்த பாதுஷா, எழுந்து படிகளில் இறங்க அடியெடுத்து வைக்க… திடீரென்று, பக்கத்திலிருந்த மசூதியிலிருந்து தொழுகைக்கான அழைப்பு அவர் காதில் விழுந்தது. உடனே திரும்பி உப்பரிகைக்கு ஏறி மண்டியிட முயன்ற ஹுமாயூனின் கால் தடுக்க… நேர்குத்தாக கீழிறங்கிய படிகளில் தலைகீழாக விழுந்த மன்னரின் நெற்றிப்பொட்டு, கருங்கல் சுவரின் முனையில் மோதியது. பிறகு திருப்பத்துச் சுவரில் அவருடைய பின்தலைப் பகுதியும் மோத… கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கொடுமையான விபத்து நிகழ்ந்து, கூடியிருந்தோரைக் கதிகலங்க அடித்தது..!

மூன்று நாட்கள் கழித்து, கோமாவில் இருந்த டெல்லி சக்ரவர்த்தி ஹுமாயூனின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது…

வாழ்க்கையில் தொடர்ந்து பலமுறை தடுக்கி விழுந்து கொண்டிருந்த ஹுமாயூன், கடைசியிலும் அதே ரீதியில் தன் வாழ்வை முடித்துக் கொண்டது ஒரு விசித்திரமான, பரிதாபமான முற்றுப்புள்ளிதான்.