தொடர்கள்
தொடர்கள்
கேரக்டர் - அறியப்படாத மனிதர்கள்.. - 4 - வேங்கடகிருஷ்ணன்

20210022222020277.jpg
நம் மனதில் நாற்காலி போட்டு உட்காரும் வித்தியாசமான மனிதர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள...

ஆண்டாள் டீச்சர்..

நான் 1-வது முதல் ஐந்தாவது வரை படித்த ஊர் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள செங்கம். அது சிறிய கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடம்.

அந்த ஊரின் மையப் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்திருந்தது. ஒரு பக்கத்தில் பெருமாள் கோயிலும், மற்றொரு பக்கத்தில் சிவன் கோயிலும், சிறிது தூரம் நடந்து சென்றால் செய்யாறு ஓடும் அருமையான இடம் அது. நான் நிறைய விஷயங்களை, உலக அனுபவங்களை பெற்ற இடமும் அதுவே. இந்த ஊர் எனக்கு புதிது... முதல் நாள் என்னை வகுப்பில் கொண்டுபோய் என் அப்பாதான் சேர்த்துவிட்டார். அது இரண்டாவது வகுப்பு. நான் ஏற்கனவே ஒன்றாவது வகுப்பை திருவண்ணாமலையில் முடித்திருந்தேன். இரண்டாம் வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் அன்றைய வழக்கப்படி தலைமையாசிரியர், என் அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதை நிமித்தமாய் என்னைக் கொண்டுபோய் அந்த வகுப்பில் நிறுத்தி “டீச்சர் புது ஸ்டூடன்ட், இவனை சேர்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். என் அப்பா தபால் துறையில் உயர் அதிகாரியாக அந்த ஊருக்கு மாற்றலாகி வந்ததால், மத்திய அரசு உத்தியோகஸ்தர் என்பதால் அப்போதிருந்த நிலவரப்படி அது மிகுந்த மதிப்பான ஒரு பதவியாய் இருந்தது. அவர் என் வகுப்பு வரை வந்து டீச்சரிடம் என்னை ஒரு பெண்ணை ஒப்படைக்கும் தந்தையாய் ஒப்படைத்து விட்டுச் சென்றார். “இவனை பாத்துக்கங்க.. இனிமே உங்க பொறுப்பு” என்பதுதான் அவரின் வார்த்தையாய் இருந்தது.

நிமிர்ந்து பார்த்தேன், ஆண்டாள் டீச்சர் அவ்வளவு அழகு, அழகாக கட்டிய காட்டன் புடவை, நெற்றியில் குங்குமப் பொட்டும் அதன் மேல் சிறிது விபூதி தீற்றலுமாக எல்லா குழந்தைகளுக்கும் தேவதை ஆக தோன்றும், அவரவருடைய டீச்சரைப் போலத்தான் எனக்கும். என்னுடைய சுறுசுறுப்பும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமும் டீச்சருக்கு மிகவும் பிடித்து இருக்க வேண்டும், போதாததற்கு நான் டீச்சர் இருக்கும் தெருவிலேயே நான்கு வீடு தள்ளி குடி வந்துவிட்டேன். அது தெரிந்து கொண்ட அப்பா, மாலை வேளையை உபயோகமாக கழிப்பதற்காக, ஆண்டாள் டீச்சரிடமே டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார். டீச்சருக்கு இரண்டு மகள்கள், பெரியவர் பெயர் என்னவென்று தெரியாது. ஆனால் எல்லோரும் அழைப்பது பட்டு. சின்னவள் பொம்மி அற்புதமாய் பாடுவாள். அழகாக படம் வரைவாள், கிருஷ்ணன் மீது மிக அபரிமிதமான பக்தி கொண்டவள். அதனால்தானோ என்னமோ என் பெயர் விசேஷமாய், என்னை மிகவும் பிடித்து விட்டது அவர்களுக்கு. என் பெயரை முதலும் கடைசியுமாய் இன்றுவரை சரியாக உச்சரித்த ஒரே நபர் உண்மையில் அக்கா மட்டும்தான். அவர்கள் வீட்டு வாசலில் நின்று சத்தமாக என் பெயரை உச்சரித்து கூப்பிடும்போது எதிரொலிக்கும்.

இன்றுபோல் அன்று தெருக்களில் எந்த ஒரு போக்குவரத்தும் கிடையாது. கிராமமானதால் மக்கள் நடமாட்டமும் குறைவு. அவரவர்கள் வீட்டுக்குள்ளேயே தான் அதிகமாக அடங்கி இருப்பார்கள். அந்தக் குரல் நன்றாக கேட்கும், அதற்கு உடனே நான் பதிலளிப்பேன். வர்றேன்க்கா என்று சொன்னால் போதும் எனக்கு ஏதாவது சிறு வேலையோ அல்லது நாளை எழுதவேண்டிய பாடத்தின் ஒரு பகுதியை எடுத்து வைத்திருப்பார்கள். அதை தவிர, அவர்கள் வீட்டில் செய்யப்படும் எந்த ஒரு இனிப்போ அல்லது விசேஷமான சமையல் உணவு என்றால் என்னை உடனே கூப்பிட்டு கொடுத்துவிடுவார்கள்.

ஒருமுறை என்னை ஏன் நீங்கள் ஸ்பெஷலாக கவனிக்கிறீர்கள் என்று நான் கேட்டபோது... ‘என் கிருஷ்ணனே நீதான்’ என்று சொன்னார்கள். அதன் அர்த்தம் எனக்கு அன்று புரியவில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்னால் நான் விசாரித்த போது... அவர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்ந்து, தற்போது கொல்கத்தாவில் வசிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். கிருஷ்ணபக்தி அந்த அளவுக்கு அவர்களை கொண்டு சென்றுவிட்டது. ஆண்டாள் டீச்சர் அழகு என்று சொன்னேன் அல்லவா... அந்த அழகு ஒரு பெரிய சோகத்தை மறைத்துக் கொண்டிருந்தது, எனக்கு அப்போது தெரியாது. சில நாட்களில் நான் டியூஷனுக்கு செல்லும்போது, டீச்சர் வீட்டின் உள்ளே பேச்சுக் குரல் கேட்கும். அது ஆணின் குரலாய் இருப்பதால் எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கும். யாரிது டீச்சர் வீட்டில்... ஏனெனில் இந்த மூன்று பெண்களைத் தவிர வேறு யாரையும் அதுவரை நான் பார்த்ததில்லை. சில நேரங்களில் அந்த குரல் சத்தமாக ஒலிக்கும். சில நேரங்களில், டீச்சருக்கும் அந்த குரலுக்கும் கடும் வாக்குவாதம் நடப்பதுண்டு. ஆனால் கடைசி வரையில் அந்த குரலுக்கு உரிய முகத்தை நான் பார்த்ததே இல்லை. பின்னர் ஒரு முறை பொம்மி அக்கா அழுது கொண்டிருக்கும் போது, என்ன காரணம் என்று நான் அவர்களை கேட்டேன். சிறிது சமாதானமான அவர், அதுதான் எங்க அப்பா என்று சொன்னார். மேலும் எங்க அம்மா அவருக்கு இரண்டாவது மனைவி என்று சொன்னது, என் மனதில் ஆழப் பதிந்தது. ஆனால் அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை. அதை சொல்லும்போது அக்கா அழுததால் என் மனதில் அவர்களுடைய அந்த முகமும், அந்த வார்த்தையும் ஆழப் பதிந்துவிட்டது. அதன் பின்னர் என் டியூஷன் வகுப்பில் நிறைய பேர் சேர்ந்தார்கள். அவர்களுடன் எல்லாம் நன்றாக பழகி இருப்பேன். ஆனால் தனி கவனிப்பு பொம்மி அக்காவிடம் எனக்கு மட்டும்தான். சிறிது நாள் போன பிறகு, நான் அடுத்த வகுப்புக்கு மாற... டியூஷன் வேறு இடத்திற்கு மாறியது. ஆனால் நான் பொம்மி அக்காவிடம் தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆண்டாள் டீச்சர் அவ்வப்போது அழுவது மட்டும் மாறவில்லை. சில வருடங்கள் கழித்து, நான் ஐந்தாவது படிக்கும் போது திடீரென ஒரு வாரத்திற்கு மேல் டீச்சர் வீடு பூட்டியே இருந்தது. அதன் பிறகு ஊரிலிருந்து டீச்சர் வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு அக்காவையும் டீச்சரையும் பார்க்க நான் அங்கு போனேன். அது பழைய ஆண்டாள் டீச்சர் இல்லை. எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் முக்கியமாக நெற்றியில் பொட்டு கூட இல்லாமல் அமர்ந்திருந்தார். என்னை பார்த்தவுடன் அக்கா என்னை வாரி அணைத்துக் கொண்டார். “எங்கடா போயிருந்த?” என்று கேட்டார்... நான் சொன்ன பதில் இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது. “நான் போல நீங்கதான் போயிட்டு வந்திங்க”. “ஆமாண்டா... எங்க அப்பா எங்களை விட்டு போயிட்டாரு”ன்னு சொன்னாங்க. அந்த வயதில் எனக்கு அது பெரிய புரிதலை ஏற்படுத்தாததால், எந்த பாதிப்பும் என்னிடம் இல்லை. ஆனால், டீச்சரை அந்தக் கோலத்தில் பார்த்தது மட்டும் என் கண்ணில் அப்படியே நின்றுவிட்டது. பின்னர் நான் மேலே அடுத்த வகுப்புகளுக்குப் போகும் போது தான், டீச்சருடைய கணவர் இறந்து விட்டார் என்று புரிந்து கொண்டேன். இங்கே ஆண்டாள் டீச்சரை நினைவு கூறுவதற்கு காரணமே... அவர் கணவர் இறந்த பிறகு, அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொண்ட விதம் தான். இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்வதற்காக வேலைக்கு செல்ல முடிவெடுத்து வேலைக்குச் சென்றார்கள். அந்தக் கிராமத்திலேயே இன்னொரு பள்ளியில் உதவி ஆசிரியர் வேலையை மூத்த பெண்ணுக்கும், அங்கே இருந்த அரசாங்க கைத்தறி ஆடையகத்தில் ஆடை வடிவமைப்பாளராக பொம்மி அக்காவையும் மிகவும் சிரமப்பட்டு வேலையில் அமர்த்தி விட்டார். பள்ளியில் இருந்து அந்த சமயத்தில் அவர் ரிட்டையர்டும் ஆகிவிட்டார். ஆனால் நிறைய மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார். இதில் முக்கியமான விஷயம்... அதில் பாதி பேருக்கு மேல் அவர் இலவசமாக டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் டியூஷன் வகுப்புக்கு தர பணம் இல்லாதவர்கள் என்பதை பின்னர் நான் தெரிந்து கொண்டேன். தன்னுடைய பென்சனில் இரண்டு பெண்களை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள். எங்கள் பள்ளிக்கு அருகிலிருந்த இரண்டு கோவில்களிலும் மாலையில் சுலோக வகுப்புகள் எடுப்பார். மார்கழி மாதம் காலை முதல் நாள் துவங்கி முப்பது நாட்களுக்கும் திருப்பாவையும், திருவெம்பாவையும் சொல்லித் தருவார். தன் வீட்டில் இருந்தே தினமும் பொங்கல் செய்து எடுத்து வருவார். நாங்கள் திருப்பாவை படிக்கச் சென்றோமோ.. இல்லையோ ஆண்டாள் டீச்சரின் கைப்பக்குவத்தில் அந்த குளிர் காலத்தில் காலையில் கையில் விழும் சூடான பொங்கலுக்கும் தான்.

பின்னர் நான் பத்தாவது படித்த பிறகு, வெளியூருக்குச் சென்று விட்டதால் ஆண்டாள் டீச்சரைப் பற்றி தொடர்பில் இல்லாமல் இருந்தேன். பின் இதற்கென ஒரு நாள் நான் கல்லூரியில் படிக்கும்போது செங்கம் சென்றேன். அப்போது டீச்சரைப் பற்றி கேள்விப்பட்டது எல்லாம் மிகப் பெருமையான விஷயங்கள். அதனால்தான் டீச்சரைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. டீச்சர் தான் வளர்த்த 2 அனாதை குழந்தைகளையும் தன் பென்ஷன் பணத்திலேயே திருமணமும் செய்து வைத்திருக்கிறார். தன் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்காத அவர், தன்னுடைய கண்களை தானமாக அரசு மருத்துவமனையில் எழுதிக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய பென்சன் வருமானத்திலேயே கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்யவும், ஈமக்கிரியைகள் செய்து கொள்ளி வைக்கவும் செய்திருக்கிறார். 23 பேருக்கு தன் கையாலேயே அதை செய்திருக்கிறார். செங்கம் நகருக்கு போராடி பல புதிய அரசாங்க திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு பெரிய அளவில் பிரச்சாரம் செய்திருக்கிறார். கணிதத்தில் அவர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றதால், நிறைய பேருக்கு கணிதம் மட்டும் டியூஷன் எடுத்திருக்கிறார். தன் தள்ளாமை காலத்திலும் இலவச டியூஷனை தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.

நான் அங்கு சென்றபோது டீச்சர் உயிரோடு இல்லாத விஷயம் என் மனதுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. பொம்மி அக்கா, சென்னையில் திருமணமாகி, பின்னர் வடநாடு சென்று விட்டதாக ஒருவரும், அவர்கள் ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்ந்து திருமணமே செய்து கொள்ளாமல் கொல்கத்தா சென்றுவிட்டதாக இன்னொருவரும் தெரிவித்தார்கள். இதில் எது உண்மை என்று எனக்கு தெரியவில்லை. மூத்தவளான பட்டு அக்கா திருமணமாகி சென்னை தி.நகரில் இருப்பதாக பக்கத்து வீட்டு தாத்தா சொன்னார். ஆனால் அவருக்கு முகவரி தெரியவில்லை. இப்போது அவர்களுடன் நான் தொடர்பில் இல்லை. சிறுவயதில், டீச்சர் செய்த விஷயங்கள் புரியாமல் இருந்து, இன்று புரிய வரும்போது, ஆண்டாள் டீச்சர்... நிஜமாகவே அந்த ஆண்டாளாகவே என் மனதில் மாறிப்போனார். இதைப் போன்ற நல்ல இதயங்கள் இருப்பதால்தான் ஏதோ ஓரளவு மழையும் பெய்து கொண்டிருக்கிறது என்று நம்பத் தோன்றுகிறது. இதை படிக்கும் பொம்மி அக்கா என்னை தொடர்புகொள்வார்கள் என்று காத்திருக்கிறேன் அவர்களின் (வேங்கட) கிருஷ்ணனாய்.....