மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம், குறவன்குலத்தை சேர்ந்த விஜயன் (24) என்பவர் 8 மாடுகளை அடக்கியுள்ளார். இதற்காக அவருக்கு 4 தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த 17-ம் தேதி, பரிசு பெற்ற தங்கக் காசுகளை கொடுத்துவிட்டு, நகையாக வாங்கிக்கொள்ள நினைத்து ஒரு நகைக் கடைக்கு விஜயன் சென்றார். பரிசு பெற்ற தங்கக் காசுகளை ஆய்வு செய்த கடைக்காரருக்கு பெரும் அதிர்ச்சி. அந்த தங்கக் காசுகள் அனைத்தும் டூப்ளிகேட் என்பதும், அதில் தங்கத்தின் அளவு மிகமிகக் குறைவாகவும், செம்பு மற்றும் இரும்பின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்து, விஜயன் பேரதிர்ச்சியடைந்து கூனிகுறுகி போனார்.
இதுகுறித்து விஜயனின் தந்தை கணேசமூர்த்தி கூறுகையில், ‘‘எனது மகன் காளைகளை அடக்கியதற்காக, ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகளை பரிசாகப் பெற்றார். அந்த தங்கக் காசுகள் நகைக்கடையின் ஆய்வில், 4 தங்கக் காசுகளையும் சேர்த்து மொத்தமாக வெறும் 500 மில்லிகிராம் தங்கம் மட்டுமே இருப்பது தெரியவந்தது. ஒரு கிராம் அளவுக்குக்கூட தங்கம் இல்லை. செம்பு, இரும்பு ஆகியவைதான் அதிகளவில் கலந்திருக்கிறது என நகைக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். முதல்வர் கையால் வழங்கிய தங்கக் காசுகளே இப்படி டூப்ளிகேட்டாக இருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் தங்கக் காசுக்காகவோ, பணத்துக்காகவோ களத்தில் இறங்குவதில்லை. வீரத்தையும் தங்களது பராக்கிரமங்களை நிலைநாட்டவும் தான் உயிரை பணயம் வைத்து ஜ்ல்லிக்கட்டில் களமிறங்குகின்றனர். பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு இதுபோன்ற டூப்ளிகேட் பரிசுப்பொருள் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது…’ அதுவும் முதல்வர் கையால் அளிக்கப்பட்ட பரிசுக்கே இந்த நிலையென்றால்...’ என்று கணேசமூர்த்தி வேதனையை வெளிப்படுத்தினார்.
இதை கேள்விப்பட்டவுடன், பல பரிசுபெற்ற வீரர்களும், தங்களுக்கு வழங்கப்பட்ட தங்கக்காசுகளை பரிசோதித்தனர். இச்சோதனையில், அனைத்து தங்கக் காசுகளும் டூப்ளிகேட் எனத் தெரியவந்ததும் எல்லோரும் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.
இங்கு மட்டும்தான் இப்படியா...? அல்லது...‘அவனியாபுரம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கும் இதே டூப்ளிகேட் தங்கக் காசுகள்தான் வழங்கப்பட்டதா? என்பது பிறகுதான் தெரியும். இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஏனென்றால் இங்கு வீரர்களை மட்டும் போட்டி நடத்தியவர்கள் ஏமாற்றவில்லை... முதல்வரின் பெயருக்கும் சேர்த்தே களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’ என மதுரை மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
Leave a comment
Upload