ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
மிருகங்கள் குறுக்குவாட்டில் வளர்கின்றன. இதனாலேயே “திர்யக்” என்று பெயர். இதற்கு மாறாக மனிதன் மேல் நோக்கி வளர்கின்றான். பிராணிகளை காட்டிலும் மனிதர்கள் மேலான நோக்கத்தையே பெறவேண்டும். இப்படி செய்தால் மனிதர்கள் சகல ஜீவன்களையும் விட அதிக சுகத்தை அனுபவிக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவற்றைவிட அதிகமான துக்கத்தை அனுபவிக்கிறார்கள்.
மிருகங்களுக்கு மனிதர்களைப்போல் காமம், கவலை, துக்கம், அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பாவம் என்பதே இல்லை. மனிதர்கள் தான் பாவங்கள் செய்து துக்கங்களை அனுபவிக்கிறார்கள்.
ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்கு கொடுத்திருக்கும் சவுகரியங்கள், கடவுள் நமக்கு கொடுக்கவில்லை என்று தான் தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஆயுதம் நம்மிடையே இல்லை. ஆனால் மாட்டிற்கு - கொம்பு, புலிக்கு - நகம், யானைக்கு - தந்தம் என்று பல இருக்கின்றன. குளிர்காலத்தில் குளிரை சமாளிப்பதற்கு மிருகங்களுக்கு போர்வை போல் தோல்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் குதிரைக்கு வேகமாக ஓடுவதற்கு சக்தியைக் கொடுத்திருக்கிறார். மனிதர்களை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க அவர்களுக்கு உடம்பில் எந்த ஆயுதமும் இல்லை.
இவைகள் அத்தனை இருந்தாலும் மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக கொடுத்திருக்கிறார். குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மற்ற பிராணிகளின் தோலை பொறுமையாக பயன்படுத்துகிறான் மனிதன். குதிரையை வண்டியில் பூட்டி வேகமாக பயணிக்கிறான். தன் சரீரத்தில், காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதம் எதுவும் இல்லாவிட்டாலும் புதுசு புதுசாக ஆயுதங்களை கண்டுபிடிக்கிறான். மிருகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில் தான் இருக்கும். குளிர் பிரதேசத்தில் வாழும் கரடி நம்மூரில் வாழாது. இங்கு இருக்கும் யானை அங்கு வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். எல்லா இடங்களுக்கும் செல்கிறான். எல்லா சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறான்.
ஆனாலும் இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான், துக்கப் படுகிறான், துன்பப்படுகிறான். மனிதனாக பிறந்ததனால் தான் இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறான். இனி பிறக்காமல் இருக்க வேண்டுமென்றால், நாம் தவறுகள் செய்யாமல் இருக்கவேண்டும். ஏதாவது தவறு செய்தால் அதற்கு பத்து கசையடி தண்டனை என்றால், ஐந்து கசையடியிலேயே அவன் இறந்து விட்டால் மீதமுள்ள ஐந்து கசையடி அடுத்த ஜென்மத்தில் தொடரும். அதாவது நாம் செய்யும் பாவங்கள், ஜென்மம் ஜென்மமாக தொடரும். அதை அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்க வேண்டும். எந்த பாவ காரியமும் செய்யாமல் இருந்தால் நமக்கு ஜனனம் என்பது இருக்காது.
நமக்கு உண்டாகும் கோபத்தினால் தான் நாம் பாவங்களை செய்கிறோம். கோபத்திற்கு காரணம்... ஆசை, காமம் ஆகியவைகளே. இவைகளை ஒழித்தால் நாம் பாவங்கள் செய்யாமல் இருக்க வழி உண்டு. பற்றற்ற நிலையை வளர்த்துக் கொண்டு, எந்த ஒரு காரியமும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஆனால் அது முடியாது.
எந்தவித பொருளிலும், ஜீவனிலும் நமக்கு ஆசை ஏற்படுவதற்கு காரணம் நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் தான். அதனால்தான் ஆசை வருகிறது. உண்மையில் சாந்தமாகி ஒரே சிவமே எல்லாமுமாக இருக்கிறது என்று எண்ணினால் எந்த பிரச்சனைகளும் இல்லை.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னை பார்த்து விட்டு இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து, அதை முட்டப் போகிறது. ஆனால் மனிதன் தான்தான் மற்றொரு பிரதியாக இருக்கிறதாக எண்ணுகிறான். அதற்கு மாறாக அவன் இன்னொரு மனிதன் இருப்பதாக நினைப்பதில்லை. இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரியும் அதனால் சாந்தமாக இருக்கிறான். அது தெரியாமல் மிருகங்கள் கண்ணாடியில் பார்த்து முட்டிக் கொள்கிறது. நான் பார்க்கின்ற அனைத்துமே ஒன்றுதான் என்று எண்ணினால் ஆசை வருவதில்லை. கோபம் வருவதில்லை. காமம் வருவதில்லை. அதனால் பாபங்களும் ஏற்படுவது இல்லை.
இந்த ஞானத்தை நாம் எப்படிப்பெறுவது . நம்மைப் பெற்ற தாய் நம் உடலுக்கு பால் கொடுப்பாள். நம்முடைய அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள் மட்டும்தான். ஞானத்தின் ஸ்வரூபமே அவள்தான். அவளை சரணடைந்தால், அம்பாளோடு ஐக்கியமானாள், நமக்கு ஞானம் கிடைக்கும். மனிதன் என்பவன் தெய்வமாக மாறுவான். முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும், பின்பு அவனை தெய்வமாக உயர்த்திட வேண்டும்.
மனிதன் நல்லவனாக அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்களை உள்ளவனாக இருக்க வேண்டும். எல்லா மதங்களும் இதை தான் போதிக்கின்றன.
Leave a comment
Upload