கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி, கடந்த 2 மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. இதற்கு, முதல் பரிசு ₹12 கோடி. இதன் குலுக்கல், கடந்த 17-ம் தேதி திருவனந்தபுரம் மாநகராட்சியின் பெண் மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், முதல் பரிசான ₹12 கோடி - ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த டிக்கெட், தமிழக எல்லையான ஆரியங்காவு பகுதியில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி கடையில் விற்பனையானது தெரியவந்தது. இதையடுத்து ‘இந்த டிக்கெட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்?’ என கடந்த 19-ம் தேதி மதியம்வரை தேடி வந்தனர்.
அன்று மாலை தான், இந்த டிக்கெட்டை வாங்கியவர் தென்காசியை சேர்ந்த ஷர்புதீன் (50) என்பதும், இவர் பைக்கில் ‘நடமாடும் சில்லறை லாட்டரி’ விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
ஷர்புதீன் குறித்து விசாரிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக வளைகுடா நாட்டில் பணிபுரிந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசி திரும்பியிருக்கிறார். இவருக்கு சபீனா (45) என்ற மனைவி மற்றும் பர்வேஸ் முஷாரப் (24) என்ற மகன் உள்ளனர். ஆரியங்காவு பகுதியில் வெங்கடேஷிடம் குறிப்பிட்ட தொகைக்கு லாட்டரி சீட்டுகளை வாங்கி, தனது பைக்கில் வைத்து, ஆரியங்காவு முதல் புனலூர் வரை ஷர்புதீன் சில்லறை லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவரிடம் விற்பனையாகமல் இருந்த ஒரு லாட்டரி சீட்டுக்குத்தான் தற்போது ₹12 கோடி பம்பர் பரிசு விழுந்திருப்பதாக தெரியவந்தது.
தன்னிடமுள்ள ₹12 கோடி பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி காலை இயக்குநர் கார்த்திகேயனிடம் ஷர்புதீன் ஒப்படைத்தார். இதில் ஏஜெண்ட் கமிஷன் மற்றும் வரி நீங்கலாக ஷர்புதீனுக்கு ₹7.56 கோடி கிடைக்கும் என கேரள லாட்டரி துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Leave a comment
Upload