தொடர்கள்
கதை
விதி.. அதை நீ மதி... - பா.அய்யாசாமி

20210022170149782.jpeg

சங்ககிரி, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் காலை பத்து மணிக்கு பரபரப்பாக இருந்தது.

இந்த ஊருக்கு நீதிபதி மோகன் மாற்றலாகி வந்து ஆறுமாத காலமாகிறது.

விரைவாகவும், நேர்மையாகவும் விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்க கூடிய பலரில் இவரும் ஒருவர்.

இன்று முழுவதும் மோட்டார் வாகனச் சட்டங்களை மீறிய குற்றங்கள் விசாரிக்கப்பட்டு உரிய தீர்ப்பும், அதற்கான அபராத தொகையும் விதிக்கும் நாள்.

முன்பு ஸ்பாட்பைன் போடும் பழக்கம் வழக்கத்தில் இருந்தும், அதனை மறுத்து நீதிமன்றத்தின் நேரம் விரயமானாலும் பராவாயில்லை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதுதான் இதுப்போன்ற குற்றங்களை குறைக்க வழிவகுக்கும் என்று காவல் துறைக்கு எடுத்துச்சொல்லி, அதன்படி காவல்துறையும் தன் பங்கிற்கு ஒத்துழைத்தமையால் நகரில் தற்பொழுது வாகன விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், சிக்னலை மீறியவர்கள் மூன்று நபர்கள் அமர்ந்து சென்றது, தலைக்கவசம் மற்றும் உரிமம் இல்லாமல்
வாகனம் ஒட்டியது என காலை முதலே விறுவிறுவென போலீஸார், எல்லோருக்கும் தண்டனையும் அபராதமும் வழங்கி அனுப்பியபடி இருந்தனர்.

இறுதியாக, மூன்று கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை அழைத்து வந்து நிறுத்தினார்கள். அனைவரும் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், உரிமம் இல்லாது வாகனத்தை இயக்கினார்கள் என சொன்னதும்... குனிந்து எழுதியபடி இருந்த நடுவர் அத்தனை மாணவர்களையும் ஆழ்ந்து பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

“18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் பெற இயலாது என்று உங்களுக்குத் தெரியுமா?”என நடுவர் மோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

தெரியாது என தலையை ஆட்டினர் மாணவர்கள்.

“18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், உங்கள் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது... அதுவாவது தெரியுமா?”

தெரியாது என தலை அசைத்தார்கள்.

“உங்களைப் போல சிறு வயதுப் பிள்ளைகளை விபத்தில் இழந்துள்ள பெற்றோரின் மன வலிகள் என்ன என்றாவது உங்களுக்கு தெரியுமா?”

தலை குனிந்து அமைதியாக நின்றார்கள்.

“நீங்கள் நினைக்கலாம், உங்களுக்குத்தான் வாகனம் ஓட்டத் தெரியும் என்று..

நீங்கள் வாகனங்களை நன்றாக ஓட்டுவீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும், ஆனால் உங்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வலி புரியுமா உங்களுக்கு?

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மட்டும் முடித்துக் கொள்ளவில்லை. ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை, ஒரு சமூகத்தின் இளந்தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பெற்றோர்கள் சொல்வதை கேட்கும் மனநிலையில் நீங்கள் இல்லாதது ஒருபுறம் இருந்தாலும், பெற்றோர்களும் உங்களுக்கு சொல்லி புரிய வைக்கும் நிலையில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்த வழக்கிற்கான தீர்வை நாளை ஒத்திவைக்கிறேன்” என்று கூறிய நீதிபதி மோகன் காவல் ஆய்வாளரிடம் தனியாக தன்னை சந்திக்கும்படி
தெரிவித்தார்.

மறுநாள்….. நீதிமன்ற வாசலில், அதே பரபரப்பு.

காவல் ஆய்வாளர் அழைப்பின் பேரில், மீடியா நபர்கள் நீதிமன்ற அறையில் குழுமியிருந்தனர்.

நேற்று ஒத்திவைக்கப்பட்ட வழக்கை முதல் வழக்காக எடுத்து தீர்ப்பாக வாசிக்கலானார் நடுவர் அவர்கள்..

“எதிர்பாரமல் நடப்பதுதான் விபத்து என்றாலும், ஓட்டுநரின் கவனக் குறைவால் நடக்கும் விபத்துகள்தான் அதிகம். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பத்தாரும்தான்.

சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்து ஓட்ட அனுமதிக்கிறார்கள். அவர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுபாடு இல்லாமல் ஓட்டிச்செல்வதோடு, ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக் கொண்டு வேகமாக செல்கிறார்கள், இதன் காரணமாக பின்னால் வண்டியில் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள்.

தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறி நிறுத்தியதும், மூன்று மாணவர்களுக்கும் வியர்த்துப் போனது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதை விட உயிர்களின் அருமையையும், உறுப்புகளின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் மூன்று நாட்களுக்கு அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கும், அரசு மருத்துவமனையில் வாகன விபத்து பிரிவில் ஒரு நாள் உறுப்புகளின் பாதிப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில் அங்கிருப்பவர்களுக்கு சேவை செய்திட வேண்டும், என்று தீர்ப்பின் வழியே உத்திரவிடுகிறேன்.

மேலும், பிள்ளையை பெற்றதால் பெற்றவர்கள் இல்லை. உண்மையில் நல்ல பிள்ளைகளை வாய்க்கப் பெற்றவர்களே உண்மையான
பெற்றோர்கள்.

நான் ஊருக்கு நீதிபதியாக இருந்தாலும், வீட்டில் மகனுக்கு சிறந்த தந்தையாக இருக்க தவறிவிட்டேன்.

சிறந்த தாய் தந்தை என்று நான் சொல்வது, மகனுக்கு அன்பு, பொருள், வசதி மற்றும் வாய்ப்புகளை மட்டும் உருவாக்கி தருவதல்ல, அன்பு செலுத்தி அரவணைக்க தாய் இருக்கிறாள், சமூகத்தை காட்டுவதும்,
பெறுப்பாக நடந்துக்கொள்ள வைப்பதும் தந்தையின் முக்கியப் பங்காக இருக்க வேண்டும், அதை நான் காட்டத் தவறிய குற்ற உணர்ச்சியில்
இருக்கிறேன்.

இந்த மூன்று மாணவர்களில் ஒருவர் சுந்தர், அவர் என் மகன்தான். அவன் எங்கும் என் பெயரைப் பயன்படுத்தவில்லை. அதிலிருந்த அவனின்
தெளிவு, இந்த சட்டத்தை மதிப்பதில் இல்லை…

சுந்தரை சட்டத்தை மதித்து வளர்க்கத் தவறிய குற்றத்திற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையை நான் ஏற்கப்போகிறேன், இது
எனக்கான தண்டனை மட்டுமல்ல, பிள்ளைகளை சமூகத்தில் நல்வழிப்படுத்த தவறிய அனைத்து பெற்றோர்களுக்குமானது.

சிறுவயது மகன்களை விபத்தில் இழந்து வாடும் பெற்றோர்களின் வலிகளை இது சற்றே குறைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த தீர்ப்பை நானே எனக்கு வழங்கிக் கொள்கிறேன்.

இதுவே சிறார் வாகன சட்டத்திற்கு முதல் மற்றும் இறுதித் தண்டனையாகட்டும்” என்று சொல்லி முடிக்க, சுந்தர் உள்ளிட்ட மாணவர்கள் கண்ணீர் விட்டபடி செய்வதறியமால் உறைந்து நின்றனர்.