தொடர்கள்
Daily Articles
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 22 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது!

20210021175138730.jpeg

“உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்” என்று அருளிச் செய்கின்றார் பெரியாழ்வார். இங்கு வியாக்கியானம் அருளிச் செய்கின்ற பெரியாழ்வார்,
‘எல்லாம்’ என்னாநிற்க ‘ஒன்று ஒழியாமல்’ என்றது - வ்யாஸ வால்மீகிகளுக்கு ப்ரகாசியாதவையும் இவர்க்கு ப்ரகாசிக்கையாலே..... ப்ரகாசியாமைக்கடி ஸத்வதாரதம்யம். அதுக்கடி ப்ரஸாத தாரதம்யம். கர்மவச்யருமாய் அசுத்த க்ஷேத்ரஜ்ஞருமான ப்ரஹ்மாதிகளுடைய ப்ரஸாதமிறே அவர்(ரிஷி)களுக்கு. இவர்க்கு ‘திருமாலால்’, ‘திருமாமகளால்’, ‘பீதக ஆடைப் பிரானாருடைய ப்ரஸாதத்தாலேயிறே...... ருஷிகளுக்குப்போலே புண்யம் என்றொரு கையாலே புதைத்துவிடுகிற ஜ்ஞானமல்லாமையாலே இவர்க்கு முற்றூட்டாக்கிக் கொடுக்குமிறே. ஸகல அர்த்தங்களும் பகவத்ப்ரேமமுடையார்க்கிறே ப்ரகாசிப்பது.
என்று அருளிச்செய்துள்ளார். ருஷிகள் பிரமன் முதலியவர்களுடைய அருளாலேயே எம்பெருமானுடைய சரித்திரங்களை அறிந்து கொண்டார்கள். ஆனால் அவர்களும் காணாத சரித்திரங்களை ஆழ்வார்கள் கண்டு அனுபவிக்கும்படி எம்பெருமான் தானே ஆழ்வார்களுக்கு நேராகக் காட்டிக் கொடுத்தான். எனவேதான் ருஷிகளும் சொல்லாத சரித்திரங்களையெல்லாம் ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளார்கள் என்கிறார் பெரியவாச்சான்பிள்ளை. இந்த வெண்ணெய்க்களவு சரித்திரமும் அப்படியேயாகும். ருஷிகளும் சொல்லாத சரிதங்களை ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர். ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில், கண்ணன் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று தீம்புகள் செய்தபடியினால் யசோதை அவனை உரலோடு கட்டினாள் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீபாகவதத்தில், யசோதை முலைப்பால் தராத காரணத்தினால் கண்ணன் தயிர்த்தாழியை உடைத்துவிட்டு வெண்ணெயுண்டபடியால் அவள் கோபம் கொண்டு அவனை உரலோடு கட்டினாள் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீமந் மஹாபாரதத்தில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்த கண்ணனை கோபிகைகள் உரலோடு கட்டி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஹரிவம்சத்தில், பிறர்மனைகளில் புகுந்து கண்ணன், பால், தயிர், நெய், இவற்றை உண்டும், மோர்க்குடங்களை உருட்டியும் தீம்புகள் செய்ய, கோபிகைகள் யசோதையிடம் முறையிட அவள் கண்ணனை உரலோடு கட்டினாள் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும், ஆழ்வார்கள் அனுபவித்தாற்போல விதவிதமாக எந்த ருஷியுமே அனுபவிக்கவில்லை.

பொய்கையாழ்வார் ‘விரலொடு வாய்தோய்ந்த வெண்ணெய்’ என்று அனுபவித்தாற் போலவோ,

பேயாழ்வார் “மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய், வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன்” என்று அனுபவித்தது போலவோ,

திருமழிசையாழ்வார் “ஆய்ச்சி பாலையுண்டு வெண்ணெயுண்டு மண்ணையுண்டு” என்று அனுபவித்தது போலவோ,
நம்மாழ்வார் “மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவு எத்திறம்!” என்றும், “வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டு அழுகூத்தவப்பன்” என்றும் அனுபவித்தாற் போலவோ,

மதுரகவி ஆழ்வார் “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்” என்று அனுபவித்தாற் போலவோ,

குலசேகராழ்வார் “முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளம் சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும், அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும்” என்று அனுபவித்தாற்போலவோ,

பெரியாழ்வார் “பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திருவயிறு ஆரவிழுங்கிய அத்தன்” என்றும் “மிடறுமெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்” என்றும் அனுபவித்தாற் போலவோ,

ஆண்டாள் “தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்” என்று அனுபவித்தாற் போலவோ,

திருப்பாணாழ்வார் “கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன்” என்று அநுபவித்தாற் போலவோ,

திருமங்கையாழ்வார் “உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று அங்குண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்கத் தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மையான்” என்றும் “ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று, தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி, அருகிருந்த மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்............ ஆராவயிற்றினோடு ஆற்றதான்” என்று அனுபவித்தது போலவோ,

எந்த ருஷியும் எந்த இதிஹாஸ புராணத்திலுமே அனுபவிக்கவில்லை. இப்படி ருஷிகளும் சொல்லாத சரித்திரங்களை ஆழ்வார்கள் அருளியுள்ளனர்.

தங்கள் முயற்சியால் உடலை வருத்தித் தவம் செய்து பிறதேவதைகளுடையவும் எம்பெருமானுடையவும் அருளைப் பெற்ற ரிஷிகளுக்கும் புலப்படாத சரிதங்கள், எம்பெருமானுடைய க்ருபையினால் மயர்வற மதிநலமருளப் பெற்ற ஆழ்வார்களுக்கு மட்டுமே புலப்பட்டன. இப்படி ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ள அற்புதமான சரித்ரங்களைப் பற்றி எவ்வளவும் பேசிக்கொண்டே போகலாம். அதுவும் கண்ணனுடைய வெண்ணெய்க்களவு பற்றிய ஆழ்வார்களுடைய அனுபவத்திற்கு எல்லையே கிடையாது. அதைப் பேசி முடிப்பது என்பது என்பது முடியவே முடியாது. அவ்வளவு ஏன்? கண்ணனுடைய வெண்ணெய்க் களவு சரித்ரத்திலேயே ஈடுபட்ட நம்மாழ்வாரும் கூட, இந்தச் சரித்திரத்தை நெஞ்சால் நினைக்கவும் முடியாது என்கிறார்.

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவியிடர் கடிவான் இமையோர் தமக்கும்
தஞ்சார்விலாததனிப்பெருமூர்த்திதன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெயூணென்னுமீனச்சொல்லே.

(திருவிருத்தம் 98)

மிகவும் தாழ்ந்தவர்களான இந்நிலவுலகத்தவர்கள் இவ்வுலகத்து போகங்களையும் கூட முழுமையாக அனுபவிப்பதற்குச் சக்தியற்றவர்கள். ஆனால் பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள் எப்போதும் எம்பெருானோடு கூடியிருப்பவர்களாய் நிரந்தரமாக அவனையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குங்கூட “கண்ணபிரானுக்கு வெண்ணெய் உணவாயிற்று” என்று சொல்லப்படும் இழிசொல் நெஞ்சால் நினைப்பதற்கும் அரிதானது என்கிறார் நம்மாழ்வார். இங்கு நம்பிள்ளை ஈடு:

ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளுக்குங்கூட ஆச்ரயணீயனாய், அவாப்த ஸ்மஸ்தகாமனாய் இருக்கிறவன், ஆச்ரித ஸ்பர்சமுள்ள த்ரவ்யமே

தனக்கு தாரகமாய், நேர்கொடு நேர்கிட்டப் பெறாதே, இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்கவேண்டி, அதுதான் தலைக்கட்ட பெறாதே, வாயது கையதாக அகப்பட்டு, கட்டுண்டு, அடியுண்டு, ப்ரதிக்ரியையற்று, உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ?”
கண்ணபிரானுடைய வெண்ணெய்க் களவை அனுபவிப்பதிலேயே திளைத்திருக்கும் நம்மாழ்வார் “கண்ணபிரானுடைய மற்ற சரிதங்களை அனுபவித்தாலும் அனுபவிக்கலாம். கரைமேலாவது போகலாம். ஆனால் இந்த வெண்ணெய்க்களவை அனுபவிப்பது என்பது நெஞ்சினால் நினைக்கவும் முடியாது. இதில் இறங்குவதைக் காட்டிலும் இறங்காமலிருப்பதே நன்று. நித்யசூரிகளுக்கும் நெஞ்சினால் நினைக்கவும் முடியாததை நாம் அனுபவிப்பது முடியுமோ? என்கிறார்.
இப்படி நம்மாழ்வாரே அருளிச் செய்துவிட்ட பின்பு இந்த வெண்ணெய்க்காடும்பிள்ளையை நம்மால் பேசித் தலைக்கட்ட முடியுமோ? ‘பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே’ என்று பேயாழ்வார் அருளிச் செய்தபடியே யார் யார் எம்பெருமானைப் பற்றி எவ்வெவ்வளவு பேசுகின்றார்களோ அவ்வளவே அவனுடைய தன்மைகள் என்பதற்கேற்ப நாமும் சிறிது பேசிக்களித்தோமத்தனை.

(முற்றும்)