தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி அமெரிக்காவின் புதிய அரசு !! ராம்.

20210021103814699.jpg

அமெரிக்கா

வாஷிங்டன்.

முதல் செய்தியே அமெரிக்க ஜனாதிபதி தான்.

இல்லையென்றால் உலகமே மன்னிக்காது.

20210021104120426.jpg

46வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். உப தலைவராக நம்ம ஷியாமளா பொண்ணு கமலா ஹாரீஸ். (நல்ல வேளையாக புடவையோ மடிசாரோ கட்டிக் கொண்டு வரவில்லை. வந்திருந்தால் ஊறுகாய் மாமி போல பர்கர் மாமி என்று சொல்லியிருப்பார்களோ ? )

20210021104220982.jpg

நியூ யார்க் டைம்ஸ் உபயத்தில் ஒரு மூன்று நிமிட ஹைலைட்ஸ் இங்கே…. வீடியோவின் கடைசியில் டிரம்ப் ஜோடியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் போது கொஞ்சம் வருத்தமாக இருப்பது போல உணர்வதை தவிர்க்க முடியவில்லை. அதிபராக இல்லையே என்றில்லை. பாவம் வீடு மாற வேண்டியிருக்கிறதே என்று தான்.

ஜோ பைடனின் துவக்கமும் வளர்ச்சியும், கமலா ஹாரீஸின் துவக்கமும் வளர்ச்சியும் எல்லோரும் எழுதுவது தான்.

கைவிடப்பட்ட அனாதை இல்லத்திலிருந்து வெள்ளை மாளிகைக்கு சத்தமில்லாமல் செல்லும் மேஜரைப் பற்றி சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

20210021104427488.jpg

மேஜர் ஜோ பைடனின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்.

டெலாவேரில் 2018ல் ஒரு ஆறு நாய்க் குட்டிகளை கொண்டு வந்து போட்டார்கள். ஆறும் உடம்பு சரியில்லாமல் வேறு இருந்தது. டெலாவேரில் கொடுத்த சிகிச்சையில் ஆறு குட்டிகளும் தேறி விட, அதை சமூக ஊடகத்தில் வலையேற்றியது டெலாவேர் நாய்கள் பாதுகாப்பு நிறுவனம். அதை பைடனின் மகன் ஆஷ்லி பார்த்து விட்டு பைடனுக்கு சொல்ல, ஒரு வழியாக நவம்பர் 2018ல் பைடனுடன் அதிகாரபூர்வமாக சேர்ந்தது அந்த ஆறு குட்டிகளுள் ஒன்றான மேஜர்.

20210021104451682.jpeg

தற்போது மேஜர் அமெரிக்காவின் முதல் நாய். (வெள்ளை மாளிகை நாயல்லவா?)

டிரம்புக்கு நாய் பிடிக்காது போல. அவர் மிருகமெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் பைடன் இதையே தனக்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரத்தில் கூட பயன்படுத்திக் கொண்டார். எனக்கு நாய் பிடிக்கும் என்பதும் நாய் வளர்ப்பவர்களின் ஓட்டுக்களை வாங்குவதை அவருக்கு சுலபமாக்கியது.

தற்போது மேஜர், சாம்ப் என்ற இரண்டு நாய்களுடனும், ஒரு பூனையுடனும் பைடன் தம்பதிகள் வெள்ளை மாளிகைக்கு குடியேறியிருக்கிறார்கள்.

நாய்கள் எனக்கு ஆகாது, பயம் என்ற ஒரே காரணத்தால் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவுக்கு கூட வரமுடியாது என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. என்ன செய்ய ??

சிகாகோ

20210021104603479.jpg

பயம் இருக்கலாம். அதற்காக இப்படியா ??

ஆதித்ய சிங் என்ற ஆசாமி அமெரிக்காவின் சிகாகோ விமான நிலயத்தில் உள்ளே மூன்று மாதங்களாக தங்கியிருக்கிறார்.

காரணம். சிகாகோவிலிருந்து கலிபோர்னியா விமானத்தில் செல்ல பயமாம். கரோனா காரணத்தால்.

மூன்று மாதங்களாக அத்து மீறி எப்படி விமான நிலயத்தில் இருக்க முடிந்தது என்பது ஒரு ஆச்சரியம் ! அங்கிருக்கும் விமான நிலய அதிகாரி ஒருவரின் தொலைந்து போன அடையாள அட்டையை அணிந்து கொண்டு தான் ஆசாமி அத்தனை நாள் டேரா போட்டிருக்கிறார்.

ஒரு முறை பாங்காக் விமான நிலயத்தில் நான் பிடிக்க வேண்டிய விமானத்தில் முன்பதிவு இல்லாமல் போய் விட்டது. ஒன்றரை நாள் விமானத்தை மாற்றி மாற்றி முயற்சித்ததில் கிடைக்கவேயில்லை. கடைசியில் இரண்டு நாட்களுக்கு அப்புறம் தன் இன்னொரு விமானத்தில் இடம் கிடைத்தது. சரி வெளியில் போய் தங்கி விட்டு வருவோம் என்று நான் முயற்சித்த போது அதெப்படி விமான நிலயத்திற்குள் ஒன்றரை நாள் இருக்கலாம் என்று ஒரு பெரிய குடியுரிமை படையே என்னை இரண்டு மணி நேரத்திற்கு உட்கார வைத்து துளைத்து எடுத்து விட்டது.

அமெரிக்க சிகாகோ விமான நிலயத்தில் மூன்று மாதம். அடேங்கப்பா.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதெப்படி அப்படி விமான நிலயத்தில் அத்தனை பாதுகாப்பில் மூன்று மாதங்கள் ஒரு ஆளால் இப்படி ஒளிந்திருக்க முடிந்தது என்று கடுப்பாகியிருக்கிறார்.

இதற்கான தண்டனை கொஞ்சம் கடுமையாகவே இருக்கும் என்கிறார்கள்.

ஐரோப்பா

நெதர்லாந்து

20210021105204387.jpg

கழுதை, ரம்மி, மூணு சீட்டு என்று எத்தனை விதமான விளையாட்டு சீட்டுக் கட்டில் விளையாடியிருப்போம்.

யாராவது ஒருவர் கவனித்தீர்களா ? அதென்ன ராஜாவுக்கு மட்டும் இவ்வளவு மதிப்பு, ராணிக்கு இல்லை என்று ??

20210021105228758.jpg

இண்டி மெல்னிக் என்ற 23 வயது பட்டதாரி பெண் இதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்.

அவரால் ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ராணியை இரண்டாவதாக வைத்திருப்பது பொறுக்கவில்லை.

ராஜாவும் இல்லை ராணியும் இல்லை என்ற வகையில் ஒரு புது சீட்டுக் கட்டை வடிவமைத்திருக்கிறார் அவர்.

அதன் படி இனி ராஜா, ராணி, ஜாக்கி இல்லாமல் தங்கம், வெள்ளி, பித்தளை கார்டுகள் இருக்குமாம்.

போங்க சந்தோசமா இருங்க. சீட்டுக் கட்டுல மட்டும் தான் ராஜான்னு ஒரு கெத்து இருந்தது. அதுவும் போச்சா !!

லண்டன்

2021002110543145.jpg

லாஸ்வேகாசில் ஒரு முறை டேவிட் காப்பர்ஃபீல்டின் மாஜிக் காட்சிக்கு செல்ல நேர்ந்தது. மனுசன் பண்ணிய மந்திர கண்கட்டு வித்தைகளில் விஞ்ஞானத்தையே கொஞ்சம் நேரம் மறக்கடிக்க வைத்து விட்டார்.

இதில் முக்கியமான ஒன்று திடீரென அந்தரத்தில் தோன்றிய கார். எல்லாமே மாயை இல்லூஷன் தான் என்றாலும், அதை செய்யும் வேகம், நேர்த்தி அதில் தான் மேஜிக் செய்பவர்களின் திறமையே இருக்கிறது.

இந்த மேஜிக் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு ஐடம், (இது வேற ஐடம்) ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ, அனேகமாக அழகான ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். ஆணை வெட்டினால் யார் கவலைப் பட போகிறார்கள். மேடையில் ஒரு பெட்டிக்குள் போட்டு இரண்டு துண்டாக வெட்டுவார்கள்.

20210021105508645.jpg

நூறு வருடங்களுக்கு முன் பி.டி.செல்பீட் என்ற மேஜிக் ஆசாமி தான் இந்த கண்கட்டு வித்தையை முதல் முறையாக மேடையில் நிகழ்த்தியிருக்கிறார்.

(மேஜிக் சூப்பர் ஸ்டார் டேவிட் காப்பர்ஃபீல்டின் மரண மேஜிக் )

கடந்த வாரம் ஆன்லைனில் உலகில் பல மேஜிக் கலைஞர்கள் இந்த குறிப்பிட்ட இரண்டு துண்டாக வெட்டும் மேஜிக்கை நூறாவது வருடமாக கொண்டாடினார்கள்.

பார்த்து .. காய்கறி வெட்டும் போதே நாங்கள்லாம் விரலை வெட்டிக்கற ஆட்கள்.

ஆஸ்திரேலியா…

2021002110554112.jpg

சிபிச் சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக தன் தொடையை வெட்டிய கதை நடந்தது நம் நாடு.

ஆஸ்திரேலியாவில் பிடிக்கப்பட்ட ஜோ என்று பெயரிடப்பட்ட புறா ஒன்று மரண தண்டனையிலிருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறது.

மெல்போர்னின் ஒரு ஆசாமி இந்த புறாவை கண்டெடுக்க அதன் காலில், அமெரிக்க பறவைகள் சங்கதை சேர்ந்தது என்று ஒரு குறிப்பு எழுதியிருந்தது.

அலபாமாவிலிருந்து ஒரு புறா ரேசில் கலந்து கொள்ளும் போது இது வழிமாறி 13,000 கிலோ மீட்டர்கள் கடந்து பறந்து வந்திருக்கலாம் என்பது தான் ஆஸ்திரேலியர்களின் அனுமானம்.

குவாரண்டைன் விதிகள் அதிலும் பறவைகளுக்கு கட்டுப்பாடு அதிகமாக இருக்க, இந்த புறாவை சுட்டு விடுவது தான் சரி என்று முடிவு கட்டினார்கள் ஆஸ்திரேலியாவில்.

இதை டிவிட்டரில் போட, ஜோவை காப்பாற்றுங்கள் என்று ஒரு கோஷ்டி கிளம்பி புறாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியது.

ஒரு வழியாக அமெரிக்க பறவைகள் சங்கம் இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ சும்மா அந்த சீட்டை கட்டி விட்டிருக்கிறார்கள் என்று சொல்லி மரண தண்டனையிலிருந்து புறாவைக் காப்பாற்றியிருக்கிறது.

ஜோ, உனக்கு ஆயுசு கெட்டி. !!

ஆசியா

இஸ்ரேல்.

20210021105631828.jpg

இஸ்ரேலில் ஜமால் ஃபுரானி என்ற 78 வயது முதியவருக்கு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கார்னியா பொறுத்தப்பட்டு பார்வை மீண்டிருக்கிறது.

20210021105658814.jpg

கார்னியாவுக்கு தமிழில் தேடினால் விழி வெண்திரைபடலம் என்று வந்தது. உலகில் இருபது லட்சம் பேர் இந்த கார்னியா பாதிக்கப்பட்டு விழியிழக்கிறார்களாம். உலகம் முழுவதும் சுமார் மூன்று கோடிப் பேர் இரண்டு கண்ணிலோ அல்லது ஒரு கண்ணிலோ பார்வையற்று இருக்கிறார்கள்.

இந்த செயற்கை கார்னிய பொறுத்துவது தற்போது சோதனை முயற்சியில் இருக்கிறது. இதுவே வெற்றியடைந்து விட்டால் உலகில் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வையிழந்தவர்களுக்க்கு மீண்டும் பார்வை கிடைக்க மிகப் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

ஒளி பெருகட்டும்.

தென்னமெரிக்கா

ஹைட்டி.

2021002111230124.jpg

டிரம்ப் அரசாங்கம் கடைசி நாளில் ஒரு முப்பது பேரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி விட்டுத் தான் ஓய்ந்திருக்கிறது.

பால் பெர்ரிலிஸ் என்ற 40 வயது நிதி மேலாளர் பாவம் ஹைட்டியிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோர்களுடன், ஐந்து வயதில் அமெரிக்காவுக்கு வந்தவர்.

ஹைட்டிக்கு சென்றதேயில்லை.

20210021112325767.jpg

ஆனால் அவர் அமெரிக்க பிரஜையில்லை ஹைட்டியின் பிரஜை என்று அமெரிக்க குடியுரிமை துறை பழைய தரவுகள் எதையோ எடுத்து அவரை நாடு கடத்த முடிவெடுத்திருக்கிறது.

இத்தனைக்கு பாலின் சகோதர சகோதரிகள் அமெரிக்க பிரஜைகள். இவர் மட்டும் தான் ஹைட்டிக்கு அனுப்பபட விருக்கிறார்.

தன்னுடைய கடைசி நாளில் கூட டிரம்ப் விடவில்லை. கடைசி விமானத்தில் ஒரு 27 பேரை நாடுகடத்தி விட்டுத்தான் வெள்ளை மாளிகையை விட்டு செல்கிறார்.

ஜோ பைடன் பதவி ஏற்ற அடுத்த நூறு நாட்களுக்கு எந்த வித நாடுகடத்தலையும் செய்யப்போவதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த நாடுகடத்தல் வேலை குறிப்பாக கறுப்பின மக்களை மட்டுமே குறி வைத்து செய்யப்படுகிறது என்பது தான் பொதுவான கருத்து.

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

20210021112409397.jpg

தென்னாப்பிரிக்காவில் இன்னமும் கரோனா தடுப்பூசி வரவில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம் அரசின் மெத்தனம் என்று சொல்கிறார்கள்.

ஃபைசர் ஊழியர் ஒருவரின் டெலிபோன் உரையாடலின் மூலம் “தென்னாப்பிரிக்க அரசுடன் தடுப்பூசி குறித்து பேச்சு வார்த்தை பல மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவர்கள் பிடி கொடுக்கவேயில்லை. இப்போது தென்னாப்பிரிக்காவில் கடுமையாக கரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா சொல்கையில் இரண்டு கோடி தடுப்பூசிகள் விரைவில் வரும் என்று சொல்லியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் சொல்கையில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து அடுத்த மாதமே 15 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று சொல்லியிருக்கிறார்.

சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே தவிர தடுப்பூசி வந்த பாட்டைக் காணோம் என்பது தான் தென்னாப்பிரிக்காவின் இன்றைய நிலைமை.

ராம்.