தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்..! - ஜாசன்

டென்ட் கொட்டாய்

20210019194031671.jpeg

டூரிங் டாக்கீஸில் சினிமா பார்த்த அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் நான் முதல் முதலில் சினிமா பார்த்தது டென்ட் கொட்டாயில் தான். நீண்ட கூரை வேய்ந்த மிகப்பெரிய கொட்டாய். அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்விசிறி சுற்றுகிறார் போல் இருக்கும், சினிமா ஆரம்பிக்கும்போது படுதா மூலம் மூடுவார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன்.

தரை டிக்கெட் 15 பைசா, மணல் கொட்டி இருப்பார்கள். அதில் உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும். பீடி துண்டு, வெற்றிலை பாக்கு எச்சல் போன்றவை மணலால் மூடப்பட்டிருக்கும். உயரமாக இருக்க வேண்டும் என்று சிலர் மணலை குவித்து வைத்திருப்பார்கள். காலை நீட்டிக் கொண்டு, படுத்து கொண்டு எல்லாம் படம் பார்க்கும் வசதி தரை டிக்கெட்காரர்களுக்கு கிடைக்கும். அதற்கடுத்து மரப்பலகையில் பெஞ்ச் இருக்கும், அதன் டிக்கெட் விலை 45 பைசா. அதற்கடுத்து நாற்காலி 85 பைசா கட்டணம்.

நான் எம்ஜிஆர் ரசிகன். எங்க வீட்டுப்பிள்ளை, படகோட்டி, தெய்வத்தாய் என்று எம்ஜிஆர் படங்களை விரும்பி பார்ப்பேன். எம்ஜிஆர் படம் நிச்சயம் எங்கள் ஊரில் நான்கு வாரம் தொடரும். அத்தனை நாளும் கொட்டகை நிறைந்த காட்சிகளாக இருக்கும்.

முதலில் அனாசின் விளம்பரம். அதன் பிறகு கரீம் பிடி விளம்பரம், அதைத்தொடர்ந்து நியூஸ் ரீல் எனப்படும் அரசு செய்தி படம். அது பெரும்பாலும் இந்தியில் தான் இருக்கும், தமிழில் ஆங்காங்கே வர்ணனை ஒளிபரப்பாகும். அயல்நாட்டு பிரதமர், நம் நாட்டு பிரதமர் இப்படி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நியூஸ் ரீலில் இருக்கும். அதன் பிறகு தான் சினிமா.

திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழக செய்தி பிரிவு தனியாக அரசு நிகழ்ச்சிகளை படம்பிடித்து, செய்திச் சுருள்.. அதாவது நீயுஸ் ரீல் தமிழாக்கம். இப்படி மத்திய - மாநில அரசு செய்திகளை திரையிடுவார்கள்.

படத்தின் நடுவே முறுக்கு, சோடா விற்பவர் ஸ்க்ரீனில் திடீரென தெரிவார். சில சமயம் மின்சாரத் தடை ஏற்படும், அப்போது விசில் சத்தம் தூள் பறக்கும். ஆப்பரேட்டருக்கு மின்சாரம் வரும்வரை பிபி எகிறும்.

இடைவேளையில் பாட்டுடன் விளம்பர ஸ்லைடுகள் காட்டுவார்கள். நமக்கு தெரிந்த பொட்டிக்கடை கூட விளம்பரம் செய்திருப்பார்கள். படம் முடிந்ததும் தேசிய கீதம் ஒளிபரப்புவார்கள். அப்போதெல்லாம் எங்கள் வகுப்பு ஆசிரியை தேசியகீதம் பற்றி பாடம் எடுத்தால், தேசியகீதம் முடியும்வரை நான் அட்டென்ஷனில் நின்று மரியாதை செய்வேன். மொத்த தேசபக்தர்கள் ஒரு நான்கைந்து பேர் தான் இருப்பார்கள். ஆனால் முழு தேசியகீதமும் தேசியக்கொடி வீச ஒளிபரப்புவார்கள். தேசியகீதம் முடிந்ததும் படம் முடிந்தது என்று ஒரு நீண்ட தொடர் மணி அடித்து அறிவிப்பார்கள். கழிப்பறை எல்லாம் சுமாராகத் தான் இருக்கும். சுகாதாரம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

அந்தக் காலத்தில் எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களும், சிவாஜி ரசிகர் மன்றங்களும் பிரபலம். ஒரு வீட்டின் வாசல் அறையை வாடகைக்கு எடுத்து ரசிகர் மன்ற பலகை வைத்து மன்றம் நடத்துவார்கள். சிவாஜி ரசிகர் மன்றத்தில் கீழே பாய் விரித்து நாளிதழ்கள் வைத்திருப்பார்கள். நாளிதழை படிக்க போனால், முதல் பக்கத் தொடர்ச்சி நான்காம் பக்கம் என்று இருக்கும். ஆனால் நான்காம் பக்கத்தை தேடினால் கிடைக்காது அதை யாரோ ஒரு ரசிகர் எடுத்துச் சென்று இருப்பார். எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் செய்தித்தாள்கள் எல்லாம் இருக்காது. எம்ஜிஆரின் கலர் புகைப்படங்கள் அழகாக மாட்டி வைத்திருப்பார்கள். எம்ஜிஆர் படம் திரையிடப்படும் போது, டூரிங் டாக்கீஸ் உரிமையாளரிடமிருந்து சுவரொட்டி வாங்கி வாசலில் ஒட்டி வைப்பார்கள்.

இதேபோல் பிட் நோட்டீஸ் அடித்து மாட்டுவண்டியில் படத்தின் பெயர், நடிகர் பெயரை மைக் மூலம் சொல்லிக்கொண்டே ஒருவார் வருவார். அந்த மாட்டுவண்டி பின்னாடி ஓடிப்போய் கையை நீட்டினால், நோட்டீஸ் கிடைக்கும். அதை நான் ஆர்வத்துடன் படிப்பேன். அதில் இயக்குனர், இசையமைப்பாளர் பெயர் எல்லாம் இருக்கும். கடைசி தினத்திற்கு முன்தினம் இப்படம் நாளை கடைசி என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்வார்கள். முதலில் மாட்டு வண்டியில் விளம்பரம் வந்தது, காலப்போக்கில் அது ரிக்க்ஷாவாகி பிறகு காராக மாறியது..

எம்ஜிஆர் எங்க வீட்டுப் பிள்ளையில் இரட்டை வேடத்தில் நடித்தது எனக்கு ஆச்சரியம். எப்படி ஒருவரே இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி எனக்கு இருந்தபோது, என்னுடைய நண்பன் ஒருவன் கேமராவில் இரண்டு கதவு இருக்கும், ஒரு கதவை மூடிவிட்டு, கோழை எம்ஜிஆரை படம் பிடிப்பார்கள். பிறகு, அந்தக் கதவை மூடிவிட்டு, வீர எம்ஜிஆரை படம் பிடிப்பார்கள் என்று ரீல் சுற்றினான். ஆனால், நான் அதை உண்மை என்று பல ஆண்டுகள் நம்பினேன். இதேபோல் எம்ஜிஆர் ரசிகர் மன்ற தலைவர், சிவாஜி ரசிகர் மன்ற தலைவர்கள் தோள் மேல் கைபோட்டு இருக்கும் போட்டோவை பெருமையாக மன்றத்தில் மாட்டி வைப்பார்கள். இதுவும் எனக்கு அதிசயமாக இருக்கும். பிறகு பத்திரிக்கையாளராக மாறி, எம்ஜிஆர் - சிவாஜி இருவரையும் நேரில் சந்தித்தபோது, எனக்கு இந்த ரசிகர் மன்ற போட்டோ நினைவுக்கு வரும்.

சென்னையில் முதன்முதலாக நான் சத்தியம் திரையரங்கில் ஷோலே படம் பார்த்தேன். அப்போது ஷோலே படம் பார்க்கவில்லை எனில் மனுஷன் லிஸ்டில் இருந்து எடுத்துவிடுவார்கள் போல் ஒரு ட்ரெண்ட் பரவியிருந்தது. “என்னது இன்னுமா ஷோலே பார்க்கவில்லை” என்று என்னை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். எனக்கு இந்தி தெரியாது, இந்தி நடிகர்கள் பற்றிய விவரமும் எனக்கு பத்தாது என்றாலும், நான் தொடர்ந்து மனுஷனாக இருக்க விரும்பியதால் ஷோலே படம் பார்த்தேன். ஸ்டீரியோ திரையரங்கு என்பதால் அமிதாப்பச்சன் காசு சுண்டி போட்டபோது, என் காலடியில் காசு விழுந்தது போல் தேடினேன். இந்தி தெரியாவிட்டாலும் கதை ஓரளவு புரிந்தது. அமிதாப்பச்சனின் வெகுளித்தனமான நடிப்புக்கு இரண்டாவது முறையும், நடிகை ஜீனத் அமன் நடிப்பை (!) பார்ப்பதற்காக மூன்றாம் முறை என மூன்று முறை நான் ஷோலே பார்த்தேன்.

எனக்கு படம் சென்சார் சர்டிபிகேட் முதல் பார்த்தால்தான் படம் பார்த்தால் தான் திருப்தி. ஆனால், மதுராந்தகம் - காயத்ரி திரையரங்கில் பெரும்பாலும் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காது. காரணம், வரதன் என்ற ஒயர்மேன் தான். அந்தக் காலத்தில் மின்சார வாரிய ஊழியர்கள், விற்பனை வரி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்துறை போன்ற இலாகாவில் பணிபுரிபவர்களின் குடும்பத்தினரை இலவசமாக படம் பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் முதல் நாள், முதல் ஷோ எல்லாம் அனுமதிக்கவில்லை. ஒரு வாரம் படம் ஓடிய பிறகுதான் இந்த இலவச அனுமதி. திரையரங்க வாசலில் கண்டிப்பாக முதல் வாரம் இலவச பாஸ் அனுமதி இல்லை என்று எழுதி வைத்திருப்பார்கள்.

நானும் என் சகோதரரும் படம் முதல் நாள் திரையிட்ட அன்று முதல் எங்கள் அப்பாவை நச்சரிக்க ஆரம்பிப்போம். அந்த நேரம் பார்த்து பரிட்சையில் நான் 2 அல்லது மூன்று பாடங்களில் பெயில் மார்க் வாங்கி இருப்பேன். அதை சுட்டிக் காட்டி முதலில் படி, என்று நோ சொல்லிவிடுவார். அப்புறம் மனம் தளராமல் நானும் என் அண்ணனும் என் அப்பாவை நச்சரிக்க, கடைசியில் மனம் இறங்குவார். நானும் என் அண்ணன்களும் ஏழு மணி படத்துக்கு 5 மணிக்கே போய் காத்திருப்போம். என் கூடப் படிக்கும் பையன்கள், பந்தாவாக சேர் டிக்கெட் வாங்கி உள்ளே படம் ஆரம்பிப்பதற்கு முன்பே போய் உட்கார்ந்து இருப்பார்கள். நாங்கள் வயர் மேன் வரதன் வருகிறாரா என்று வழிமேல் விழி வைத்து பார்த்துக்கொண்டு இருப்போம். அவர் பீயுஸ் போனதை பார்த்துவிட்டு, கரண்ட் பில் கட்டாதவர்கள் வீட்டில் பீயுஸ்பிடுங்கி விட்டு, ஆபிசுக்கு போய் ஆஜரானதும், என் அப்பா விஷயத்தை சொல்ல... அதன்பிறகு திரையரங்குக்கு அவர் சைக்கிளில் கிளம்பி வருவார். அவரைப் பார்த்ததும் எங்கள் முகத்தில் வரும் சந்தோஷத்துக்கு, இன்றுவரை அதற்கு ஈடு கிடையாது. உள்ளே ஓடுவோம், அதற்குள் படம் துவங்கி இருக்கும். இடைவேளையின்போது சக நண்பர்களிடம் முந்தைய காட்சிகளை கேட்டு தெரிந்து கொள்வேன். சில சமயம் விளம்பரம் துவங்கி, சென்சார் சர்டிபிகேட் முதல் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது கூடுதல் மகிழ்ச்சி. இப்போது நவீன திரையரங்கங்களில், பாட்ஷா, அருணாச்சலம் போன்ற படங்களை நான் ப்ரிவ்யு ஷோவே பார்க்கும்போதெல்லாம் எனக்கு டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் நினைவுக்கு வரும்.

இப்போது பிரபல நடிகர்களின் படம் திரையிடும் போது, முதல் பத்து நாள் திரையரங்கு கட்டணம் இஷ்டத்துக்கு கூடியிருக்கும். ஆனால், எம்ஜிஆர் - சிவாஜி படம் ரிலீஸின் போது, இந்தக் கூடுதல் கட்டணம் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், ரசிகர் மன்றங்கள் தங்கள் கைக்காசை போட்டு டிக்கெட் வாங்கி மன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாகத் தருவார்கள். இப்போது ரசிகர் மன்றமே 3000, 2000 ரூபாய் என்று ரஜினி விஜய் ரசிகர்களிடம் பணம் பார்ப்பது நேர்மை, நீதி ஞாயம் என்பதெல்லாம் வெறும் சினிமா வசனம் என்றாகிவிட்டது. ஆனால், எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்கள் அந்த தவறை செய்யவில்லை, அதனால் தான் இப்போதும் அவர்கள் பேசப்படுகிறார்கள்.