
பள்ளிப் பாடங்கள்...
நான் படித்தது எல்லாம் அரசு உதவி பெறும் பள்ளி அல்லது அரசுப் பள்ளி. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகள் எல்லாம் இல்லை. 1-ம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை நான் மதுராந்தகம் கார்னேஷன் பள்ளியில் படித்தேன். எங்க அப்பாவுக்கு காஞ்சிபுரம் மாற்றல் ஆகியதால், நான்காவது மற்றும் ஐந்தாவது திருக்கச்சி நம்பி பள்ளியிலும், ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு பச்சையப்பன் கிளை பள்ளியிலும்... பிறகு எங்க அப்பாவிற்கு மீண்டும் மதுராந்தகம் மாற்றலாகி வரவே.... எட்டாம் வகுப்பு கார்னேஷன் பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை இந்து உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன், என் கல்வித்தகுதி இதுதான். அப்போதெல்லாம் பள்ளி வாழ்க்கை என்பது சர்க்கரையில் கலந்த வேப்பங்காய் மாதிரி. ஆனால், அதை நான் வாழ பழகிக்கொண்டு ரசித்தேன்.
நான் பள்ளிக்கூடத்தில் முதல் ரேங்க் மாணவன் எல்லாம் இல்லை, சுமாரா தான் படிப்பேன். பிராகரஸ் கார்டில், குறைந்தது எப்படியும் இரண்டு படத்திலாவது பெயில் மார்க் வாங்கி, சிகப்பு மையால் எச்சரிக்கை செய்யப்பட்டு இருப்பேன். ஆசிரியை குறிப்பில், மோசம்... சுமார் என்று தனது கருத்தை பதிவு செய்திருப்பார். அப்போதெல்லாம் டீச்சர் அடித்தால், எப்படி என் பையனை அடிக்கலாம் என்று சண்டைக்கு பெற்றோர்கள் எல்லாம் வர மாட்டார்கள். எங்க அம்மாவுக்கு எல்லா டீச்சரும் பழக்கம். நான் படித்த பள்ளியில் என் சித்தி ஆசிரியை. அதனால், “முதுகுத் தோலை உரி” என்பதே என் அம்மாவின் அந்தகால ரிங்டோன். முட்டி போட்டு இருக்கிறேன், வகுப்பறை வாசலில் நின்று இருக்கிறேன், மைதானத்தில் ஓடி இருக்கிறேன். இடது கை - வலது கை என்று பிரம்பால் கைக்கு 5 அடி என்று பத்து அடி வாங்கியிருக்கிறேன். தோப்புகரணம் போட்டு இருக்கிறேன், இப்படி பள்ளிக்கூடத்தில் நான் வாங்காத தண்டனையே இல்லை என்ற பெருமைமிக்க மாணவன் நான்.
அப்போதெல்லாம் ரிசல்ட் மே மாதம் முதல் வாரம் பூட்டிய வகுப்பில் கரும்பலகையில் டைப் எல்லாம் அடித்து இருக்காது. டீச்சர் அழகாக பேனாவால் யார் யார் பெயில் என்பதை மட்டும் எழுதி கையெழுத்துப் போட்டு ஒட்டி வைத்திருப்பார்கள். வகுப்பறை ஜன்னல் திறந்து இருக்கும், ஜன்னல் வழியாக பார்த்தால் பார்வையில் பாஸ் ஃபெயில் தெரிந்துகொள்ளலாம். நான் நான்காம் வகுப்பு படித்தபோது, ரிசல்ட் அன்று காலை அவசர அவசரமாக ரிசல்ட் பார்க்க பள்ளிக்கு ஓடினேன். என்னுடன் என் தங்கையும் வந்தாள். பெயில் பட்டியலில் என் பெயர் முதலாவதாக இருந்தது. மொத்தம் மூன்று பேர் பெயிலாகி இருந்தார்கள். என் சகோதரி மூன்றாவதில் இருந்து நான்காவது பாஸாகியிருந்தால். ஐயா ஜாலி... இனிமே நானும், நீயும் ஒரே கிளாஸ் என்றாள். வீட்டுக்கு போனேன்... எனது முதுகுத் தோலை பார்த்து எனக்கே பரிதாபம் வந்தது. நான் ரொம்ப ஒல்லி பிச்சி... ஓமக்குச்சி மாதிரி. என் அம்மா கையில் எது கிடைக்கிறதோ, அதைக் கொண்டுதான் விளாசுவால். சில சமயம் துடைப்பை கட்டை அடி கூட வாங்கியிருக்கிறேன்.
வீட்டுக்குப் போனபோது “என் அம்மா, என்ன பெயில் தானே” என்று கேட்டுவிட்டு, எந்த ஆயுதத்தையும் எடுக்காமல் சமையல் வேலையை கவனிக்க போய்விட்டாள். சமையல் வேலை முடிந்ததும் கவனிப்பாள் என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தேன். அதற்குள் வெளியே போயிருந்த என் அப்பா வந்து “பெயில் தானே இருக்கட்டும்.. கடகால் ஸ்ட்ராங்கா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவரும் சாதாரணமாக இருந்தார். என் முதுகு தோலுக்கு எந்த சேதாரமும் ஏன் ஏற்படவில்லை என்பது நான் சாப்பிட உட்கார்ந்த போது தான் தெரிந்தது. “போன வாரமே, உன் சித்தி உன்ன பெயில் போடப்போறேன் என்று சொல்லிவிட்டாள். உனக்கு ஏபிசிடி சரியா தெரியல... சின்ன ஏபிசிடி க்கும், பெரிய ஏபிசிடி குமே வித்தியாசம் தெரியல. ஒரு வருஷம் நாலாங்கிளாஸோ படிக்கட்டும் என்று சொல்லிவிட்டாள்...” என் மம்மியின் ரியாக்ஷன் சாதாரணமாக இருந்ததற்கு என்ன காரணம் என்பது அப்போதுதான் தெரிந்தது. நானும் என் தங்கையும் ஒரே கிளாஸ் என்பதால் பள்ளியில் நடக்கும் விஷயத்தை உளவு சொல்லிவிடுவாள் என்பதால், நான் ரொம்பவும் நல்ல பையனாக இருக்க முயற்சி செய்வேன். அந்த நாலாங்கிளாஸ் என்னை பக்குவ படுத்தியது. என் சித்தி எப்பவுமே கிரேட் எதையும் சரியாக செய்வாள். என் விஷயத்திலும் அதைத்தான் செய்தாள்.
நான் படித்தது கடைசிவரை ஆண் - பெண் இருபாலர் பள்ளி தான். அப்போதெல்லாம் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு. நடுவே மாதாந்திர தேர்வு நடக்கும், அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு முடிந்து தேர்வுத்தாள் தரும்போது ஒவ்வொரு மாணவனையும் அழைத்து ஆசிரியர் தருவார். பெயில் மார்க் வாங்கிய மாணவனின் மார்க் சீட்டை பிரித்து வைத்து, அவன் என்ன தவறு செய்தான் என்பதை மறு ஒளிபரப்பு செய்து, ஒவ்வொரு தவறுக்கும் பிரம்பால் அடி விழும். எத்தனை தவறோ அத்தனை பிரம்படி கிடைக்கும். எனக்கெல்லாம் எப்படியும் பத்து பதினைந்து பிரம்படிக்கு குறையாது. மாணவர்கள் அடி வாங்கினால், மாணவிகள் சிரிக்க மாட்டார்கள். காரணம்... அவர்களுக்கும் அந்த அடி விழும் என்ற பொது நலன் தான். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, நான்தான் ஸ்கூல் லீடர். அப்போது என் மார்க் கொஞ்சம் சுமாராக இருந்ததும் ஒரு காரணம்.
இந்து உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும்போது எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் பெரும்பாலும் புத்தகத்தைப் பார்த்து பாடம் நடத்த மாட்டார்கள். ஆனால் புத்தகத்தில் உள்ள விஷயம், அவர்கள் சொல்லும் போது இருக்கும். கோனார் நோட்ஸ் எல்லாம் வாங்காதீர்கள், அது பணம் விரயம். எல்லாம் நீ வைத்திருக்கும் புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து, நான் புதிய புத்தகம் வாங்கியதாக நினைவில்லை. ஏற்கனவே படித்த மாணவர்களிடம் பேசி, பாதி விலையில் அல்லது கால் விலையில் அவர்கள் புத்தகங்களை வாங்கி படித்திருக்கிறேன்.
எமிலி டீச்சர் தான் எங்களுக்கு சயின்ஸ் டீச்சர். அவரது கணவர் ஸ்டாலின், சரித்திர ஆசிரியர். இருவருமே நன்றாக சொல்லித் தருவார்கள். சந்தேகம் கேட்டால், பொறுமையாக சொல்வார்கள். பாடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால்.. திடீர் என்று கேள்வி கேட்டு... பதில் சரியாக சொல்லவில்லையென்றால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் வார்த்தைகளையெல்லாம் எமிலி டீச்சர் பயன்படுத்துவார். வெள்ளிக்கிழமை தமிழ் ஆசிரியர் சண்முகசுந்தரம் இலக்கண வகுப்பு நடத்துவார். சோதனையாக என் பெயரைச் சொல்லி எழுந்திரு என்று என்னிடம் கேள்வி கேட்பார். அவருக்கு பயந்து நான் இலக்கணம் கற்றேன், இப்போது மறந்து போனேன்.
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு என்னைவிட என் அம்மா ரொம்பவும் டென்ஷனாக இருந்தாள். புதியதாக தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, சென்னையில் வாங்கி என்னையும் என் சகோதரியையும் கருமாரி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, அந்தப் புத்தகங்களை கருமாரியம்மன் காலில் வைத்து நல்லபடியா பாஸ் செய்ய வேண்டும் என்று எங்கள் சார்பாக எங்கள் அம்மா வேண்டிக்கொண்டாள். நான் விடிகாலை, இரவு என்று விழுந்து விழுந்து படித்தேன். ஆனால், என் சகோதரி சாதாரணமாக பயப்படாமல் இருந்தாள். பொதுத்தேர்வு எழுதினோம்... பேப்பரில் என் பெயரை தேடுவதற்கு முன், எல்லா பெருமாளையும் வேண்டிக்கொண்டு தேடினேன். என் நம்பர் இருந்தது... பாஸ் என்று பெருமூச்சு விட்டேன். பள்ளிப்படிப்பு முடிந்த மறுநாளே, என் அப்பா என்னை ஒரு மார்வாடி கடையில் வேலைக்கு அனுப்பினார்.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு என் வாழ்க்கையில் நிறைய திடுக்கிடும் திருப்பங்கள். இப்போது நினைத்தாலும்... எனக்கே அது எல்லாம் ஆச்சரியங்கள் தான். அவை எல்லாமே, நான் மகிழ்ந்து ரசித்த ஆச்சரியங்கள். பள்ளிக்கூடம் எனக்கு பல வாழ்க்கை பாடங்களை சொல்லித் தந்தது.

Leave a comment
Upload