
ஐரோப்பா

லண்டனில் ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பில் கேட்ஸ் கரோனா பெருந்தொற்று ஏதோ தன்னாலும், அமெரிக்காவின் ஆண்டனி ஃபாசியினாலும் தான் பரவியது என்று இணையத்தில் வளைய வருகிற வதந்தி பற்றி ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்.

(ஆண்டனி ஃபாசி அமெரிக்க விஞ்ஞானி மருத்துவர். அமெரிக்க நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசின் இயக்குனர். அமெரிக்க அதிபரின் பிரத்யேக மருத்துவ ஆலோசகர். )
கேட்ஸ் சொல்வது இருக்கட்டும். என்னிடமே பலர் இந்த பில்கேட்சை இவ்ளோ நம்பினோம்ப்பா ஆனாலும் இப்படி பண்ணிட்டானே என்று சொல்லும் போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறேன்.
அதற்காக எனக்கு பில் கேட்ஸ் ஏதோ சித்தப்பா மவன் போலவும், அவர் எனக்கு ரொம்ப நெருக்கம் அப்படியெல்லாம் செய்திருக்க வாய்ப்பேயில்லை , எனக்கு நூறு சதவிகதம் தெரியும் என்றும் சொல்லவில்லை.
ஆனால் இதை கேட்ஸ் செய்தார் என்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது என்பது தான் புரியவில்லை.
இதைத்தான் கேட்சும் தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
என்னையும் ஆண்டனி ஃபாசியையும், இந்த சதி வலை செய்ததாக சொல்லும் கட்டுக் கதைகள் எப்படி உருவாகின என்பதை தெரிந்து கொள்வது தான் எனது அடுத்த ஆர்வம் என்கிறார்.
நரம்பில்லாத நாக்கை வைத்துக் கொண்டு நம் மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். தற்போது எலும்பும் நரம்பும் இருக்கும் விரல்களைக் கொண்டு சமூக ஊடகங்களில் அதை விட மோசமாக என்ன நினைத்தாலும் அதை உண்மை போலவே பரவச் செய்வதிலும் தேர்ந்து விட்டார்கள்.
ஒரு உபரி தகவலாக, கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளையிலிருந்து 1.75 பில்லியன் டாலர்களை கரோனா தொற்றுக்கு எதிராக நன்கொடையாக கொடுக்க முன்வந்திருக்கிறார் பில் கேட்ஸ். தடுப்பூசி, மற்றும் மருத்துவம், உபகரணங்கள் என்று இந்த நன்கொடை உபயோகப்படும்.
ஸ்பெயின்

இயேசு போல, உயிர்தெழுந்த மூதாட்டி.
ஸ்பெயினில் 85 வயது மூதாட்டி புதைக்கப்பட்ட 9வது நாள் உயிரோடு திரும்பியிருக்கிறார்.
ஷோவ், வடக்கு ஸ்பெயினில் ஒரு ஊர்.
அங்கு உள்ள ஒரு முதியோர் காப்பகம். இங்கு கரோனா நோய்த் தொற்று வந்தவர்களை இன்னொரு முகாமுக்கு மாற்றியிருக்கிறார்கள். சுமார் 200 கி.மீ தூரமுள்ள அந்த காப்பகத்தில் மாற்றியதும் சில நாட்கள் கழித்து ரோஜிலியா பிளாங்கோ என்ற மூதாட்டி இறந்து போய் விட்டார் என்ற தகவல் வந்ததும் அவர் குடும்பத்தினர் நொறுங்கிப் போய் விட்டனர்.
அதிலும் அவரது கணவர் அதே ஷோவ் என்ற ஊரில் உள்ள முதியோர் காப்பகத்தில் தான் இருக்கிறார். ஒரே அழுகை. சோகம்.
அடுத்த நாளே ரோஜிலியா பிளாங்கோ என்ற மூதாட்டியை இறுதி சடங்கு செய்து புதைத்தும் விட்டதாக தகவலும் வந்தது.
பாழாப்போன கரோனாவால் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை யாராலும்.
சோகம் தாங்காமல் ஏறக்குறைய ஒன்பது நாள் கழிய, திடீரென நலமோடு நடந்து திரும்ப வந்தார் ரோஜிலியா பிளாங்கோ என்ற 85 வயது மூதாட்டி.
அவர் கணவரக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம் என்று அவர் குடும்பமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் திக்கு முக்காடி போனார்கள்.
விசாரித்ததில் அதிசயம் ஒன்றுமில்லை.
பிளாங்கோவை கரோனா காரணமாக இன்னொரு முகாமுக்கு மாற்றும் போது கூடவே இன்னொரு பெண்மணியும் அவருடன் மாற்றப்பட்டார். அவர்கள் இருவருடைய பெயரும் இடம் மாறி விட்டது. ஒரு மூதாட்டி கரோனாவால் இறந்தது உண்மை. ஆனால் அது நம் ரோஜிலியா பிளாங்கோ இல்லை.
ஒரு உயிர் போனது சோகம் என்றாலும், போனதாக சொன்ன உயிர் திரும்ப வந்தது மகிழ்ச்சி.
அமெரிக்கா

டிரம்ப் பதவி போவதற்கு முன்பு வாஷிங்டன் காபிடல் ஹில்லில் நடந்த வன்முறை ஆக்ரமிப்பிற்கு அதன் போலீஸ் துறை முதன்மை அதிகாரி யோகானந்தா பிட்மேன் மன்னிப்பு கோரியிருக்கிறார்.
வாஷிங்டனில் நடந்தது, அமெரிக்க ஜனநாயகத்திற்கு நேர்ந்த கரும்புள்ளி . இதற்காகவே டிரம்பை இம்பீச் செய்ய முடியுமா என்ற செய்தியை சென்ற வாரத்தில் பார்த்தோம். ஆனால் ரிபப்ளிகன் செனட்டர்கள் டிரம்பிற்கு ஆதரவாகவே பேசுவார்கள் என்ற முடிவைத் தொடர்ந்து டிரம்ப் இம்பீச் ஆவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
வாஷிங்டன் வன்முறை அமெரிக்க ஜனநாயகத்தின் வெட்கக்கேடு என்றால் இந்தியாவில் செங்கோட்டையில் தேசத் துரோகிகள் செய்த செயல் மட்டும் என்ன அதற்கு குறைவானதா ?? அது மட்டுமல்ல. செங்கோட்டையில் இந்தியக் கொடியை இறக்கி விட்டு விஷமிகள் வேறொரு கொடியை ஏற்றும் வரை அனுமதித்ததற்கு எந்த போலீஸ் மன்னிப்பு கேட்கும் ???
வாஷிங்டனில் நடைபெற்ற வன்முறை உலகத் தலைகுனிவு என்றால் தில்லி செங்கோட்டையில் நடந்தது தேசத்தின் தலைகுனிவு.
இப்படி வன்முறை நடக்கட்டும் அப்பொழுது தான் போராட்டக்காரர்கள் உண்மையில் யார் என்பது தெரிய வரும் என்றும் அரசு காத்திருந்ததாக ஒரு சில கருத்துக்கள் உலாவருகின்றன.
என்ன ராஜ தந்திரமாக இருந்தாலும் தேசியக் கொடியை அவமதித்து இந்த அராஜகம் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தென்னமெரிக்கா
ஜமைக்கா.

இங்கு சமீபத்தில் வீடில்லாமல் தெருவில் தூங்கிக் கொண்டிருந்த நால்வரை வெட்டிக் கொன்றிருக்கிறான் ஒருவன்.
இன்னும் இரண்டு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்களாம்.
மனிதர்கள் விசித்திரமானவர்கள். விசித்திரமான மன நோய் கொண்டவர்கள்.
பிச்சையெடுத்து, வேறு வழியில்லாமல் தெருவில் தேமேனென்று தூங்கிக் கொண்டிருப்பவர்களை ஏன் தேடி தேடி வெட்டிக் கொல்ல வேண்டும்.
இது ஒரு வகையான மன நோயாக இருக்கக் கூடும்.
இருந்தாலும் அரசு தரப்பில் வீடில்லாமல் ஆதரவில்லாமல் தெருவில் தூங்குபவர்களை அரசின் காப்பகத்தில் வந்து தூங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சீரியல் கில்லர் என்று சந்தேகப்படும் நபர் ஒருவரை பிடித்துள்ளது போலீஸ். ஆனால் அவன் தான் கொலைகாரனா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
சரி, இது போன்ற ஆபத்து இருக்கிறதே வந்து காப்பகத்தில் தூங்க வேண்டியது தானே என்றால், 55 வயதான, ஜெனாஸ் கேல் என்பவர் சொல்லும் போது “அதெல்லாம் முடியாது. தெருவில் தூங்கும் போது இருக்கும் சுதந்திரம் காப்பகத்தில் தூங்கும் போது வருவதில்லை. என்ன ஆனாலும் நான் தெருவில் தான் தூங்குவேன் என்று சொல்லியிருக்கிறார். அந்த கில்லர் என்னை கொல்ல வருவானோ வரட்டும். நான் அவனைக் கொல்கிறேன்” என்று சூளுரைத்திருக்கிறார்.
பிரச்சினை என்னவென்றால் அந்த சீரியல் கில்லராகப்பட்டவன் தெருவோரம் படுத்திருப்பவர்களை அவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது தான் கொல்கிறானாம்.
வறுமைக் கொடுமையில் ஆதரவற்ற நிலையில் தெருவில் படுத்திருப்பவர்களை கொல்வதற்கு ஒருவன் புறப்பட்டிருக்கிறான் என்றால் மனநோய் இல்லாமல் வேறென்னவாக இருக்கும் ??
ஆசியா
ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானின் தாலிபான்! இஸ்லாமிய தீவிரவாத இயக்கம். அரசுக்கும் இவர்களுக்கும் தான் அங்கு எப்போதும் பிரச்சினை.
ஆப்கானிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து 112 மில்லியன் டாலர்களில் தடுப்பூசி வரவிருக்கிறது.
அந்நாட்டு வன்முறைகளுக்கிடையே இந்த தடுப்பூசி திட்டம் நிறைவேறவிருக்கிறது.
இதற்கு தாலிபானைச் சேர்ந்த ஜபிஹுல்லா முஜாஹித் சொல்லும் போது தாலிபான் இயக்கம் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு ஆதரவு தந்து அதை செயல்படுத்து உதவும் என்று சொல்லியிருக்கிறார்.
கோவாக்ஸ் என்பது ஏழை பாழையாக உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் உலக சுகாதார நிறுவனத்தின் திட்டம்.
அதிகாரிகளுக்கு என்ன கவலை என்றால் வீடு வீடாக சென்று இந்த தடுப்பூசி போட முடியாது. மொத்தமாக ஒரே இடத்தில் இருந்து தான் மக்களை வரவழைத்து தடுப்பூசி போட முடியும்.
இந்த தாலிபான் ஆட்கள் அப்படி ஒரு இடத்தில் இருக்கும் போது தீவிரவாத செயல்கள் செய்வார்களோ என்பது தான்.
அதற்குத் தான் தாலிபான், "இல்லையில்லை நாங்கள் தடுப்பூசிக்கு ஆதரவு தருவோம் உதவுவோம்" என்று சொல்லியிருக்கிறது.
போகிற போக்கில் இன்னொரு யோசனை.
இந்த தாலிபான் பயலுகளை எல்லாம் பிடித்து தீவிரவாதத்திற்கு எதிராக ஏதேனும் தடுப்பூசி போட்டு விட்டுருங்கப்பா…. உலகம் தப்பிக்கும்.
ஹாங்காங்

ஹாங்காங்கில் உருவாக்கப்படும் சோஃபியா ரோபாட்டுக்கள் இனி முதியவர்களையும், நோயுற்றவர்களையும் பார்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது.
சோஃபியா என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாட், ஹாங்காங் தயாரிப்பு.
சோஃபியா படு புத்திசாலி. நம்ம சுஜாதா எழுதிய என் இனிய இயந்திராவில் வரும் ஜீனோ போல ஏறக்குறைய அதற்கு மனிதனுக்கு ஈடாக சரிக்கு சரி பேசும் அளவு புத்திசாலி.
ஹான்சன் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் தான் இந்த சோஃபியாவை உருவாக்குகிறது. 2021 ல் ஆயிரக்கணக்கான சோஃபியாக்களை உருவாக்கி மார்க்கெட் செய்வது தான் இந்த நிறுவனத்தின் திட்டம்.
இது போன்ற பெருந்தொற்று நேரத்தில் மனிதர்களை விட இயந்திர மனுஷிகள் பேருதவியாக இருக்கும் என்றே அனைவரும் நம்புகிறார்கள்.
சீனாவின் ஊஹான் நகரில் குட்டி ரோபாட்டுகள் தான் கரோனா மருத்துவமனைகளில் மாத்திரை மருந்து கொடுப்பது என்று பார்த்துக் கொண்டது. அது பார்க்க குட்டியாக மெஷின் போல இருக்கும்.
ஆனால் சோஃபியா பார்க்க கொள்ளை அழகும். அதைப் பார்த்தாலே பாதி உடம்பு சரியாகி விடும்.
சோஃபியாவிடம் மனிதர்கள் ரோபோட்களைப் பார்த்து பயப்பட வேண்டுமா என்று கேட்டால் உடனே பதில் சொல்கிறது இப்படி.
“யாரோ சொன்னார்கள் பயப்பட ஒன்றுமேயில்லை. பயம் ஒன்றைத் தவிர”
சோஃபியாவை பார்க்க வேண்டுமா ???
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் அலக்ஸாண்டர் ஹில்ஸ் என்ற இடம்.
இது போன்ற சம்பவம் இரண்டாவது முறை இங்கு எழுதுகிறோம் என்று நினைவு.

தங்கள் நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்ற ஒரு கணவன் அவரது கர்ப்பிணிப் பெண் இருவரையும் திடீரென வந்த ஒரு லாண்ட் குரூசர் கார் சம்பவ இடத்திலேயே மோதி கொன்று போட்டது.
காரை ஓட்டி வந்தவன் 17 வயது சிறுவன் இந்த காரை திருடி வந்தவன்.
அவன் வயசுக்கு லைசன்ஸ் கூட தர மாட்டார்கள்.
அந்த விபத்து நடந்த 24 மணி நேரத்தில் அந்த இடத்தில் மக்கள் கூடி கடும் சோகத்தோடு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

சிறுவன் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இது போன்ற இளம் வயதினரையும் இரும்புக் கரம் கொண்டு தண்டிக்க வேண்டும் என்ற கூக்குரல் எழும்பத் துவங்கியிருக்கிறது.
இறந்து போன கேட் என்ற கர்ப்பிணிப் பெண்ணின் அத்தை சொல்கையில் இந்த உலகின் அனைத்து அழகான விஷயங்களின் கலவை தான் எங்கள் கேட் என்று கதறுகிறார்.
பணம் இருக்கிறது, கார் இருக்கிறது என்று தங்கள் குழந்தைகளை இது போன்ற செயல்களில் அனுமதிக்கும் பெற்றோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
ஆப்ரிக்கா
ஜிம்பாப்வே

(இது ஹாங்காங் டாக்ஸ் டீத் மலைப்பாதை)
மலையேறியிருக்கிறீர்களா ??அது ஒரு சுகானுபவம். நான் சொல்வது இமயமலை ஏறுவது போல ரொம்ப சிரமமான புரொஃபஷனல் ரீதியில் அல்ல.
கொடைக்கானல், ஊட்டி போன்ற சின்ன மலைகள் தான்.
அதிலும் கொஞ்சம் குளிர் இருக்கும் சமயம், மூச்சு வாங்க, கால் வலிக்க, உடல் நோவ இரண்டு மூன்று மணி நேரங்கள் ஏறிய பின்பு தெரியும் இயற்கை காட்சிகள்… மாயா உலகத்தின் முப்பரிமாண வடிவங்கள் அத்தனை வண்ணங்களிலும், உயரத்தில் தெரிய.. அது ஒரு ஏகாந்தம்.
ஆனாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மிகுந்த கவனம் தேவை. எங்கு அழகு அதிகமாக இருக்கிறதோ அங்கு ஆபத்தும் இருக்கும்.
கீழே வரும் ஜிம்பாப்வே செய்தியைப் பார்க்கும் முன், ஹாங்காங்கில் உள்ள டாக்ஸ் டீத் (நாய் பல்லு மலை). அங்கு ஒரு சீனர். வயதாவனர். கீழே உள்ள வீடியோவில் பார்த்தீர்களானால் தெரியும். ஒரு செங்குத்தான பாறையில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழே இறங்குகிறார். (ஒன்றும் ஆகவில்லை நல்லவேளையாக) (சிவப்பு டீசர்ட்). தேவையில்லாத ஸ்டண்ட். விழுந்தால் எலும்பு நொறுங்கிப் போகும். தேவையா ?? அவரை அருகே நின்று கொண்டு செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருப்பதை தவிர வேறு வழிதெரியவில்லை எனக்கு. வீடியோவில் நண்பர் சங்கீதா தூரத்திலிருந்து "யோவ் லூசாய்யா நீ" என்று கத்துவது அந்த சீனரைப் பார்த்தா என்று உறுதியாக தெரியவில்லை.
இனி. ஜிம்பாப்வேயில் உள்ள விக்டோரியா ஃபால்ஸ்.
அழகான. அருவி.
சமீபத்தில் அங்கு ஒரு ஆள் மலைஉச்சியில் அருவியின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கிறார்.
அதை ஒரு பெண் படமெடுக்கிறார். சில விநாடிகள் தான். அவருக்கு கால் சறுக்கி விட சடுதியில் பொங்கும் அருவியின் பனிப் புகையினூடே அவர் காணாமல் போகிறார்.
அந்தப் பெண் எடுத்த கடைசி படம் இப்போது வைரலாகி விட்டது.

கடைசி தகவலின் படி கீழே விழுந்த 40 வயது ஆளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது ஆனால் அதை எடுக்கத்தான் இன்னமும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
விக்டோரியா நீர்வீழ்ச்சி 2 கி.மீ அகலம் கொண்டது. ஜாம்பசி ஆற்றின் குறுக்கே வரும் இந்த நீர்வீழ்ச்சியை முதன் முதலில் பார்த்து கண்டுபிடித்தது 1855ல் டேவிட் லிங்க்ஸ்டோன் என்ற ஆங்கிலேயர். தம் நாட்டு ராணியின் பெருமையாக இதற்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார்க்ள் . (யார் ஊட்டு நீர்வீழ்ச்சிக்கு யார் பேரு வெக்கிறது ?)
ஆனால் உள்ளூரில் ஜிம்பாப்வேயில் இதற்குப் பெயர் மோசி-ஆ-துன்வா. அதாவது கர்ஜிக்கும் (பனிப்) புகை என்று அதற்கு அர்த்தமாம்.
ராம்.

Leave a comment
Upload