தொடர்கள்
ஆன்மீகம்
தொடர்ச்சி... ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அரசர் கோயில்.... - ஆரூர் சுந்தரசேகர்.

20210121202030444.jpeg

“ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள்”

இந்த கோயில் வைகானச ஆகம கோயில்..
கோயிலின் ஸ்தல விருக்ஷம் அரசமரம்....

ஸ்தல சிறப்பு:

அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயரை இத்தலம் பெற்றுள்ளது.

நவக்கிரகங்களில் அஷ்ட ஐஸ்வா்யங்களையும் சகல சம்பத்துக்களையும் அள்ளித்தரும் ஶ்ரீசுக்ரபகவான் இத்தலத்தில் வெள்ளிக் கிழமை தோறும் சூட்சும ரூபத்தில் எழுந்தருளி பெருமாளையும் தாயாரையும் வழிபடுவதாக ஐதீகம்.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாலாறு, அரசர் கோயில் ஸ்தலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அதிசயம் கொண்டதாக அமைந்துள்ளது. இது தட்சிண பிரவாகம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்தக் கோவிலில் நடத்தபெறும் பித்ரு தோஷ பரிகார பூஜையில் கலந்து கொண்டால், நம்முடைய பித்ரு தோஷம் விலகி, பித்ருக்களின் ஆசியை நாம் பெறலாம்.

20210121202106272.jpeg

இந்த கோவிலின் தாயார் சந்நிதி கோமுகத்திற்கு தொடர்ந்து ஆறு வெள்ளிகிழமைகளில் சுக்கிர ஓரையில் (காலை 6 மணி முதல் 7 மணிக்குள்) தூய நீரால் சுத்தம் செய்து, மஞ்சள் தடவி, குங்குமம், பூ, வெற்றிலை பாக்கு பழம் வைத்து எண்ணிய காரியம் நிறைவேற வேண்டி வணங்கினால் நல்ல செய்தி வரும்.

தாயார் சந்நிதியில் காணப்படும் சடாரியின் மேல் பக்கமும் தாயாரின் வலது திருவடியில் ஆறு விரல்கள் உள்ளன.

தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின் தலையில் இருந்து எண் பட்டையிலான ஐந்து கல்தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண் ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன.

சுக்கிரன் ஸ்தலம்

இங்குள்ள தாயாரை சுக்கிரன் வழிபட்டதால், இது சுக்கிரன் ஸ்தலம். சுக்கிரன் அதிர்ஷ்ட கிரகம், வேலை வாய்ப்பு, கல்யாணம், குழந்தைகளையும், சுகபோக வாழ்க்கையும் அளிக்கக்கூடியவர். பொன், பொருள் ஆபரண சேர்க்கையை கொடுக்கக்கூடியவர். தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கக்கூடியவர். எனவே ஶ்ரீ பெருந்தேவி தாயாரை வந்து வணங்கினால், சுக்கிரன் அனைத்தையும் தருவார் என்பது ஐதீகம்.

20210121202150360.jpeg

பிரார்த்தனை ஸ்தலம்:

இங்கு பெருமாள் கையிலே கமலத்துடன் மேற்கு முகமாக இருப்பது மிகவும் விசேஷம். இவர் வெற்றிகளை அள்ளி கொடுக்கக்கூடியவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு, தொழிலில் நல்ல முன்னேற்றம், அரசியல்வாதிகளுக்கு பெரும் பதவி, போட்டித் தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்கு அதாவது டாக்டருக்கு படிக்க, (NEET exam போன்ற), டாக்டருக்கு படித்து விட்டு மேற்படிப்பு படிக்கிறவர்கள் இந்த பெருமாளை வணங்கினால், அவர்களுக்கு மதி நுட்பத்தை அளித்து அந்த போட்டிகளில் தேர்வு கொடுக்கக்கூடியவர். இங்கு வந்து வணங்கியவர்கள் மருத்துவத்துறையில் பெரிய பதவியில் உள்ளனர்.

20210121202222385.jpeg

அக்ஷய பாத்திர கணபதி

இந்த கோயிலில் சிவபெருமான் பிரதிஷ்டை செய்த அக்ஷய பாத்திர கணபதிக்கு அக்ஷய பாத்திரத்தை ஶ்ரீபெருந்தேவி தாயார் கொடுத்ததாகவும், பின்பு அதனை சூரியனுக்கு கொடுத்ததாகவும், சூரியன் அதனை திரௌபதிக்கு கொடுத்ததாக ஐதீகம். இந்த பிள்ளையாரை கோர்ட் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கும், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆவதற்கும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

மூலிகை கருடன்:

இங்குள்ள கருடன் மூலிகைகளால் செய்யப்பட்டவர். இவர் நமது உடலில் ஏற்படும் நோய், நொடிகள் எல்லாவற்றையும் போக்கக் கூடியவர்.

ஹரிமர்ஹட அனுமான்:

இங்குள்ள அனுமார் நவகிரகங்கள் பூஜிக்கக் கூடிய சாந்த, பக்த ஆஞ்சநேய சுவாமி. அவருக்கு மறு பெயர் ஹரிமர்ஹட அனுமான். இங்குள்ள பெருமாள் தான், அனுமனுக்கு கலியுகம் முடிந்தவுடன் மோட்சம் கொடுப்பதற்கான சிலா ரூபங்கள், அடையாளங்கள் இங்கே உள்ளன.

விசேஷமான நாட்கள்:

இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் விசேஷமானவை.
வெள்ளிக்கிழமை: கல்யாணம், குழந்தை பாக்கியம், வியாபார அபிவிருத்திக்கும்,

செவ்வாய்கிழமை: வீடு, வாகனம் வாங்குவதற்கும், ஞாயிற்றுக்கிழமை: செய்தொழிலில் முன்னேற்றத்திற்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காகவும், அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதற்காகவும், அரசியலில் நிலைத்து இருக்கவும் வந்து வணங்குகின்றனர்.

விசேஷமான ஹோமங்கள்:

இங்கு தாயாருக்கு ஶ்ரீசுக்த ஹோமம் ரொம்ப விசேஷம். இந்த ஹோமம் பண்ணினால், தொழில் நன்கு அபிவிருத்தி ஆகும். இதேபோல் பெருமாளுக்கு மகா சாந்தி ஹோமம். இந்த ஹோமம் பண்ணினால் சந்தோஷமும், சமாதானமும் ஏற்படும். அதே மாதிரி விஷ்ணுபதி புண்ணிய காலம், வாஸ்து ஹோமம் இந்த நாலு ஹோமமும் இங்கு மிகவும் விஷேசம்.

இத்தலத்திற்கு வந்து நம்பிக்கையோடு எம்பெருமானையும் தாயாரையும் வழிபட நன்மைகள் மேலோங்கும்.

கோயில் திருவிழாக்கள்:

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருஊரல் விழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. வரலட்சுமி விரதத்தன்று இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. இங்கு சித்ரா பௌர்ணமி பாலாற்றில் நடைபெறும் திருஊரல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.

திருஊரல் திருவிழா:

சித்திரையின் வெப்பத்தைத் தணிக்க, பாலாறு தன்னையும், தன்னைச் சார்ந்த மக்களையும் குளிர்விப்பதாக இவ்விழா அமைந்துள்ளது. சித்திரையில் வரும் பௌர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். பாலாற்றில் சுமார் 100 சதுர மீட்டர் மணல் திட்டு உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்தில் மணலை அகழ்ந்து எடுத்து நீர் சுரக்கச் செய்வார்கள். பெருமாள் மணல் திட்டில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வார் அந்த நீரில் சுற்றி வந்தபின், தீப ஆராதனைகள் காட்டப்படும். பிறகு நிலவொளி முடிந்து, விடியும் வரை அங்கேயே காட்சி தருவார். விடியலில் மீண்டும் சக்கரத்தாழ்வார் நீரில் சுற்றி வருவார். அதன்பின் தீபாராதனைகள் முடிந்து பழையபடியே, அரசர் கோவில் வந்து சேர்வார். இவ்விழாவே திருஊரல் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழாவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

தினமும் காலை : 07.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை: 4.00 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்..

மேலும் விபரங்களுக்கு:

இந்த கோயில், மதுராந்தகம் ஏரிக்காத்த இராமர் கோயில் இந்து அறநிலைத்துறையின் கீழ் வருவதால், நிர்வாக சம்மந்தமாக நிர்வாக அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

பூஜை, பரிகாரம் சம்மந்தமாக கோயில் பட்டாச்சாரியார் அவர்களை +91 9698510956 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

கோயிலுக்கு செல்லும் வழி: செங்கல்பட்டிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ள படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இந்த அரசர் கோவில் என்ற ஊர் உள்ளது.

செங்கல்பட்டிலிருந்து மாநகர பேரூந்து, தனியார் பேரூந்து வசதி உள்ளது. படாளம் கூட்ரோட்டிலிருந்து ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

பழம்பெரும் அரசர்கோயில் ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் திருக்கோயில் சென்று தரிசனம் செய்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.