தொடர்கள்
தொடர்கள்
கேரெக்டர் - அறியப்படாத மனிதர்கள் - 9 - வேங்கடகிருஷ்ணன்

20210126203348265.jpg

புது வீட்டுக்கு நாங்கள் மாறி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. தினமும் காலையில் நான் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அந்த ஏரியாவுக்கு நான் புதுசு என்பதால், சில நாய்கள் குறைக்கும், சில முறைக்கும், சில என் மனைவி போல பெருசா கண்டுக்காம தலையை மட்டும் தூக்கி பாத்துட்டு, திரும்பவும் தூக்கத்தை கன்டின்யூ பண்ணும். ஆனால் நான் ஆச்சரியமாக பார்த்த விஷயம்... ஒரு குருவிக்கார பெண்மணியை, தினமும் என் வழியில் சந்திப்பேன்... எந்த நாயும் அவரை பார்த்து குறைப்பதே இல்லை. மாறாக சுற்றி சுற்றி வரும். இது எனக்கு மிக வியப்பை தந்தது. கவனிக்க துவங்கினேன். சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தேன்...

காலை ஏழு மணிக்கு எங்கள் பகுதிக்கு வந்து விடுவார். வரும்போது கையில் ஒரு துணிப்பை இருக்கும், சிறிது புடைப்பாய். அதிலே கையை விட்டு சரியாய் மூன்று பிஸ்கட்டுகள் தான், ஒவ்வொரு நாய்க்கும் அன்றைய கோட்டா போலும். போட்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்தார். அடுத்த அதிசயமாய், நாய்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு.. மேலும் கேட்டு பின்னாலேயே சென்று தொந்தரவு தரவில்லை. ரிலே ரேஸ் போல அடுத்த நாயிடம் அவரை ஒப்படைத்துவிட்டு நின்று கொண்டன. இது கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்தது. பிஸ்கட் தீர்ந்தது. கடைசியாக வந்த நாய்க்கு பிஸ்கட் இல்லை, அவர் எதுவும் போடவில்லை, அதுவும் நகரவில்லை. அதனருகே குனிந்தவர், அதன் தலையை அன்போடு வருடி, நாளைக்கு என்று சொன்னார். பார்த்துக்கொண்டிருந்த எனக்கு உண்மையிலேயே சிலிர்த்துவிட்டது. அந்த ஜீவனும், அந்த பாச வார்த்தைக்கு கட்டுப்பட்டு சென்று விட்டது. அடுத்த நாள், சொல்லிவைத்தாற்போல அவர் துவங்கியது அந்த நாயிடமிருந்து தான். தந்த வாக்குறுதியை மீறாத ஒருவர். முதல் ஆச்சரியம் அது.

பிஸ்கட் விநியோகம் முடிந்தவுடன், அவர் தனது வேலையில் ஆழ்ந்து விடுவார், பால் கவர், பாட்டில்கள், பிளாஸ்டிக்குகள் என்று பலவற்றையும் குப்பைத்தொட்டியில் இருந்து சேகரித்து, தன் உடல் முழுவதும் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும், பல வகை பைகளில் போட்டுக்கொள்கிறார், மிகவும் ஒல்லியான உருவம் கொண்ட அவர் கூடிக்கொண்டே போகும் எடையை எப்படி தங்குகிறாரோ என்பது இரண்டாவது ஆச்சரியம். பால் கவரை குத்தி எடுப்பதற்கென்றே அவர்கள் சொந்தமாய் தயாரித்து வைத்திருக்கும் ஒரு பொருள், பாட்மிண்டன் பேட்டை கைப்பிடியோடு வெட்டி எடுத்துக்கொண்டு அதில் ஒரு முனையில் கூர்மையாய் உள்ள இரும்புக்கம்பியை பொருத்தி இருக்கிறார். அதேபோல டென்னிஸ் பாட்டின் முனையில் ஒரு தட்டையான காந்தத்தை பொருத்தி இருக்கிறார். அதை அப்படியே குப்பை தொட்டியில் இறக்கி ஒரு துழாவில் எல்லா இரும்பு சாமானும் ஒட்டிக்கொள்கிறது. காந்தத்தின் பயன்பாடு என்னுடைய அறிவியல் வகுப்பிற்கு பிறகு இந்த திறந்த நிலை பள்ளியில் தான் பார்க்கிறேன். இது இரண்டும் முடிந்த பிறகு, ஓஎம்ஆர் சாலையை ஒட்டி இருக்கும் சிறிய டிபன் கடையில், தன்னுடைய எல்லா முட்டைகளையும் இறக்கி வைத்துவிட்டு... ஓரமாய் ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு வைத்திருக்கும் நேற்றைய எச்சில் இலைகளை ட்ரம்மோடு தூக்கி சென்று (என்ன ஒரு பலம்) சிறிது தள்ளி ஆவலாய் காத்துக்கொண்டிருக்கும் மாடுகளுக்கும், நாய்களுக்கும், காக்கைகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு... ட்ரம்மை நன்கு கழுவி அதே இடத்தில வைத்துவிட்டு, கை,கால்களை நன்றாக கழுவி விட்டு உட்காருகிறார். சூடாய் நாலு இட்லி, ஒரு வடை, சட்னி, சாம்பாரோடு டிபனை அவருக்கு தருகிறார் அந்த கடையை நடத்தும் வயதான பெண்மணி. அதிலும் ஒரு இட்லியை பிய்த்து அருகில் சுவாதீனமாய் வந்தமரும் காக்கைகளுக்கு போட்டு விட்டு சாப்பிட்டு முடிக்கிறார். மெதுவாக சாப்பிட்டு, கை கழுவியபின், சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபடியும் முட்டைகளெல்லாம் அவர் மேலேறிக்கொள்ள... நானும் தொடர்கிறேன். நேரே அவர் சென்றது கண்ணகி நகர் குடிசை பகுதிக்கு, அங்கு இவர் சென்றவுடன் ,நிறைய குழந்தைகள் இவரை நோக்கி ஓடி வந்தன, எல்லாரையும் பார்த்து சிரித்து ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டார். அப்போது தான் கவனித்தேன், அந்த பிள்ளைகளின் கையில் மணிகள், இரும்பு கம்பி மற்றும் சிறிய குறடு, அவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டு இந்த பெண்மணி சொல்லிக் கொடுப்பதுபோல, மணிகளை கோர்த்து மாலைகளாக்கிக்கொண்டிருந்தார்கள். சிறிது தூரத்தில் இருந்து இதை நான் கவனித்துக்கொண்டிருந்தேன், சிறிது நேரத்தில் அன்றைய முடிந்த மாலைகளை வாங்கிக்கொண்ட பெண்மணி, அந்த குழந்தைகளிடம் பத்து ருபாய், இருபது ரூபாய் என பணம் கொடுப்பதை பார்த்தேன். நிஜத்தில் நான் அப்படியே உறைந்து போய்விட்டேன். சத்தமில்லாமில்லாமல் ஒரு கைத்தொழில் புரட்சியை அந்தப் பெண்மணி செய்து கொண்டிருக்கிறார். எப்போதும் தனது உடையின் மேலே ஒரு காலர் இல்லாத டீ ஷர்ட்டினை அணிந்து கொண்டிருப்பார். அதில் இருக்கும் வார்த்தைகளை தெரிந்தோ தெரியாமலோ தான் அணிந்து கொண்டிருக்கக்கூடும். “be the change you want to see in the world” யாரோ இவரை நன்றாக அறிந்தவர்கள் தான் கொடுத்திருக்கவேண்டும். ‘அடுத்தவருக்கு நல்லது செய்ய பதவி, பட்டம், பணம் எதுவுமே தேவையில்லை. தேவைப்படுவதெல்லாம் செய்ய நினைக்கும் மனமே’ - எனக்குப் புரியவைத்த குரு(விக்காரர்) அவர்...