தொடர்கள்
விருது
இரு மாமணிகள்! - மாயவரத்தான் சந்திரசேகரன்

20210125080859569.jpeg

தவில் - திருப்பனந்தாள் மாரிமுத்து

திருப்பனந்தாளில் காசி மடம் ஒன்று உண்டு என்பது தஞ்சை ஜில்லாகாரர்களுக்கு தெரியும். புராதன மடம். கங்கைக் கரையில் காசி மடத்தை உருவாக்கியவர் குமரகுருபரர் சுவாமிகள் என்பதும் திருப்பனந்தாளில் இருப்பது அதன் கிளை என்பதும் சைவ வரலாறு. நம்மூருக்கு வருவோம். திருப்பனந்தாள் காசி மடத்தில் தவில் நாதம் கேட்டாலே, ‘மாரிமுத்து அண்ணன் வாசிக்கிறார் சித்த கேட்டு போவோம்’ என்று அரக்கப் பரக்க உள்ளே நுழைபவர்கள் இன்றும் உண்டு. அவர் வாசிப்பு அவ்வளவு சுத்தமாக இருக்கும். சொற்கள் தெளிவாக விழும். குழப்பமில்லாத லய கணக்கு வழக்கு. அந்த ஏரியாவில் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. காசி மடத்தில் அவர் தந்தை, அவர் என சுமார் 80 வருடங்கள் மாரிமுத்து குடும்பத்தின் தவில் ஒலித்திருக்கிறது. செம்பனார்கோயில் நாதஸ்வர மேதைகள் எஸ். ஆர்.ஜி. சம்பந்தம், ராஜ்ண்ணா சகோதரர்களுக்கு 18 ஆண்டுகள் தொடர்ந்து வாசித்தவர். ஆஸ்திரேலியாவில் உள்ள ‘நியூ சவுத் வேல்ஸ்’ மாநிலத்திலுள்ள வெங்கடேஸ்வர சாமி கோயிலில் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவின் நாயனத்திற்கு வாசித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவில் ஒலித்த முதல் நாதஸ்வர, தவில் இவர்களுடையது!

எதற்கு இந்த கதையெல்லாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. தனது 80ஐ கடந்த வயதில் இந்த வருடம் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார் மாரிமுத்து.

பழைய சிநேகத்தை மறக்காமல், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ராஜாண்ணாவின் வீட்டுக்குச் சென்று, ஆசி பெற்றுள்ளார். நண்பர்கள் சற்று நேரம் கண்கலங்கி பேச முடியாமல் தவித்தது அவர்களால் மட்டுமே உணரக்கூடிய ஆழமான நட்பு! திருப்பனந்தாள் சென்ற கையோடு, காசி மடத்திற்கு சென்று மடாதிபதி எஜமான் சுவாமிகளிடம் (முழுப்பெயர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான்) ஆசி பெற்றுள்ளார்!

மாரிமுத்துவிற்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு பையன்களும் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள்!

20210125080947503.jpeg

நாதஸ்வரம் - ஆச்சாள்புரம் சின்னத்தம்பி, சிஷ்யருடன்

ந்த வருடம் கலைமாமணி பெற்ற 80 வயதை கடந்த இன்னொருவர், ஆச்சாள்புரம் சின்னத்தம்பி. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மௌலானா, மதுரை சேதுராமன், பொன்னுசாமி போன்ற ஜாம்பவான்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஆச்சாள்புரத்துக்காரர் தனிக்காட்டு ராஜ்யம் நடத்தியவர். புகழ்பெற்ற நாயனக்காரர் சிதம்பரம் ராதாகிருஷ்ணன் பிள்ளையின் சிஷ்யர் என்றாலே அவர் வித்வத் புரியும். மணிக்கணக்காக ராக ஆலாபனை செய்யுமளவிற்கு அசாத்திய ஞானக்காரர். குறிப்பாக அவரது மல்லாரியை கேட்பதற்கு என்றே ஒரு பெரிய கூட்டம் தஞ்சை பக்கம் வருமாம். நீண்டகாலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆஸ்தான வித்வான். கோயில் சன்னதியை சுற்றியுள்ள வீடுகளில் அவரது ஸ்ருதி சுத்தமான சங்கீதத்தை இரண்டு வேளையும் கேட்காமல் அவர்கள் நாள் முடிந்ததில்லை.

கலைமாமணி டாலரோடு அவர் நடராஜர் கோயிலுக்கு ‘ஜாம் ஜாம்’ என வருகை தந்தபோது பொது தீட்சிதர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்புறம் சின்னத்தம்பி சற்றுநேரம் உற்சாகத்தில் ‘சின்னதம்பி’யாகி கமாஸ் ராகத்தை விறுவிறுப்பாக வாசித்து, கோபாலகிருஷ்ண பாரதியின் ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா’ என்ற கீர்த்தனையை எடுத்தபோது, சுற்றி நின்ற கூட்டம் சிலிர்த்துப் போனது நிஜம். எல்லோரது முகங்களிலும் ஒரே கேள்வி... ‘87 வயதில் இப்படி ஒரு வாசிப்பா?’

இந்த வருடம் விருது பெற்ற இசைக் கலைஞர்களில் மற்றவர்களை விட இந்த இருவரும் சீனியர்கள். இத்தனை ஆண்டுகளாக இது போன்ற கலைஞர்களை ஏன் விட்டு வைத்தார்கள்... நேற்று வந்த நடிகர் நடிகைகளுக்கெல்லாம் விருது தர அப்படியென்ன அவசரம்... என்றெல்லாம் கேட்கக்கூடாது. முதலில் யாரிடம் கேட்பது?

‘எல்லாப் புகழும் எனக்கே, எல்லா சிபாரிசும் எனக்கே..’ என அலைபவர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட உயர்ந்த கலைஞர்களையும் யாரோ ஒரு புண்ணியவான் சிபாரிசு செய்திருக்கிறாரே... அவருக்கு ஒரு பெரிய கும்பிடு!