தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
மடப்பள்ளி மகிமைகள்.. - 2 – ஆர் .ராஜேஷ் கன்னா.

கள்ளழகர் கோயில் தோசை...

20210125201745369.jpg

மதுரை கள்ளழகர் கோயிலில் சுந்தரராஜபெருமாள் வீற்றிருப்பார். இங்கிருக்கும் மடப்பள்ளியில் முலவருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தோசை மிகவும் பிரசித்தம். ஸ்ரீரங்கத்தில் தயாரிக்கப்படும் அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூர்த்திலேயே வாசனை துளைக்கும்... இதற்கு நேர்மாறாக கள்ளழகருக்கு சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் மணத்தினை இழந்துவிடும். கள்ளழகருக்கு படைக்கப்படும் நைவேத்தியங்கள் மணத்தினை இழந்தாலும், மிகுந்த சுவையாக இருக்கும்.

20210125201813924.jpg

கள்ளழகர் கோயில் தோசை பச்சரிசி, கருப்பு உளுத்தம்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, சுக்குபொடி, உப்பு போட்டு உரலில் இடித்து தோசை மாவு தயாரிக்கப்படுகிறது. தோசை சுத்தமான நெய்யில் வார்த்து எடுக்கப்படுகிறது. சமீபத்தில் கள்ளழகர் கோயிலுக்கு சென்றபோது நெய் தோசையை வாங்கி சாப்பிட்ட அனுபவம் அலாதியானது.

ஸ்ரீரங்கம் மடப்பள்ளி பிரசாதம்..

20210125201838855.jpg

ஸ்ரீரங்க பெரியபெருமாள் மடப்பள்ளியில் காலையில் தினமும் ரொட்டி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இது துலுக்க நாச்சியார் காதலில் உருகி பெரிய பெருமாள் டெல்லி சென்று வந்ததால், அதுமுதல் இந்த ரொட்டி பிரசாதம் படைக்கப்படுகிறது. வெல்லத்தை பாகு பதம் போல் நைசாக தேய்த்து இழைத்து கோதுமை மாவுடன் பிசைந்து உருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. அதன் பின் ரொட்டியை கையில் பதமாக தட்டி, நெய்யில் சுட்டு எடுக்கின்றனர். இந்த அமுது படி முடிந்ததும், காலை திருவாராதனம் நடைபெறும் போது, மடப்பள்ளியில் இருந்து பாசிபருப்பு, பச்சரிசி மற்றும் நெய் விட்டு தயாரிக்கப்படும் வெண்பொங்கள், வடிசல் (சாதம்), தோசை. தினமும் புதிதாக மண்பானையில் காய்ச்சிய புத்துருக்கு நெய், கூட்டு, கறியமுது, ஊறுகாய் & சுக்கு, வெல்லம், சீரகம் மற்றும் ஏலக்காய் கலந்த ஜீரண மருந்து நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதில் எம்பெருமான் காலையில் ரொட்டி மற்றும் வெண்பொங்கல் இரண்டையும் அமுது செய்கிறார்.

20210125201911127.jpeg

மதியம் பெரிய அதிரசம், அதனுடன் திருவாராதனத்தில் மடப்பள்ளியில் இருந்து வடிசல் (சாதம் 18 படி) கூட்டு, கறியமுது, சாத்தமுது (தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்), திருக்கண்ணமுது (அரிசி, பாசிப்பருப்பு, பால்வெல்லம்) மற்றும் அதிரசம் 11 நைவேத்தியமாக பெரிய பெருமாளுக்கு படைக்கப்படுகிறது. 50 ஆண்டுகள் முன்பு வரை, மதிய நைவேத்தியத்தில் கூட்டு, கரியமுது என்பது செடி 5 & கொடி 5 என்ற வகையில் 10 காய்கறிகள் இருந்ததாக தகவல் உண்டு.

மதுரகவி சுவாமிகள் பெரிய பெருமாளுக்கு 10 எலும்பிச்சை பழம், ரங்கநாயகி தாயாருக்கு 5 எலும்பிச்சை பழங்களும் நந்தவனத்தில் இருந்து பறித்து ஊறுகாய் செய்து அனுப்புவராம். தற்போது மதுரகவி நந்தவனத்தில் இருந்து தினந்தோறும் இந்த ஊறுகாய் சேவை நடைபெறுகிறது.

20210125201946879.jpeg

மாலையில் ஷீராண்ணம் தளிகை என்பது அரை தித்திப்பாக இருக்கும் பொங்கல், கறியமுது, திருமால் வடை, அப்பம், தேன்குழல் முறுக்கு, தோசை தளிகையாக பெரியபெருமாளுக்கு படைக்கப்படுகிறது. ரங்கநாயகி தாயாருக்கு மாலையில், ஷீராண்ணத்துடன், பச்சரிசிப் புட்டு தினமும் மடப்பள்ளியில் இருந்து அமுது செய்யப்படும்.

20210125202135152.jpg

இரவில் செலவு சம்பா திருவாராதனம். பெரியபெருமாள் அருகில் இருக்கும் சின்ன பெருமாள் செல்வர் எழந்தருளி பலி சாதித்து வருவதால், செல்வர் சம்பா என்ற பெயர் காலப்போக்கில் மருவி செலவு சம்பா என மருவியது. இதில் மடப்பள்ளியில் இருந்து அரவணை எனும் சர்க்கரை பொங்கல், கறியமுது, காய்ச்சிய பால் படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்க நாதருக்கு, கடைசி தளிகை என்பதால் மடப்பள்ளியில் புதிய மண்பானையில் முதலில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் போது பானை சற்று இறுகிவிடும். அதன்பின் பச்சை பசும்பாலை சுண்டக்காய்ச்சி, அதனை சூடுபோக ஆறவைத்து... அதில் குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து அமுது செய்யப்படும். ஸ்ரீரங்கவாசிகள் பலரும் அரவணை பிரசாதம் விரும்பிகள் என்பதால் கடைசி வரை இருந்து பெருமாள் அமுது செய்த மடப்பள்ளி பிரசாதம் பெற்று செல்லுவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.

ஸ்ரீரங்கநாதருக்கு படைத்த பின் நைவேத்திய பிரசாதங்கள் அனைத்தும் ஸ்ரீபண்டாரம் வந்து சேர்ந்து விடும். இங்கிருந்து திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

2021012520230618.jpg

ஸ்ரீரங்கம் மடப்பள்ளியில் மண்பாண்டங்கள் தான் சமையல் பாத்திரங்கள். அடுப்பெறிக்க மரவிறகுகள் பயன்படுத்தப்படுகிறது. மடப்பள்ளிக்குள் புராதன நடைமுறைகளே கடைப்பிடிக்கப்படுகிறது.

20210125202338908.jpg

சென்னையை அடுத்த சிறுவாபுரி என்னும் சின்னம்பேடு ஸ்ரீபால சுப்பிரமணியர் திருக்கோயில்… வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் ராமபிரானின் பிள்ளைகள் லவனும், குசனும் தங்கி இருந்தனர். அப்போது வால்மீகி நடத்திய அசுவமேத யாகத்தினை குலைக்கும் விதமாக வந்த குதிரையை லவனும் குசனும் தடுத்து கட்டிபோட்டனர். குதிரையை மீட்க வந்த லட்மணன், அவர்களிடம் போரிட முடியாமல் திரும்பி விடுவார். ராமபிரான் குதிரையை மீட்க வந்த போது, சிறுவர்களான லவனும் குசனும் வில்லெடுத்து அம்பு விட்ட இடம் என்பதால் சிறுவாபுரி என பெயர் பெற்றதாக தகவல்.

20210125202415603.jpg

இங்குள்ள ஸ்ரீ பாலசிப்பிரமணியர் முருகன் கோயில் மிகபிரசித்தம். இங்கு இருக்கும் மடப்பள்ளியில் பச்சரிசி, மிளகு, சீரகம்,நெய் விட்டு செய்யப்படும் தளிகை முருகபெருமானுக்கு படைக்கப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தினை உண்டால் வீடு யோகம் மற்றும் திருமண யோகம் உண்டாகும் என்றொரு நம்பிக்கை. செவ்வாய்கிழமைகளில் இங்கு பக்தர்கள் முருகபெருமானை தரிசனம் செய்வதற்கு விசேஷமாக வருகிறார்கள்.