தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
தேவையான அளவு... - பா. ராகவன்

20210127120238747.jpg

உங்களில் எத்தனைப் பேர் பத்திரிகைகளில் வெளியாகும் சமையல் குறிப்புகளை, சமையல் குறிப்புப் புத்தகங்களைத் தவறாமல் படிப்பீர்கள்? தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் எவ்வளவு பேர்? பிறவி எடுத்ததே அதற்குத்தான் என்பது போல நான் விழுந்து விழுந்து படிப்பேன். செய்வதற்கு ஆயிரம் வேலைகள் காத்திருந்தாலும்... ஒரு சமையல் குறிப்பு கண்ணில் பட்டுவிட்டால், அதைப் படித்து முடித்த பிறகுதான் மற்றவை. ஃபேஸ்புக் விடியோக்களில் சமையல் விடியோக்களாகத் தேடித் தேடிப் பார்ப்பேன். ‘ஹலோ ஃப்ரண்ட்ஸ்! இன்னிக்கு நாம பாக்கப் போற டிஷ்....’ என்று ஆரம்பித்து ராகம் போட்டுப் பேசிக்கொண்டே சமைத்துக் காட்டும் விற்பன்னர்கள் என்றால் எனக்கு உயிர். உலகமே அழிகிறது என்றாலும் கவலைப்பட மாட்டேன். ஒரு சமையல் விடியோ கண்ணில் பட்டுவிட்டது என்றால்... அதைப் பார்க்காமல், கடந்து போவது என்னைப் பொறுத்தவரை கொலைக் குற்றத்தினும் பெரிது.

இத்தனைக்கும் எனக்கு சமைக்கத் தெரியாது. அந்தக் கலையின் மறு பகுதியான சாப்பிடுவதை மட்டும் சிரத்தையாகச் செய்வேன். இது நொள்ளை அது நொட்டை என்று தவறாமல் மதிப்புரை வழங்கிவிடுவேன். அதற்கென்ன செய்ய? விமரிசகர்களால்தானே கலை வாழ்கிறது? ஆனாலும் சமையல் குறிப்புகளைப் படிப்பது எனக்குப் பிடிக்கும். இந்த உலகில் மீனாட்சி அம்மாளுக்கு லட்சக் கணக்கான வாசகர்கள் இருக்கலாம். ஆனால் நான் ஒருவன்தான் அவரது ரசிகன். அவரது சமைத்துப் பார் புத்தகங்களைப் பல முறை படித்திருக்கிறேன். இன்னமும் படிப்பேன்.

சமையல் குறிப்புகளைப் படிக்கும்போதே மனத்துக்குள் அந்தக் குறிப்பிட்ட ருசிகரமான பண்டம் உருவாகும் விதத்தை ஒரு திரைப்படம் போல ஓடவிட்டுப் பார்ப்பேன். முழுப் படமும் நன்றாகத்தான் ஓடும். ஆனால், சரியாக ஓரிடம் வரும்போது ரீல் அறுந்து நிற்கும். அது, ‘உப்பு - தேவையான அளவு’ என்ற இடம்.

ஆதி காலம் முதல் சமையல் குறிப்புகளில் இந்த வரி இடம் பெறாதிருந்ததில்லை. தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி நடத்தும் பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல் சமையல்காரர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். உப்பு, தேவையான அளவு.

அதென்ன தேவையான அளவு?

இந்த உலகில் தேவைக்கு அதிகமான, அல்லது தேவைக்குக் குறைவான அளவு உப்பு சேர்த்த ஒரு பண்டத்தை எந்த ஜென்மமாவது தின்னுமா? கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் பெருமாளுக்கு மட்டும் தலையெழுத்து. தினமும் உப்பில்லாத சமையல் அவருக்கு. அதைப் பிரசாதமாக வேறு கொடுத்துக் கொல்வார்கள். கொடுமை என்னவென்றால் அவர் ஒப்பிலியப்பன். ஒப்புவமை இல்லாதவன் என்று பொருள். அதை உப்பிலி ஆக்கியதோடு மட்டுமல்லாமல், உப்பில்லா நைவேத்தியமும் வழக்கமாகிவிட்டது அங்கே. செய்த தவறை மறைக்க, அதற்கு ஒரு கதை வேறு கட்டிவிட்டார்கள். அந்தப் பெருமாள் கட்டிக்கொண்டு வந்த பெண்டாட்டி சின்னப் பெண்ணாம். முறையாக சமைக்கத் தெரியாதவளாம். அவள் உப்பில்லாமல் சமைத்தும் அதை அவர் பொருட்படுத்தாமல், உப்புக்கு பதில் காதல் சேர்த்து சாப்பிட்டுவிட்டு எழுந்து போனதால் உப்பிலியப்பன் ஆகிவிட்டாராம். பாவிகளா, ஒழுங்காக உப்புப் போட்டு சமைக்கத் துப்பில்லாமல் எவனோ மடைப்பள்ளி சமையல்காரன் எந்தக் காலத்திலோ சொதப்பி வைத்ததற்கு சப்பைக்கட்டுக் கட்டி, கடவுளைக் கூடவா இன்றுவரை பழிவாங்குவார்கள்? பாவம் அந்தப் பெருமாளுக்கு நாக்கு செத்து நான்கு யுகம் ஆயிருக்கும்.

அவரைக் கழித்துவிட்டுப் பார்த்தால் உப்பின் அளவில் சிறு மாறுதல் இருந்தாலும், யாராலும் உணவை ருசித்து உண்ண இயலாது. அப்படி இருக்கும்போது இந்த சமையல் குறிப்பாளர்கள் ‘உப்பு தேவையான அளவு’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுப் போவது அயோக்கியத்தனம் அல்லவா? அரை ஸ்பூன் என்று சொல்லுங்கள். ஒரு ஸ்பூன் என்று சொல்லுங்கள். எந்த சைஸ் ஸ்பூன் என்று சுட்டிக் காட்டுங்கள். அது நியாயம். அதென்ன தேவையான அளவு? காரம் வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். உப்பு எப்படி மாறும்?

என் அம்மா உப்பை ஸ்பூனால் எடுக்க மாட்டார். அவருக்கு ஸ்பூன் கணக்கு வராது. கையால்தான் எடுப்பார். சாம்பார் என்றால் சுண்டு விரல் நீங்கலான நான்கு விரலால் அள்ளி எடுப்பார். ரசம் என்றாலும் அதே நான்கு விரல்தான். ஆனால் எடுக்கும் போதே அளவில் சிறிது குறையும். வாணலியில் காய் வெந்துகொண்டிருக்கும்போது, சுண்டு விரலுடன் மோதிர விரலையும் கழித்துவிட்டு மீதி உள்ள மூன்று விரல்களால் எடுத்துத் தூவுவார். என் அம்மாவைப் பார்த்து சமையல் கற்றுக்கொண்ட என் மனைவியும் கையால் எடுத்துத்தான் உப்புப் போடுவார். இதில் அளவை எப்படித் தெரிந்துகொள்வது என்று கேட்டால், அது பழக்கத்தில் வரும் என்றுதான் இரண்டு பேருமே சொல்வார்கள். இதைத்தான் நான் டகால்டி என்கிறேன். மற்ற எல்லாவற்றுக்கும் வக்கணையாக அளவு சொல்லத் தெரிகிறது. உப்பு என்று வரும்போது மட்டும் பழக்கத்தில் வரும்! அதெப்படி வரும்?

இந்த மொபைல் சார்ஜர், ப்ளக், கேஸ் சிலிண்டரின் கழுத்து, பென் டிரைவ் சொருகும் கணினியின் ஸ்லாட் எல்லாம் எப்படி ‘ஸ்டேண்டர்டைஸ்’ செய்யப்பட்டதோ, அதே போல உப்புக்கென்று ஒரு ஸ்பூன் அளவைத் தர நிரந்தரப்படுத்த வேண்டும். அதை மட்டும்தான் சமைப்பவர்கள் உப்பெடுக்கப் பயன்படுத்த வேண்டும் என்றொரு சட்டமேகூடக் கொண்டு வரலாம். இது புழக்கத்தில் வந்துவிட்டால் உப்பு தேவையான அளவு என்று யாரும் அடித்துவிட முடியாது. எது எதற்கு எவ்வளவு ஸ்பூன் என்று தெளிவாகவே சொல்லிவிட முடியும்.

இப்படி சட்டம் போட்டாவது உப்பெடுக்க ஒரு ஸ்பூன் ஏன் அவ்வளவு அவசியம்? நீ என்ன அதன் பிறகு சமைக்கப் போகிறாயா? என்று உங்கள் அந்தராத்மா உடனே ஒரு கேள்வி எழுப்பும். அதன் பிறகும் நான் சமையல் குறிப்புகளைப் படிப்பேன். யாராவது சமைத்துத் தந்தால் வக்கணையாகச் சாப்பிடுவேன். கையால் எடுத்து உப்புப் போட்டவர்களின் சமையல் தரத்துக்கும் ஸ்பூனால் எடுத்து உப்புப் போடும் தலைமுறையின் சமையல் தரத்துக்கும் ஆறிலிருந்து அறுபது வித்தியாசங்கள் தேடிக் கண்டுபிடித்து, அப்போதும் ஒரு கட்டுரை எழுதத்தான் செய்வேன்.

நானும் சமைக்க ஆரம்பித்தால் எவன் பிறகு இதையெல்லாம் எடுத்து எழுதி வைப்பான்?