தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்... - 28 - மதன்

20210126233037535.jpeg

ஆட்டம் போட்ட ஆதாம்கான்!

பைராம்கானின் உறவைத் துண்டித்ததில் பாட்டனார் பாபரின் கண்டிப்பைப் பேரப்பிள்ளை காட்டியது உண்மையென்றாலும், தந்தை ஹுமாயூனின் சாத்வீக குணமும் தேவையான அளவுக்கு அக்பரிடம் இருந்தது. பைராம்கான் கொலையுண்ட பிறகு, அவருடைய குடும்பத்துக்குச் சகல வசதிகளும் செய்து தந்து, அரண்மனையில் தன்னோடு வைத்துக்கொண்டார் மன்னர். பைராம்கானின் நாலு வயது மகன் அப்துற் ரகீமுக்கு கார்டியனாகவும் இருந்தார். பிற்பாடு, அக்பரின் அரசவையை அலங்கரித்த மிகத் திறமையான பிரபுக்களில் ஒருவராக அப்துற் ரகீம் முன்னேறிப் பெருமை பெற்றது வேறு விஷயம்!

பைராம்கானின் மறைவுக்கு பிறகு ஓராண்டு கழித்து அரண்மனைக்குள் யார் நுழைந்து பார்த்திருந்தாலும், எதிர்காலத்தில் அக்பர் ‘மாமன்னர்’ என்று உலகப் புகழ் பெறப்போகிறார் என்று சத்தியமாக ஒரு பேச்சுக்குக்கூட சொல்லியிருக்க மாட்டார்கள்! அந்த அளவுக்கு நிலைமை ‘துர்தேவதைகளின்’ கையில் சிக்கிச் சீரழிந்திருந்தது. தன்னைக் கைப்பாவையாக ஆக்கும் அரண்மனை சதித்திட்டங்களை திட்டவட்டமாகச் சமாளிக்க முடியாமல் அக்பர் சற்றுத் திணறியது என்னவோ நிஜம்!

‘தலைமை துர்தேவதை’யாக இருந்தவள், செவிலித் தாய் மஹாம் அங்கா! இவளுக்குப் பிறந்தது ஆதாம்கான் என்னும் ஒரு மிருகம்! பொறுப்பு உணர்ச்சி எதுவும் இல்லாமல் பேயாட்டம் மட்டுமே போடத் தெரிந்த இந்த வெறியனை, பைராம்கான் இருந்த இடத்துக்குக் கொண்டுவர விரும்பினாள் ஆதாம்கானின் தாய் மஹாம் அங்கா. ஆரம்ப கட்டத்தில் குழப்பத்தில் இருந்த அக்பரும் ஆதாம்கானை ஒரு தளபதியாகப் பதவியில் அமர்த்தி, மால்வா பிரதேசத்துக்கு ஒரு படையுடன் அனுப்பினார்.

மால்வாவை ஆண்டுவந்த பஸ்பகதூர் ஒரு உல்லாசப் பேர்வழி! அரண்மனைக்குள் ‘சர்வதேச அழகிகள் மாநாடு’ நடக்கிறதோ என்று எண்ணுமளவுக்கு அவரது அந்தப்புரம் வடக்கே பிரசித்தி பெற்றிருந்தது! மனிதர் உச்ச ஸ்தாயியில் பிருகாக்களை உதிர்த்துப் பிரமாதமாகப் பாடுவார். இந்தியில் அருமையான கவிதைகளும் இயற்றுவார். எப்போதும் அழகிகள் அவரைச் சூழ்ந்தவண்ணம் இருந்ததால், பஸ்பகதூரிடம் இருந்து சரமாரியாக வந்தது, அநேகமாகக் காதல் கவிதைகளே என்பதைச் சொல்லத் தேவையில்லை!

பகதூரின் அந்தப்புரத்தில், சொக்கவைக்கும் அழகுடன் அலங்கார தேவதையாக வளைய வந்தவள் ரூப்மதி. பார்ப்பவர்களின் நாடித்துடிப்பை உடனடியாக அதிகரிக்க செய்த இந்தப் பேரழகியை அங்கம் அங்கமாக வர்ணித்து மன்னர் பாடிய கிளுகிளுப்பூட்டும் கவிதைகள் இன்றளவும் மால்வா பகுதியில் பிரபலம்!

என்ன செய்ய? ஆஸ்தான கவிஞராக இருக்க வேண்டியவர், மன்னராக இருந்ததுதான் பிரச்னையாகப் போய்விட்டது! அதற்கேற்ப மொகலாயப் படை ஊருக்கு வெகு அருகில் வரும்வரை பகதூருக்குத் தகவல் இல்லை! காலம் கடந்த நிலையில், சொகுசான தலையணைகளில் இருந்து வெளிப்பட்ட பஸ்பகதூர், பயந்து பதுங்கவில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆனால், அவசரக் கோலத்துடன் வீரர்களைத் திரட்டி, மொகலாயப் படையுடன் மோத முடியுமா? போர் நீடித்தது சில மணி நேரங்களே, காயங்களுடன் காட்டுக்குள் தப்பி ஓடுவதற்கு முன் பஸ்பகதூர், தன் விசுவாசமான சில வீரர்களிடம் கீழ்க்கண்டவாறு ஆணையிட்டார்:

‘‘அந்தப்புரத்துப் பெண்கள் யாரும் மொகலாயர்கள் கைகளில் சிக்கவிடாமல் கொன்றுவிடுங்கள். குறிப்பாக, என் அருமை ரூப்மதி! இந்த ஆதாம்கானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் கையில் இவள் சிக்கினால் அலங்கோலப்படுத்தி விடுவான்… எச்சரிக்கை!’’

அந்தப்புரத்தில் இருந்ததோ நூற்றுக்கணக்கில் பெண்கள். எப்படியோ மொகலாயர் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்த மால்வா வீரர்கள் சிலரே. இவர்களால் விரைவாகச் செயல்பட்டு, தங்கள் மன்னரின் ஆணையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. பல பெண்கள் நடுங்கிப்போய் அங்குமிங்கும் ஒளிந்து கொண்டிருந்ததும் பெரும் பிரச்னையாக இருந்தது. அதற்குள் ஆதாம்கானின் படை உள்ளே நுழைந்துவிட்டது. ஒரு மூலையில் பயந்த விழிகளுடன் பதுங்கியிருந்த ரூப்மதியைக் கடைசி நிமிடத்தில் பார்த்து திகைத்த பகதூரின் மெய்க்காவலன் ஒருவன் (அலி), அவள்மீது அவசரத்துடன் கோணல்மாணலாக வாளை வீச… அந்த ஆரணங்கின் அங்கமெங்கும் காயங்கள் ஏற்பட்டதுதான் மிச்சம்!

ஆதாம்கானின் கொலைவெறி பற்றி மால்வா மன்னர் கேள்விப்பட்டிருப்பதைப் போலவே, ரூப்மதியின் கொள்ளை அழகு பற்றியும் ஆதாம்கான் கேள்விப்பட்டிருந்தான்! தலை உருளல்கள், சூறையாடல்கள் எல்லாம் ஆசைதீர நடந்தேறிய பிறகு, வெற்றிக் களிப்புடன் மஞ்சத்தில் மல்லாந்து, மதுவைச் சுவைத்த ஆதாம்கான் கேட்ட முதல் கேள்வி - ‘‘அந்தப் பெண்… ரூப்மதி எங்கே?’’

குருதி வழியக் கட்டியிழுத்து வந்தார்கள் காரிகையை. அந்தப் பரிதாப நிலையிலும் ஆதாம்கானை அவள் அழகு எழுந்து நிற்கவைத்தது…

ஆனால், அங்கே நடந்ததென்னவோ வேறு!

அருகில் வந்து காலடியில் வீழ்ந்த ரூப்மதியை, அந்த வில்லன் அணைத்துத் தூக்கப் பார்த்தபோது… அவள் தலை தொங்கியிருந்தது. தன் உடையிலோ, ஆபரணத்திலோ ஒளித்து வைத்திருந்த கடும் விஷத்தை, வரும் வழியிலேயே விழுங்கித் தன் வாழ்வைக் கனகச்சிதமாக முடித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்!

இதனாலோ என்னவோ, ஆவேசம் வந்தவனைப் போல ஆதாம்கான், ‘‘அந்தப்புரத்தில் அகப்பட்ட வயதான பெண்களின் தலைகளைச் சீவித் தள்ளுங்கள். இளம்பெண்கள் இருக்கட்டும். பிற்பாடு உபயோகப்படுவார்கள்!’’ என்று கர்ஜித்தான்.

மதுக்கிண்ணங்களை ஏந்தியவாறு ஆதாம்கானும், கொலைவெறியில் அவனுக்கு இணையான உப தளபதி ஃபிர்முகமதுவும் ஜாலியாக அமர்ந்து ஜோக்கடித்துக் கொண்டிருக்க… வரிசையாக அவர்கள்முன் தலைகள் குவிந்தன. இந்தக் காட்சியை நேரில் கண்டு, தன் ஆட்சேபணையைத் தெரிவித்த (பலனில்லை!) வரலாற்று ஆசிரியர் பாதானி, ‘பெண்களும், பிறகு முதியவர்களும், முல்லாக்களும் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். பலர், தங்கள் மார்போடு புனித குர்-ஆனை அணைத்துக் கொண்டிருந்தார்கள். ஆதாம்கான் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!’’ என்று குறிப்பிடுகிறார்.

இந்த மால்வா வெற்றியைத் தொடர்ந்து, ஆதாம்கான் மனதில் மேலும் ஆசைகள் கிளம்பின. சூறையாடிய பொன்னையும் பொருளையும் பிடிபட்ட யானைகளையும் தானே வைத்துக்கொண்டான் அவன்!

உடனே அக்பருக்குச் சேதி போனது. சினம் பொங்கியது. மஹாம் அங்காவுக்குப் பயந்துகொண்டு, மன்னரிடம் யாரும் முழு விவரங்களையும் கூறாத நிலையில், படையுடன் மால்வா நோக்கித் தானே கிளம்பினார் அக்பர். கூடவே, தொத்திக் கொண்டாள் மஹாம் அங்கா.