தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

20210126183423952.png

விகடகவியார் உள்ளே நுழைந்ததும், “புதன்கிழமை அறிவாலயம் பக்கம் போனீர்களா?” என்று கேட்டபடி வந்து அமர்ந்தார். நாம் “நமது நிருபர் ஒருவர் போயிருந்தார்... விருப்ப மனு கொடுக்க பெரும் கூட்டம் என்று சொன்னார்” என்றோம்.

“அன்று பிரதோஷம் மற்றும் புதன்கிழமை என்பதால் அன்றைய தினம் விருப்ப மனு தந்தால், சீட் உறுதி என்று யாரோ ஒருவர் சொல்ல... அதைத் தொடர்ந்து எல்லோரும் அறிவாலயத்தில் குவிந்துவிட்டார்கள்” என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

“சரி, திமுக வேட்பாளர் தேர்வு எல்லாம் எப்படி இருக்கும்” என்றோம்.... அதற்கு அவர், “எல்லாம் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் முடிவு செய்வதுதான்.... அவர்கள் ஏற்கனவே தொகுதிக்கு மூன்று பேர் என்று விலாவாரியாக விசாரித்து எழுதித் தந்து விட்டார்கள். அந்த மூன்று பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு. வேட்பாளர் அறிவிப்பின் போது நிறைய திடுக்கிடும் திருப்பங்கள் எல்லாம் இருக்கும். அதனால்தான் இப்போது ஸ்டாலின் கட்சிப் பிரமுகர்களை சந்திப்பதை பெரும்பாலும் தவிர்க்கிறார். யார் எது கேட்டாலும், ஏவா வேலுவை பாருங்கள் என்று அவரை காட்டி விடுகிறார்” என்று விகடகவியார் சொல்ல... நாம் உடனே, “சரி... ஏவா வேலு என்ன சொல்கிறார்?” என்றோம். அதற்கு அவர்... “அவர் உண்மையை சொல்லி விடுகிறார்” என்று சொல்லி சிரித்தார். தொடர்ந்து விகடகவியார் “25 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில், அகில இந்திய பொதுச் செயலாளர் ரந்திப் சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி மற்றும் பலர் என்று தொகுதிப் பங்கீடு பற்றி பேச அறிவாலயம் போனார்கள். அவர்கள் வந்து அமர்ந்த பிறகுதான் துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோர் உள்ளே நுழைந்தனர். டெல்லியிலிருந்து வந்த ரந்திப் சிங் சுர்ஜிவாலா, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை டி.ஆர். பாலுவிடம் தந்தார்” என்று விகடகவியார் சொல்ல.... நாம் உடனே... “ராகுல் காந்தி அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்” என்றோம் ஆர்வமாக...

20210126183513753.jpeg

“வேறு என்ன... 50 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குங்கள்” என்று கேட்டு இருந்தார் ராகுல்ஜி என்று விகடகவியார் சொன்னதும்.. “சரி.. திமுக என்ன சொன்னது?” என்று கேட்டோம்..

20210126183540905.jpeg

அதற்கு விகடகவியார்... “துரைமுருகன் பேச்சு கொஞ்சம் துடுக்காக இருக்கும் என்பதால், நீங்கள் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றும், டி.ஆர். பாலு பேசுவார்” என ஸ்டாலின் சொல்லி அனுப்பியிருந்தார்.

“சரி.. டி.ஆர். பாலு என்ன சொன்னார்?” அதை சொல்லும் என்றோம்...

20210126183606142.jpeg

“டி.ஆர். பாலு முதலில் 15 தொகுதிகள் என்று தொடங்கி, இறுதியில் 20 என்று இறுதிப் படுத்தினார்” என்று விகடகவியார் சொல்ல... நாம் உடனே “காங்கிரஸ் என்ன சொன்னது” என்றோம்.

“நாங்கள், நீங்கள் சொன்னதை ராகுல் காந்தியிடம் சொல்லி விடுகிறோம்” என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்கள். அறிவாலயத்தில் நடந்தது எல்லாவற்றையும் சுர்ஜிவாலா, ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு சொல்லிவிட்டார்” என்று விகடகவியார் சொன்னதும்... “ராகுல் காந்தி என்ன சொன்னாராம்” என்று கேட்டோம்... “இப்போதுதானே பேச தொடங்கியிருக்கிறோம் பார்த்துக் கொள்வோம்” என்று சொன்னாராம் என்று விகடகவியார் சொல்ல...

“சரி. திமுக இவ்வளவு குறைவான இடங்களை ஒதுக்க என்ன காரணம்” என்றோம். அதற்கு விகடகவியார் “நான் ஏற்கனவே உங்களிடம் சொன்னது தான்... சென்ற தேர்தலில் 41 இடங்கள் வாங்கி, எட்டு இடங்களில் தான் வெற்றி பெற்றீர்கள் என்பதை திமுக சுட்டிக்காட்டியது” என்றார்.

நாம் உடனே.. “அவர்கள் சொல்லும் கணக்கு, காரணம் எல்லாம் சரியாக இருப்பது போல் தெரிகிறதே” என்றோம்.

அதற்கு விகடகவியார் “நீர் அப்படி சொல்கிறீர். ஆனால், பல இடங்களில் காங்கிரஸ் தோற்றதற்கு, திமுக, காங்கிரஸுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று நாங்கள் அப்போதே சொன்னோம்” என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர் இப்போது என்றார்..

20210126183736982.jpeg

“சரி. விகடகவியாரே காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?” என்று கேட்கவும்... உடனே விகடகவியார்... அதற்கு நீர் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு சில தினங்களுக்கு முன், ஏவா வேலு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவை அழைத்து, உங்களுக்கு 20 சீட் தான் என்று சொல்லி அனுப்பியிருந்தார். அவர் அதை அப்படியே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் சொல்லிவிட்டார் என்று சொன்னதும்...

நாம், “நீர் அடுத்த செய்திக்கு வாரும்” என்றோம்...

“சசிகலாவை - சரத்குமார், சீமான், பாரதிராஜா, கொங்கு வேளாளர் பேரவை சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் பேசி வைத்தது போல் சும்மாதான் பார்த்தோம் என்கிறார்கள்” என்று சொல்லி கண் சிமிட்டினார் விகடகவியார்.

“நாம்.. “சும்மான்னா.....” என்று நாம் கேட்டதும்... சும்மான்னா... சும்மாதான்” என்று சொல்லி சிரித்தார். கூடவே, “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பொதுக் குழுவில் தினகரன் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது” என்று சொன்னதும்... நாம், “தினகரன் ஒருங்கிணைந்த அதிமுக” என்று சொல்லிக்கொண்டு இருந்தாரே” என்று கேட்டதும்... விகடகவியார்... “அது பாட்டுக்கு அது... இது பாட்டுக்கு இது..” என்று சொல்லி சிரித்தார்.

நாம், “நீர் காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீடு பற்றி சொன்னீர்... ஆனால், திமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகள் பற்றி எந்தச் செய்தியையும் சொல்லவில்லையே” என்று அவருக்கு நினைவுபடுத்தினோம்.

அதற்கு அவர்.. “அவர்கள்தான் இரட்டை இலக்கத்தில் தொகுதி வேண்டும், கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். இது எல்லாம் மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் முடிவு செய்தது. மதுரை கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் அழகிரி இருவரும் பேசிவிட்டு அவசரம் அவசரமாக புறப்பட்டு விட்டார்கள். ஆனால் மாநாடு முடிந்த பிறகு, வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் திமுக தங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி பேசின்ர். இறுதியாக, நாம் எல்லோரும் 10 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவை நிர்பந்திப்போம், பிடிவாதமாக இருப்போம் என்று முடிவு செய்திருந்தார்கள். அதைத்தான் இப்போது சொல்லி வருகிறார்கள்” என்று விகடகவியார் சொல்ல... நாம் உடனே “அதிமுகவில் என்ன நடக்கிறது” என்று கேட்டோம்... அதற்கு விகடகவியார், அங்கு இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. அங்கும் கசமுசாவிற்கு பஞ்சமிருக்காது” என்றார்.

நாம் அதைத் தொடர்ந்து... “நீர் பாண்டிச்சேரி ஆட்சிக் கலைப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே” என்று கேட்டோம்...

அதற்கு அவர்... “கவிழ்ப்பு விஷயம், அறிவாலயத்திற்கு ஒரு மாதம் முன்பே தெரியும். பாண்டிச்சேரியின் திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பாரதிய ஜனதாவின் தொடர்பு எல்லையில் இருப்பவர். அவர்தான் இந்த தகவலை திமுக தலைவரிடம் சொல்லியிருக்கிறார். திமுக சட்டமன்ற உறுப்பினர், ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்தபோது, தலைமையிடம் சொல்லிவிட்டு தான் செய்கிறேன் என்றாரே... அதை நீர் கவனிக்கவில்லையா” என்றார். நாம் உடனே.. “கூட்டணி தர்மம் என்றெல்லாம் பேசுவார்களே” என்று கேட்டோம்...

அதற்கு விகடகவியார்.. “நீர் சொல்லும் கூட்டணி தர்மம் கணக்குப்படி பார்த்தால், திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னதும்.. ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை. ஆட்சி கவிழ்ந்து எல்லாம் முடிந்த பிறகு சும்மாவாச்சும் வெங்கடேசனை இடைநீக்கம் செய்வதாக திமுக சொல்லியிருக்கிறது. அதுகூட பேசி வைத்த நாடகமோ என்று பாண்டிச்சேரி காங்கிரஸ்காரர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்று விகடகவியார் சொல்ல... நாம் “சரி. அதிமுக செய்திக்கு வாரும்” என்றோம். அதற்கு விகடகவியார்... “கோவையில் அதிமுக பேச்சாளர் லெவலுக்கு, திமுக - காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி வெளுத்துக் கட்டி விட்டார். அதுதான் அதிமுக செய்தி என்று சொல்லிவிட்டு எழுந்தார்.