தொடர்கள்
Daily Articles
சிறுநீரக நோய்களை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை... - மீனாசேகர்

20210127210053116.jpeg


கீரைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அனைத்து நாட்டினரும் அந்த அந்தப் பகுதிகளில் கிடைக்கும் கீரைகளை சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். பச்சைப்பசேல் என்றிருக்கும் பல கீரை வகைகள் தமிழகத்தில் எங்கும் கிடைக்கின்றன.

நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு முக்கியக் காரணம் அவர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்ததுதான். ஏனெனில் கீரைகளை அவர்கள் மருந்தாக மட்டும் பயன்படுத்தாமல், உணவாகவும் பயன்படுத்தினர்.

அவர்கள் கீரைகளின் மருத்துவ குணங்களையும் அறிந்து வீட்டைச் சுற்றியும் தோட்டங்களிலும் உள்ள கீரைகளைப் பறித்து பயன்படுத்தி வந்தார்கள். தற்போது கீரைகளின் பயன்பாடு, விரல் விட்டு என்ன கூடிய நிலையில் தான் இருக்கின்றது.

வீட்டைச் சுற்றிலும் யாரும் பயிராடமல் தானாகவே முளைத்து, அதிகம் உண்ண படாத ஒருவகையான கீரை “மூக்கிரட்டை கீரை”. இந்தக் கீரையின் பயன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நிலத்தில் தனித்துப் படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்த கீரையாகும். இந்த மூக்கிரட்டை என்னும் மூலிகை கீரை. இது ஊதா வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை கீரை. இலைகளின் மேல் பகுதி பச்சையாகவும், கீழ் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். வேர் தடிமனாக இருந்தாலும் இவை பூமிக்குள் இருக்கும். தண்டுகள் தடித்து காணப்படும்.

இது சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும். மூக்கிரட்டை கீரைக்கு “புனர்னவா” என்றும் வடமொழியில் அழைக்கின்றனர். ‘புனர்’ என்றால் மீண்டும் என்று பொருள். ‘நவா’ என்றால் புதிது என்று பொருள். நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி தருவதால் இந்த பெயர்.

இந்த கீரை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் அரிய தன்மைகள் கொண்டதாகும்.

மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.

மூக்கிரட்டை கீரையின் அற்புதங்கள்:

இந்தக் கீரையில் ஏராளமான மருத்துவ வேதியியல் பொருட்கள் உள்ளன. உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடல் கழிவுகளை வெளியேற்ற இது உதவுகின்றது. மூக்கிரட்டை கீரையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

100 கிராம் அளவு கீரையில் கொழுப்புச் சத்து 1.61 சதவீதம் மட்டுமே இருக்கிறது. சோடியம் 162 மில்லி கிராம், வைட்டமின் சி 44.8 மில்லி கிராம், கால்சியம் 142 மில்லி கிராம், இரும்புச்சத்து 0.012 மில்லிகிராம் இருக்கிறது. இந்தக் கீரை ஒரு நாளைக்கு நமக்கு தேவையான புரதத்தில் 2.26 சதவீதத்தை தருகிறது. மேலும் மூக்கிரட்டை கீரையில் சத்து ஊட்ட பொருட்களான 15 விதமான அமினோ அமிலங்கள் அடங்கியிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது.

மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்:

மூக்கிரட்டை கீரை, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீர்படுத்தக் கூடியது. இரத்தத்தில் தேங்கும் பொட்டாசியம் எனும் உப்பின் அளவைக் குறைக்கவல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மற்றும் சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதனை தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.
இந்த கீரை வயிற்றின் செரிமான சக்தியை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்கும்.

மூக்கிரட்டை கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டு தன்மை நீங்கும். மூக்கிரட்டை கீரை மற்றும் தண்டுகளில் கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க முடியும்.
இந்தக் கீரையில் புற்று நோய் செல்களை அழிக்கும். வேதிப்பொருள் அதிகம் உள்ளது.

மூக்கிரட்டை கீரையை சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும். இது ஆஸ்துமாவைப் போக்கக் கூடியது. இது புத்துணர்வையும் சுறுசுறுப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மஞ்சள் காமாலையை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காயவைத்து, அரைத்து பொடியாக்கி அதை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் போக்கும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த மூக்கிரட்டை கீரையை உணவுடன் எடுத்து கொண்டால் நமது உடல் நலம் மேம்படும்.

பின்குறிப்பு: இந்தக் கீரையை கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.

வரும் வாரங்களில் மருந்தாகும் பழங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.