தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
ஆண்கள் சமையல் போட்டி!! - ராம்.

20210126092743720.jpg

சமையல் கலை பெண்களுக்கே உரித்தானது. நீங்கள்ளாம் சாப்பிட மட்டும் தான் லாயக்கு என்று ஹாங்காங் தமிழ் குடும்பங்களின் சுற்றுலாவின் போது யாரோ ஒருவர் கொளுத்தி போட……

அதென்ன சமையல் என்றால் பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா என்ன..? எங்களுக்கு தெரியாதா என்று ஹாங்காங்கிலுள்ள லோகாஸ் பார்க் என்ற இடத்தில் உள்ள தமிழ் ஆண் நண்பர்களுக்கு அநியாயத்திற்கு ரோஷம் வந்து விட்டது.

ஒன்றா.. இரண்டா பார்த்து விடுவோம் என்று கோதாவில் இறங்கினார்கள்.

சமையல் சரி, அதை போட்டியாக எப்படி வைப்பது என்றதும் உடனடியாக களத்தில் இறங்கியது பெண்கள் குழு.

இந்த யோசனையை முதன் முதலில் தொடங்கி வைத்த என்னையும் ஒரு போட்டியாளராக சேர்த்து விட்டதில் கொஞ்சம் குதூகலம் இழந்து தான் போனேன். அடுத்தவர்களை லந்து பண்ணும் வாய்ப்பு, வெறும் பார்வையாளாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

அனு இந்த போட்டியைக் கையில் எடுக்க, உடனடியாக விதிகள் அமைக்கப்பட்டது.

இரண்டு பதார்த்தங்கள் செய்ய வேண்டும்.

ஒன்று சாம்பார் (எந்த ரெடிமேடு பொடியும் கூடாது), இன்னொரு பதார்த்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர் விருப்பத்திற்கேற்ப.

20210126092956386.jpg

மூன்று நடுவர்கள். ஜெயஶ்ரீ (ஜெயஶ்ரீ கிச்சன் யூடியூப் சானல்), ராதா, மற்றும் சுதா. ஆண் நடுவராக ஒருவர் வேண்டும் என்பதால் மணி.

இது போக சமைத்த பதார்த்தங்களை எப்படி அழகாக பிரசெண்ட் செய்வது என்பதை கண்காணிக்க, பிரார்த்தனா, பவித்ரா, மற்றும் உமா என்று மூன்று நடுவர்கள்.

சமூக இடைவெளி இருக்கையில் எப்படி இவ்வளவு பேர் சமையல் செய்வது...? எங்கே சாப்பிட்டு பார்ப்பது? எல்லாவற்றையும் உத்தேசித்து உருவானது திட்டம்.

மொத்தம் ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு அணியிலும் மூன்று பேர்...

வெவ்வேறு அபார்ட்மெண்டுகளில் சேர்ந்து ஒரு அணியாக சமைக்க வேண்டும். ஜூம் காமிராவில் சமையலறையையும், காய்கறி வெட்டும் சாகசங்களையும் நடுவர்களுக்கு நேரலையில் காட்டவேண்டும். பாட்டரி இல்லை சார்ஜ் இல்லை என்று சொல்லாமல் இரண்டு மணி நேரங்களும் லைவ்வில் இருக்க வேண்டும். வீட்டுப் பெண்மணிகள் யாரும் அருகிலோ வீட்டிலோ இருக்கப்படாது.

இதெல்லாம் விதிகள். நடுவர் மூவரும் வேறொரு அபார்ட்மெண்டில் இருப்பார்கள்.

ஹாங்காங் லோகாஸ் பார்க் பகுதியில் நிறைய தமிழ்க் குடும்பங்கள் இருப்பதால், சமையல்கட்டுக்குப் பஞ்சமில்லை.

என்ன, அளவு சிறிது. ஹாங்காங் மிக மிக செலவு அதிகமாகும் உலக நகரங்களில் ஒன்று. அதானால் ஒவ்வொரு சதுர இன்ச்சும் இங்கே மதிப்புமிக்கது.

டீம் - 1.

20210126093055822.jpeg

கிருஷ்ணசாமி, ராஜன், வினோத்.

டீம் - 2..

20210126093145818.jpeg

குருபிரசாத், கார்த்திக், சதீஷ்.

டீம் - 3..

20210126093210439.jpeg

ராம், ரவி, அனந்த்.

டீம் - 4..

2021012609323415.jpeg

ஷிவா, ஃபாசில், கோகுல்.

டீம் - 5..

20210126093255700.jpeg

கார்த்திக் ராம், சோமேஷ், சதீஷ்.

சரியாக பத்தரை மணிக்கு துவங்கியது போட்டி...

அதாவது ஒரு வெஞ்சிரக் கிண்ணம் கூட தயாராக இருக்கப்படாது. தேங்கா துருவுவதிலிருந்து, வெங்காயம் உரிக்கும் வரை எல்லாமே அந்த நிமிடத்தில் இருந்து தான்.

சமையல் சட்ட திட்டங்களைப் பார்த்து கடுப்பான சோமேஷ் எல்லாம் ரெடி மேடா இருக்க கூடாதுங்கறீங்களே.. காய்கறியாவது வாங்கலாமா இல்லை அதையும் நாங்க விளைய வெச்சு தான் சமைக்கணுமா என்று கேட்டது ஹைலைட்.

இரண்டு மணி நேரம் டார்கெட். அதற்குள் முடித்து விட வேண்டும்.

ஒரு டப்பாவில் சமைத்த வஸ்துக்களைப் போட்டு நடுவர்களுக்கு 12.45-க்குள் அனுப்ப வேண்டும்.

பின்னர் ஒரு பத்து நிமிடம் டைம். அதற்குள் சமைத்து வைத்த பதார்த்தங்களை அழகாக அடுக்கி, அதற்கு ஒரு மார்க் வாங்க வேண்டும்.

வாயில் நுரை தப்புவது ஒன்று தான் பாக்கி.

எங்கள் அணியைப் பொறுத்தவரை ஓரளவுக்கு நான் சமையல்கட்டில் காலாவது வைத்திருக்கிறேன். என்னுடைய டீம் மேட்ஸ் இரண்டு பேருக்கும் வீட்டில் கிச்சன் என்று ஒன்று இருப்பதே தெரியாது, பாவம். இதுகளை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பது என்று முதல் நாள் வரை நான் பட்ட கவலையை லவலேசமும் காட்டிக் கொள்ளாமல் சிரிச்ச மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு தான் அந்த நாள் துவங்கியது.

இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தனியே சந்தித்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்து கொண்டோம்.

ரவியை வெங்காயம் உறிக்க சொல்ல.. அனந்துவை தேங்காய் துருவ சொல்ல.. அரைச்சு விட்ட சாம்பார் என்று முடிவானதில்.. கடலை பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், கொஞ்சூண்டு வெந்தயம் என எல்லாவற்றையும் வறுத்து வைத்துக் கொண்டு, தனியாக துருவி வந்த தேங்காயையும் வறுத்துக் கொண்டு… பொறுங்கள்… நான் ஏதும் செய்முறை விளக்கம் சொல்லப் போவதில்லை…

வறுத்து வைத்த சமாச்சாரங்களை மிக்சியில் போட்டு அரைக்கலாம் என்று ஒரு தட்டில் வைத்து திரும்பிப் பார்ப்பதற்குள்.. தட்டு சரேலேன சரிந்து, ஏறக்குறைய பாதி கீழே கொட்டி விட்டது. ஒன்றரை மணி நேரம் தான் இருந்தது.

மீண்டும் வறுத்து, அரைத்து.. ஒரு வழியாக சமையல் முடிந்த போது பார்த்தால் இன்னும் அரை மணி நேரம் மிச்சம் இருந்தது.

மூன்று பேரும் கிடைத்த நேரத்தில், ஒரு காபியை போட்டு விட்டு ஜூம் செயலியில் மற்ற அணியினரையும் நடுவர்களின் காமெண்டுகளையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இதற்கு நடுவே... சார்ட்டட் அக்கெளண்டட் ரவி, வலைதளத்தில் தேடினாரோ அல்லது அவர் மனைவி சொல்லிக் கொடுத்தாரோ தெரியவில்லை... கொஞ்சம் கூட அழுவாச்சி இல்லாமல் அத்தனை வெங்காயத்தையும் உரித்து விட்டு வந்தார். எப்படி என்று கேட்டதும் அதன் ரகசியத்தை சொன்னார். அதாவது வெங்காயம் மொத்தத்தையும் தண்ணீரில் அமிழ்த்தி கொஞ்சம் கொஞ்சமாக உரித்திருக்கிறார் மனிதர்.

இவரை நம்பி சேப்பங்கிழங்கையும் கொடுக்கலாமா என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில், அது வேறு மாதிரி உரிக்க வேண்டும் என்ற புரிதலுடன் தொடரந்தது எங்கள் சமையல்.

சும்மா. சொல்லக் கூடாது. சமையல் செம ரகளை.

அந்த இரண்டு மணி நேரமும் வேறு எந்த சிந்தனையும் இல்லை. அங்கலாய்ப்பு இல்லை.

பாதி சமையலில் வந்து உப்பு போட்டியா, வெந்தயம் போட்டியா என்று சந்தேகம் கிளப்பி சமைத்து முடிப்பதிலேயே கவனம் இருந்ததால் எந்த அணியும் எந்த அணியையும் சட்டை செய்யவில்லை.

20210126093544579.jpeg

மிருகக்காட்சி சாலையில் கூண்டுக்கு வெளியே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போல நடுவர்களும், அனுவும் சேர்ந்து ஜூம் வழியாக அத்தனை ஆண்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். சமையல் அறையில் எது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறுவதையும் ரசித்தபடியே காபி குடித்துக் கொண்டு ஏக குஷி. இதற்கு நடுவே ஜூமில் குக் வித் தேவி யூடியூப் சானல் நடத்தும் தேவி சதீஷும் வந்து எல்லா ஜீவன்களும் எப்படி சமைக்கிறது என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசி விட்டுப் போனதும் நடந்தது.

வெளியூருக்கு போவதை விட, அதற்கான திட்டமிடல் தான் ஜாலியாக இருக்கும் என்று சொல்வதைப் போல, சமையல் போட்டியின் முடிவுகளை விட சமையல் செய்யும் ஆண்களின் திண்டாட்டம் தான் பெண்களுக்கு உற்சாகம் கொடுப்பது போல இருந்தது.

ஆச்சு. இரண்டு மணி நேரம் ஆச்சு.

இதில் முதல் ஐட்டம் சாம்பார் என்றதும், இரண்டாவது ஐட்டமாக நாங்கள் செய்தது எண்ணெய் கத்திரிக்காய். இதற்காக ஊரில் பெரியம்மாவுக்கு போன் போட்டு சில பல ஸ்பெஷல் ரகசியங்களெல்லாம் தெரிந்து கொண்டு முழுத் தெறமையை இறக்க, குறுக்கு வழியில் யோசித்து விட்டனர் இதர அணியினர்.

அதாவது எங்கள் அணி மட்டும் தான் சாம்பாருக்கு இணையாக எண்ணெய் கத்திரிக்காய் கறி என்று கர்நாடகமாக யோசித்திருந்தோம்.

மற்ற அணியினர் தத்தம் மனைவிமார்களின் யோசனைப்படி (அடிக்க வருவார்கள் இருக்கட்டும்!) புதுசு புதுசா தினுசு தினுசா செய்து அசத்தினார்கள்.

20210126093618350.jpg

உதாரணத்திற்கு கிருஷ்ணசாமி அணி பனானா கட்லட் செய்தனர். கார்த்திக் ராம் அணி, பாஸ்தா பிரதமன் செய்தனர். (எனக்கென்னவோ நடுவர் ஜெயஶ்ரீயின் பின்புலம் கொஞ்சமாவது இருந்திருக்கும் என்று அடிமனதில் தோன்றுகிறது)

ஃபாசில் அணி செய்தது மால்பூவா (முதலில் அது மலையாள படத்தின் பெயரோ அல்லது ஹீரோயினியின் பெயரோ என்று தான் நினைத்தேன். அப்புறம் தான் அது ஒரு பதார்த்தம் என்று தெரியவந்தது). சதீஷ் அணியினர் செய்தது காரட் அல்வா. அதை ஒரு கிளாசில் போட்டு ஏதோ குடிப்பது போல எடுத்து வந்தார்களாம்.

ஆக சமையல் நடுவர்கள் அனைவருக்கும் நாக்கு படு நீளம் என்று புரிந்தது. ஸ்வீட்டுக்குத் தான் மார்க்கு கிடைக்கும் என்று புரியும் போது ஏற்கனவே தோற்றுப் போயிருந்தோம்.

ஆங்.. அப்புறம் டிஸ்ப்ளே. எங்களுக்கு வாய்த்த வெள்ளரிக்காய் சின்ன சின்னதாக போக, ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல டிஸ்ப்ளே முயற்சித்ததில்.. இரண்டரை நட்சத்திரம் அளவு தான் தேறியது. என்ன செய்ய...

மற்ற அணிகள் இதில் தான் நிறைய மார்க் வாங்கியிருக்கிறார்கள். ஜெயஶ்ரீ கிச்சன் கணவர் கிச்சனுக்குள் இத்தனை வருடத்தில் உள்ளே கூட செல்லாதவரெல்லாம் டிஸ்பிளேயில் அசத்தியிருப்பது கொஸ்டின் பேப்பர் லீக்கானது போலவே, தோற்ற அணிகளுக்கு தோன்றியதில் ஆச்சரியம் இல்லை.

போட்டி என்று சொன்னாலும், யாரும் யாருடனும் சண்டையோ சச்சரவோ செய்யவில்லை.

2021012609370409.jpg

முதல் பரிசை தட்டிச் சென்றது கார்த்திக் ராம், சுரேஷ், சோமேஷ் அணி. அவர்கள் செய்தது தான் அந்த பிரபல பாஸ்தா பிரதமன். கார்த்திக் ராம் நன்றாக சமைக்கத் தெரிந்தவர். அடிக்கடி சமையல் செய்பவர். அவர் கல்யாண வத்தக்குழம்பு செய்திருந்தால், அவர் தான் ஜெயித்திருப்பார். அதனால் அதை செய்யக் கூடாது என்று ஏற்கனவே கண்டிஷன் போட்டு விட்டோம்.

உசிலை மணி சொல்வார் தேங்காய்ல சட்னி வெப்பா துகையல் வெப்பா பாம் வைப்பாளோ? அது மாதிரி இத்தாலிய பாஸ்தாவில் கேரள பாயசம் பிரதமன் வைத்து, முதல் பரிசு தட்டிச் சென்ற அணிக்கு மார்க்கு புதிய சிந்தனைக்காகவாம். அதிலும் ஜூம் மீட்டிங்கில் நடுவர் ராதா, சுதா, ஜெயஶ்ரீ மூன்று பேரும் கண்கள் செருக, ஆஹா ஆஹா, என்று சப்புக் கொட்டி அந்த பாஸ்த பிரதமனை லபக் லபக் என்று விழுங்கிய போதே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்க போகிறார்கள் என்று.

இரண்டாவது பரிசு கிருஷ்ணசாமி, வினோத், ராஜன் அணிக்கு. அவர்கள் செய்தது பனானா கட்லட். அதாவது உபரியாக இனிப்பு சேர்க்காமல் வாழைப்பழம் மற்றம் இயற்கை பழங்களை வைத்து மட்டுமே செய்த பனானா கட்லட்டுக்கு இரண்டாவது பரிசு. ஆனால் அவர்கள வைத்த சாம்பாரில் ஏதோ குறை இருக்கிறது என்று நடுவர்கள் காமெண்ட் அடித்த போது கிருஷ்ணசாமி முகத்தில் ஈயாடவில்லை. ஏனெனில் அவர் தேர்ந்த சமையல்காரர்.

என்ன நடந்தது என்று சி.பி.ஐ போல விசாரித்ததில், அந்த அணி வெங்கயாத்தை போடவே மறந்து விட்டார்கள் போலும். பின்னர் அடித்துப் பிடித்து அதை வறுத்து கொஞ்சம் கருகிப்போய் சாம்பாரில் சேர்த்து விட அதை நடுவர் சுதா கனகச்சிதமாக கண்டு பிடித்து விட்டார். இருந்தாலும் இரண்டாவது பரிசு வாங்கியதில் அவர்களுக்கு மகிழ்ச்சி தான்.

அந்த சாம்பார் சாப்பிட்டு நடுவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று அடுத்த இரண்டு நாட்களும் கலாய்த்துக் கொண்டிருந்தோம்.

ஃபாசில் அணி செய்தது மால்பூவா. சதீஷ் அணி செய்தது காரட் அல்வா. அதை ஒரு தட்டில் வைத்து கொடுக்காமல் ஒரு கப்பில் விட்டு கொண்டு வந்ததும் வித்தியாசமாக இருந்ததாம்.

இப்படி ஸ்வீட் தான் ஜெயிக்கும். சுதா, ராதா, ஜெயஶ்ரீக்கு பிடிக்கும் என்று தெரிந்திருந்தால் எண்ணெய் கத்திரிக்காய்க்கு பதிலாக... கத்திரிக்காய் குலோப் ஜாமூன் என்று என்னத்தையாவது முயற்சித்து தொலைத்திருக்கலாம்.

மற்ற மூன்று அணியும் பரிசு வாங்காவிட்டாலும் பெண்களிடம் பாராட்டுப் பத்திரத்தை பெற்றுக் கொண்டது தான் மிச்சம்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு கேடயங்களும்... மற்றபடி போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கு பெற்ற கேடயமும் வழ்ங்கப்பட்டது.

ஒரு வகையில் இந்தப் போட்டியை நடத்துவதற்கு தூண்டுகோலாக இருந்தது தில்லைக்கரசி எழுதிய ச்சும்மா அதிருதில்ல..வில் ஒரு பெண்ணின் சமையற்கட்டு போராட்டம் தான்.

அந்தக் கட்டுரை The Great Indian Kitchen என்ற திரைப்படத்தில் வரும் ஒரு கேரளப் பெண்ணின் அன்றாட போராட்டங்களை சார்ந்து எழுதியது.

இந்தப் போட்டி பலரின் கண்களை திறந்திருக்கிறது.

பெண்கள் மட்டும் தான் சமைக்க வேண்டுமா? ஆண்களும் ஒவ்வொரு நாள் பொறுப்பெடுத்துக் கொண்டு சமைத்தால் என்ன என்ற எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது.

போட்டி பற்றி என்ன சொல்கிறார்கள்..?

கிருஷ்ணசாமி: புது இடத்தில் சாப்பிடுவதே கொஞ்சம் சங்கோஜமாகவும் சங்கடமாகவும் இருக்கும். ஆனால் புது இடத்தில் போய் மூன்று பேராக சேர்ந்து சமைத்ததே ஒரு புதிய அனுபவம். அலாதி அனுபவம். அதிலும் அந்த வாழைப்பழ கட்லட் நன்றாக வந்ததில் மகிழ்ச்சி.

கார்த்திக் ராம்: பல நாள் கழிச்சு ஊருக்குப் போகும் போது லேசாக பெய்த மழையில் கிளம்பும் மண்வாசனை... நம்ம ஊர் மண்வாசனை போன்ற அனுபவம் இந்த சமையல் அனுபவம். (அடடே !)

ஃபாசில்: சமையல் என்பதை ஒரு வேலை என்று நினைத்திருந்தேன் இத்தனை நாள். அது ஒரு உன்னதமான கலை என்று புரிய வைத்தது இந்த போட்டி.

ரவி திருவேங்கடம்: என்னாலெல்லாம் சமைக்கவே முடியாதுன்னு நினைச்சிருந்தேன். இனி சாம்பாரும், கத்திரிக்காய் கறியிலும் நான் எக்ஸ்பர்ட். அடிச்சு தூள் கிளப்பிடலாம்.

ராஜன்: சரியான அளவில உப்பு காரம் போட்டா மட்டும் பத்தாது... அதை எப்படி டேபிள்ள வெச்சு பரிமாறுவது என்பதும் முக்கியம், அப்படின்னு இந்த போட்டி புரிய வெச்சுருச்சு.

கார்த்திக்: ஏதோ சாதித்த உணர்வு. எத்தனை பெரிய கலை சமையல் என்று புரிந்தது. நாங்க செய்த உணவை ருசித்து விட்டு, நல்லாருக்கு என்று சொல்லும் போது ஒரு அற்புத உணர்வு அது.

வினோத்: பயிருக்கு தேவை உரம், சமைக்க தேவை நெஞ்சில் உறம், சமையலில் உப்பு, காரம் போட தெரிந்தால் அதுவே பெரிய வரம்..!

(ஆக யாரும் பெண்களின் கடும் உழைப்பை குறித்து சொல்லவேயில்லை. கொளுத்தி போடுவோம்)

என்னைக் கேட்டால், இதை ஒரு உலகளாவிய இயக்கமாக மாற்ற வேண்டும். வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாளாவது பெண்ணுக்கு சமைப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விடுமுறை கொடுக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் பெண் மட்டும் தான் சமைக்க வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் மட்டுமே இருக்கும் வழக்கம். மேல் நாடுகளில் இது வழக்கில் அவ்வளவாக இல்லை.

இந்தப் போட்டியில் வெற்றி தோல்வியை விடுங்கள். மற்றபடி, அனைவருக்கும் பெண்களின் உழைப்பும், அவர்களின் தியாகமும் புரிய வந்ததே இந்த நாளின் வெற்றி.

சமையல் போட்டி நடந்த நான்கு மணி நேரம் இங்கே சுருக்கமால ஐந்து நிமிடத்தில்……