தொடர்கள்
பொது
பாண்டியன் நினைவலைகள்… - பா. கிருஷ்ணன்

2021012717553366.jpg

இறுதி மூச்சு வரை போராளி...

“எனது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து வருகின்றன. ஆனால், மூளை மட்டும் ஆற்றல் குறையாமல் இருக்கிறது. எனவே, உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காக என் மூளை சிந்தித்துக் கொண்டேயிருக்கும். என் வாய் பேசிக் கொண்டேயிருக்கும்....”

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன், சில காலம் முன்பு மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் இப்படி முழங்கினார். அவரது இந்தப் பேச்சைப் படித்தபோது, “சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை” என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

தா. பாண்டியன் தனது முழக்கத்தை, சிந்தனையை 2021ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி காலையில் நிறுத்திக் கொண்டுவிட்டார். இனி அவரது நினைவலைகள் மட்டுமே உயிரோடு உலவிக் கொண்டிருக்கும்.

பொதுவுடைமை வாதிகள் என்றாலே வறட்சியாகப் பேசுவார்கள் என்ற பிம்பத்தை எழுபதாம் ஆண்டுகளிலேயே உடைத்துப் போட்டவர் அவர்.

அப்போது கல்லூரி மாணவனாக இருந்தபோது, அவரது இலக்கிய உரை இன்னும் நினைவிலாடுகிறது. தமிழ் கொஞ்சி விளையாடும், கம்பன் பாடல்களின் ரசத்தைப் பிழிந்தெடுத்துப் பேசியதும், பாரதி பாடல்களில் நெருப்பைக் கொப்புளிக்கப் பேசியதும் மனத்தை விட்டு அகவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளைக் குறிப்பிட்டு குத்தலாக நகைச்சுவையாக அவர் பேசியதைப் போல் வேறு யாரும் பேச முடியாது.

ஓர் அரசியல்வாதி தமிழ் உரிமைகளைப் பேசினால், பிரிவினைவாதியைப் போல் தோன்றுவார். தேசியம் பற்றிப் பேசினால், மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதாகத் தென்படுவார். இந்த முரண்பாடுகளைக் களைந்து ஒரே சமயம் தேசியத்தையும், மாநில உரிமையையும் சர்வதேச வர்க்கப் பார்வையயும் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை உண்டென்றால், தா. பாண்டியனுக்கு மட்டுமே இருந்தது.

1980ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் ஃபாசிசப் போக்கை இடதுசாரிகள் கண்டித்தனர். குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவைப் புலிகள் சென்னையிலேயே படுகொலை செய்தபோது, கண்டித்த குரல்களில் தா. பாண்டியன் குரல் உரக்கக் கேட்டது.

அதே சமயம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்தின்போது, அதைக் கடுமையாகச் சாடியவர்களில் உரத்த குரல் தா. பாண்டியனுடையதுதான்.

1991 மே மாதம் ராஜீவ் படுகொலை சம்பவம் நடந்த உடனடியாக வெளியான உயிரிழந்தோர் பெயர்களில் தா. பாண்டியன் பெயரும் இடம்பெற்றிருந்தது. ராஜீவ் படுகொலை நடந்தபோது, வெளிச்சத்திற்கு வராத காங்கிரஸ் பிரமுகர் “லீக்” முனுசாமி உயிரிழந்தார். மரகதம் சந்திரசேகர் தவிர வேறு காங்கிரஸார் காயமடையவில்லை. ஆனால், பலத்த காயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் (தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) பல மாதம் சிகிச்சை பெற்றவர் தா. பாண்டியன். அவரது கால்களில் நூற்றுக் கணக்கில் தோட்டாத் துண்டுகள் துளைத்திருந்தன. அவற்றை நுட்பமாக அகற்றுவது பெரிய காரியமாக இருந்தது. அப்போது நடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர்.

அதே தா. பாண்டியன் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்தையும் கடுமையாகக் கண்டித்தார். அப்போது, இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி புரிந்தது தெரிந்த பிறகும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பழ. நெடுமாறன் ஆகியோருக்குத் தோள்கொடுத்தவர் தா. பாண்டியன்.

அவருக்குத் தெரிந்ததெல்லாம் மனித உரிமைக்காகவும் மக்கள் விடுதலைக்காகவும் தன் வாழ் நாளெல்லாம் போராடுவதுதான்.

ஜெனிவாவில் 2012, மார்ச் 1ம் தேதி நடைபெற்ற அனைத்துலக ஈழத்தமிழர் மகாநாட்டில் கலந்துகொண்டு “ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றது இன அழிப்பு!” என்று ஆதாரங்களோடு பேசினார் தா.பா.

1932ல் பிறந்து, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர், அப்போது பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சியில் 1953ல் தனது அரசியல் பணியைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1961ல் தொடங்கியபோது, அதன் முதல் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இப்படி, கலை, இலக்கியப் பணியையும், அரசியல் சமூகப் பணியையும் ஒரே சமயத்தில் மேற்கொண்டு தொய்வின்றி சுமார் 60 ஆண்டுகள் நிறைவேற்றியவர் அநேகமாக தா. பாண்டியன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

தோழர் ஜீவானந்தம் அவர்கள் தொடங்கிய கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். ஜனசக்தி நாளிதழில் ஆசிரியராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். ‘சவுக்கடி’ என்ற புனை பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்கு கட்சி எல்லைகளையும் தாண்டி வாசகர்கள் உண்டு. சென்னை துறைமுகத்தில் தினக் கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அதில் வெற்றியும் கண்டவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பரந்த வாசிப்பு கொண்டவர். இவரது பேச்சுகள், எழுத்துக்கள், சொற்பொழிவுகள் அனைத்தும் பாமரருக்கும் புரியும் வகையில் பேசும் வலிமை பெற்றவர்.

1990ம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் எம். கல்யாணசுந்தரத்திற்கு கட்சியில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. ஒத்த கொள்கையும் பொதுவாழ்வில் நேர்மையும் கொண்டவர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டன. கல்யாணசுந்தரம் ஒதுக்கப்பட்டார்.

அப்போது மோகித் சென் தலைமையிலான ஐக்கிய பொதுவுடமைக் கட்சியில் கல்யாணசுந்தரம் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது ஒரு சமயம் செய்தியாளர்களைச் சந்தித்த கல்யாணசுந்தரம் பேட்டிக்குப் பின் ஒரு சில நிருபர்களிடம் தனியாகக் கூறினார்: “கட்சியில் இக்கட்டான நிலை ஏற்பட்டபோது எனக்குத் தோள்கொடுத்தவர் தா.பா. அவர் எனக்குப் பெரும்பலமாக இருந்ததால் என் பயணத்தை சுமுகமாக மேற்கொள்ள முடிகிறது” என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார். அப்போது, தா.பா. அருகில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்குத் தமிழகத்தில் அடையாளம் தந்த எம்.கே. கொடுத்த சான்றிதழை விட தா. பாண்டியனுக்கு வேறு சான்றிதழ் இருக்குமா தெரியவில்லை.