தொடர்கள்
தொடர்கள்
குறுந்தொகை துளிகள் - 9 - மரியா சிவானந்தம்

கடம்ப மரத்தடி காதல்...

20210122105054183.jpg

அந்த மலைக்கிராமத்தின் பொது மன்றத்தின் நடுவில் ஒரு வெண் கடம்பமரம் கிளை பரப்பி நிற்கிறது. அம்மரத்தின் நிழலில் ஒரு தலைவனும் அவனது அழகியும் நிற்கிறார்கள்.

அவளது கண்கள் கலங்கி இருக்கிறது. “பொருள் தேட புறப்படும் காதலன்என்று திரும்பி வருவான்?” என்று பேதை நெஞ்சம் பரிதவிக்கிறது. அவளது கலக்கத்தை உணரும் காதலன், “கண்ணே, கலங்காதே! நான் என் பணி முடித்து, சித்திரை பௌர்ணமி அன்று உன்னுடன் இருப்பேன். இதோ இந்த கடம்பமரத்தில் வாழும் கடவுள் மீது ஆணை!” என்று அவளது கரம் பற்றி சத்தியம் செய்கிறான். அவளை விட்டுச் செல்கிறான்.

மாதங்கள் கடந்தன. சித்திரை முழு நிலவும், அம்மலையை வலம் வந்து சென்று விட்டது. காதலன் திரும்பி வந்தானில்லை.

காதலியின் துயரம் எல்லை கடந்தது, அவள் தோள் மெலிய, உடல் தளர்ந்தாள். முகத்தில் பசலை படர, காண்போர் பரிகாசம் செய்தனர்.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். (குறள் 1233)

அவன் உடன் இருந்த போது, அந்த மகிழ்ச்சியில் பூரித்து இருந்த காதலியின் தோள்கள், அவன் பிரிந்து சென்றதும்... இவள் காதலனைப் பிரிந்து வாழுகிறாள் என்பதை ஊருக்கு பறை சாற்றுவது போல மெலிந்து விட்டன.

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே? (பழனி பாரதி )

என்று தன் மனக்கிடக்கையை சொல்ல முடியாமல் தவிக்கிறாள் அவள்.

அவனது பிரிவுத் துன்பத்தை விட, ஊராரின் கேலிப்பேச்சு அவளுக்கு துன்பம் தருகிறது. அதைவிட மரத்தில் வாழும் கடவுள் மீது செய்த ஆணை அவள் நினைவுக்கு வந்து வருத்துகிறது. சொன்ன நாளில் திரும்பி வராமல் சத்தியத்தை மீறி விட்டதால் அவன் தெய்வத்தின் தண்டனைக்கு ஆளாகிறானோ என்ற ஐயம் அவளை புரட்டி எடுக்கிறது.

தன் உள்ளத்தை அவள் யாரிடம் சொல்ல முடியும், அவள் உள்ளம் உணர்ந்த பாங்கியைத் தவிர?

“தோழி, மன்றத்தில் உள்ள வெண்கடம்ப மரத்தில் உறையும் தெய்வத்தின் முன்பு தான் செய்த சத்தியத்தை என் காதலன் நிறைவேற்றாதவன் தான். அந்த அச்சம் தரும் தெய்வம் தீமை செய்தவர்களை தண்டிக்கும் வல்லமை மிக்கது என்பதை நாம் அறிவோம். ஆனால் குன்றுகள் நிறைந்த நாட்டின் தலைமகனாகிய என் காதலன் தண்டிக்கப்படும் அளவுக்கு குற்றம் செய்தவர் அல்லர். அவரைப் பிரிந்த பின் என் நெற்றியில் தானாகவே பசலை படர்ந்து விட்டது... என் அகன்ற தோள் மெலிந்து விட்டது. இந்த என் மாற்றத்துக்கு ஊர் மக்கள் அவரைப் பழி சொல்கிறார்கள். அவரைப் பழிக்க வேண்டாம், என் நிலைக்கு நானே காரணம்” என்றாள் அக்காதலி.

உலகின் ஏளனச் சொல்லுக்கும், கடவுளின் கோபத்துக்கும் பயந்த காதலி காதலனைத் தூற்றாமல், தன்னைத்தானே பழித்துக் கொள்வது உன்னத காதலின் அடையாளம்.

குறுந்தொகையின் இந்த அழகிய பாடலை இயற்றியவர் கபிலர், அனைவருக்கும் பரிச்சியமான தமிழ் புலவர்.

செறுத்த செய்யுட் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி
விளங்கு புகழ்க் கபிலர்

என்று புகழப்பட்டவர் மன்னன் வேள்பாரியின் நண்பர். பாரி இறந்த பின்னர் அவரது மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் திருமணம் முடித்து விட்டு, நண்பரின் நினைவாக வடக்கிருந்து உயிர் விட்டவர் என்று வரலாறு கூறுகிறது. ஏராளமான அகப்பாடல்களை எழுதியவர். குறிஞ்சித்திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இப்பாடலும் குறிச்சித்திணைப்பாடலே.

இதுவே பாடல்

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்”
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென்தோளே.

(குறுந்தொகை 87 கபிலர்)

தொடரும்