“என்ன புவனா? கையில ஸ்வீட்டும், முகத்தில சந்தோஷமும், தாண்டவமாடுதே? என்ன மேட்டர்?” என்று வீட்டுக்கு வந்தவளிடம், கேட்டாள் என் மருமகள் பிரீத்தி.
“உன் வீட்டுக்காரர் இன்னும் வரலையா?” என்ற புவனாவிடம்....
“ஆஃபீஸ் முடிந்து வரும்போது, அப்படியே ஸ்கூலுக்குப் போய், இரண்டு பசங்களையும் கூட்டிகிட்டுதான் வருவாரு. பரீட்சை நெருங்குதில்லே… ஸ்பஷல் கிளாஸ் வேற நடக்குது. அதோட, எங்க ஆட்டோக்காரர் ஒரு வாரத்துக்கு, லீவு போட்டிருக்கார்” என்றாள் பிரீத்தி.
நான் பக்கத்து அறையில் இருக்கிறேன், என்பதை மறந்து, தன் மகிழ்ச்சிக்கான காரணத்தை, சத்தமாகவே சொல்லி, பிரீத்தியுடன் பகிர்ந்து கொண்டாள், வந்திருந்த அந்தப்பெண்.
“என் மாமனார் போய்ச் சேர்ந்து, ஒரு வருஷமாச்சுன்னு உனக்குத்தான் தெரியுமே. புருஷன் போனபிறகு, கிராமத்தை விட்டுட்டு, என் மாமியார் எங்ககூட வந்து தங்கினதை நான் ஒண்ணும் பெரிசாக்கலை. ஆனா… அதென்னமோ பிரீத்தி… என் மாமியாருக்கும் எனக்கும், பல விஷயங்கள் ஒத்தே போகலை.
அவங்க, எந்த விஷயத்திலேயும் காம்பிரமைஸே பண்ணிக்காத ‘பிடிவாதக்காரி’. பிள்ளையை டாமினேட் பண்ணி, வீட்டு அட்மினிஸ்டிரேஷன், என் பர்சனல் டெஸிஷன்ஸ், குழந்தைங்களோட ஃபிரீடம் எல்லாத்திலையும் மூக்கை நுழைச்சு, எங்களைப் புடுங்கி எடுத்துட்டா.
இந்த ஆம்பிள்ளைகளுக்கு, அம்மா சென்டிமென்ட், ரொம்பவே ஜாஸ்தி. அதிலேயும், என் வீட்டுக்காரர், பூம்பூம்மாடு மாதிரி, அம்மா சொன்னதுக்கெல்லாம், தலையை ஆட்டிகிட்டிருந்தார்”, என்றாள் அவள்.
“என் புருஷனோட, கடந்த ஆறு மாசமா போராடி, நேத்துதான் என் மாமியாரை, கொண்டுபோய், திருச்சியிலே, ‘அனாதை’ கிழங்களுக்கான “வஸிஷ்டர் முதியோர் இல்லம்னு” ஒரு ஹோம்ல சேர்த்துட்டு வந்தேன்” என்று குரலில் சந்தோஷம் தொனிக்கச் சொன்னாள் புவனா.
“உன், மாமியாருக்கு ஒரே பையன்தானே? அப்புறம் எப்பிடி அவரோட அம்மாவை, ‘ஹோம்ல’ சேர்க்க சம்மதிக்கவைச்சே?” என்றாள் பிரீத்தி.
“அவரும் முடியாது, அம்மா நம்மோடுதான் இருப்பான்னு” என்னோட மல்லுகட்டி பார்த்தாரு. கடைசியிலே, ‘நானா…? உங்க அம்மாவா?’ அப்படீன்னு ஒரு பிரம்மாஸ்திரத்தைப் போட்டேன். ஆயிரந்தான் இருந்தாலும், இந்த ஆம்பிளைகள் பெரும்பாலும், பொண்டாட்டி தாசர்கள்தானே. அதோட, என் மாமியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததாலே, இவரை தத்து எடுத்துத்தானே வளர்த்தாங்க” என்றாள் புவனா.
“அவங்க பேர் என்னன்னு” பிரீத்தி கேட்டதும்...
“அருந்ததி” என்றாள் புவனா. அந்தப் ‘பெயர்’ எனக்கு மிகவும் பரிச்சயமானதாக தோன்றியது.
“ஏண்டி புவனா… உன் மாமியாருக்கு வியாதி ஒண்ணும் இல்லையே?” என்றாள் பிரீத்தி.
“இப்போ எழுபது முடிஞ்சாச்சு, கண்ணு, காதெல்லாம் நல்லாவே இருக்குது. ஆனா, இரண்டு கையிலுமே அவங்களுக்கு, சுண்டு விரல்கள், பிறவியிலிருந்தே இல்லையாம்” என்று புவனா சொன்னதும், எனக்குள், ஒரு அதிர்வலை தோன்றி மறைந்தது. “அவளேதான்” என்று, என் மனம் அடித்துக் கொண்டது.
நானிருந்த அறையைவிட்டு, வெளியே வந்து, அவர்கள் பேசிக் கொண்டிருந்த, ஹாலுக்கு வந்ததும், எனக்கு புவனாவை அறிமுகம் செய்து வைத்தாள் பிரீத்தி. “அப்பா… இவ என் ஃப்ரெண்டு. சமீபத்திலேதான் அவளோட பெங்களூர் ஆஃபீஸிலிருந்து டிரான்ஸ்வராகி, இங்கே சென்னைக்கு வந்திருக்கா. நம்மோட இந்த புது வீட்டுக்கு இன்னிக்குத்தான் வரமுடிஞ்சுதாம்” என்றதும், அந்த புவனா என்னைப் பார்த்து, “வணக்கம் சார்” என்றாள்.
“ஏதோ, இரண்டு கைகளிலும், சுண்டுவிரல் இல்லேன்னு, நீ சொல்லிகிட்டிருந்தயே… உனக்காம்மா?” என்றேன். அதற்குள் என் மருமகள், “இல்லேப்பா… அவளோட மாமியாருக்குத்தான்” என்றாள்.
“பொதுவா, கைவிரல்களில் பிறவிக்குறை இருப்பவர்கள், எதாவது மியூஸிக்கல் இன்ஸ்டுருமென்ட் வாசிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்களே” என்றேன்.
உடனே புவனாவோ, “என் மாமியார் அப்படி ஒண்ணும் பெரிய ‘இசையரசி’ இல்லை. ஆனா, ஒரு வயலின் வைச்சிருப்பாங்க. தினசரி அதை போட்டு, ஙொய்ஙொய்ன்னு அறுத்துகிட்டிருப்பாங்க” என்று சொல்லிவிட்டு, சிரித்துக் கொண்டாள், அந்த ‘கற்பூர வாசமறியாத கழுதை’. ஆனால், எனக்கோ, “அவளேதான்” அந்த “அருந்ததியேதான்…” என்று, உள் மனது அடித்துக் கொண்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, என் மகனிடமும், மருமகளிடமும், “என்னோட ஓல்டு-ஏஜ் ஃபிரண்டுகளெல்லாம் சேர்ந்து, திருச்சியிலிருந்து கிளம்பி, மதுரை, ராமேஸ்வரம் கன்யாகுமாரி இங்கெல்லாம் போயிட்டுவர மாதிரி, ‘ஒன்வீக் பில்கிரிமேஜ் டிரிப்’ அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. நாளைக்கு திருச்சியிலே இருந்து கிளம்பறாங்க. நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்னுட்டேன். பத்திரமா போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, திருச்சிக்கு கிளம்பினேன்.
“வஸிஷ்டர் முதியோர் இல்லத்தில்” நுழைந்து, பார்வையாளர்கள் படிவத்தில், “அருந்ததியின் பள்ளித்தோழன் - பட்டீஸ்வரம்” என்று எழுதி, என் பெயரையும் குறிப்பிட்டிருந்தேன்.
கிட்டத்தட்ட, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, அருந்ததியைப் பார்க்கப்போகும், ஆர்வத்தில், அந்த ‘அனாதை ஆஸ்ரமத்தின் ஆஃபீஸில்’ காத்திருந்தேன். எனக்குள், காவிரியாறு போல, பழைய எண்ணங்கள் கரை புரண்டோடியது.
எனக்கு பெண் பார்க்க, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் புடைசூழ, அன்று, திருவையாறிலிருந்து கிளம்பி, ‘ஞானசம்பந்தருக்கு ஈசன், முத்துப் பல்லக்கு’ கொடுத்தருளிய திருத்தலமாகிய ‘பட்டீஸ்வரத்துக்கு’ போயிருந்தோம்.
அருந்ததியின், தேன்தடவிய குரலில், வழிந்தோடிய அந்த ஐந்து நிமிட, கர்நாடக சங்கீத, ராக-ஆலாபனையில், எங்கள் மொத்த குடும்பமும் மனதைப் பறிகுடுத்தது.
புளி போட்டு தேய்த்த, ‘வெங்கலப் பாத்திரத்தின்’ நிறத்திலிருந்தாள் அவள். கையில் பிடித்திருந்த வயலினோடு அவளை பார்த்தபோது, ‘வீணையேந்திய சரஸ்வதியைப்’ போலிருந்தாள்.
அவள் வயலினிலிருந்து எழுப்பிய சில கீர்த்தனைகள், சுருதி சுத்தமான ஸ்வரங்களோடு, ஆரோகண உச்சத்தை எட்டியதும், எங்கள் எல்லோர் மனமும், கட்டுண்டிருந்தது..
என் பெற்றோர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அந்தப் பெண்ணை, மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்தார்கள். சம்பிரதாயமாக, இருவர் வீட்டிலும், அப்போதே வெற்றிலைத் தட்டும் மாற்றிக் கொண்டார்கள். அடுத்த முகூர்த்திலேயே, கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவர்கள் வீட்டிலும் சம்மதித்தார்கள்.
அனைவருக்கும், மணக்க மணக்க பால் பாயாசத்தை, சிறிய வெள்ளி டம்ளர்களில் ஊத்தி எடுத்துக் கொண்டு வந்து குடுத்தாள் அருந்ததி.
அப்போதுதான், அவளுக்கு இரண்டு கைகளிலும், சுண்டு விரல்கள் இல்லாததை நான் கவனித்தேன். ஏற்கனவே தரகர், அவளின், அந்தப் பிறவிக்குறையை எங்களிடம், சொல்லியிருந்தார். என் பெற்றோரும் அந்த விஷயத்தை பெரிது படுத்தவில்லை.
என் திருமணத்திற்கு, பதினைந்து நாட்களே இருந்தன. அப்போது, காசிக்கு புண்ணிய-யாத்திரை போய்விட்டு வந்திருந்த, என் அப்பாவின், அத்தையும், மாமாவும், அருந்ததியை பார்ப்பதற்காக, பட்டீஸ்வரம் போனார்கள்.
பெண்ணிற்கு, இரண்டு கையிலும் சுண்டுவிரல்கள் இல்லை, என்பதை பெரிதுபடுத்தி, “ஊனமானப் பெண் நம் குடும்பத்திற்கு வேண்டாம், வம்சம் தழைக்காது” என்று சொல்லி, நிச்சயமான எங்களது திருமணத்தையே நிறுத்தி விட்டார்கள்.
நடந்த தவறுக்கு, நான் காரணமல்ல என்று சொல்லி, மன்னிப்பு கேட்க, நான் மட்டும், அருந்ததியின் வீட்டுக்குப் போயிருந்தேன்.
நிலைக்கதவின் பின்னால், மறைந்து நின்றிருந்த அருந்ததி, “இனி, நான் உயிரோட இருக்கிற வரைக்கும், உங்க முகத்தையே பார்க்கமாட்டேன்னு, இந்த பட்டீஸ்வரம் துர்கை சன்னிதானத்திலே சத்தியம் பண்ணியிருக்கேன்… தயவுசெய்து போயிடுங்கோ” என்று சொல்லி, கதவைச் சாத்திக்கொண்டாள். அதன் பிறகு, பலமுறை முயர்ச்சித்தும், என்னை பார்க்கவே மறுத்தாள் அந்த பிடிவாதக்காரி.
அருந்ததியைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே ஐம்பது வருடங்களுக்கும் மேலாக என்னோடு தாம்பத்தியம் செய்த என் மனைவியும், சுமங்கலியாக போய் சேர்ந்துவிட்டாள்.
அன்று, என் மருமகள், பிரீத்தியின் தோழி புவனா சொன்னதால்தான் இன்று, திருச்சியில் இருக்கும், இந்த முதியோர் இல்லத்து ரிஸப்ஷனில் வந்து அமர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது.
திடீரென்று, ஆஸ்ரமத்தின் சிப்பந்திகள், அங்குமிங்குமாய் பரபரப்புடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்து “என்ன விஷயம்” என்று விஜாரித்தேன்.
“ஐந்து நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து, அருந்ததின்னு ஒரு அம்மாவை, அனாதைன்னு, கொண்டுவந்து யாரோ சேர்த்திட்டுப் போனாங்க. அந்தம்மா, பெரிய வயலின் வித்துவானோ, என்னமோ? எங்க எல்லாருக்குமே அவங்களோட குரலும், வயலினும் பிடிச்சுப் போச்சு. கொஞ்சம் முன்னாடி வரைக்கும், வயலின் வாசிச்சுகிட்டிருந்தாங்க. திடீர்னு, பத்து நிமிஷத்துக்கு முன்னாடி, ஹார்ட்-அட்டாக் வந்து மூச்சு பேச்சில்லாம விழுந்துட்டாங்க” என்றான்.
“நானும் போய் கும்பலில் நின்று, அருந்ததியைப் பார்த்தேன். அருகே கிடந்த அவளது வயலினில், “பட்டீஸ்வரம் துர்கை” படம் ஒட்டியிருந்தது. என்னை, உயிருள்ளவரை பார்க்கக் கூடாதென்ற அவளின் ‘சத்தியம்’ நிறைவேறிய, திருப்திப் புன்னகை உதடுகளில் தவழ, கண்களை மூடிக்கிடந்தாள், அந்தப் ‘பிடிவாதக்காரி’ அருந்ததி.
Leave a comment
Upload