விதுர நீதி எளிமையாய் ...
விதுரன் யார்?
மஹாபாரதத்தை எழுதிய வியாச பகவானின் மகனே இவர். வியாஸபகவான் தன் அன்னையின் கட்டளைக்கிணங்கி கர்பதானம் செய்தபோது... அம்பிகை, அம்பாலிகை இருவரும் பயந்து தமக்கு பதிலாக அவருக்கு பணிவிடை செய்ய அனுப்பப்பட்ட பணிப்பெண்ணுக்கு பிறந்தவரே விதுரன். தந்தையின் அறிவினையும், தாயின் பணிவினையும் ஒருசேர பெற்ற அபூர்வ பிறவி ஆவர்.
ஒரு மனிதன் கடைபிடிக்கவேண்டிய அனைத்து தர்மங்களையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கடைபிடித்து வாழ்ந்த ஒரே உதாரண புருஷன் விதுரனே ஆவார். “சிறியர் செய்கை செய்தான்” என்று யுதிஷ்டிரனையே குறை கூறினான் நம் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாதவராக வாழ்ந்த, நாம் பின் பற்ற வேண்டிய கதாபாத்திரம் விதுரன். தர்மத்தை மீறாமல் நடுநிலைமை தவறாமல், யார் மனதையும் நோகடிக்காமல், நீதியை சொன்ன மகாஞானி அவர்.
திருதிராஷ்டிரன் அரண்மனையில் அவரை விரும்புபவர் எவருமில்லை எனத் தெரிந்தும்... அதற்காக தன்னிலை மாறாமல், தர்மம் மற்றும் நியாயத்தை மட்டுமே கடைபிடித்து, அதன்படி வாழ்ந்து மற்றவர்களுக்கும் சொன்னவர். இவர் தர்மதேவனின் அம்சத்துடன் பிறந்தவர்.
விதுரரின் சகோதரர்கள் ராஜ குமாரிகளை திருமணம் செய்தபோதும், அவர் ஒரு சாதாரண பணிப்பெண்ணான பாரஸ்வி என்பவரை திருமணம் செய்து, மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். துரியோதனின் அரண்மனையில் வாழ்ந்தாலும், அவரின் மனம் பாண்டவர்கள் பக்கமே இருந்தது.
மன்னன் தம் அண்ணன் என்றாலும் ராஜசபையின் ஒழுங்கு முறைகளை என்றும் மீறாமல் வாழ்ந்துவந்தவர். துணிச்சலாக திருதிராஷ்டிரனுக்கு அறிவுரை சொன்னவர். திருதிராஷ்ட்ரனும் அவனது புதல்வர்களும் விதுரனை எவ்வளவு அவமதித்தபோதும், அதை எந்த சலனமும் இல்லாமல் ஏற்றவர். அவரையே கிருஷ்ண பரமாத்மா ஸ்திதப்ரக்ஞன் என்கிறார். அதனாலேயே தூது வந்தபோது, கௌரவர் விருந்தோம்பலை மறுத்து விதுரன் வீட்டிலே தங்கி உணவுண்டு அவருக்கு மிகப்பெரிய கௌரவத்தினை தந்தார். பிறருக்கு அறிவுரை சொல்லத் தகுந்த ஆசானாகிறார்.
விதுரன் சிறந்த பண்பாளர். மஹாபாரதத்தில் போருக்கு முன்பு வருவதே விதுரநீதி ஆகும். இதுவும் பகவத் கீதை அளவுக்கு முக்கியமானதே. விதுரன் திருதிராஷ்டிரனுக்கு கூறிய உபதேசங்களே விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் நிகழவிருக்கும் அழிவை நினைத்து போரை நிறுத்திவிடலாமா என்று திருதிராஷ்டரன் நினைத்தபோது... அவர் விதுரனை அழைத்து ஆலோசனை கேட்கிறார். அப்போது விதுரன் சொன்னதே, விதுரநீதி ஆகும். இதை ஒரு தனிப்பட்ட நீதியாக அணுகினால், இது இதிகாச காலத்திலிருந்து இக்காலம் வரை எல்லா காலத்திற்கும், களத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு நீதி நெறி ஆகும்.
அறமில்லாத இடத்திலிருந்தாலும், அவர் அறத்துடனே வாழ்ந்தார்.
இந்த விதுரநீதி, சிறந்த நிர்வாகவியல் நூல் ஆகும். எந்த ஒரு தனிமனிதனும் இவருடைய போதனைகளை தன் வாழ்வியலுடன் இணைத்துக்கொண்டு, தன் வாழ்வினை மேம்படுத்திக்கொள்ளலாம்.
மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஹஸ்தினாபுரத்தின் மந்திரியாகவும், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தவர் விதுரன். எனவே இவரின் ஒவ்வொரு நீதியும், நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவருக்கு ஆகச்சிறந்த கையேடாகும். எனவே ஒரு தனி மனிதனோ, ஒரு நிறுவனமோ, ஒரு நாடோ, இந்த நீதியை பின்பற்றினால் அழியாப்புகழையும், வளர்ச்சியையும் அடையாளம் என்பதில் ஐயமில்லை.
வளர்ந்து வரும் குழந்தைகளும், இளம் தலைமுறையும் வாழ்க்கையில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய நீதி நூல் ஆகும். எல்லா பள்ளிகளிலும் இதனை நீதி போதனையாக சில மணித்துளிகள் ஒதுக்கி அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
இந்தத் தொடரின் குறிக்கோள் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு இதனை நாம் கொண்டு சேர்த்து, அவர்களின் மனதிலே தர்மத்தின் விதைகளை விதைக்க வேண்டியது நமது தலையாய கடமை. அதனின் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர். பின்வரும் வாரங்களில் விதுரன் கூறிய நீதியும், அது எப்படி இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தும் என்று பார்ப்போம்.
எங்கு தர்மம் இருக்கிறதோ.. அங்கு வெற்றி இருக்கும்...
Leave a comment
Upload