தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
ஓ... ஓபோஸ்... - மரியா சிவானந்தம்

20210124222137304.jpg

உணவு உயிர் வளர்க்கும் மருந்து. உணவின் வழி உறவு வளருகிறது. அம்மா, அக்கா, ஆச்சி, அத்தை, அண்ணி, மனைவி என்று ஒவ்வொரு உறவுக்கும் ஒரு கைமணம் உண்டு. உறவுகளின் நினைவுகள், உணவுடன் தொடர்பு கொண்டவை. சமையல் ஆர்வம் உள்ளவருக்கு அடுப்படியே கோயில், அவர்கள் உழைப்பில் பிறப்பது உணவல்ல, நைவேத்தியம்.

சைவம், அசைவம் எது எடுத்தாலும் விதவிதமான உணவுகள் நம் இந்திய கிச்சனில் இருக்கிறது. வறுத்தல், பொறித்தல், வதக்கல், அவித்தல், வாட்டல் என்று எத்தனை எத்தனை முறைகளில் நம் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன!

சமைப்பதில் அதிக ஆர்வம் இருந்தாலும், அதில் சில சிரமங்களும் உண்டு. நம் பாரம்பரிய சமையலில் நீளமான தயாரிப்பு முறைகள் உண்டு. மேலும் நம் சமையல் அறையில் வித விதமான பாத்திரங்கள் உண்டு. ஒரு முழு சமையலை முடித்த பின்... அந்த அடுக்களையை ஒழித்து, பாத்திரங்களை கழுவி மீண்டும் தூய்மைப்படுத்துவது பெரிய டாஸ்க். வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்ல.. வீட்டில் இருக்கும் பெண்களும் திணறி போவது இங்குதான். அப்போதுதான் சமையல், சலிப்பு தரும் உழைப்பாக பார்க்கப் படுகிறது. இரண்டாவது, சமையல் செய்ய செலவிடும் நேரம். காய்கள் நறுக்கி, மசாலா அரைத்து, வேகவைத்து, தாளித்து கொட்டி என்று பல வேலைகள் நேரத்தை விழுங்கும்.

இந்த இரண்டு சிரமங்களையும் குறைக்க உருவான சமையல் முறைதான் - ‘ஒப்போஸ்” சமையல் முறை. (One Pot One Shot) என்பதன் சுருக்கமே ஓபோஸ். இந்த முறையில் ஒரே சமையல் பாத்திரம் தான் உப்யோகிக்கப்படுகிறது. பொரியல், சாம்பார், அவியல், பிரியாணி, மீன்குழம்பு, இனிப்பு வகைகள் எல்லாவற்றுக்கும் ஒரே பாத்திரம் தான். சமைக்கும் நேரமும் சில நிமிடங்கள் தான்..

முதலில் இந்த முறையைக் கண்டு பிடித்தவரைப் பற்றி சில வரிகள்...

சென்னையைச் சேர்ந்த திரு. ராமகிருஷ்ணன், சில வருடங்களுக்கு முன்பு பஹ்ரைனுக்கு பணி நிமித்தம் சென்றவர். அங்கு தனக்கு பிடித்த இந்திய உணவு வகைகளை மிக குறைந்த நேரத்தில் செய்ய பல பரிசோதனைகளை மேற்கொண்டார். அவரது நீண்ட முயற்சியில் உருவான இந்த ஓபோஸ் முறையை, முகநூலில் ஒரு குழுவை உருவாக்கி அதில் பகிர்ந்தார். அதன் பின், opos பிரபலமாகி விட்டது. இப்போது முகநூலின் பெரிய குழுக்களில் ‘ஓபோஸ் குரூப் முக்கியமானது’.

20210124222245583.jpg

இந்தச் சமையல் பற்றி அறிந்து, இந்த முறையைக் கடைபிடிக்கும் சுபா பிரியதர்ஷினி அவர்களை ‘விகடகவி’ இதழுக்காக சந்தித்தோம். அவர் ஒரு கண் மருத்துவர். சக மருத்துவர் ஒருவர் ஓபோஸ் பற்றி சொல்ல... ஆர்வத்துடன் அதை கற்றுக் கொண்டு, சுலபமாக செய்து வருகிறார்.

அந்த நேர்க்காணலின் ஒரு பகுதி இங்கே...

20210124222344858.jpg

“சொல்லுங்க , இந்த ஒரு பாத்திர சமையலுக்கு, என்ன பாத்திரம் உபயோகிக்கிறீர்கள்? என்றோம் நாம்.

“இதற்கு மேஜிக் பாட் என்று தனியாக விற்கிறார்கள். நம் வீட்டில் 2லிட்டர் குக்கர் இருந்தால், அதையே கூட நாம் உபயோகிக்கலாம்.”

“ஓ.. இது நம் குக்கர் சமையல் போல தானா?”

“குக்கர் சமையல் வேறு, ஓபோஸ் சமையல் வேறு. இதில் ஆறு நிமிடத்தில் சிக்கன் பிரியாணி செய்யலாம், 12 நிமிடத்தில் மட்டன் பிரியாணி செய்யலாம். நிமிடத்தில் பாயசம் செய்யலாம், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று டிஷ் செய்ய முடியும்.”

20210124222626805.png


“ஒரே பாத்திரத்திலா... எப்படி செய்வீர்கள்?”

‘ஓபோஸ் முழுவதும்; ‘ஹை பிளேம்’ சமையல் தான். குக்கரின் அடிப்பாகத்தில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முதலில் அதை கொஞ்சம் தணலில் வைத்து தயாராக்கி கொள்ள வேண்டும். பின்னர் உணவுப்பொருட்களை லேயர்களாக அமைக்க வேண்டும். தண்ணீர், எண்ணெய் எல்லாமே அளந்து உபயோகிக்க வேண்டும். அதற்கு டிஜிட்டல் தராசு இருக்கிறது. காய்கறிகளில் இருக்கும் தண்ணீர் சமையலை துரிதபடுத்துவதால், மிக குறைந்த அளவு தண்ணீரே உபயோகிக்க வேண்டும்.

“கொஞ்சம் சுலபமாக செய்யக்கூடிய குறிப்பு ஏதாவது சொல்லுங்களேன்..”

“ஓகே. கேரட் அல்வா ஓபோஸ் முறையில் எப்படி செய்வது என்று சொல்கிறேன். 1/4 கிலோ அளவு கேரட்டைத் துருவிக் கொள்ளவேண்டும். அதன் பின் குக்கரில் 3 டீஸ்பூன் தண்ணீர் விட வேண்டும். துருவிய கேரட்டை அதில் போட்டு, 200 கிராம் அளவு சர்க்கரையை அதன் மேல் லேயராக போட வேண்டும். பின்னர் இரண்டு டீ ஸ்பூன் பால் பௌடர், இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சை போன்ற நட்ஸை அதிலேயே சேர்க்க வேண்டும். அடுப்பை பற்ற வைத்து ஹை பிளேமில் குக்கரை சரியாக பத்து நிமிடம் வைக்க வேண்டும். 12-18 விசில்கள் வந்தபின், காஸை அனைத்து விட்டு, ஸ்டீம்மை ரிலீஸ் செய்துவிட்டு, குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட்டால், கேரட் அல்வா தயார்.

“இந்த ஓபோஸ் முறையால் என்ன நன்மை?”

ஓபோஸ் அறிவியல் பூர்வமானது. நேரம், எரிபொருள் செலவு மிச்சம். நிறைய பாத்திரங்களை உபயோகிக்க வேண்டாம், உணவின் நிறம், சுவை வேறு லெவலில் இருக்கிறது. உணவுப் பொருளின் சத்துக்கள் வீணாவதில்லை. சுத்தமான, எளிய முறையில் விதவிதமாக செய்து அசத்தலாம். சமையல் செய்யும் முறை சுலபமானது என்பதால், குழந்தைகளே செய்ய முடியும். ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் சமைக்கும் நேரமும், மற்ற அளவுகளும் மாறுபடும். கொஞ்சநாளில் கிடைக்கும் அனுபவத்திலேயே எல்லா ஐட்டம்களையும் அருமையாய் சமைக்கலாம். குறிப்பா பாத்திரம் தேய்க்க ஆளைத் தேட வேண்டாம்” என்றார்.

மேலும் அவர் “ஓபோஸ் மூலம்... கீர் வகைகள், கேசரி, ஸ்வீட் வகைகள், பனீர் உணவுகள், பிரியாணி வகைகள் செய்யலாம். முட்டைகளை சத்து அழியாமல் வேக வைக்கலாம். உப்புமா வகைகள் செய்யலாம். கீரை மசியல், அவியல், வட இந்திய உணவு வகைகளையும் சமைக்கலாம்.. எல்லாம் சில நிமிடங்களில் முடிந்து விடும்” என்றார்.

“பிரமிக்கத்தக்க விவரங்களை தந்ததற்கு” நன்றி என்று கூறி விடை பெற்றுக் கொண்டோம்...

நிஜத்தில் சமையல் பற்றி அனுபவம் இல்லாதவர்களுக்கும், பேச்சலர்களுக்கும் இந்த முறை சமையலை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். முயற்சி செய்ய விரும்புவர்களுக்கு யூடியூபில் ஓபோஸ் வீடியோக்கள் நிறைய காண கிடைக்கின்றன. அடுக்களையில் மணிக்கணக்காக நின்று களைத்து போகும் பெண்களுக்கு, ஓபோஸ் ஒரு வரப்பிரசாதம். மனைவிக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஆண்களுக்கு சமய சஞ்சீவினி.

வாருங்கள் நண்பர்களே... இந்த புதிய முறையில் சமைத்துப் பாருங்கள்.