“வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என நம் முன்னோர்கள் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இப்பழமொழியைச் சொல்லியிருக்கிறார்கள். அந்நாட்களில், எண்ணெய் உடலுக்கு ஒரு மருந்தாக இருந்ததற்காகச் சொல்லப்பட்ட பழமொழி. கண்ட எண்ணெய்களையும் பயன்படுத்தி, நோய்வாய்ப்பட்டு மருத்துவருக்குக் காசு செலவழிப்பதைவிட, மரசெக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை தயாரிக்கும் வணிகருக்குக் கொடுத்துவிடலாம் என்பது இதன் அர்த்தம்.
ஆரம்ப காலங்களில் சமையலுக்கும், கோவிலுக்கும், வீட்டுக்கு விளக்கெரிக்கவும் ‘நெய்’ தான் பயன் படுத்தப்பட்டு வந்தது. பிறகு தான், தாவர வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் எள்ளிலிருந்து மட்டும்தான் எண்ணெய் எடுக்கப்பட்டது. எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எள் நெய் எண்ணெய் ஆனது. அதற்குப் பிறகு தான், கொப்பரை தேங்காய், ஆமணக்கு விதை, கடலை வித்து போன்றவற்றிலிருந்தும் எண்ணை எடுக்கப்பட்டது. அவற்றை, தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடலை எண்ணெய் என்றுதான் குறிப்பிட்டனர். எள் நெய் ஆகிய எண்ணெய், நல்லெண்ணெய் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. வெளிநாட்டில் கூட இதை “Queen of Oil” என்று அழைக்கிறர்கள்.
இவ்வாறு எண்ணை வித்துகளிலிருந்து, எண்ணெயை பிழிந்து எடுக்க “செக்கு” என்கிற ஒரு கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது.
மரச்செக்கு எண்ணெய்:
நமது முன்னோர்கள் செய்து வைத்த எல்லா விஷயங்களிலும் ஒரு நன்மை உண்டு. அதில் ஒன்று பாரம்பரியமிக்க செக்கு எண்ணெய். எள், கடலை அல்லது கொப்பரை தேங்காயை, பெரிய கல் அல்லது மர உரலில் வாகை மரத்தால் ஆன உலக்கையில் இருந்துவரும் ஆரப்பட்டையின் மூலம் உலக்கையை எருதினை துணையாகக் கொண்டே செக்கு ஆட்டப்பட்டது. பொருளாதார வசதிக்கேற்ப ஒற்றை மாடு கொண்டும் இரட்டை மாடு கொண்டும் செக்கு ஆட்டப்பட்டது. மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள்.
காலப்போக்கில் எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் பாக்கெட் எண்ணெய் வருகையால், சமையல் எண்ணெய் சந்தையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. பாமாலின், சூரியகாந்தி எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் என பல்வேறு எண்ணெய் வகைகள் சந்தையை ஆக்கிரமித்தன.
தற்போது மக்கள், தங்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் எண்ணெய்களினால் உண்டாகும் பிரச்னைகளை உணர ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, விலை அதிகமென்றலும் உடல் நலத்தின் முக்கியத்தை கருத்தில் கொண்டு, மக்கள் மரச்செக்கு எண்ணெய்யின் பக்கம் தங்களது பார்வையை திருப்பியிருக்கின்றனர். தற்போது மரசெக்குகளில் மாடுகளைப் பயன்படுத்தாமல், சிறிய அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
நமது ஆரோக்கியத்திற்க்கு தேவையான ஊட்ட சத்துக்கள் மரச்செக்கு எண்ணெயில் உள்ளன... அவை புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள், குளோரோபில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் “இ” போன்றவை உள்ளன.
இயற்கை முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படும் அனைத்துமே மக்களிடையே அமோக வரவேற்பை பெறும் என்பது உண்மை. அந்த வகையில், நாட்டு மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் சிலர் இறங்கி உள்ளனர்.
மரச்செக்கில் எண்ணெய் எடுக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும். எனவே எண்ணெயின் விலையும் சற்று அதிகமாகதான் இருக்கிறது. ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.
ஆரோக்கியத்தை தரும் மரச்செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் கிடைக்கும் இடங்களைத் தேடி செல்கின்றனர். தற்போது மரச்செக்கு என்ற பெயரில் போலி ஆசாமிகளால் கலப்பட எண்ணெய்களும் சந்தையில் உலா வருகிறது.
விளம்பர மாயையிலிருந்து, மக்கள் நம் முன்னோர்களின் வழியில், உடலுக்கு நன்மை தரும் பல பாரம்பரிய உணவு முறைகளை நோக்கி நகர முனைந்திருப்பதின் முதல்படிதான் மரச்செக்கு எண்ணெய்க்கு கிடைத்திருக்கும் வரவேற்பு.
Leave a comment
Upload