தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

2021012620324644.jpeg

மிஸ்டர் ரீல் ஆமதாபாத்தில் மோடி ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பார்க்கப் போனபோது, அங்கு அமித்ஷா பக்கத்தில் இருந்தார். அஸ்வினிடம் 400 விக்கெட் சாதனைக்கு மிஸ்டர் ரீல் பாராட்டு தெரிவித்த போது... “எல்லா புகழும் என் அன்பு அண்ணா அமித்ஷாவை சேரும்” என்றார்.

மிஸ்டர் ரீல் உடனே... “அவருக்கு அரசியல் கிரிக்கெட் தானே தெரியும். அவர் மகன் கிரிக்கெட் சங்கத்தில் இருக்கிறார் என்பதும் எனக்கு தெரியும். ஆனால், உங்கள் அன்பு அண்ணன் அமித்ஷாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம் எனக்குப் புரியவில்லை!” என்று கேட்க... அதற்கு அஸ்வின்... “5 நாள் மேட்ச், ஒண்ணே முக்கா நாளில் முடிஞ்சதுக்கு இவர்தான் காரணம்” என்றார்.

அதற்கு மிஸ்டர் ரீல்.. இவருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? எம்எல்ஏ., எம்பி-க்களை பேரம் பேசி ராஜினாமா வாங்குவதில் இவர் பாண்டித்யம் பெற்றவர்... கிரிக்கெட் எப்படி?” என்று கேட்க... உடனே அமித்ஷாவை அஸ்வின் கட்டிப்பிடித்து, முத்தம் தந்து... “அதுதான்... அதுதான் இப்ப கூட நான் தான் பேசுறேன், அவர் எவ்வளவு தன்னடக்கமா இருக்கார் பாருங்க.. இந்த பணிவு தான் இவருடைய துணிவு” என்று அஸ்வின் சொல்லிக்கொண்டே போக... அவரை மறித்த மிஸ்டர் ரீல்.. “தயவுசெய்து என்னை குழப்பாமல் கொஞ்சம் தெளிவாக விரிவாக சொன்னால் புண்ணியமாகப் போகும்” என்று சொல்ல... மறுபடியும் அமித்ஷாவின் தாடையில் ஒரு கிள்ளு முத்தா தந்துவிட்டு, அஸ்வின் ஆரம்பித்தார்... “இந்த ஸ்டேடியத்திற்கு மோடி பெயர் ஏன் வைத்தார்கள்... அவருக்கு இப்போ சுக்கிரன் உச்சத்தில், சூரியன் மிச்சத்தில்.. அதுதான் காரணம். இது தவிர மேட்ச் நடப்பதற்கு இரண்டு நாள் முன்பு, பாபா ராம்தேவ் ராத்திரி ஒன்னே முக்கால் மணிக்கு ஒரு யாகம் இந்த பிச்சில் பண்ணினார். மறுநாள் என்னை பார்த்த பாபா ராம்தேவ், இந்தப் பிட்சில் நீ 400ஐ கம்பிளிட் பண்ணிடுவே... ஆனால், மேட்ச் ஒண்ணே முக்கா நாளில் முடிந்துவிடும் என்று சொன்னார். நான் பாபா ஏதோ காமெடி பண்ணுகிறார் என்று நினைத்தேன். ஆனால், மேட்ச் துவங்குவதற்கு முன்பே எனக்கு வாழ்த்து சொல்லி பொக்கே தந்தார் அமித்ஷா. எதற்கு என்று கேட்டேன்.. நாளை மாலை தெரியும் என்றார். பாபா ராம்தேவ் சொன்னபடி, ஒன்னே முக்கால் நாளில் மேட்ச் முடிந்தது.. நானும் நாணுறு விக்கெட்டை எடுத்து முடித்தேன். உடனே பாபா ராம்தேவை ஸ்டேடியத்தில் தேடி நன்றி சொன்ன போது... நீ நன்றி சொல்ல வேண்டியவர் இவர்தான் என்று அமித் ஷாவிடம் கொண்டுபோய் நிறுத்தினார். பாபா ராம்தேவ்விடம் இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.. அவர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு லேகிய பாட்டில்களை தந்துவிட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டார்” என்று அஸ்வின் சொன்னதும்...

“பாபா ராம்தேவிடம் லேகியம் வாங்கி நன்றியை கழித்து விட்டீர்கள்... அமித்ஷாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு அஸ்வின்.. “தமிழ்நாட்டில் தாமரை மலர, நானும் முயற்சி செய்யப் போகிறேன்” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்... “நீங்களுமா” என்று கேட்க... அஸ்வின் “ஆமாம். திருவல்லிக்கேணி தொகுதியில் நான்தான் தாமரை வேட்பாளர்”. எனிவே மிஸ்டர் ரீல்... “நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்று தின இதழ், வார இதழ், டிஜிட்டல் இதழ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இதிலெல்லாம் நீங்கள் செய்தி பரப்புங்கள்... அதற்குப் பரிசாக நான் 400வது விக்கெட் எடுத்த பந்தை தருகிறேன்” என்று சொல்லி, அந்தப் பந்தை காண்பிக்க... மிஸ்டர் ரீல் ஆர்வத்துடன்... “தாருங்கள்” என்று கையை நீட்ட... அதற்கு அஸ்வின்.. “நோ நோ நோ முதலில் செய்தியை பரப்புங்கள்.. நீங்க பரப்பும் செய்தி எனக்கே மறுபடியும் ஃபார்வேர்டு ஆகணும். அப்பத்தான் இந்த பந்து” என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “உங்களைவிட சீனியர் ஸ்ரீகாந்த், அவரும் நிறைய சாதனை எல்லாம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு எம்எல்ஏ சீட் வாங்கி தரலாமே” என்று கேட்க... அதற்கு அஸ்வின்... “அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அவர் சாதனை எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் பண்ணியிருக்கிறார். அப்புறம் எப்படி அவருக்கு வாய்ப்பு தருவாங்க... கவுன்சிலர் பதவி கூட அவருக்கு கிடைக்காது” என்று சொன்னவர்... ஆனால், வாஷிங்டன் சுந்தருக்கு கவுன்சிலர் சீட் உறுதி என்று என் அன்பு அண்ணன் அமித்ஷா வாக்குறுதி தந்து இருக்கிறார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் என்னிடம் வந்து எனக்கும் எம்எல்ஏ சீட் வாங்கித் தாருங்கள் என்று கேட்டார். அப்போது நான், கவுன்சிலர் பதவியில் நிறைய சில்லரை கல்லா கட்டலாம், வருமானம் ஜாஸ்தி. எம்எல்ஏ பதவியில் கொஞ்சம் கம்மிதான் என்றேன். உடனே கவுன்சிலர் பதவியே எனக்குப் போதும்” என்று சொன்னார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “நீங்க கண்டிப்பா ஜெய்பிங்களா” என்று சந்தேகத்துடன் கேட்க... அதற்கு அஸ்வின்... “கண்டிப்பா ஜெயிப்பேன், திமுக ஓட்டு கூட எனக்குத்தான் விழும்” என்றார். உடனே மிஸ்டர் ரீல்... திமுக ஓட்டு உங்களுக்கா.. வாய்ப்பே இல்லை..” என்று சொல்ல.. அதற்கு அஸ்வின்... “பிரச்சாரத்தின் போது, கலைஞர் தாத்தா என் கனவில் வந்து 400 விக்கெட் எடுத்ததற்கு ஆசீர்வாதம் பண்ணினார். கூடவே என் ஓட்டு உனக்கு தான் என்று சொன்னார். அதுமட்டுமல்ல.. என் பையன், பேரன் எல்லோரும் உனக்கு ஓட்டு போடுவார்கள் என்று கலைஞர் தாத்தா எனக்கு வாக்குறுதி தந்தார் என்ற உண்மையை சொல்வேன். அப்போது திமுககாரர்கள் எனக்குத் தானே ஓட்டு போடுவார்கள்” என்றார். அப்போது மிஸ்டர் ரீல்... அமித்ஷாவை பார்க்க... உடனே அமித்ஷா... “என்னை அப்படி பார்க்காதீங்க.. இதெல்லாம் அஸ்வின் சுயமாக யோசித்து சொல்வது.. எனக்கே இந்த தகவல் இப்போதுதான் தெரியும்” என்று சொல்லிவிட்டு... “அஸ்வின் தம்பி, கலைஞர் தாத்தா உன் கனவில் வந்தாரா” என்று கேட்க... ஆமா அண்ணே வந்தார்.. வாக்குறுதி தந்தார்” என்று சொல்ல... சட்டமன்ற உறுப்பினர் அஸ்வின் என்று ஒரு முறை மிஸ்டர் ரீல் சொல்லிப் பார்த்தார்.. நன்றாகத்தான் இருந்தது. எதுவும் பேசாமல் எழுந்து வந்து விட்டார் மிஸ்டர் ரீல்.