தொடர்கள்
உணவு ஸ்பெஷல்
ஆரோக்கியமான எண்ணை எது...? - ஆர்.ராஜேஷ் கன்னா

20210125164941951.jpg

இந்தியாவில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் , சோயா எண்ணெய், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் என வருடத்திற்கு 23 மில்லியன் டன் அளவுக்கு மக்கள் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதயம் நன்றாக இருக்க, எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் உண்பதை தவிருங்கள் என்று சமீபகாலமாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்த வண்ணம் இருக்கிறார்கள்….

மறுபுறம் பளபளக்கும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளிலும், கேன்களிலும் விற்பனை படு ஜோராக விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.

மனித வாழ்க்கையில் எண்ணெய் மிகவும் முக்கியமானது என்பதோடு அதில் இருக்கும் நல்ல கொழப்பு, அமினோ அமிலங்கள், தாதுக்கள் எல்லாம் மனிதர்களின் வளர்ச்சியிலும் சக்தியிலும் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

நமது முன்னோர்கள் எள்ளிலிருந்து நல்லெண்ணெய், தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய், நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய், அரிசி தவிட்டிலிருந்து தவிட்டு எண்ணெய், கடுகிலிருந்து கடுகு எண்ணெய் என மரசெக்கு அமைத்து அதில் எருது மாடுகள் பூட்டப்பட்டு செக்கெண்ணெயை இயற்கை முறையில் தயாரித்து வந்தனர்.

2021012516502785.jpg

நவீன அறிவியல் மாற்றங்களுக்கு எருது மாடு பூட்டப்பட்ட செக்கெண்ணெய் வழக்கம் கிட்டதட்ட ஒழிக்கப்பட்டு, இரும்பு செக்குகள் அமைக்கப்பட்டு மின்சார மோட்டர் முலம் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி வரும் சமையல் எண்ணெய் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது தானா என்று ஒரு பெரும் பட்டிமன்றமே தற்போது நடந்து வருகிறது.

சர்க்கரை நோய் மற்றும் கொழப்பு இரத்தத்தில் அதிகம் இருப்பவர்கள் சூரிய காந்தி எண்ணெய் வாங்கி பயன்படுத்த ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கடையில் இருக்கும் சூரிய காந்தி எண்ணெய் பாக்கெட்டுகளை வாங்கி பார்த்தால்... அதில் 80 சதவீதம் பாமாயில் கலந்து இருப்பதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனால் கலப்படமாகி வரும் எண்ணெயை உட்கொண்டால், நோய் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று மறுபுறம் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

சூரியகாந்தி விதைகள் மூலம் நம்மூரில் சன்பிளவர் ஆயில் தயாரிக்கிறோம் என்று எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சொல்கிறது. இந்திய மக்களின் எண்ணெய் தேவையில் கால் சதவீதம் சூரிய காந்தி எண்ணெய் உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு சூரிய காந்தி விதைகள் இந்தியாவில் உற்பத்தி ஆகிறதா என்பது பில்லியன் டாலர் கேள்வி.

ரஷியாவிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்படும் க்ருட் ஆயிலை பதப்படுத்தி, அதனை சூரிய காந்தி எண்ணெய் ப்ளேவர் சேர்த்து மலிவு விலைக்கு, சன் பிளவர் ஆயில் என்று விற்கிறார்கள். ரைஸ் பிரைன் ஆயிலும் இதே முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இப்படிப் கலப்பட எண்ணெயை சாப்பிட்டால் நாளாடைவில் உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகள், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்பட வழிவகுக்கிறது என பிரபல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அப்படியென்றால் ரேஷன் கடைகளில், மக்கள் வாங்கி உண்ணும் பாமாயில் சாப்பிட உகந்ததா என்ற கேள்வி எழுகிறது. மலேசிய நாட்டிலிருந்து இந்தியா 28 சதவீத பாமாயில் பதப்படுத்தி இறக்குமதி செய்து வந்தது. தற்போது மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா தடை செய்துவிட்டது. அதற்கு பதிலாக இனி இந்தோனேசியாவிலிருந்து கச்சா பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்து, அதன்பின் நமது எண்ணெய் நிறுவனங்கள் பாமாயிலை மக்கள் உண்ணும் விதமாக சுத்திகரித்து விற்பனை செய்ய மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.

சுத்திகரிக்கபடாத பாமாயில் 100 கிராம் எண்ணெயில் 884 கலோரிகள் உள்ளது. பாமாயிலில் விட்டமின் ஈ நிறைந்துள்ளது. பாமாயிலின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இதில் இருக்கும் கரோட்டின் ஆகும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள், பாமாயிலில் சில ரசாயனங்கள் சேர்க்கும் போது, அது வெள்ளை நிறத்தில் கலப்பட பாமாயிலாக மாறிவிடுகிறது. கலப்படமில்லாத சிவப்பு நிற பாமாயிலை உண்ணும் போது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுகிறது, இதய பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பயன்கள் இருந்தாலும், கலப்பட வெண்மை நிற பாமாயிலை உண்ணும் போது உடல்நல தீங்குகள் ஏற்படும் என உணவு நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

நமது முன்னோர்கள் செக்குகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களையே பயன்படுத்தினர். இதன் மூலம் தங்களது உடல் நலன்களை பேணி காத்து வந்தனர்.

நவீன உலகத்தில் செக்கு முறையில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை தவிர்த்து, ரீபைண்ட அல்லது டபுள் ரீபைண்ட எண்ணெய்களே இதயத்திற்கு வலு சேர்க்கின்றன என்றும் இயற்கை முறையில் செக்குகளில் தயாரிக்கப்படும் எண்ணெய்களினால் மாரடைப்பு மற்றும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்கிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் தவறான தகவலை பரப்பி விளம்பரம் செய்தது. இதய நோய் வராது அத்துடன் நாள் முழவதும் உற்சாக்கத்துடன் வைக்கும் ரீபைண்ட் ஆயில் விளம்பரத்தினை நம்பி, மக்கள் ரீபைண்ட் எண்ணெய்க்கு மாறினார்கள் .

நவீன முறையில் இயந்திரங்கள் மூலம் பிழியப்படும் எண்ணெயில், உயிர் சத்துக்களும் சேர்த்து வடிகட்டிவிடுகிறது. இதனால் விதவிதமான பேக்கிங்கில் வரும் எண்ணெய்கள் கிட்டதட்ட உடல்நலத்தினை பேணி காக்காமல், அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கு தீங்கு செய்கிறது என்றே சொல்லவேண்டும் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

சமீபத்தில் மதுரை கீழ்மாசி மார்கெட்டில் இருக்கும் 23 கடைகளில் விற்கப்படும் எண்ணெய் மாதிரிகளை கைப்பற்றிய உணவு துறையினர், சென்னையிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்தனர. அதில் ஒரே ஒரு கடையை தவிர, மற்ற அனைத்து கடைகளிலும் உணவிற்கு பயன்படுத்தும் எண்ணெய்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று ரிப்போர்ட் வந்தது. கோவையில் கலப்பட எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அக்மார்க் லைசென்ஸ் பெற்று இயங்கும் சில எண்ணெய் தயாரிப்பாளர்கள், சில வகை எண்ணெய் வகையுடன் பாமாயிலை கலந்து விற்பனைக்கு அனுப்பியதை சுகாதார துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

நவீன முறையில் ரிபைண்ட் செய்யப்படும் எண்ணெயை சுத்திகரிக்க காஸ்டிக் சோடா, கந்தக அமிலம், ப்ளிச்சிங் பவுடர் போன்ற வேதி பொருட்கள் கலக்கப்படுகிறது. இவை பாக்கிங் செய்யப்பட்ட எண்ணெயில் சிறிய சதவீதம் இருப்பதால், மனித உடலில் இருக்கும் சத்துக்களை வலுவிழக்க செய்கிறது என்றும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

20210125165058157.jpg

முந்திரி தோலிலிருந்து எடுக்கப்படும் ஒரு திரவம் சமையல் எண்ணெய்யுடன் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் இந்த எண்ணெய் உண்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், இவ்வகை எண்ணெயை கண்டறிந்து, தடைசெய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

கலப்பட எண்ணெயை தொடர்ந்து உண்டால், அது இறப்பு வரை அழைத்து செல்கிறது. எனவே சமையல் எண்ணெயை பாக்கிங் செய்யாமல் லூஸில் விற்பனை செய்ய தடை விதித்தது. அத்துடன் சமையல் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி தீர்ப்பு வழங்கினார்கள்.

ரத்தத்தில் எல்டிஎல் என்னும் கொழப்பினை குறைக்கும் முக்கிய ஒற்றை செறிவுறா அமிலம் மற்றும் பன்முக செறிவுறா அமிலம் இருவகையாக இருப்பது, இயற்கையாக தயாரிக்கப்படும் கலப்படமில்லாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், தவிட்டு எண்ணெயில் உள்ளது. இதனை உண்பவர்களுக்கு மாரடைப்பு நோய்வராமல் தடுக்கிறது.

சமையலில் பயன்படுத்தும் எண்ணெய், நமது நார்மல் ரும் டெம்ப்ரச்சரில் உறைய கூடாது. உறையும் சமையல் எண்ணெயை பயன்படுத்தினால் உடல் நலக்கேடு உருவாகிவிடும்.

சமையலுக்கு ஒரே எண்ணெயை பயன்படுத்தாமல், கலப்படமில்லாத கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய் என மாறி மாறி பயன்படுத்த வேண்டும். தாய்மார்கள் சமையலுக்கு, எண்ணெயை அளவோடு பயன்படுத்த வேண்டும் என்று பிரபல ஊட்டசத்து நிபுணர் சொல்கிறார்.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு எண்ணெய் இன்றியமையாததாக உள்ளது. இனி நீங்கள் வாங்கும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுக்களில் அச்சிடப்பட்டிருக்கும் வாசங்களையும் கவனித்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதே உணவு நிபுணர்களின் கருத்தாக உள்ளது.