முன்பெல்லாம் நம்முடைய வீடுகளில் இரவு மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பர். மறுநாள் காலை பள்ளி, வேலைக்கு செல்பவர்களுக்கு, பழைய சாதத்தில் உள்ள தண்ணீருடன் தயிர் கலந்து கரைத்து குடிக்க கொடுப்பர். நாமும் அதனுடன் சின்ன வெங்காயத்தை கடித்து 2 கிளாஸ் குடித்துவிட்டு செல்வோம். கிராமப்புறங்களில் கரைத்த பழைய சாதத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம் கடித்துக் கொள்வர். இதனால் வயிறும் குளிரும், மதியம் வரை பசியும் வராது. நொறுக்குத் தீனிக்கு நோ சான்ஸ்! ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் ‘பழைய சாதம்’ தூரம் தள்ளி ஓடிவிடுகின்றனர். ஆனால், காலாவதியான பாக்கெட்டில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை வாங்கி சாப்பிட்டு, வயிற்றுக் கோளாறினால் அவதிப்படுகின்றனர். இதனால் வீட்டில் மீதமாகும் சாதத்தை குப்பையில் கொட்டும் அவலநிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இயங்கும் நட்சத்திர ஓட்டல்களின் மெனுகார்டில் சமீபகாலமாக புதுமையான பெயரில் ‘பழைய சாதம்’ இடம்பிடித்துள்ளது. தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்தில் தயிர் கலந்து கரைத்து வைத்துவிடுகின்றனர். மறுநாள் அவை வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட ஒரு ஸ்பூன், கடித்துக் கொள்ள அரிந்த பெரிய வெங்காயம் தரப்படுகிறது. இது சுவையாகவும் வயிற்றுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இதன் விலை ₹250 + வரிகள் மட்டுமே என்கின்றனர் இளம் தலைமுறையினர்.
அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் காரணத்தைக் கிராமத்துப் பெரியவரிடம் கேட்டால், ‘பழைய சோறும், கம்பங்களியும்தான்’ என்று பதில் கூறுவார்.
நமது முன்னோர்களின் உடல்நலத்துக்கு பழைய சாதம் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம், நம் பாரம்பரியத்துக்கு உண்டு.
“ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோத்து நீர் இரண்டையும் போக்கும்.”
- சித்தர் தேரையர்
இக்காலத்தில் பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டன. கடைகளில் பீட்சா, பர்கர், நூடூல்ஸ் போன்ற துரித உணவுகளால், இன்றைய இளம் தலைமுறையினர் பழைய சாதத்தின் மகத்துவம் அறியாமல் இருந்தனர். அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutrition Association) என்ற ஆய்வு நிறுவனம், பழைய சாதத்தின் மகிமைகளை பட்டியலிட்டதும், தற்போது இளம் தலைமுறையினர் பழைய சாதத்தின் அருமையை உணரத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்க நிறுவன அறிக்கையில்....
உடலுக்கு நன்மை தரும். இதில் அதிகளவு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.
உணவு செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது.
உடல் உஷ்ணத்தைப் போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
இதில் நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலை நீக்கும்.
காலையில் சாப்பிடுவதால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சோர்வு அண்டாது.
இரத்த அழுத்தத்தை சீராக்கும். ஒவ்வாமை, தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும் என பழைய சாதத்தின் மகத்துவத்தை பட்டியலிடுகின்றனர்.
பழைய சாதத்தில் மற்ற உணவுப் பொருட்களைவிட வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது. வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து என்றால், அதுவே பழைய சாதமாகும்போது அதன் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும்.
“எல்லா உணவுக்கும் ஓரு கால அளவு உண்டு. அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்! பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமனாகும் என்பதெல்லாம் உண்மையல்ல…” என்கின்றனர் டாக்டர்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு சாப்பிடலாம்.
நம் முன்னோர்கள் எந்தவொரு பழக்கத்தையும் காரணமின்றி பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள் ஆரோக்கியம் என்று கூறுவதை மறுக்கும் நாம், அதையே வெளிநாட்டினர் ஆராய்ந்து கூறினால், உடனே ஒப்புக்கொள்கிறோம்.
இப்போதாவது பழைய சாதத்தின் மகிமை உணர்ந்து, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது நம் வீட்டிலேயே பழைய சாதம் சாப்பிடுவதை கடைப்பிடியுங்கள். இனியாவது பர்கர், பீட்ஸா, பரோட்டா சாப்பிடுவதைக் கைவிட்டு, நம் வீட்டு ‘மெனு’கார்டில் பழங்கால தேவாமிர்தமான பழைய சாதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போமே!
Leave a comment
Upload