தொடர்கள்
மக்கள் கருத்து
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்

20210126175130609.jpeg

இந்த வார மக்கள் பேட்டி...
“வீட்டில் ஆண்கள் சமைப்பதை பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா..?”

சித்ரா தனபாலன், நீலாங்கரை.

ஐயோ.. என்னங்க இப்படி கேட்டுடீங்க .. !! தாராளமா சமைக்கலாம்.. வேணும்னா காய் வெட்றது தேங்காய் அரைக்கிறது போல வேலையை நான் ஒத்தாசை கூட செய்றேன்.. எங்க வீட்டுக்காரர் சமைச்சா மட்டும் போதும்.. சந்தோஷமா சாப்பிடுவேன்..


கனிமொழி பாலசுப்பிரமணியன், திருச்சி.

நீங்க வேற.. இவரு சமைக்கிறேன்ங்கிற பேர்ல கிச்சனையே அதகளம் பண்ணிடுவார்.. சாதமும் நான் தான் வைக்கனும். இவர் ஒரு தக்காளி தொக்கும், கேரட்டை பச்சையா வெட்டி ஒரு சாலட்.., சாதத்துக்கு தொட்டுக்கன்னு வச்சிருவாரு.. “யோவ் தக்காளி கொஸ்தே தொட்டுக்கதான்யா.. குழம்பு எங்கே..?”ன்னு கேட்டோம்னா... அதையே சாதத்துல பிசைஞ்சு, கேரட்டை தொட்டுக்கிட்டு சாப்பிடனுமாம்.. செம போங்காட்டம். எனக்கு உடம்பு முடியலைன்னு ஒருநாள் நான் சாம்பார் மட்டும் பண்ணி, இதே கேரட் சாலட் (அவர்கிட்ட‌க் கத்துக்கிட்டதுதான்) அப்பளம், மோர்மிளகாய், ஊருகாய் தொட்டு சாப்பிடுங்கனு சொன்னேன்.. அவ்வளவு தான்.. “கேரட்டை பச்சையா சாப்பிட நான் என்ன கழுதையா..?”ன்னு கேட்டுட்டு... ஒரு உருளைக்கிழங்கு வறுவல் செய்யக்கூடாதான்னு ஆயிரம் நொட்டை சொல்லி சாப்பிட்டாரு. இவரு சமைக்க எல்லாம் வேண்டாம்.. எனக்கு என்னைக்காவது முடியலைனா நான் பண்ண சமையலை குறை சொல்லாம சாப்பிட்டா அதுவே போதும் எனக்கு..


மிருணாளினி சம்பத்

எங்க அம்மா வீட்டுல எல்லா வேலைக்கும் ஆள் இருந்ததால எனக்கு சமைக்க தெரியாது. கல்யாணம் ஆனவுடன் மாமியார் வீடு போன முத நாள் என்னை சமைக்க சொல்லிட்டாங்க... சாம்பார் பண்ணலாம்ன்னு டப்பாக்களை திறந்து பார்த்தா கடலைப்பருப்பு, துவரம்பருப்பு வித்தியாசம் தெரியல. சரி இந்த பருப்பு (கடலை பருப்பு) பெருசா இருக்கு.. பெரிசா இருக்கிறதால தான் அதை போட்டு சாம்பார் பண்றாங்கன்னு நினைச்சு, அத வேகவைச்சு சாம்பார் வச்சுட்டேன். பார்த்தா தண்ணி தனியா, பருப்பு தனியா இருக்கு.. சாப்பாடு போடும் போது, கடலை பருப்புன்னு கண்டு பிடிச்சு என் மாமியார் என்னை முறைக்க... “இதென்ன பருப்பு சூப்பா அண்ணி??!!”ன்னு மச்சினன் விழுந்து விழுந்து சிரிக்க... என் கணவர் திருத்திருன்னு முழிக்க.. நான் அசடு வழிய நின்னேன். அப்புறம் சென்னைக்கு தனிக்குடித்தனம் வந்தப்பின்னே, என் கணவர் தான் ஒரு வருஷத்துல எனக்கு கொஞ்சம் கொஞ்சமா சமையல் கத்துக்கொடுத்தார்.. ( சூப்பரா சமைப்பார்) இப்ப நான் தான் சமைக்கிறேன்.. ஆனா, இப்பெல்லாம் அவர் ஒரு டீ கூட போட்டு தர மாட்டேங்கிறார்... அவர் சமைச்சா நல்லா தான் இருக்கும்.


ராணி பன்னீர்செல்வம், வளசரவாக்கம்.

எனக்கு கல்யாணம் ஆகி 52 வருஷம் ஆகுது. அப்ப எனக்கு 17 வயசு. நான் கருவுற்ற சமயத்துல... ஓயாம வாந்தி மயக்கம்.. நிக்கவே முடியாது.. அப்புறம் எங்கே வீட்டு வேலை பார்க்கிறது? நானும் அவரும் தனிக்குடித்தனம் பண்ணதால, ஒத்தாசைக்கும் யாரும் கிடையாது.. என் கணவர் தான் எல்லா வேலைகளையும் பார்த்து, என்னையும் கவனிச்சிக்கிட்டாரு.. மயக்கமா படுத்து இருந்தா பக்கத்துலயே மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை கொண்டு வந்து வச்சு கல்லைப் போட்டு சுட சுட தோசை வார்த்து குடுப்பாரு. அதுக்கு மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, புளி வச்சு ஒரு துவையல் அம்மியில அரைச்சு, நல்லெண்ணெய் ஊத்தி தருவார் பாருங்க... அந்த ருசி இன்னைக்கு வரை நாக்குல நிக்குது.. எனக்கு எப்ப உடம்பு முடியலன்னாலும் அவர் தான் சமைச்சு, குழந்தைகளுக்கு போட்டு எனக்கும் போடுவார். ஆண்கள் சமைக்கனும்ன்னு கட்டாயம் இல்லை.. அப்புறம் வீட்டு பெண்களுக்கு வேற என்ன தான் வேலை, சமைக்கிறதை விட..? சமயத்துல உதவுறதே போதுமே..!


வரலட்சுமி மோகன், தாம்பரம்.

சமைக்கலாம் தவறில்லை. ஆனா கட்டாயப்படுத்த கூடாது. வெளிவேலை, ஆஃபிஸ் என பல டென்ஷன் ஆம்பளைங்களுக்கு இருக்கும்.. உழைச்சு, களைச்சு வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு ரெஸ்ட் வேண்டாமா? எங்கம்மா சொல்வாங்க “வீட்ல இருக்கிற பொஞ்சாதிக்கு ஒரு எஜமான்.. வெளியே வேலைக்கு போற புருஷனுக்கு ஆயிரம் எஜமான்..!” எல்லார்க்கிட்டேயும் வசவு வாங்கிட்டு, மான அவமானத்தை தாங்கி, நம்ம குடும்பம் உட்கார்ந்து சாப்பிடுவதற்காக எல்லா சுய ஆசைகளையும் துறந்து குடும்பத்துக்காக ஓயாம ஓடிக்கிட்டு இருக்கிற கணவர்களுக்காக... ஒரு மூணு வேளை எளிமையா ருசியா மனைவி சமைச்சு கொடுத்தா என்ன குறைஞ்சிட போகுது சொல்லுங்க..???


காயத்ரி சிவராமன், கேகேநகர் - சென்னை.

நானும் வேலைக்கு தான் போறேன்.. காலைல 4:30 மணிக்கு எழுந்தா... சமைச்சு பசங்களுக்கு, கணவருக்கு எனக்கு சாப்பாடு கட்டி நானும் கிளம்பி ஓடனும்..

அவருக்கு சமைக்க தெரியாது.. நானும் எதிர்பார்க்கிறது இல்லை.
மத்தபடி, வீட்டு வேலைகளில் பங்கு எடுத்துப்பார். நல்ல விஷயம் என்னவென்றால் வெறும் உப்புமா பண்ணா கூட, குறை சொல்லாம சமத்தா சாப்பிடுவார். இதுவே போதும்ன்னு நினைக்கிறேன்.